கம்பன் கழகம் 14/02/1968 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அன்று இளைஞராக இருந்த அமரர் வ. விபுலானந்தம், அமரர் அ.சந்திரசேகரம், திரு வே.தவஞானலிங்கம், திரு பொ.சந்திரலிங்கம், திரு வ.தியாகலிங்கம், திரு செ .தவலிங்கம் , திரு.சி.கணேசலிங்கம், அமரர் க.தப்பித்துரை ,அமரர் ஆ.கி சிவராசா, திரு .த.யோகரட்ணம் ,அமரர் சி.சிவலிங்கம், திரு.ப.றணராசா, திரு.சி.தராசிங்கம் ஆகியோரின் சிந்தனையில் உருவானதே கம்பர்மலை கம்பன் கழகம் .
கழகத்தின் 1வது மெய்வல்லுனர் போட்டி 1968 ஆம் ஆண்டு சோதிடர் திரு வல்லிபுரம் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிறிய மைதானத்தில் நடைபெற்றது. இது படிப்படியாக விரிவடைந்து 3 வது மெய்வல்லுனர் போட்டி தினையான் குருவிக்காட்டிலும்,4 வதும் அதை தொடர்ந்து செம்பாட்டு தோட்ட மைதானத்திலும் வெகு வெகு சிறப்பாக வருடம் தோறும் நடை பெறும் .இவ் விளையாட்டு விழா ஒரு நாளில் ஆரம்பித்து மூன்று நாட்களாக கொண்டாடும் பெரும் விழாவாக மாறியது. இவ் விழாவிற்கு கம்பர்மலை மக்கள் (பாரதி சனசமூக நிலைய நிர்வாகம் உட்பட)அனைவரும் பூரண ஆதரவு தந்தார்கள். இவ் மூன்று நாட்களும் கம்பர்மலை மக்கள் ,அயல் கிராம மக்கள் ஒன்றுகூடி திருவிழாக் கோலம் பூணுவர்.
1ம் நாள் விலகல் முறையில் ஆன கரப்பந்தாட்டப் போட்டியும் ,2ம், 3ம் நாட்களில் சைக்கிள் ஓட்டப்போட்டி(வெளிஊர்,உள்ஊர்),மரதன் ஓட்டப் போட்டி ,ஒற்றைக்கால் சைக்கிள் ஓட்டப்போட்டி,மூன்று கால் ஓட்டப்போட்டி,வினோத உடைப் போட்டி ,கயிறு இழுத்தல் (ஆண்கள்,பெண்கள்) கழக அஞ்சல் போட்டி ,கிறிஸ் கம்பம் ஏறுதல்,சாப்பாட்டு போட்டி, புதையல் தேடிதல், இரண்டு இல்லங்களுக்கு இடையில் ஆன போட்டி,(வள்ளுவர் இல்லம் ,கம்பர் இல்லம் )முட்டி உடைத்தல் போன்றவை அடங்கும் .3ம் நாள் இறுதி நாள் இரவு நிகழ்ச்சியாக இயல்,இசை,நாடகப் போட்டியும் நடாத்தி யாழ் மாவட்டத்தில் பெருமை தேடிய கழகம் தான் கம்பன் கழகம்.
அது மாத்திரம் அல்ல முதல் முறையாக யாழ் மாவட்டத்தில் மின் ஒளி அமைப்பில் கரப்பந்தாட்டத்தையும் நடாத்திய வரலாறும் கம்பன் கழகத்திற்கு உண்டு.1972,73,74 ம்ஆண்டு கால பகுதியில் இலங்கையில் பிரசித்தி பெற்றது பொப் இசை பாடல்கள். இதில் பாடிய பிரசித்தி பெற்ற A E மனோகரன், நித்திகனகரத்தினம், அமுதன்அண்ணாமலை, M S பெனாட்டோ, இராமச்சந்திரன் மற்றும் சிலரை வரைவழைத்து இலவசமாக மேடை ஏற்றிய சாதனையும்,பெருமையும் கம்பன் கழகத்திற்கு உண்டு. அது மாத்திரம் அல்ல 3ம் நாள் இறுதி நிகழ்வுக்கு எங்கள் கிராம சிற்ப கலைஞர்களால் சிற்பங்கள் செய்யப்பட்டு சிற்பத்தில் இருந்து சீறிப் பாயும் நெருப்பும் ,தண்ணீரில் வரும் காட்சிகள் பார்வையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும்.
