இலங்கையின் முதல் அரசினர் தமிழ் பாடசாலையும் பொன். கந்தையாவும்!

கம்பர்மலை அரசினர் பாடசாலை அறுபதாவது அகவையையோட்டி முற்போக்கு சிந்தனையாளர் வ.அழகலிங்கம் அவர்கள் 18.07.2018 ல் எழுதிய கட்டுரை வரலாற்று பதிவுகளுக்காக இங்கே மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.

கம்பர்மலை அரசினர்பாடசாலை நிறுவப்பட்டு அறுபதுவருடங்கள் ஆகின்றன. அது தப்பிப் பிழைக்க வேண்டிய சமுதாய அரசியற் சூழல் நிலைக்காவிட்டால் அதனால் ஒருபொழுதும் தப்பிப் பிழைத்திருக்க முடியாது. அது தோன்றும் காலத்திலும் தோன்றிய பின்னரும் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனந்தம். வரலாறு அதை இன்றுவரை அழியவிடாது பாதுகாத்து வருகிறது. எந்த ஒரு பிரச்சனையை விளங்க வேண்டுமானாலும் அதை வரலாற்றுரீதியாக விளங்க வேண்டும். வரலாற்றை விஞ்ஞானரீதியாகவும் விஞ்ஞானத்தை வரலாற்றுரீதியாகவும் கற்கவேண்டும் என்பார் கற்றோர். எதையும் ஒரு தனிச்சம்பவமாகவோ கிளைக்கதையாகவோ புரிந்துகொண்டால் அது பல குழப்பங்களை ஏற்படுத்தும். “கங்கையிற் புனிதமான காவிரி சொர்க்கத்திற் சிறந்த திருவரங்கம்..என்பார் பெரியாழ்வார். கம்பர்மலையைச் சூழ்ந்த மக்களுக்கு கம்பர்மலை சொர்க்கத்திலும் சிறந்தது. கங்கையிலும் புனிதமானது விறாச்சிக் குளம். எந்த எழுத்தும் இலக்கியமும் மனிதவாழ்க்கை எப்படி எப்படி உருமாறி வளர்ந்து பரிணாமம் அடைந்தது என்று சொல்லாவிடில் அந்த எழுத்திற்கோ இலக்கியத்திற்கோ பெறுமதியில்லையாகும். எழுத்தாளன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து அதைப் படைத்தால் மாத்திரம்தான் அது ஜீவ இலக்கியமாகத் திகழும். தத்துவஞானிகள் உலகத்தை வெவ்வேறுவிதமாக வியாக்கியானம் செய்வார்கள். எமது கடமை உலகத்தை மாற்றுவதாகும். *செய்தக்க அல்லா செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்,, என்பான் வள்ளுவன்.

மனிதவாழ்வு காலத்திற்கேற்ப இசைவாக்கமடைந்து தகவமைத்துக் கொள்ளும் நிகழ்வுப் போக்கின்போது அது சமுதாயமாகி அந்தக் காலத்திற் கேற்ப சமுதாய ஒழுங்கிற்கும் அரசியல் ஒழுங்கிற்கும் வந்துவிடும். அப்படி அமைந்த கம்பர்மலை அரசினர்பாடசாலையையும் அந்தக்கிராமத்து மக்களின் வாழ்வியலையும் வரலாற்று ஒளி என்ற நிறப்பிரிகையின் துணைகொண்டு இயங்கியற் பெருக்காடியாற் பார்க்கவேண்டும். கம்பர்மலையின் தோற்றமறுப்பையும் அதன்பின்தங்கிய வாழ்நிலமையையும் முன்னோக்கிய பெரிய தவளைப்பாய்ச்சலையும் பார்க்க வேண்டும். கம்பர்மலைக் காலகணிதத்தில் 1956 ஆம் ஆண்டு ஒரு பிரிவினைக் கோடாகும். அப்பொழுதான் கம்பர்மலை அரசினர் பாடசாலை இலங்கையின் முதலாவது பொதுமக்கள் பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு நடைமுறை வாழ்க்கைக்கு வந்தது. கம்பர்மலையென்ற கிராமத்தின் பெயர் இலங்கைப் பாராளுமன்றத்தில் பலமுறை உச்சரிக்கப்பட்டதை பாராளமன்றப்பதிவேட்டில் இன்றைக்கும் பார்க்கலாம். இலங்கையின் கல்வி வரலாறும் மற்றும் அரசியல் வரலாறும் மற்றய ஆசியநாடுகளைவிட எத்தனையோ மடங்கு முன்னேறியதாகும். வரலாறு சாதகமில்லையெனில் எந்தச் சமூகமாற்றங்களும் பிறக்கும்போதே இறக்கும் எபிமெறல்(ephemeral) பூச்சிபோல இறந்துவிடும். அது தோன்றி வளர்ந்துவந்த பருவத்தைப் பின் நாளில் அடையாளம் காணமுடியாது. அது வாழ்ந்த காலம் இருக்குமேயொழிய வாழுங்காலம் இருக்காது.

அரசியல் என்பது உழைத்து வாழ்பவர்கட்கும் ஊரை ஏய்த்து வாழ்பவர்கட்குமிடையே நடைபெறும் தொடர்ந்த முடிவில்லாத போராகும். நடிப்புச் சுதேசிகளின் நாட்டாண்மைக்கும் நாவன்மையற்றதால் நலிந்த நல்லவர்கட்குமிடையே நடைபெறும் போராகும். வஞ்மில்லார் வழக்கம் மாறார் வாழத்தெரியா ஏழையாகிக் கஞ்சிக்காகவே கஷ்டப்படுகின்ற காரணம் சொல்லும் காப்பியமாகும். சமூகப் பங்களிப்பில்லாமல் சமூகப்பொறுப்பில்லாமல் சமுதாய நலன்களைச் சுகிக்கும் சுகபோகிகளுக்கும், கோழியோடு எழும்பிக் கோட்டானோடு துயிலப் போகும் மக்களுக்கும் இடையே நடைபெறும் போராகும். கடந்தகாலப் பரம்பரையின் தியாகத்தைச் சுரண்டி எதிர்காலப் பரம்பரைக்கு மிகவிசுவாசமாகத் தயாரிக்காத மக்கள், சமுதாயப் புல்லுருவிகளாகும். இலங்கைத் தமிழர்களின் அரசியல் வாழ்வில் நிலவும் மாபெரும் மோசடிகளில் தொழிலாளிவர்க்கத்தோடு ஒட்டோ உறவோ இல்லாத அரசியல் செய்வதும் சோஷலிசத்திற்கும் வர்க்கப் பகைமைக்கும் அப்பாற்பட்ட அரசியற் தீர்வுகளைத் தேடுவதும் கோருவதும் ஒன்றாகும். தினைவிதைத்தவன் வினையறுப்பதும் வினைவிதைத்தவன் தினையறுப்பதும் கண்ணிற்தோன்றும் காட்சியாகும்.

கம்பர்மலை அரசினர் பாடசாலையின் தோற்றம் ஆசியாக் கண்டத்திலேயே முதலாவதும் முற்போக்கானதுமாகும். அதற்கு முன்னர் ஆசியாக் கண்டத்திலேயோ ஒரு பொதுமக்கள் பாடசாலை தோன்றவில்லை. இந்திய உபகண்டமே திண்ணைப்படிப்பு என்ற நத்தையோட்டை உடைக்க முடியாமற் தவித்த காலம். அரசன் கோயிலோடு கட்டுண்டதும் கோயிற் பொருளாதாரம் கோலோச்சியதுமே இந்திய வரலாறு. சொத்துரிமை கோயிலோடும், கோயிலோடு தன்னைப் பின்னிப்பிணைந்த அரசனோடும் இருந்த காலம். தனிமனித சொத்துரிமைகளும் ஜனனாயக உரிமைகளும் அரும்பாத வரலாறு. இந்தியஉபகண்டத்திற்கும் இலங்கைக்குமுள்ள மாபெரும் வித்தயாசத்தில் ஒன்று இந்தியா கிழக்கிந்கொம்பனியொன்றின் காலனி. இலங்கை 1815 இல் இலங்கை முடிக்குரிய காலனியாகியது.

கம்பர்மலை அரசினர் பாடசாலை என்பது தனியார் உடைமையான பாடசாலைகளுக்கு எதிராக முதலாவது போர்ப் பிரகடனம் செய்து ஓர் அரசினர் பாடசாலை என்ற பரிணாமமும் நிகழ்வுப்போக்கும் நிகழ்ந்த சம்பவமாகும். எந்தப் புதிய உருவாக்கமும் முன்முயற்சியும் ஒட்டுமொத்த மனிதவாழ்வை முன்னுக்குத் தள்ளாவிடில் அதன் உருவாக்கம் பெறுமதியற்றதாகும். கம்பர்மலை அரசினர் பாடசாலையை அங்கீகரிக்கப் பாராளமன்றத்தில் போராடியதின் பிரதிவிளைவாகத்தான் இலங்கை முழுவதும் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு சர்வவியாபக இலவசக் கல்வி இலங்கையில் பிரகடனப் படுத்தப் பட்டது. ஒருகொள்ளை சமூகநல ஜனனாயக உரிமைகள் அமுலாகிய அரசியற் சகாப்தம் அது. குழந்தைப்பிள்ளைச்சாவு. பிரசவத்தின்போது பெண்கள் சாவு, கையெழுத்திற்குப் பதிலாக வலதுகைப்பெருவிரலடையளம் இடுவது என்பதெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்த சகாப்தம். எங்கே வரலாறும் யதார்த்தமும் சாதகமில்லையோ அங்கே எந்த முன்முயற்சியும் நடைமுறையும் சாத்தியமாகாது.

கம்பர்மலையின் சிக்கலான வரலாறே முரண்பட்டுத் தோன்றும் மெய்யுரையாகும். கம்பர்மலை அரசினர்பாடசாலை தோற்றம் பெற்ற 1958 ஒரு வரலாற்றுச் சகாப்தமாகும். அதற்கு முந்திய காலங்களில் கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட குழந்தைகள் வல்வெட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலை, ஆலடிப்பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் வல்வெட்டித்துறை சிவகுருவித்தியாலயம், கெருடாவில் சைவ பாடசாலை, வல்வெட்டித்துறைச் சந்தியிலும் சந்தையிலும் அமர்ந்திருக்கும் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை ஆகியவைகளுக்கே சென்று படித்து வந்தனர். இந்தப்பாடசாலைகள் கம்பர்மலையிலிருந்து ஏறத்தாழ இரண்டு கில்லோ மீற்றர் தூரத்தில் உள்ளவை. நாலு அல்லது ஐந்து வயதுடைய பச்சிளம் பாலகர்கள் இப்பாடசாலைகளுக்குப் போகுமுன்னரே அரைவாசி வழியிற் களைத்து விடுவர். அந்தநாட்களில் கம்பர்மலையைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட தமிழர்களின் குழந்தைகளுக்கு வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றுதான் அனுமதி வழங்கியது என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும். வரலாறு என்பது எதிர்காலப் பரம்பரையினர் நீர் அருந்தும் பொதுக்கிணறாகும். வரலாற்றைப் திரித்தாலோ வரலாற்றைப் பொய்யாகக் கூறினாலோ எதிர்காலப் பரம்பரைக்கு நஞ்சைப் பருக்குவதாகும். நடந்து வந்த பாதை தெரியாதவர்கட்கு நடக்கப்போகும் பாதை தெரியப் போவதில்லை. நமது சகாப்தம் வரலாற்றைப் பொய்மைப்படுத்தும் சகாப்தமாகும். ஐம்பதுகள் சாதியில்லையேல் சமயமில்லை என்ற மாபெரும் மானிடக் கொடுமை நிலவிய காலம். இந்த வரலாற்றுப் பின்னணியில் கம்பர்மலை அரசினர் பாடசாலையின் தோற்றத்தை அணுகினாற்தான் அதன் தனிச்சிறப்பு பளிச்சிடும்.

இந்தக்காலம் ஒரோயொரு தமிழ் இடதுசாரியான பொன்னம்பலம் கந்தையா இலங்கைப் பாராளுமன்றத்திற்குப் பருத்தித்துறைத்தொகுதி அங்கத்தவராகச் சென்றார். அவர் ஓர் உலகமனிதர். லண்டனில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் படித்ததால் சந்தேகம் தெளிந்த மேதை. தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளன். பல நாடுகளை தரிசித்த அனுபவம் வாய்ந்தவர். பொருளியலைப் படிப்பாகக் கொண்டதோடு அதிஉயர் சமூகஉணர்மை கொண்டவர். கற்பிக்கும் கலையும் போதனை நடைமுறையும் தெரிந்தவர். அவரது ஆழ்ந்த அனுபவத்தால் சிறுபிள்ளைகள் தொலைதூரம் சென்று கல்வி கற்பது கொடுமை என்ற கருத்தை உடையவர். பச்சிளம் பாலகர்கள் பெற்றோரின் பார்வைப்புலத்துள் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற வழக்காற்றுக்கமையை ஒவ்வொரு கிராமத்திற்கு மத்தியிலும் ஆரம்ப பாடசாலைகள் அமைய வேண்டும் என்றும் அது மதசார்பற்று, ஓரவஞ்சகமற்ற பொதுமக்கள் பாடசாலையாக இருக்கவேண்டும் என்பதும் குழந்தைப் பருவத்திலேயே அவர்கள் மற்றய குழந்தைகளோடு அன்னியோன்னியமாகப் பழகி விளையாடி குறுமனமற்றுப் பரந்த உள்ளத்தோடு வளர்க்கப்படவேண்டும் என்ற கல்விசால் கொள்கையை ஏற்றவர். அது கட்டாயம் கலவன்பாடசாலையாக இருக்கவேண்டும் என்பதும் அவரது கொள்கை. வளர்ந்தபின்பு சமூகவாழ்வில் எண்ணற்ற உழைப்புப் பிரிவினையும் சர்வதேசரீதியான உழைப்புப் பிரிவினையும் நிலவும் பண்ட உற்பத்திச் சகாப்தத்தில் மற்றய சகமனிதர்களோடு சேர்ந்து வேலைசெய்யும் நிர்ப்பந்தம் தப்பாமல் வரும்பொழுது எந்தவித அதிர்ச்சியோ உரசலோ இல்லாமல் இசைந்து இயங்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைப் போதித்தவர். தொழிற்பிரிவினையென்பது விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் தாயாகும் என்பதை எமக்குப் போதித்தவர். உலகை விஞ்ஞானம் ஆளவேண்டும் என்னும் கொள்கையை உடையவர். மூடபுத்தியையும் பாசிபடர்ந்த பழய வழக்கங்களையும் ஒட்ட வெறுத்தவர். வரலாற்றிலே ஒரு அடி முன்னேறவேண்டுமானாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்தே முன்னேற முடியும். எந்த மகாதிறமைசாலியும் தன்னந்தனியனாக முன்னேற முற்பட்டால் பரிதாபக்கரமான தோல்வியைச் சந்திப்பர் என்பதை நன்றாக உணர்ந்தவர். உலகத்திற் சிறந்த பரிகாரங்களில் ஒன்று மனிதமனங்களைக் குளிர்விப்பதாகும். “மற்றவனை நேசிக்கும் அருளையும் அனுக்கிரகத்தையும் தா,, என்று தாயுமானவர் கோயிலிலே பிரார்த்தின்கின்றார். “நீ உன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசி” என்கிறது பைபிள். “ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். -குறள்.

ஒத்துப்போகத் தெரிந்தவனே வாழக் கூடியவன். அது தெரியாதவன் செத்தவன். இன்றய கணணி யுகத்தில், செயற்கை நுண்ணறிவும் நனோ தொழில் நுட்பமும் ஆளுமை செலுத்தி உலகம் அதிபயங்கர வேகத்தில் மாறும் தறுவாயில் கண்ணை மூடி முழிப்பதற்குள் காட்சி வேறாகிவிடும் கணநேரவாழ்வியலில் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு வளைந்து கொடுக்கின்ற கலை தெரியாதவர்களை இசைவாக்கம் அடைய முடியாதவர்களை உருண்டோடும் உலகம் நெரித்துக் கொண்டு போய்விடும். “எதிரதாக் காக்கும் அறிவினர்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்,, என்பான் வள்ளுவன். எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல், ஆலைகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் குழந்தைகளின் உழைப்பை ஒழித்திடல், கல்வியைப் பொருளுற்பத்தியுன் இணைத்தல் என்பது பொதுவுடமைத் தத்துவத்தின் முக்கிய கோட்பாடாகும்.

ஒட்டுமொத்த மக்களின் அறிவைப் பெறும் அறிவை உயர்த்துவதன் மூலம் அவர்களின் அறிதிறனை உயர்த்த வேண்டும் (raise the cognitive power of the masses) என்பதே அரசாங்கத்தின் முதற் கடமையாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க முதலாவது ஜனாதிபதி ஜோர்ச் வாசிங்டன் தனது முதலாவது சிம்மாசனப் பிரசங்கத்திலேயே கூறிப் போயுள்ளார். 1935 இல் இலங்கைச் சமசமாஜக் கட்சியின் அங்குரார்ப்பண வேலைத் திட்டத்தில் சகலருக்கும் இலவசக் கல்வி என்பது ஒன்றாகும். முதலாவது ஜனப்பிரதிகள் சபையிலேயே ஆண் பெண் பாடாசாலை என்ற பாகுபாட்டை ஒழித்து எல்லாமே கலவன்பாடசாலையாக இருக்க வேண்டும் என்று பிரேரித்தது அக்கட்சி. பருத்தித்துறை தொகுதியின் பொதுவுடமைக் கட்சி வேட்பாளாராக 1948 இல் போட்டியிட்ட பொன் கந்தையா கம்பர்மலை மக்கள் மத்தியில் உரையாற்றும் முதலாவது கூட்டத்திலேயே தான் பாராளுமன்றம் சென்றால் கம்பர்மலையில் மக்களின் பலதட்டினரின் பிள்ளைகளும் இலவசமாககப் படிக்கக் கூடிய ஒரு பொதுமக்கள் பாடசாலை ஏற்படுவதற்குப் பாராளுமன்றத்தில் போராடுவேன் என்று உறுதியுரை கூறினார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றியீட்டவில்லை . மீண்டும் அவர் 1952 இல் தேர்தலிற் போட்டிபோட்ட பொழுதும் தான் பாராளுமன்றம் சென்றால் கம்பர்மலையில் ஒரு பொதுமக்கள் பாடசாலையை ஏற்படுத்துவதாக உறுதி கூறினார். 1956 தேர்தலில் அவர் மீண்டும் தான் பாராளுமன்றம் சென்றால் கட்டாயம் கம்பர்மலையில் ஒரு பொதுமக்கள் பாடசாலையை ஏற்படுத்துவேன் என்று உறுதி கூறினார்.

அம்முறை அவர் தேர்தலில் வெற்றியீட்டிப் பாராளுமன்றம் சென்றார். அவர் 1956 ஏப்பிரலில் பாராளுமன்றத்தில் தனது சிம்மாசனப் பிரசங்கத்தை முடித்துவிட்டு முதன்முதலாகக் கம்பர்மலைக்கே வந்தார். அவரது முதலாவது வரவேற்புக் கூட்டமும் கம்பர்மலையிலேயே நடைபெற்றது, அந்தக் கூட்டத்திலே வரவேற்புரைகுப் பதிலிறுக்கும் முதலாவது வசனத்திலேயே தான் ஆரம்பபாடசாலை ஏற்படுத்துவேன் என்று அடித்துக் கூறினர். அந்த ஊர் மக்களில் ஒருவராவது அவரிடம் எந்தத் தனிப்பட்ட பிரத்தியேக சலுகையுைம் கோராத மட்டத்திற்கு சுயநலமற்றவராக இருந்தார்கள். பந்தப்பிடித்து லஞ்சம்கொடுத்து புழுகு புழுகென்று புழுகி தலைமைத்துவத்தைக் கெடுப்பது அன்றய கம்பர்மலைச் சம்பிரதாயமல்ல. சுயநலம் மிகவும் குறுகியது, பொதுநலம் விரிந்து பரந்தது. சுயநலம் தன்னை மேம்படுத்துவது பற்றியே சிந்திக்கும். நமக்கு இன்பம் கொடுப்பது பிறர்க்குத் துன்பங் கொடாமல் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுநலம் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சிந்திக்கும். சமூக முன்னேற்றத்தின் ஒரு பாகமாகத்தான் தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து வைத்திருப்பதாகும்.

ஒட்டுமொத்த இலங்கைத்தேசத்தின் விமோசனத்தின் ஒருபாகமாகத்தான் தமிழ்த்தேசியம் முன்னேற முடியும் என்பதையும், ஒட்டுமொத்த உலக அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாகதான் இங்கை அரசியல் வேலைத்திட்டம் அமையமுடியுமென்பதைப் புரிந்து வைப்பதாகும். பகுதி ஒருநாளும் முழுமையை விடப்பெரிதாகி விடாது என்ற வடிவகணித வெளிப்படை உண்மையிலிருந்து தான் எடுக்கும் முடிவுகளைச் சரிபார்ப்பதாகும். குண்டான் சட்டிக்குள் குதிரைவிடும் சின்னத்தனமுள்ள சிந்தனாவாதிகள் காலப்போக்கில் அங்கீகாரம் அற்று வரலாற்றால் துடைத்தெறியப்படுவார்கள் என்பதை விளங்கியதாகும். கடந்தகாலப் பரம்பரையினர் வென்று தந்த உரிமைகளின் பலாபலனை வெறுமனே சுகிப்பவர்கள் சமுதாய ஒட்டுண்ணிகளாகும். எதிர்காலப் பரம்பரையினருக்குத் தயாரிப்பதே அதியுயர்ந்த கலாச்சாரமாகும். தாமும் தமது உடனடித்தேவைகளும் என்றிருந்து மற்றவர்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை என்றிருந்தால் மானிட வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய்விடும் என்பதை உலகவரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

வரவேற்புக் கூட்டம் முடிந்தபின் அன்றே பாடசாலைக் கொட்டிலைக் கம்பர்மலையின் மத்தியில் எந்தக் குழந்தையும் கனதூரம் நடந்துவாராதமாதிரிப் பார்த்து அமைக்கச் சொன்னார் கந்தையா. அதன்பிரகாரம் கம்பர்மலை வட்டாரத்தின் மத்தியில் அதாவது கம்பர்மலை செம்பாடு, சோந்தம்பை, கரவத்தனை, கொம்மந்தறை ,நிருவத்தம்பலை நாவலடி ,ஊரிக்காடு ,விறாச்சிக்கு மத்தியில் அந்தப் பள்ளிக்கூடத்தின் ஆரம்ப கொட்டில் போடப்பட்டு அன்று எஸ்.எஸ்.சி சித்தியெய்திய வேலையில்லாமல் இருந்த அப்பிரதேசவாதிகள் ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டு அப்பாடசாலை தொடங்கப்பட்டது.

அந்நாளில் பண்டாரநாயக்கா, இலங்கை இடதுசாரி இயக்கத்தின் தந்தையாக அந்தக்காலத்தில் விளங்கிய பிலிப் குணவர்த்தனாவோடு சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார். டபிள்யு தகநாயக்கா கல்விமந்திரியானார். பொன் கந்தையா கல்விமந்திரியோடு கலந்துரையாடி அப்பாடசாலையை அரசினர் பாடசாலையாக அங்கீகரிக்கும்படி வேண்டினார். கல்வி மந்திரியும் உடனேயே ஒத்துக் கொண்டார். இந்த நாட்களில் இலங்கைப்பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி மசோதா அமுலாகியது. அதாவது குழந்தை உழைப்பு சட்டபூர்வமாகத் தடை செய்யப் பட்டது.

1830னில் சாள்ஸ் டிக்கின்ஸ்சின் வறுமையைக் கருப்பொருளாகவும் பேசுபொருளாகவும் எழுதிய நாவல்களின் பெரிய தாக்கத்தால் குழந்தையுழைப்பு முதன்முதலாகத் தடைசெய்யப்பட்டது. அதன்பின்னர் ஏறத்தாள 135 வருடங்களுக்குப் பிறகுதான் இலங்கையில் குழந்தை அடிமையுழைப்பு தடைசெய்யப் பட்டது. அதாவது குடும்பத்தின் குழந்தை அடிமைஉழைப்பு ஒழிக்கப்பட்டது. அதாவது 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைக் கட்டாயம் பாடசாலைக்கு அனுப்பவேண்டும் என்பது சட்டமாகியது. அப்படி அனுப்பாத பொற்றோர்கள் தண்டிக்கப்படுவர்.

இந்தநாட்களின் குழந்தைகளின் பரிதாப நிலையைப் புரிந்துகொண்டால் மாத்திரம்தான் இலங்கையைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது குடும்பபாரத்தைச் சுமப்பதில் குழந்தைகள் பங்கு கொண்ட காலம். அதாவது குழந்தைகள் தோட்டங்களிலே வேலை செய்வது, ஆடுமாடு மேய்ப்பது, விறகு பெறுக்குவது, சாணிபெறுக்குவது, கருவாடு காயப் போடுவது, கல்லுடைப்பது, கட்டட வேலைகளில் முட்டாள் கூலியாக இருப்பது, தென்னிலங்கையில் உள்ள சுரட்டுக் கடைகளில் தொட்டாட்டு வேலை செய்வது போன்ற இன்னோரன்ன வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட இருண்டகாலமது. சேயோடு தான்பெற்ற செல்வம் போம் என்பதை மறந்து சேயைச் சுரண்டி வாழ்ந்த காலம், ஒரு றாத்தல் வெங்காயத்தின் விலை பதினைந்து சதம். நெல் அரிசி வெண்காயம் போன்றவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலம்.

இந்நாட்களில் தனியார் பாடசாலைகளை அரசுடமையாக்கும் வெள்ளையறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, இதற்கு எதிராகப் பிற்போக்குவாதிகள் சீறிப் பாய்ந்தனர். நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபையும் யாழ்பாணத்திலுள்ள கத்தோலிக்க மற்றும் அமெரிக்கன் மிஷன் திருச்சபைகளும் மூர்கத்தனமாகச் சீறிப்பாய்ந்து ஆவேஷத்தோடு எதிர்க்கத் தொடங்கினர். அப்பொழுது யாழ்ப்பாணக்குடாநாட்டில் 247 அமெரிக்கன் மிஷன் பாடசாலைகள் இருந்தன. கல்விமந்திரி தகநாயக்கா ஊசலாடத் தொடங்கினார். பாடசாலைகள் தேசியமயமாக்கும் நடவடிக்கை தாமதப் பட்டுக்கொண்டு போனது. இதற்கிடையில் கம்பர்மலை அரசினர்பாடசாலைக்கு எதிராக ஹின்டுபோர்ட் என்ற மதசார்பு சைவப்பாடசாலையைக் ஹின்டுபோர்ட் இராசரத்தினம் என்பவரின் தனிச்சொத்துரிமையான பாடசாலையை கொம்மந்தறையில் போடும்படி பொதுமக்கள் உடமைக்கு எதிரான பிற்போக்குத் தனியார் உடமையை ஆதரிப்பவர்கள் சிலபிற்போக்குவாதிகளை உசுப்பிவிட்டு அமைத்தனர். இந்தப் பிற்போக்குவாதிகள் 1948 லிருந்து 1956 வரையுள் நீண்டகாலத்தில் ஒருதடவையாவது பாடசாலை போடுவதைப் பற்றி உச்சரித்ததும் கிடையாது. கனாக் கண்டதும் கிடையாது. கம்பர்மலை அரசினர் பாடசாலை விடிந்து பொழுதுபடுவதற்குள் உருவான ஒன்றல்ல. அது நீண்டநாள் பகீரதப் பிரயத்தனத்தாலும் தியாகத்தாலும் எண்ணற்ற அவமானங்களைச் சுமந்ததாலும் சுதாகரித்ததாலும் உருவான ஒன்று.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல். ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”.பாரதியின் இந்த வரிகளுக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை. பாரளுமன்றத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பொதுமக்கள் அரசினர் பாடசாலையை அங்கீகரிக்கக் கூடாதென்றும், அப்படி அங்கீகரித்தல் தனிச்சொத்துடமைக்கு ஆபத்து வந்துவிடும் என்றும் ஹின்டுபோர்ட் தனியார் பாடசாலையை அரசாங்கம் அங்கீகரித்து மானியம் வழங்கி தனிச்சொத்துடமைக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டும் என்றும் போராடினார் (1956 பாராளுமன்றப் பதிவேட்டைப் பார்க்க). பொன் கந்தையா அதை எதிர்த்தார். பொன் கந்தையா “என்னுடைய தொகுதிச் சமாச்சாரங்களை நிர்ணயிக்கும் பொதுமக்கள் ஆணைஉரிமை எனக்கிருக்கிறது. உன்னுடைய காங்கேசன்துறை தொகுதி விடயங்களை நீர் பார்த்துக் கொள்ளும்,, என்று பாராளுமன்றத்தில் போராடினார். தொகுதிவாரி சுயநிர்ணய உரிமையை அனேக பாரளுமன்ற அங்கத்தவர்கள் ஆதரித்தனர். ஈற்றில் இரண்டுவருட இடைவெளியின் பின் கம்பர்மலை அரசினர்பாடசாலை அரசாங்க பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டது. அதனோடு கூடவே கம்பர்மலையில் ஒரு மாதர் முன்னேற்றச்சங்கமும், கிராமமுன்னேற்றச் சங்கமும் ஏற்படுத்தப்பட்டு அரசநிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. மாதர்முன்னேற்றச் சங்கத்திற்கு நிறைய மானியங்களும் வரத் தொடங்கியது. இந்நாட்களில் கம்பர்மலைப் பெண்பிள்ளைகள் தையற்கலையும் நெசவும் கற்கத்தொடங்கினர்.

பாடசாலை அரசுடமையாக்குதல் தாமதமாகவே பொன் கந்தையா பருத்தித்துறைத் தொகுதியில் ஓர் அரசாங்க மத்தியமகா வித்தியாலயத்தை ஏற்படுத்த முன்முயற்சி செய்தார். பருத்தித்துறைத் தொகுதியின் மத்தியில் தற்போது பள்ளவெட்டைப் பள்ளிகூடம் என்று அழைக்கப்படும் இடம் முடிக்குரிய நிலமாக இருந்தது. அதிலேயே மத்தியமகாவித்தியாலயம் அமைக்க ஏற்பாடாகியது. இதை அறிந்த பிற்போக்குவாதிகள் இரவோடு இரவாகக் கொட்டில் போட்டு அதில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் பேரால் பொன்னம்பல சைவவித்தியாசாலையைத் தொடங்கினர். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் துணையோடு அது சீக்கிரத்தில் அரசஅங்கீகாரம் பெற்றது. எள்ளங்குளத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு முடிக்குரிய காணியில் அதை ஏற்படுத்தப் பொன் கந்தையா முயற்சி செய்தார். எல்லா மாற்றுவழிகளும் அடைபடவே

நெல்லியடியில் உள்ள தனது சொந்தக்காணியை நன்கொடையாக அளித்து நெல்லியடி மத்தியமகாவித்தயாலயம் தொடங்கப் பட்டது. அதைக் கல்விமந்திரி தகநாயக்கா உடனடியாக அங்கீகரித்ததோடு அந்த மாதிரியை இலங்கை முழுவதும் விஸ்த்தரித்தார். மத்தியாமகாவித்தியாலயங்களைப் போடுவதன் மூலம் தனியார்பாடசாலைகளைத் தேசியமயமாக்குதலைத் தற்காலிகமாகப் பின்போட்டு கிறீஸ்தவ திருப்பள்ளிகளின் வெறுப்பிலிருந்து தப்பினார் தகநாயக்கா.

இந்தக்காலம் இலங்கையின் பொற்காலம். ஓர் சிறியதொழிற்புரட்சி ஏற்பட்டகாலம். பல அரசதொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. பரந்தன் சோடா தொழிற்சாலை, களனி ரயர்கூட்டுத்தாபனம். பொற்றோலியக் கூட்டுத்தாபனம், காலி அப்பாந்தோட்டை சீமெந்துத் தொழிற்சாலைகள், லக்ஸல பால்க் கூட்டுத்தாபனம் நெருப்புப் பெட்டித்தொழிற்சாலை ரத்மலானை மரக் கூட்டுத்தாபனம் என்று ஒரு கொள்ளை தொழிற்சாலை மயமாக்கல் நடந்தேறியது. அதோடு நில்லாமல் 1959 இல் ஆசியாவிலேயே முதன்முதலாக ஒரு தொழிற்துறைக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. அங்கே பிளானட்டோறியம் போடப்பட்டது. உலகின் அனேகநாடுகளிலிருந்து தொழில்நுட்பப் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பழைய காலனி நாடுகளை அபிவிருத்தியடையாமல் வைத்திருக்கும் மூலோபாயத்தைக் கொண்ட, வரலாற்றால் முந்தி அபிவிருத்தியடைந்த மேற்கு ஏகாதிபத்தியநாடுகள் இதைக்கண்டு கோபங்கொண்டெழுந்தன. தங்களது சந்தைக்காகவும் மூலப்பொருள்ளுக்காகவும் பழைய காலனிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியும் தொழிற்சாலைகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இலங்கைப்பிரதமர் பண்டாரநாயக்காவைச் சதிசெய்து கொன்றனர். 1960 இல் பொன்கந்தையா காலமானார். அதையடுத்துச் சிறிமாவோ பண்டாரநாக்கா பிரதமரானார். 1962 இல் பாடசாலைகள் தேசியமயமாதல் நடந்தேறியது. தமிழருசுக்கட்சியினர் அனைவரும் யூ.என்.பியோடு சேர்ந்து பாடாசாலை தேசியமயமாதலை எதிர்த்து வாக்களித்த அழிதெழுதமுடியாத பழியும் முதற்பாவமும் கல்லிற் பொறிக்கப்பட்டது. கொம்மந்தறை ஹிந்துப்போட் பாடசாலைத் திட்டமும் கைவிடப்பட்டு அரசினர்பாடசாலையோடு இணைக்கப்பட்டது. கம்பர்மலை அரசினர்பாடசாலை ஆல்போல்தழைத்து அறுகுபோல் வேருன்றியது. இளமைகுன்றா ஏன்றுமுள அரசினர் பாடசாலையாகியது.

இது ஆசியாவிற்தோன்றிய முதலாவது அரசினர் பாடசாலையாகும். இலங்கை ஜனனாயகம் ஆசியாவில் எப்பொழுதுமே முன்னணியில் திகழ்ந்திருக்கிறது. ஆசியாவின் முதலாவது பாடசாலை 1802இல் வட்டுக்கோட்டையில் “யாழ்பாணக் கல்லூரி,, என்ற பேரில் அமெரிக்கன் மிஷனறிகளால் ஏற்படுத்தப்பட்டது. 1848 இல் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஆசியாவின் முதலாவது வைத்தியகலாநிதி முறைப்படியும் விதிக்கிரமப்படியும் பயிற்றுவிக்கப்பட்டு வெளியேறினார். மூளாய் கோப்பறட்டி ஹொஸ்பிட்டல் 1844 இல் உண்டானது. இது ஆசியாவின் முதலாவது றொச்டேல் கோப்பறட்டியாகும்(கூட்டுத்தாபனம்). இங்கே ஆசியாவின் முதலாவது தொகுதி நேர்ஸ்கள்(மருத்துவத்தாதிகள்) புளொறென்ஸ் நைட்டிங்கேல் வெள்ளைத்தொப்பி அணியும் பட்டம் பெற்று வெளியேறினர். ஆசியாவின் முதலாவது அனாதைப் பெண்களுக்கான விடுதிப்பள்ளி ஒன்று 1886இல் உடுப்பிட்டு அமெரிக்கன் மிஷன் பெண்கள் விடுதிப் பாடசாலை என்ற பேரில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஆசியாவின் முதலாவது அனாதைப்பாடசாலை. இந்தப்பாடசாலையின் அதிபரான மிஸ் லீ என்பவர் மொண்ட சூரி அம்மையாரின் நேரடி வாரிசு. ஆசியாவின் முதலாவது கியூசியாக யோகேந்திரா துரைசாமி வெளியேறினார். ஹமில்ரன் கனால் என்று அழைக்கப்படும் ஆசியாவின் முதலாவது நீர்ப்பயண ஓடை 1802 இல் ஒல்லாந்தாரால் (டச் கனால்) கொழும்பிலிருந்து புத்தளம் வரை போடப்பட்டது. ஆசியாவின் முதலாவது போஸ்ற்ஒப்பிஸ்(தபாற்சேவை) 1798 இல் டச்சுக் காரரால் போடப் பட்டது. 1925 இல் தெற்காசியாவின் முதலாது றேடியோ இலங்கையில் வந்தது. தெற்காசியாவின் முதலாவது தந்தி 1921 இல் இலங்கையில் வந்தது. ஆசியாவின் முதலாவது ஜனனாயகமான ஜனப்பிரதிகள் சபையும் சர்வவியாபக சர்வஜனவாக்கெடுப்பும் இலங்கையில் 1927 இல் வந்தது. இங்கிலாந்தின் ஜனனாயகப் புரட்சி 1649 இல் ஏற்பட்டபோதும் சர்வஜனவாக்குரிமை 1924 லே தான் வந்தது.

ஆக மூன்றுவருடங்களே இங்கிலாந்து ஜனனாயகத்திற்கு இலங்கை ஜனனாயகம் இளையது. இலங்கையில் முடியாட்சி 1830 அகற்றப் பட்டது. முடியாட்சியை அகற்றலே ஜனனாயகத்தின் முதலாவது கடமையாகும். இன்றுவரை பிரித்தானியாவில் முடியாட்சி அகற்றப்படவில்லை. சுவிற்சலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை 1975 லேதான் வந்தது. 1960 ல் சிறீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் உலகின் முதலாவது பெண்பிரதமரானார். ஆசியாவின் முதலாவது பெண் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பாராளமன்ற அங்கத்தவர் விவியன் குணவர்த்தனாவாகும். முதலாவது ஆசியாவின் இருப்புப்பாதை 1880 ல் மாத்தளையிலிருந்து கொழும்புக்கு கோப்பிக்கொட்டையை அழுகுவதற்முன் கொண்டுவருவதற்காகப் போடப் பட்டது. முதலாவது இருப்புப் பாதை இங்கிலாந்தில் 1825 லும் ஜேர்மனியில் 1835 லுமே போடப்பட்டன. 1630 லேயே போர்த்துக்கோ ஆட்சியில் புகையிலை உலகச் சந்தைக்குக் கம்பர்மலையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்து. ஆங்கிலேய ஆட்சியிலேயே கம்பர்மலையிலிருந்து கொழும்பு பெற்றா மார்க்கட்டுக்கு வெண்காயமும் செத்தலும் வியாபாரத் தரகர்கள் மூலம் ஏற்றுமதியானது. கம்பர்மலைவாசியான வைத்திலங்கம் என்ற கிராமசபை அங்கத்தவர் 1958இல் றஸ்சியாவுக்கு உத்தியோகரீதியில் அழைக்கப்பட்டு உள்ளாராட்சி மன்றங்களைப் பார்வையிட்டு வந்தார். முதல் விண்வெளிக்குச் சென்ற யூரி ஹகாரின் கம்பர்மலைக்கு உத்தியோகரீதியில் வந்து உரையாற்றினார். கம்பர்மலை மக்களில் அதிகமானவர்கள் உலகக் கட்சிகளான மூன்றாவது கொம்யூனிச அகிலத்திலும் நான்காவது கொம்யூனிச அகிலத்திலும் மாவோவாதக் கட்சியிலும் சேர்ந்து சுறுசுறுப்பாகச் செயற்பட்வர்களாகும். இலங்கையின் உச்சியிலுள்ள இடதுசாரித் தலைவர்கள் எல்லாரும் கம்பர்மலை வன்னிச்சி கோவிலடி மைத்தானத்தில் எண்ணற்றமுறை வந்து சொற்பொழிவாற்றிய வரலாறு உடையது. இவைகளெல்லாம் கம்பர்மலைக்கும் உலகத்திற்கும் பாலம் போட்ட நிகழ்சிகளாகும்.

கம்பர்மலை அரசினர் பாடசாலை ஆசியாவின் முதலாவது அரசினர்பாடசாலையானது ஒரு தற்செயல் நிகழ்சியல்ல. அது ஒரு முன் அபிவிருத்தியின் தொடர்ச்சியாகும். கம்பர்மலை அரசினர் பாடசாலையின் அங்குரார்ப்பணம் இலங்கையின் சமூகநல ஆட்சிக்குக் கட்டியம் கூறிய தேவதூதனாகும். இலவசக் கல்வி, இலவசவைத்தியசேவை, இலவச அரிசி, பஸ்கொம்பனிகள் தேசியமயமாக்கல், போருந்து தேசியமயமாக்கல், இலவச நீர்ப்பாசனம், விதவைகள் மானிய உச்சவரம்பு, துறைமுகங்கள் தேசியமயம், மேதினம் கொண்டாடும் உரிமை. 18 வயதிற்கு மேற்பட்டவர்க்கு வாக்குரிமை, தூக்குத்தண்டனை சட்டரீதியாகத்தடை என்று ஒருதொடர் ஜனனாயக சீர்திருத்தங்கள் அமுலாகியது. தேர்தலில் வாக்குரிமை அளிப்பது மட்டும் தான் ஜனனாயகமல்ல. ஜனனாயகத்தின் கடைசி இலக்கே தேர்தல். இலங்கையின் முதலாவது தொழிற்சங்கப் போராட்டம் 1830 ல் கோப்பி உற்பத்தி காளான் நோயால் அழிந்ததை அடுத்து சம்பளம் கொடாமையை எதிர்த்து நடைபெற்றது. இங்கிலாந்தின் சாட்டிஸ்ற் தொழிற்சங்கம் 1824 லேயே ஏற்பட்டது. இலங்கைத் தொழிலாளி வர்க்கம் 6 வருடங்களே இங்கிலாந்துக்கு இளையது. இன்றுங்கூட ஐக்கிய அமெரிக்காவில் சர்வவியாபக மருத்துவக் காப்புறதி அமுலாகவில்லை. வரலாற்றால் வென்றெடுத்த உரிமைகளைக் காப்பாற்றத் தெரியாத மக்கள் சமுதாயம் வரலாற்றால் அழிந்துவிடும் என்பது சமூகவிஞ்ஞானம் மீண்டும் மீண்டும் புகட்டிய பாடமாகும்.

கம்பர்மலை மக்களின் கல்வி அபிவிருத்தியை இப்படிச் சாட்சி கூறலாம். இலங்கையின் முதலாவது பொறியல் பீடத்திற்கு கம்பர்மலையைச் சேர்ந்த பேராசிரியர் துரைராசா ஹாட்லிக் கல்லூரியிலிருந்து புகுமுகமானர். இவர் கேம்பிறிட்ச் பல்கலைக் கழகத்தில் மண்ணின் பொறியியல் நுட்பத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவராகும். அடுத்த வருடம் அதே பீடத்திற்கு சிவபாதசுந்தரம் என்பவர் ஹாட்லிக் கல்லூரியிலிருந்து பொறியியற் பீடத்திற்குப் புகுமுகமானார். அதற்கு அடுத்தவருடம் சபாரத்தினம் என்பவர் யாழ் இந்துக் கல்லூரியிருந்து பொறியியல்பீடத்திற்குப் போனார். வல்வை சிதம்பாராக் கல்லூரியிலிருந்து குணரத்தினம் என்பவர் முதன்முதலாகப் பல்கலைக் கழகம் சென்ற மூவரில் ஒருவராவார். உடுப்பிட்டி அமரிக்கன் மிஷன் கல்லூரியிலிருந்து முதலாவது பல்கலைக் கழகம் சென்றவர் கம்பர்மலையைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவராவார். இவர் ஒடுக்கப்பட்ட மக்களினத்தைச் சேர்ந்தவர். திருகோணமலை இந்துக் கல்லூரியிலிருந்து முதன்முதலாகப் பல்கலைக்கழகம் சென்றவர் கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தவசலிங்கம் என்பவர் ஆவர். வல்வை சிதம்பரக் கல்லூரியிலிருந்து முதன்முதலாக் கலைப்பீடத்திற்குச் சென்றவர் இரத்தினசிகாமணியென்ற கம்பர்மலைவாசியாவார். வல்வை சிதம்பராக் கல்லூரியிலிருந்து முதன்முதல் பல்கலைக் கழகம் சென்ற மாணவி கம்பர்மலை நாவலடியைச் சேர்ந்த செல்வி. சின்னத்துரை விசாகரத்தினம் ஆவார். இருவருமே சமஸ்கிரதத்தில் புலமைப் பட்டம் பெற்றவர்கள். வேலைகாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் சாட்டெட் எக்கவுண்டன் நிதியியல் கணக்காளர்) ஆகினார். செம்பாட்டைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பல்வைத்தியரானார். கம்பர்மலை கரவத்தனைவாசியான ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பூ. இராசையா என்பவர் மருத்துவபீடத்திற்குப் புகுமுகமானார். இவர் இன்று லண்டனில் தாய்மை மற்றும் மகப்பேற்று வைத்தியத்தில் நிபுணராவார்.

இப்படி வருடாவருடம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கம்பர்மலை பாடசாலையிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுந்துகொண்டே இருந்தனர். 2012 இல் கொம்மந்தறையை சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் என்ற மாணவன் அகிலஇலங்கையில் உயர்கணிதத்தில் அதிகூடிய புள்ளியை பெற்றவர் ஆவார். “வியவற்க எந்நாளும் தன்னை “என்ற வாக்கிற்கமய இவைகளை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இவைகள் எல்லாம் உதிரியானதோ தற்செயலானதோ தனி மரத்தோப்போ ஒருமரக்காடோ அல்ல. கம்பர்மலையின் முன்வரலாற்றுச் சமூகஉணர்மையின் காரண காரிய சங்கிலித்தொடரின் கண்ணிகளாகும். வாழ்க இழமை குன்றாதென்றுமுள யாழ்-கம்பர்மலை அரசினர் கலவன் பாடசாலை.

கட்டுரையாளர் : வ அழகலிங்கம் 18.7.2018

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *