இரவில் நம் காதருகே வந்து ஒலி எழுப்பி, நம் தூக்கம்
தொலைக்கவேண்டும் என்பது கொசுவின் வேண்டுதல் எல்லாம்
ஒன்றும் இல்லை. எந்த ஒரு அதிர்வுறும் பொருளும் ஒலியை
உருவாக்கும் என்பது நமக்குத் தெரிந்த அறிவியல். அந்தவகையில்,
கொசு பறக்கும்போது, இறக்கைகளை அசைப்பதால் நாம் கேட்டு
உணரும் அதிர்வெண்ணில் ( 4 5 0 H z – 5 0 0 H z ) ஒலி
எழுப்பப்படுகிறது.
குருதி குடிக்கும் பெண்கொசுக்கள்:
ஆண் மற்றும் பெண்
கொசுக்கள், முற்றிலும் வேறுவேறான வாழ்க்கைமுறையைக்
கொண்டுள்ளன. ஆண்கொசுக்கள், பூக்களிலுள்ள மகரந்தத்தேனை
(nectar)உறிஞ்சி, உணவாகக்கொள்கின்றன. அவை, மனிதர்களைக்
கடித்து இரத்தம் உறிஞ்சுவதில்லை.
மாறாக, பெண்கொசுக்களுக்கு, மனிதர்களின் குருதி உணவாகத்
தேவைப்படுகின்றது. குறிப்பாக, உடலுறுவுக்குப் பின்பு,
கருமுட்டைகளை உற்பத்தி செய்வதற்கு, பெண்கொசுக்களுக்கு
மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிறது. அதனால், மனிதக்குருதியை
உறிஞ்சுவதற்கான உயிரியல் கருவிகளையும், பெண்கொசுக்கள்
கொண்டுள்ளன. ஆக, காதருகே, இசைப்பதும்,, நம்மைக்
கடிப்பதும், பெண் கொசுக்களே.
நாம் வெளியிடும் மூச்சுக்காற்றில் இருக்கும் கார்பன் டை
ஆக்சைடு வாயுவை, தொலைவிலிருந்தே பெண் கொசுக்கள்
மோப்பம் பிடித்துவிடுகின்றன. நம் தலைப்பகுதியைச் சுற்றிச்சுற்றி
வருவதற்கும், காதருகே இசைபாடுவதற்கும் காரணம்,அங்குதானே
அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடு வெளிப்படுகிறது.
பெண் கொசுவின் கால்களில், சுவையறியும் உணர்விகள்
(sensors) இருக்கின்றன. அவற்றைப்பயன்படுத்தி, அடுத்த
உணவிற்குப் போதுமான குருதி இருக்கின்றதா என்று
உறுதிசெய்தபிறகே உறிஞ்சத்துவங்குகிறது.
மனிதக் குருதிவகைகளுக்கும், கொசுக்கடிக்குமான தெளிவான
ஆய்வுகள் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை. என்றாலும்,
ஓ(O) வகை குருதியைக் கொசுக்கள் விரும்புவதாக சில
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாம் உண்ணும் உணவுகாரணமாக, நமது தோல்வெளிப்படுத்தும்
மணங்களைச்சார்ந்தும், பெண்கொசுக்களின் விருப்பம்
வேறுபடுகிறது. தோலில், பாக்டீரியாக்களின் வகைகள் (diversity
of bacterias) குறைவாக இருக்கும் மனிதர்களையே,
பெண்கொசுக்கள் பெரிதும் கடிக்கின்றன என்று ஒரு ஆய்வு
சொல்கிறது. கருப்பு நிறத்தில் ஆடையணிபவர்களைப்
பெண்கொசுக்கள் விட்டுவைப்பதில்லை.
பெண்கொசுக்கள், நம் தலையைச் சுற்றிவந்தாலும், அவை
பெரிதும் விரும்பிக் கடித்து, ரத்தம் உறிஞ்சுவது, கணுக்காலுக்குக்
கீழேதான். காரணம், பாதங்கள், கொசுக்கள் விரும்பும் மணத்தை
அதிக அளவில் வெளிப்படுத்துகின்றன.கொசுக்கடித்தவுடன் மனித உடலின் நோயெதிர்ப்பாற்றல் கொசுவின் உமிழ் நீரிலிருந்து வெளிவரும் IgG, IgE உடன் இணைந்து நோயெதிர்ப்புத்தன்மையைத் தூண்டுகின்றன. இதனால் அரிப்பு, வீக்கம், மற்றும் தோல் சிவக்கிறது. சில கொசுக்கடிகள் உடனேயும், சில மணித்துளிகளிலும், சில நாட்பட்ட எதிர்வினைகளைக் காட்டுகின்றன.
சிகிச்சைகள்
அரிப்பு ஒவ்வாமையைத் தடுக்க அதன் தன்மைக்கேற்ப பென்ஹைட்ராமைன்(Benzydamine), பரப்புகளில் தடவ ஆன்திஸ்டாமைன், தீவிர சிகிச்சையில் கார்டிகோஸ்டீராய்டு (corticosteroids)களான ஹிட்ரோகார்டிசோன்(Hydrocortisone Cream), ட்ரைஅமிக்னாலோன் முதலிய பல மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.