மேலும் உதைப்பந்தாட்டத்திலும் ,கரப்பந்தாட்டத்திலும் நாங்கள் தோற்றவர்கள் இல்லை என்பதை வல்வை, உடுப்பிட்டி, வதிரிடைமன், புன்னாலைக்கட்டுவான்,மற்றும் சில இடங்களில் விளையாடி வெற்றி வாகை சூட்டிய பெருமையும் உண்டு.இதற்கு முக்கியமாக செயற்பட்டவர் அமரர் வ.விபுலானந்தம் அவர்கள் .
கரப்பந்தாட்டத்தின் பயிற்சியை பாரதி சனசமூக நிலையத்திற்கு அருகாமையிலும், தினையான் குருவிக்காட்டிலும்,முடிச்சுவன் கிணற்றுக்கு அருகாமையிலும்,இராப்பினியன் தோட்டத்திலும் எடுப்போம்.
உதைப்பந்தாட்டத்திற்கான பயிற்சியை விறாச்சி வயலில் தான் எடுப்போம் .அப்போது அதற்கு குத்தகை எடுத்த உரிமையாளர் எங்களை விளையாட விடாமல் துரத்தப்படுவோம் .அப்போது ஓடுவோம்,ஓடுவோம் உடுப்பிட்டி எல்லை வரை ஓடி பயிற்சி எடுப்போம் .அங்கும் சில நேரத்தில் கெடுபிடிகள் உண்டு இருத்தும் மனம் தளராது பயிற்சி எடுப்போம்.நாங்கள் பயிற்சி எடுக்கும் போது ஏற்பட்ட கஷ்டங்கள் எங்கள் வரும் கால சமுதாயத்திற்கும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் 1994 ம்ஆண்டு,1999 ம் ஆண்டு,2000ம் ஆண்டு,2004 ம் ஆண்டு,2018ம் ஆண்டு,2021ம் ஆண்டு ஆகிய நீண்ட தொரு காலப்பகுதியில் எங்கள் கிராமத்தில் உள்ளவர்களின் பெரும் முயற்சியாலும், புலம் பெயர்நாட்டில் உள்ளவர்களின் நிதி உதவியாலும் இன்று பாரதி சனசமூகநிலையம் அதன் கீழ் இயங்கும் கம்பன் கழகத்திற்கு கிட்டத்தட்ட 28 பரப்பு விளையாட்டு மைதானம் சொந்தமாக உண்டு.இம் மைதானத்தில் சில வருடம் வருடம் ஆக 11 நபர் கொண்ட 20 பந்துப் பரிமாற்றங்களை உள்ளடக்கிய மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியும்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் கரவெட்டிப் பிரதேச போட்டிகளின் இறுதி வலைபந்தாட்ட (மகளிருக்கான)போட்டியும் இம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கம்பர் கழகம் வெற்றி பெற்று, யாழ் மாவட்ட போட்டிக்கு தெரிவாகி அதிலும் வெற்றி பெற்று சாதனை படைத்த வரலாறும் கம்பர்மலை கம்பன் கழகத்திற்கு உண்டு.
இவ் வரலாற்று பதிவுகள்,வெற்றிகள் அனைத்திற்கும் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை மனம் தளராது எங்கள் கிராம மக்களையும் ,மண்ணையும் நேசித்து செயற்படுவோரும் ,எங்கள் கிராமத்தில் வாழ்ந்து வந்த படித்தவர்கள், புத்திஜீவிகள், பெரியவர்கள் அனைவரையும் இக்கால கட்டத்தில் பாராட்ட விரும்புகின்றேன். அதேபோல தற்போதுள்ள இளைஞர்களும் எதிர்வரும் காலங்களில் மிகச் சிறப்பாக கழகத்தைக் காப்பாற்றி வைத்திருப்பார்கள் என என் மனநிறைவோடு வேண்டி நிற்கின்றேன்.
நன்றி.
திரு சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி