இயற்கை – நிலம் – இசை : தொடர் 13 – T.சௌந்தர்

ஆவணப்படங்களில் இயற்கையும் இசையும்:

There is music in all things, if men had ears – என்பது புகழ்பெற்ற ஆங்கிலக்கவியான பைரனின் [ Lord Byron ] மேற்கோள்களில் ஒன்று.

ஒலி சக்திவாய்ந்த தொடர்புச் சாதனம். அது மற்ற எல்லா விட தொடர்புச் சாதனைகளையும் விட பலமிக்கது. குறிப்பாக விளப்பரத்துறையில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதைக் காண முடியும். ஒரு பொருளைப் பற்றிய விளம்பரப்பாடலைக் கேட்டதும் சிறு குழைந்தைகளும் உற்சாகம் பெறுகின்றனர். ஒலி சார்ந்த விளம்பரங்களை, நிகழ்ச்சிகளை சமைத்துக் கொண்டும், காரில் பயணம் செய்து கொண்டும், வேறு வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டும் கேட்கும் வசதியுள்ள ஊடகமாகும். அதனால் தான் வானொலி இன்றும் இயங்க முடிகிறது. என்னதான் பெரிய வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் வானொலிக்கு இன்னமும் மவுசு `இருந்து வருகிறது.

வானொலிகளில் பேசும் அறிவிப்பாளர்களின் குரல்களைக் கேட்டு மக்கள் தங்கள் மனநிலைக்கு ஏற்ப உருவகப்படுத்தி வைத்திருப்பர். குரலின் அழகில் மயங்கும் மக்கள் அவர்களும் அழகானவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் , அவர்களை நேரில் காணும் போது ஏமாற்றம் அடைவதும் ஒலிகள் செய்யும் மாயங்களில் முக்கியமானதொன்றாகும்.

இலங்கை வானொலியின் புகழபெற்ற அறிவிப்பாளரான ராஜேஸ்வரி சண்முகம், சிவாஜி கணேசனை முதலில் சந்தித்த போது ” எங்கே ராஜேஸ்வரி ” என்று கேட்டதாகவும் , நான் உன்னை ஒரு இளம் பெண்ணனாகவே நினைத்திருந்தேன், இப்படி எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியதாக ராஜேஸ்வரி சண்முகம் கூறியிருந்தது நினைவூட்டத்தக்கது.

நாம் பேசும் மொழிகளில் இயற்கையின் ஒலிக் கூறுகள் பின்னிக்கிடக்கின்றன. காணும் இயற்கைக் காட்சிகளை நாம் சொற்களை கொண்டு வரையறுத்தும் விளக்குகின்றோம். கேட்பது அபூர்வமான ஆற்றல்களில் ஒன்று. கேட்கும் ஒலியை காணவோ,மணக்கவோ முடியாது.

நம்மை சுற்றியிருக்கும் ஒலிஅலைகள் அந்தரங்கமான முறையிலும் உடனடியாகவும் குறிப்பிடத்தக்க வகையில் நமது உணர்வுகளில் தாக்கத்தை விளைவிக்கிறது.

இயற்கை பற்றிய அறிதலில் நவீன தொடர்பு சாதனங்களின் பங்களிப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை ஆற்ற உதவியுள்ளது. கவிதை,ஓவியம், நாடகம், இசை போன்ற கலைகளில் இயற்கை சித்தரிப்புகளை பயன்படுத்தி வந்த மனிதர்கள் படிநிலை வளர்ச்சிகளால் விஞ்ஞானக் கருவிகளையும் பயன்படுத்தி தமது அறிவை விருத்தி செய்து வந்துள்ளனர்! அந்த வகையில் இயற்கையில் உள்ள பறவைகள் , விலங்குகள் , புள்ளினங்கள் எழுப்பும் ஒலிகள் மட்டுமல்ல, இயற்கையின் மிக இயல்பாக உள்ள மழை, காற்று, ஆறு, கடல், இடி, மின்னல் என அவை எழுப்பும் பலவகையான, அதன் உண்மையான ஒலிகளை ஒலிப்பதிவு செய்வதும் விஞ்ஞான முறைகளில் ஒன்றாக கருதப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன.

18ம் நூற்றாண்டின் கைத்தொழில் புரட்சியும், அதைத்தொடர்ந்த விஞ்ஞான வளர்ச்சியும் எண்ணங்களிலும், இலட்சியங்களிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியது. அந்தவகையில் இயந்திரங்களின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்றாக ஒலிப்பதிவு செய்யும்கருவியின் கண்டுபிடிப்பு அமைந்தது. இயற்கையை நுணுகி அறியும் ஆவலில் இயற்கை ஒலிகளை உள்ளது உள்ளபடி ஒலிப்பதிவு செய்யும் முறை ஆகும்.

எடிசனின் கண்டுபிடிப்புகளுடன் ஒலிகளைப் பதிவு செய்யும் முறை ஆரம்பமாகியது. 1877ல் Thomas Edison கண்டுபிடித்த Phonograph என்ற ஒலிப்பதிவுக்கருவியின் வளர்ச்சி இன்று டிஜிட்டல் வரையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வெளிப்புற இயற்கையின் ஒலிகளை ஒலிப்பதிவு செய்வதின் முதற்படியாக, 1889ம் வருடம் செய்யப்பட்ட பறவையின் ஒலிப்பதிவு ஒன்றே வெளிப்புற இயற்கை சார்ந்த ஒலிப்பதிவுகளின் முன்னோடியாயாகும். பின்னாளில் தனியே ஒரு துறையாக வளர்ந்த இத்துறையில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக்கொண்ட Ludwig Koch [ 1881 – 1974 ] என்பவர் எட்டு வயது சிறுவனாக இருந்த போது செய்த அந்த ஒலிப்பதிவே அந்த முதல் நிகழ்வாக அமைந்தது.

குறிப்பிட்ட அந்த ஒலிப்பதிவு தென்கிழக்காசிய இலங்கை, இந்தியா, அந்தமான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சார்ந்த Indian Shama Bird [ Copsychus Malabaricus ] என்ற பறவையின் ஒலியாக இருந்தது.

Natural History Broadcasting என்கிற நவீன ஒலிப்பதிவுதுறையின் முன்னோடியாக விளங்கிய Ludwig Koch, இன்றைய இயற்கை விஞ்ஞானியான David Attenborough க்கு இணையானவர் எனக் கருதப்படுகிறார்.

Ludwig Koch இளமைக்காலத்தில் பாடுவதிலும் , வயலின் வாசிப்பதிலும் வல்லவராய் இருந்ததும் அவரது குடும்பத்தினர் அன்று புகழ் பெற்றிருந்த இசைமேதைகளான பிரான்ஸ் லிஸ்ட், பிராம்ஸ், ராபர்ட் ஷுமான் போன்றோருடன் நேரடியாகவும் பழகும் வாய்ப்பும் பெற்றிருந்தமையும், சங்கீத ஞானத்துடன் கூடிய நுண்கூறுமிக்க, ஒலிபற்றிய ஞானம் இருந்தமையும் அவர் ஒலிப்பதிவில் சிறந்து விளங்கக்காரணம் என்பர்.

இன்றைய நவீன உலகில் வெளிவரும் மிருகங்கள், பறவைகள் பற்றிய செய்திப்படங்களில் [ Documentary Films] இயற்கை ஒலிகள் மட்டுமல்ல, அதற்கேற்ற இசையும் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்பதிவு செய்யும் காட்சிகளுக்கு ஏற்ப குறித்த ஓர் மிருகத்தை அல்லது ஓர் பறவையை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்யும் போது, அதற்கான பின்னணி ஒலி என்பது அந்தப் பறவையினதோ அல்லது அந்த மிருகத்தினதோ அல்லாமல் வெளியே அதைச் சுற்றியுள்ள எல்லா ஒலிகளும் சேர்ந்து பதிவு செய்யப்படுவதால், குறிப்பாக ஒன்றை தெரிந்து ஒளிப்பதிவாளர் செய்யும் வேலையை ஒலிகள் சிதறிடிக்கின்ற வாய்ப்புகளே அதிகம் என்பதாலும் ஒலிப்பதிவுக்கருவியின் ஒலியைப் பதியும் ஆற்றல் வரையறுக்கப்பட்ட தூரம் என்பதாலும், பின்னர் அவற்றை தொகுக்கும் போது, கமரா குறிப்பாக எடுக்கும் காட்சி பிற ஒலிகளால் சிதைவடையாமலிருக்கவும், அழகியல் நோக்கிலும் அதற்கு பொருத்தமான புதிய பின்னணி ஒலிகளை சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உணடாகிறது.

ஒலிப்பதிவு கருவியின் வளர்ச்சி அந்தந்தக்களங்களில் இடம் பெறும் நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்யும் வாய்ப்புகளை வழங்கியது. ஆரம்பத்தில் இவை வானொலி நிகழ்சிகளுக்கு கை கொடுத்தனவெனினும், பின்னர் தொலைக்காட்சிகளின் வருகை மூலமும் விருத்தி பெற்றன.

ஐரோப்பாவெங்கும் நிலம் பற்றிய கள ஒலிப்பதிவுகள் வானொலி நிலையங்களில் பெருமளவில் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கவும் படுகின்றன. ஆரம்பகாலங்களில் இயற்கை குறித்த விவரணப்படங்களில் பெருமளவு இயற்கையிலமைந்த ஒலிகளும் அவை பற்றிய அறிவிப்பாளர்களின் விளக்கவுரைகளும் பயன்பட்டு வந்ததை நாம் காண முடியும்.

இன்று உலகப்புகழ் பெற்ற இயற்கைவாதி என்று அழைக்கப்படுகின்ற டேவிட்அட்டன்பரோ [ David Attenborough] ஏராளமான களநிலை ஒலிப்பதிவுகளை தனது ஆவணங்களாகப் பாதுகாத்து வருகின்றார். பிரித்தானிய வானொலிகளஞ்சியமும் ஏராளமான ஒலிப்பதிவுகளைப் பாதுகாத்து வருகின்றது. இந்த ஒலிப்பதிவுகள் இயற்கை வரலாறு [ Natural History ] இயலில் மிக முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.

இயற்கை குறித்து தலைசிறந்த ஆவணப்படங்களை இயக்கிவரும் டேவிட் அட்டன்பரோ, இயற்கை ஒலிகளை பயன்படுத்துவதைத் தாண்டி, அவற்றுடன் நெஞ்சை ஈர்க்கும் வாத்திய இசையையும் பயன்படுத்தி தனது படைப்புகளை மென்மேலும் அழகு சேர்த்து வருகின்றார். தலைசிறந்த ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் இணைந்த கூட்டுடன், பொருத்தமான இசைக்கலைஞர்களை இணைத்தும் தமது செய்திப்படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கண்கவரும் இயற்கைகாட்சிகளும், இசையும் பார்ப்பவர்களுக்கு பெரு விருந்தாகும்! இவ்விதம் காதுக்கு இனிமையும், காட்சிக்கு பொருத்தமாகவும் டேவிட் அட்டேன்போரோ இயக்கிய சில முக்கியமான Documentary படங்களும் அவற்றின் இசையமைப்பாளர்களையும் கீழே காணலாம்.

1. A Perfect Planet – Ilan Eshkeri

2. The Blue Planet – George Fenton [ 2001]

3. Planet Earth II – Hans Zimmer

4. Blue Planet II – Hans Zimmer

5. A Life on our Planet – Steven Price [2020]

6. Dynasties – Ollie Howell

புகழ்பெற்ற விஞ்ஞானியும் , இயற்கைவாதியுமான டேவிட் அட்டன்பரோ இயக்கிய செய்திப்படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மர், அவருடனான தனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

Hans Zimmer said: “Working with David on so many of his magnificent programmes celebrating nature and our planet has been a joy for me. I am constantly inspired by what he is able to capture, and the collection of sequences featured in Planet Earth: A Celebration is truly special.”

மேலே குறிப்பிட்ட செய்திப்படங்களுக்கான இசைகள் தனியே CD க்களாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இயற்கையில் பயணிக்கும்போது அதன் சுற்றாடலில் ஒலிக்கும், நீரின் பல்வேறு விதமான ஒலிகள், சலசலப்பு , காற்றின் ஓசை, பறவைகளின் இனிய ஒலிகள் என கேட்கும் அனைத்தையும் நாம் ரசிக்கின்றோம்.நான் குறிப்பிட்ட அந்த ஒலிகளையெல்லாம் அந்தந்த சூழ்நிலையிலேயே பலமணி நேரங்கள் கேட்கக்கூடிய துல்லிய ஒலிப்பதிவுகளாக இன்று நமக்கு கிடைக்கின்றன. அவற்றை நமது வீட்டிலேயே இருந்த வண்ணம் கேட்டு இன்புறலாம்.

Newage music:

இயற்கையை அறிதல் என்பதே விஞ்ஞானத்தின் அடிப்படையாக பண்டைக்காலத்திலிருந்து வந்துள்ளது. உலகம் முழுவதும் மனிதன் தனக்கு எட்டிய வரையில் அவற்றை நுணுகிப்பார்த்திருக்கிறான். கடந்த இருநூறு ஆண்டுகளில் விஞ்ஞானத்துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் என்பது பல ஆயிரம் வருட செய்ய வேண்டிய சாதனைகளை, சில ஆண்டுகளில் தாவிப்பாய்ந்து செய்து முடித்தது என்பதை நாம் காண்கிறோம். எல்லாத்துறைகளிலும் ஏற்பட்ட இந்த பாய்ச்சலான அதிவேக முன்னேற்றம், சத்தங்களை ஒலிப்பதிவு செய்யும் துறையிலும் நிகழ்ந்தது. இதைப்போலவே இசைத்துறையிலும் நவீன மின் இசைக்கருவிகளின் கண்டுபிடிப்பு இசைக்கருவிகளின் வளர்ச்சியில் புதிய ஒலி மாற்றங்களை உருவாக்கியது.

ஒலிப்பதிவு துறையில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்த 1970களின் இறுதியில், வாத்திய இசையில் அதை புதிய முறையில் பயன்படுத்தி , ஒரு புதிய இசை அலையை எழுப்பியவர் Kitaro [ 1950 – ] என்ற ஜப்பானிய இசைக்கலைஞர். குறிப்பாக, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிந்தசைசர் என்ற இலத்திரனியல் கருவி மூலம் புதுமையான இசை ஆக்கங்களைப் படைத்தார். அவர் இசையமைத்த The Silk Road என்ற இசைத்தொகுப்பு உலக அளவில் ஒரு புதுமையாக பேசப்பட்டது. கிட்டாரோவின் புகழ்பெற்ற சில இசைத் தொகுப்புகள்.

Peace On Earth

The Silk Road

Dream

Oasis

Kojiki

Asia

Light Of Spirit

An Ancient Journey

Heaven & Earth

Sacred Journey of Ku- Kai

இவரைப் பின்பற்றி சிந்தசைசர் கருவிகள் மூலம் பல விதமான இசைகளை உருவாக்கும் கலைஞர்கள் உருவானார்கள். இந்த நவீன தொழில் நுட்பம், மேற்கத்தைய சினிமா இசையையும் கணிசமான அளவில் பாதித்து , மாற்றங்களை உருவாக்கியது.

நவீன விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இன்றைய காலத்தில் செயற்கையாக நவீன இலத்திரன் வாத்தியக்கருவிகள் மூலம் மன அமைதி தரும் வாத்திய இசைகள் [ Relaxation Music ] உருவாகி இருப்பதைக் காண்கிறோம். அந்த வகை இசையின் முன்னாடியே கிட்டாரோ தான் என்றால் மிகையில்லை.

அவை பெரும்பாலும் இயற்கைக் சூழல்களை பிரதிபலிக்கும் இசை என்ற தலைப்புகளில் [ Titles ] அதே வேளையில் ஒருவித மனஅமைதியையும் தருகின்ற உணர்வை உண்டாக்கும் இந்தவகை வாத்தியக்கருவிகள் எழுப்பும் ஒலிகள் மனதை ஆற்றுப்படுத்தும் வகையிலும் அமைந்ததால் தியானம், யோகாசனம் போன்ற செயற்பாடுகளுக்கும் உகந்ததாக கருதப்படுகிறது.

பல்வகை வாத்திய அமைப்புகளையும் ஒரே வாத்தியத்தில் ஒருங்கிணைத்திருக்கும் இக்கருவியைப் பயன்படுத்தும், அதில் ஓரளவு பரீட்சயம் உள்ளவர்களையும் “இசை தெரிந்தவரோ “ என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும்.

நவீன ஒலிப்பதிவக்கருவி உருவாக்கத்தின் அதி முன்னேற்றமும் இக்கருவியுடன் சமகாலத்தில் வளர்ந்ததால் அசாத்தியமான ஒலிகளை துல்லியமாக வெளிப்படுத்தும் சப்தஜாலங்கள் உருவாக ஏதுவாயிற்று. இவ்வகையான அதி தொழில் நுட்ப சாதனங்களின் உதவியுடன் மழைத்துளி, அலைகளின் ஓசை, காற்றில் ஓசை மற்றும் அதைப்போன்ற மிக நுணுக்க ஒலிகளை பல மணிநேரம் சுகானுபாவத்துடன் கேட்கும் வகையில் வெளிப்படுத்தும் சப்தஜாலங்கள் சாத்தியப்படுத்தப்பட்டிருப்பினும், பலசமயங்களில் அதன் இயல்புசாரங்கள் இயல்பிழந்துபடுவதையும், மிகைப்படுத்தபடுவதையும் கேட்க முடிவதால், பலசமயங்களில் அவை அதி செயற்கை மேவியதாகவும் தெவிட்டும் தன்மைமிக்கதாகவும் அமைந்து விடுகின்றன.

மேலே கூறப்பட்டுள்ள சேமித்து வைக்கப்பட்ட இசை ஒலிகளை ஆங்கிலத்தில் sampling என அழைப்பர்.[ sampling is the reuse of a portion [ or sample ] of a sound recording in another recording. ] தமிழ் சினிமாவில் இந்த முறை இளையராஜாவால் ஒரு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது. ஆனாலுமதிலும் ஒரு புதுமையை அவர் செய்துகாட்டினார். உதாரணம் : நின்னுக்கோரிவர்ணம் என்ற பிரபல சங்கீத கீர்த்தனையின் பல்லவியையும், அதன் மூல ராகத்தையும் இணைத்து ஒரு பரீட்சாத்தமாக செய்தார். தனக்கென தனியே படைக்கும் ஆற்றமிக்க அவர் அத்தோடு அதை நிறுத்தியும் கொண்டார்.

இந்தவகை வாத்தியம் [ சிந்தசைசர் ] அறிமுகமான போது, அதன் நாதம் புதுமையாக இருந்ததால் அதற்கெனத் தனியே ஓர் பெயரிட்டு அழைக்கவேண்டிய தேவையும் எழுந்ததால், அந்தவகை இசையை New Age Music என வகைப்படுத்தினர். ஏற்கனவே நாட்டுப்புற இசை, செவ்வியலிசை [ சிம்பொனி ] ,புளூஸ், ஜாஸ், பாப், ரோக் என பலவகை இருந்ததால் இந்த இசை New Age Music என அழைக்கப்பட்டது.

New Age Music என்றழைக்கப்படும் இந்தவகை புதிய இசை, நிலம், இயற்கை வர்ணனைகளில் பயன்படுத்தப்பட்ட அதே வேளை தியானம், மன அமைதி, யோகாசனம் போன்ற அமைதி வேண்டி செயற்படும் துறைகளுக்கும் பொருத்தமாக இருந்ததால் அதன் தேவைகளுக்காகவும் பயன்படுத்த தொடங்கிய நிலையில், அதை படைத்த கிட்டாரோ [ Kitaro ] போன்றவர்கள் தாங்கள் ஆன்மிகம் சார்ந்தே இதை படைப்பதாகக் கூற முற்பட்ட போது , இந்தவகை இசை குறித்து விமர்சனங்களும் எழுந்தன.

இது இசைத்தட்டுக்களை விற்பதற்கான ஒரு மலிவான வியாபார தந்திரம் என்றும் திறமையில்லாதவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு மலிவான இசை என்றும் விமர்சிக்கப்பட்டது.

இந்த இசைக்கருவி அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்களிலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக Star Trek போன்ற விண்வெளிப்பயணம் சார்ந்த படங்கலும், நவீன கம்பியூட்டர் கேம்ஸ் விளையாட்டு படங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும் சிந்தசைசர் கருவியை ஓரளவு இயக்கத் தெரிந்தவர்களும் அதை கையகப்படுத்தி வருவதால் கற்பனைவளமற்ற மலின சப்தஜாலங்கள் பல்கி பெருகியுள்ளன என்ற விமர்சனத்தை உண்மை என்று நிரூபிப்பது போல இதன் விபரீதத்தை 1990 களுக்குப் பின் வந்ததமிழ் சினிமாக்கள் நிரூபித்து வருவதை நாம் காண்கிறோம்.

இயற்கை, நிலம் சார்ந்த செய்திப்படங்களிலும் மிருகங்கள், பறவைகள் சார்ந்த செய்திப்படங்களிலும், அதற்கிசைந்த பின்னணி இசையில் அவற்றை வெளிப்படுத்த முனைப்புக் காட்டப்பட்டாலும் சினிமா என்ற ஊடகமே இயற்கை, நிலம் குறித்த வெளிப்பாடுகளை அழகுடனும், இயல்புடனும், அவற்றை மனித உணர்வுகளுடன் இணைத்து வெளிப்படுத்திய முன்மாதிரியான, வழிகாட்டி ஊடகமாக இருந்தது.

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *