எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது?

Vladimir Pozner

“எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது”என்ற தலைப்பில் 27.09.2018 அன்று Yale (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vladimir Pozner ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.

1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. கோர்பச்சேவ் (1985-1991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரசியா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Belavezha என்ற இடத்தில் ஒன்றுகூடி சோவியத் இனை இல்லாமலாக்க கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்ற தகவலும் வெளிவந்தது.

சோவியத் இன்மையின் பின், அந்த கட்டமைப்பின் மையமாக செயற்பட்ட ரசியக் குடியரசு பலம்பொருந்திய நாடாக உருவாகியது. பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து அமெரிக்காவுடனான அதன் உறவை பேண விரும்பியது. 1992 இல் ஜெல்சின் அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். “நாம் இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்” என காங்கிரசில் உரையாற்றினார்.

ஆனால் அமெரிக்கா ரசியாவை தனது எதிரி நிலையிலிருந்து மாற்றிக்கொள்ளவில்லை. கம்யூனிச கட்சிகள் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியிலும் பிரான்சிலும் பலம்பொருந்தியதாக இருந்தன. கம்யூனிச அச்சம்; அமெரிக்காவுக்கு நீங்கியபாடில்லை. ரசியாவிலும்கூட அது மீண்டும் எழலாம் என்ற அச்சமும் இருந்தது. இந் நிலையில் 1992 இல் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கையின் பொறுப்பாளர் Paul Wolfowitz இன் இரகசிய அறிக்கை கசிந்து நியூயோர்க் ரைம்ஸ் இல் வெளியாகி பரபரப்பாகியது.

– அமெரிக்கா தனது மேலாதிக்க நிலையில் ஒரேயொரு நாடாக இருப்பதற்கு சவாலாக எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்கக்கூடாது.

– தமது நட்பு நாடுகள் ஆயுத உருவாக்கம் அல்லது உற்பத்தி குறித்து கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் உங்களுக்காக செய்வோம்

– இரசியாவை கண்காணிக்க வேண்டும். அந்த கரடி மீண்டும் தனது பின்காலை ஊன்றி எழுந்து நிற்கலாம்.

இது பின்னர் பாதுகாப்பு அமைச்சர் Powel, Cheney இருவராலும் மாற்றி எழுதப்பட்டது. “ரசியாவும் அமெரிக்காவும் super power ஆக தொடர்ந்து இருக்க வேண்டும்” என மாற்றம் பெற்றது. ஆனால் அது காகிதத்தோடு போனது. விரைவிலேயே ரசியா இரண்டாவது நிலை நாடாகவே கணிக்கப்பட்டது.

அமெரிக்க வெளிநாட்டமைச்சரான ஜேம்ஸ் பேக்கருக்கு வாக்குறுதி அளித்தபடி பேர்லின் சுவரை கொர்பச்சேவ் வீழ்த்தினார். “இனி நேற்றோ ஒரு அங்கலம்கூட கிழக்குநோக்கி நகராது” என்பதே அந்த வாக்குறுதி. அந்த வாக்குறுதியும் காகிதத்தோடு போனது. 90 களின் நடுப் பகுதியில் நேற்றோவை கிழக்கு நோக்கி விரிவுபடுத்தும் முடிவு எடுக்கப்பட்டு முதற்கட்டமாக போலந்து, செக் குடியரசு, கங்கேரி நாடுகள் நேற்றோவில் இணைக்கப்பட்டன.

அமெரிக்க வரலாற்றாய்வாளரும் இராசதந்திரியுமான ஜோர்ஜ் கென்னன் இந்த முடிவை எச்சரித்தார். மே1998 இல், “இது ஒரு புதிய பனிப்போரின் ஆரம்பம் என நினைக்கிறேன்” என்றதோடு, “ரசியா இதற்கேற்ப படிப்படியாக தனது நிலையை மாற்றிக்கொள்ள நேரிடும். அது அவர்களின் தற்போதைய கொள்கையை மாற்றியமைக்கும்” என்றார். “இந்த நேற்றோ விரிவாக்க முடிவு ஒரு கவலைதரும் தவறு எனவும் அதை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.

நேற்றோவின் விரிவாக்கத்தால் ரசியா ஏமாற்றமடைந்தது. அதன் விரக்தியை ஈடுசெய்ய அமெரிக்காவோ மேற்குலகோ எதையுமே செய்யவில்லை. மாறாக யூகோஸ்லாவியா மீதான யுத்தத்தை ஆரம்பித்தது. சேர்பியாவில் நிலப்பரப்புள் இருந்த கொசோவோவை தனிநாடாக பிரித்தது.

ஜெல்சின் கோபமடைந்தார். “நாங்கள் கெயிற்றி நாடு அல்ல. எங்களை நீங்கள் அப்படி கையாள முடியாது. நாங்கள் பெருமிதமான நாடு. எங்களுக்கு அத்தகைய கடந்த கால வரலாறு இருக்கிறது. ரசியா மீண்டும் எழும்” என தனது கோபத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார்.

2000 இல் புட்டின் செய்த முதல் முயற்சி ரசியா நேற்றோவில் அங்கம் வகிக்க கோரிக்கை விட்டதுதான். ஐரோப்பாவின் பாதுகாப்புக்காக என்ற பெயரில் உருவாக்கப்பட்ட நேற்றோ உண்மையில் சோவியத் இன் கம்யூனிசத்துக்கு எதிராகவும் அது மேற்கொள்ளக்கூடிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் செயற்படும் நோக்கம் கொண்டதாகவே இருந்தது. இதன் மாற்றுக் கூட்டணியாக இருந்த Warsaw கூட்டணி சோவியத் உடைவோடு இல்லாமல் போனபோது நேற்றோவுக்கான தேவையும் இல்லாமல் போயிருக்க வேண்டும். மாறாக அது பலம்பொருந்தியதாக மாறிக்கொண்டிருந்தது.

ஐரோப்பாவின் பாதுகாப்பு என்ற லேபலில் இயங்கியது Nato அமைப்பு. இதே தர்க்கத்தை வைத்து புட்டின் “அப்படியானால் ஐரோப்பாவில் உள்ளடங்கும் ரசியா ஏன் இதில் அங்கம் வகிக்கக்கூடாது அல்லது எம்மையும் உள்ளடக்கிய புதிய அமைப்பு ஒன்றை ஏன் உருவாக்கக் கூடாது” என கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைத்த பதில் Go for walk என்ற நையாண்டியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக அல்லது இணைப்பு நாடாக ரசியா இருப்பதற்கான கோரிக்கையை புட்டின் முன்வைத்தபோதும், அதை நிராகரித்தமைக்கு அரசியலடிப்படையிலான காரணம் முன்வைக்கப்படவில்லை. “இல்லை ரசியா மிகப் பெரிய நாடு” என்ற பதிலே கிடைத்தது.

இந்த புறக்கணிப்பு எல்லாம் ரசிய மக்களுக்கு கோர்பச்சேவ் மற்றம் ஜெல்சின் மீதான கோபத்தை விளைவித்தது. “நீங்கள் இருவரும் எமது நாட்டை விற்றுவிட்டீர்கள்” என அவர்கள் கடுமையாக சாடினார்கள். இன்று இந்த இருவருக்குமான செல்வாக்கு ரசியாவில் 5 வீதத்துக்கும் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோப உணர்ச்சி ரசிய மக்களை அமெரிக்க எதிர்ப்பு மனநிலைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

ஆனாலும் நியுயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தபோது தொலைபேசியில் புட்டின் புஷ் உடன் தொடர்புகொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்பட தனது உதவியை நல்குவதாக தெரிவித்தார். அதற்காக அமெரிக்க இராணுவத்துக்கு மத்திய ஆசியப் பகுதியை உபயோகிக்க வசதிசெய்து தருவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிராக சேர்ந்து செயற்படுவோம் எனவும் சொன்னார். ஆனால் புஷ் அதை புறந்தள்ளினார். இவ்வாறாக ரசியா தனது தரப்பில் எடுத்த இராசதந்திர முயற்சிகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன.

2007 இல் G20 மாநாட்டில் புட்டின் உரையாற்றியபோது, நேற்றோவின் விரிவாக்கம் குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். “நேற்றோ ஐரோப்பிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை கேட்கும் உரிமை எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கு எதிராக ஏன் இந்த விரிவாக்கம்?” என நேரடியாகவே கேட்டார். “1990 மே17 அன்று புரூசலில் என்ன சொல்லப்பட்டது. நேற்றோ இராணுவத்தை ஜேர்மனிக்கு வெளியில் தரித்துவைக்க மாட்டோம். சோவியத் யூனியனுக்கு ஒரு ஸ்திரமான பாதுகாப்பு உறுதிப்பாட்டை நாம் வழங்குவோம் என்றீர்கள். எங்கே அந்த உறுதிப்பாடு?” என்று கேட்டார் புட்டின். அதற்கான பதில் இவ்வாறாக இருந்தது. “ஆம் கொடுத்தோம்தான். அது சோவியத் க்குத்தான், ரசியாவுக்கு அல்ல. நீங்கள் ரசியர்கள்”. என பதில் கிடைத்தது. ரசியாவை அவமானப்படுத்துகிற இன்னொரு நையாண்டிப் பதிலாக இது இருந்தது.

2017 இல் புட்டின் அமெரிக்காவையும் மேற்குலகையும் பார்த்து இவ்வாறு கூறினார். “எங்களுடைய தவறு உங்களை நம்பியது. உங்களது தவறு அதை உங்களுக்கு சாதகமாக எடுத்தது” என்றார். மேற்குலகினதும் அமெரிக்காவினதும் இந்த அரசியல் சித்துவிளையாட்டு புட்டினின் அணுகுமுறைகளை மாற்றியமைத்தது. அதாவது புட்டின் இன்று இவர்களை எந்தவிதத்திலும் நம்பவில்லை. இன்னும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டிருக்கிறது. இராஜதந்திர முயற்சிகளை இல்லாமலாக்கியிருக்கிறது.

சுடுமணல் சஞ்சிகையிலிருந்து..

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *