எறும்புகள்-ஆய்வுக்கட்டுரை காக்கை சிறகினிலே சஞ்சிகையிலிருந்து

இயற்பியல் மையக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலில் பூமி தோன்றியது. அதன்பிறகு, பூமியில் உயிர்கள் தோன்றின. அப்படித்தோன்றிய உயிர்கள் இன்று வரையிலும் நிலைபெற்றிருப்பதற்கு, ‘இனப்பெருக்கமே’ காரணம். இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாக அமைவது ‘ஆண்-பெண்’ உறவு.

தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்து உயிரினங்களிலும், ஆண், பெண் இனங்கள் உண்டு. ஆண்-பெண் உறவு கொள்வதன்வழியே, ஆணின் விந்தணு, பெண்ணின் கருப்பையை அடைந்து, இனப்பெருக்கம் நடைபெறுகிறது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இது பொதுவானது.

தாவரங்களில், ஆண்-மகரந்தம், பெண்- சூல்பையில் விழும்போது, சூலுற்று, பிஞ்சாகி, காய்த்து, கனிந்து, வித்துகள் உருவாகி, இனப்பெருக்கம் நடைபெறுகிறது. ஒரு தாவரத்தில் உள்ள மகரந்தம், அதே தாவரத்தின் சூலுறுப்பை அடையுமானால், அது ‘தன் மகரந்தச் சேர்க்கை ‘ ஒரு தாவரத்தின் மகரந்தம், மற்றொரு தாவரத்தின் சூலுறுப்பில் சென்று சேருமானால், அது ‘அயல் மகரந்தச் சேர்க்கை ‘

அயல் மகரந்தச் சேர்க்கையில்தான், வலுவான வித்துகள் உருவாகி, சிறப்பான இனப்பெருக்கம் நிகழ்கிறது. அயல் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிப்பதற்காகவே, மலர்களுக்கு மணமும், கண்ணைக்கவரும் வண்ணங்களும், பூந்தேனும் படைக்கப்பட்டுள்ளன. அவற்றால் ஈர்க்கப்படும் வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் போன்றவற்றால், அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. அயல் மகரந்தச் சேர்க்கைக்கு, பறவைகளும், விலங்குகளும்கூட உதவுவது உண்டு.

விலங்குகளிலும், பெண் இனம், தனது உறுதியான சந்ததியைப் பெருக்குவதற்கு, வலுமிகுந்த ஆண் இணையையே தெரிவு செய்கிறது.

தாய்வழிச் சமூகமாக மனிதர்கள் வாழ்ந்த காலங்களில், பெண்களும் இப்படித்தான் தனக்குப்பிடித்த வலுவான ஆணைத் தெரிவு செய்து, உறவு கொண்டு, அனைத்துச் சூழலையும் எதிர்கொள்ளும் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள்.

எறும்புகள்:

பூமியில், 12,000 க்கும் மேற்பட்ட எறும்பு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை, குடியிருப்புகளை (ant colonies)ஏற்படுத்திக்கொண்டு சேர்ந்து வாழ்கின்றன. பூமியெங்கும் எறும்புகள் காணப்பட்டாலும், வெப்பமண்டலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. எறும்புக் குடியிருப்புகளில், சிலநூறு எறும்புகள் வாழும் சிறிய குடியிருப்புகள் முதல், சில கிலோமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் பல மில்லியன்

Amazing ants:Top 5 interesting facts about these Strong, tiny creatures  that work better as a community than most humans | Ant colony, Ants, Ant  hill

எறும்புகள் வாழும் மாபெரும் குடியிருப்புகள் (super ant colaony) வரையிலானவையும் உண்டு . 2மி.மீ முதல் 25 மி.மீ. வரையிலும் அளவு கொண்ட எறும்புகள், மஞ்சள், சிவப்பு, கருப்பு, பழுப்பு நிறங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன.

எறும்புகளின் இனப்பெருக்கம்:

ஒரு எறும்புக் குடியிருப்பில் உள்ள ராணி எறும்புகளின் ஒரே வேலை இனப்பெருக்கம் செய்வதுதான். அதற்கென்றே, இளவரசர் ஆண் எறும்புகளும் (Drones) குடியிருப்புகளில் உள்ளன. இறகு முளைத்த ராணி மற்றும் இளவரசர் எறும்புகள், இனப்பெருக்கக் காலத்தில், குடியிருப்பைவிட்டுப் பறந்து வெளியேறுகின்றன. தன் குடியிருப்பைச் சேர்ந்த ஆண் எறும்புகளுடன் உறவுகொள்ளலைத் தவிர்ப்பதற்காக, ராணி எறும்புகள் மிகவேகமாகப் பறக்கின்றன. அப்படிப் பறக்கும் போது, மற்ற குடியிருப்புகளில் உள்ள இளவரசர் எறும்புகள் ராணி எறும்புகளுடன் ‘கலப்புறவு’ கொள்வதுண்டு. இப்படிப்பட்ட எறும்புகளின் பறத்தல், ‘உறவுப்பறத்தல்’ (nuptial fights) எனப்படுகிறது.

ஒருமணி நேரத்திற்குள்ளாக, பல்லா யிரக்கணக்கிலான, ஆண் எறும்புகளும், பெண் எறும்புகளும் வானில் பறந்து, உறவுக்கேற்ற இணையை, மற்ற குடியிருப்புகளில் தேடுகின்றன. அப்படிப் பறக்கும் போதும், தரைக்கு வந்த பிறகும் பறவைகள், தவளைகள், சிலந்திகள், வண்டுகள், பூரான்கள் போன்றவற்றால் வேட்டையாடப்படுவதுண்டு. எனவே பல்லா யிரக்கணக்கில் பறந்தாலும், கடைசியாக ஒன்றிரண்டு எறும்புகள் மட்டுமே தப்பிப்பிழைத்து உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆண் எறும்புகளைப் பொறுத்தவரையிலும், உறவுக்குப் பிறகு அவை உயிர்வாழ்வதில்லை. உறவுக்குப் பிறகு, ஆண், பெண் எறும்புகள் இறகுகளை உதிர்த்துவிடுகின்றன. உறவு கொண்ட பெண் எறும்பு உயிர்வாழுமானால், தரையில் குழிதோண்டி, முட்டையிட்டு, தனித்து நின்று தனது குடியிருப்பை உருவாக்கிவிடுகிறது.

பிறக்கும் எறும்புக் குஞ்சுகள் ஆண் அல்லது பெண் என்பதை, ராணி எறும்பே முடிவுசெய்கிறது. கருவுற்ற கருமுட்டைகள் (fertilized eggs) இறகுமுளைக்கும் கருவுறும் தகுதி கொண்ட ராணி எறும்புகளாக அல்லது இறகு இல்லாதப் பெண் வேலைக்கார எறும்புகளாக உருப்பெறும். கருவுறாத (Unfertilized eggs) இறகுமுளைக்கும் ஆண் எறும்புகளாக உருப்பெறும். அவை வேலை எதுவும் செய்யாது. அவற்றின் ஒரே வேலை, இளம் கன்னி ராணிகளுடன் (virgin queens) உறவுகொண்டு, இனப்பெருக்கம் செய்வதே ஆகும்.

ராணி எறும்பு, ஒருமுறை மட்டுமே உறவுகொள்ளும். அந்த ஒருமுறையில், பல ஆண் எறும்புகளுடன் உறவுகொள்வதுண்டு. அந்த உறவுகளின்போது, ஆண் எறும்புகளின் விந்துக்களை, தனது வயிற்றுக்கு அருகில் உள்ள ஒரு பையில் (spermatheca) வைத்து பூட்டி வைத்துவிடும். தேவைப்படும்போது, அந்தப்பையில் உள்ள வால்வைத் (valve) திறந்து தேவையான அளவு விந்தை எடுத்து, தனது கருமுட்டைகளுடன் சேர்த்து இனப்பெருக்கம் செய்யும். இப்படியே பல ஆண்டுகள் வரையிலும் இனப்பெருக்கம் செய்வதுண்டு.

ராணி எறும்பு, வேலைக்கார எறும்புகளைவிட நீண்ட காலம் வாழக்கூடியதாக இருக்கிறது. ஐரோப்பாவின் சோதனைக்கூடம் ஒன்றில்

கண்காணிக்கப்பட்டுவந்த ஒரு ராணி எறும்பு {queen ant in captivity) 29 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறது. தென் அமெரிக்காவில் இலை வெட்டும் எறும்பு (leaf&cutter ant) இனத்தில் ஒரு ராணி எறும்பு 14 ஆண்டுகளில், 150 மில்லியன் வேலைக்கார எறும்புகளை உற்பத்தி செய்திருக்கிறது.

கலப்புறவுக்காகக் கடத்தப்படும் கன்னிராணிகள்:

எறும்புக் குடும்பத்தில், உணவு தேடுவது, உணவு தயாரிப்பது, குஞ்சுகளைப் பராமரிப்பது, குடியிருப்பைப் பராமரிப்பது என்று பலவிதமான வேலைகளை, வேலைக்கார எறும்புகள் (worker ants) செய்கின்றன. என்றாலும்,

மத்தியதரைக்கடல் பகுதியில் வசிக்கும் ‘கார்டியோகொண்டிலா எலிகன்ஸ் ‘ (Cardiocondyla elegans) என்னும் எறும்பு வகையில், வேலைக்கார எறும்புகள், விநோதமான வேலை ஒன்றைச் செய்கின்றன என்பது சமீபத்திய ஆய்வொன்றிலிருந்து தெரியவருகிறது. ஆங்கிலத்தில், Cardio என்பது மனித இதயத்தைக்குறிப்பது. இந்த எறும்புகளின் தோற்றம் இதயம்போல இருப்பதால், காரணப்பெயராகும்.

ஒரு குடியிருப்பின் ராணி எறும்புகளுடன், தொலைதூரக்குடியிருப்புகளில் உள்ள ஆண் எறும்புகள் உறவுகொள்வதற்காக, வேலைக்கார எறும்புகள், தங்களது ராணிகளைச் சுமந்து செல்கின்றன இந்த எறும்புகள், அளவில் மிகவும் சிறியவை, 2 மி.மீ. முதல் 3 மி.மீ. வரைதான் அவற்றின் நீளம். ஆனாலும், ராணி எறும்புகளை, ஏறத்தாழ 50 மீட்டர் தொலவுவரையிலும் சுமந்து செல்கின்றன. 50 மீட்டர் என்பதை, தமது கோணத்தில் பார்க்கக்கூடாது. எறும்பின் நீளத்திலிருந்து அது எத்தனை தொலைவு என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். 50 மீ. தொலைவு என்பது, ஏறத்தாழ, எறும்பின் நீளத்தைப்போல 5,500 மடங்கு ஆகிறது. இந்த நீண்ட தொலைவு, வேலைக்கார எறும்பு வெறுமனே நகர்ந்து செல்லவில்லை. அளவில் பெரிய ராணி எறும்பையும் சுமந்து செல்கிறது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

வேலைக்கார எறும்புகள், தங்களது தாடைகளைப் (Mandibles) பயன்படுத்தி, ராணி எறும்புகளை மிகவும் உறுதியாகப் பற்றிக்கொண்டு, தொழிலாளிகள் முதுகில் மூட்டைகளைச் சுமந்து செல்வதுபோல, சுமந்து சென்று, தொலைவில் உள்ள எறும்புக் குடியிருப்பின் வாயிலில் விட்டுவிடுகின்றன. குடியிருப்பு வாயிலில் விடப்பட்ட ராணி எறும்பு, நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ‘உறவு அறைக்குள்’ (mating chamber) செல்ல அனுமதிக்கப்படுகிறது. அந்த அறை முழுவதும், அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஆண் எறும்புகளால் நிறைந்துள்ளது. அந்த ஆண் எறும்புகள், அங்குள்ள பெண் எறும்புகளுடன் ஏற்கனவே ‘உறவு கொண்ட’ அனுபவம் உள்ளவை. அப்படிக் காத்திருக்கும் ஆண் எறும்புகள், வெளியிலிருந்துவந்த ராணி எறும்புடன் உறவு கொள்கின்றன.

இயற்கையில், ஏன் இப்படிப்பட்ட ஏற்பாடு என்னும் கேள்வி எழுவது இயல்புதான். மற்ற எறும்பு இனங்களில், இறகு முளைத்த ஆண், பெண் எறும்புகள், இனப்பெருக்கக் காலத்தில், பறந்து சென்று மற்ற குடியிருப்புகளிலிருந்து பறந்துவரும் எறும்புகளுடன் கலப்புறவுகொள்கின்றன. ஆனால், கார்டியோகொண்டிலா எலிகன்ஸ்’ (Cardiocondyla elegans) எறும்புகளில், ஆண் எறும்புகளுக்கு இறக்கைகள் இல்லை. எனவே அவை பறந்து செல்ல முடியாது. பெண் எறும்புகளுக்கு இருக்கும் இறக்கையும் பறத்தலுக்கு உதவுவதில்லை . எனவேதான், கலப்புறவு நிகழ்ந்து அதன் காரணமாக, சிறப்பான மரபணுவைக்கொண்ட எறும்புகளை இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட ஏற்பாடு இயற்கையில் உள்ளது.

வேற்றுக் குடியிருப்பில் நுழைந்து, அங்குள்ள ஆண் எறும்புகளுடன் உறவு கொள்ளும் ராணி எறும்பு, உறவின்போது பெறப்படும் விந்தணுக்களை (sperm) அவற்றிற்கான பையில் (spermiatheca) சேமித்து வைத்துக் கொள்கின்றது. வேற்றுக் குடியிருப்பில், அங்குள்ள ஆண் எறும்புகளுடன் உறவு கொள்ளும் ராணி எறும்பு, ஒரு பருவகாலம் முடியும் வரையிலும் அந்தக் குடியிருப்பில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அப்படி, அந்த ராணி எறும்பு அந்தக் குடியிருப்பில் தங்க அனுமதிக்கப்படுவதற்குக் காரணமே, அந்தக் குடியிருப்பைச் சேர்ந்த ஆண் எறும்புகளின் மரபணுக்களை சுமந்து கொண்டிருப்பதே.

தங்கும் காலத்தின் அளவு, அங்குள்ள உணவுப்பொருட்களின் இருப்பையும் சார்ந்தது. ஒரு பருவகாலத்திற்குமேல், அந்த ராணி எறும்பு அந்தக் குடியிருப்பில் தங்குவதற்கு, அங்குள்ள வேலைக்கார எறும்புகள் அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தங்கும் ராணி எறும்புமீது அவை மிகுந்த கோபம் கொள்ளும். சிலவேளைகளில், அந்த ராணி எறும்புகளைக் கொன்றுவிடுவதும் நிகழும். ஒரு குடியிருப்பில் உள்ள பல கன்னிராணி எறும்புகளை (virgin queens) வேளியேற்றும் நிலை வரும்போது, அங்குள்ள வேலைக்கார எறும்புகள் வெளியிலிருந்து அங்குவந்த ராணி எறும்புகளையே முதலில் வெளியேற்றும்.

அந்த எறும்புக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்படும் ராணி எறும்பை, அங்கு காத்திருக்கும் வேலைக்கார எறும்புகள், மேலும் பல எறும்புக் குடியிருப்புகளுக்கு சுமந்து சென்று, அத்தனை குடியிருப்புகளின் ஆண் எறும்புகளுடனும் உறவு கொள்ளச்செய்யும். ராணி எறும்பு, வேலைக்கார எறும்புகளின் துணைகொண்டு, பலகுடியிருப்புகளைச் சேர்ந்த ஆண் எறும்புகளுடன் உறவுகொண்டு, அவற்றின் விந்தணுக்களைத் தனது விந்தணுப்பையில் சேமித்து வைத்துக்கொள்கிறது. அடிக்கடி வெள்ளம் வரும் ஆற்றங்கரைகளில் எறும்புக்குடியிருப்புகள் இருப்பதால், வேலைக்கார எறும்புகளின் பங்கு அவசியமாகிறது. ஒவ்வொரு ஆண்டும், 40 விழுக்காடு எறும்புகள் மடிந்துவிடுகின்றன. அதனை ஈடுகட்ட, தகுதியான இனப்பெருக்கம் அவசியமாகிறது.

கடைசியாகக் குடியிருப்பை விட்டு வெளியேற்றப்படும் ராணி எறும்பு, தனித்து நின்று தனது குடியிருப்பை உருவாக்கிவிடுகிறது. தரையில் குழிதோண்டி முட்டையிட்டு, முதலில் வேலைக்கார எறும்புகளை உற்பத்திசெய்கிறது. வேலைக்கார எறும்புகள் குடியிருப்பை விரிவுபடுத்துகின்றன. அதன்பிறகு, ராணி எறும்பு, தனது கரு முட்டைகளையும், பையிலிருக்கும் விந்துகளையும் சேர்த்து இனப்பெருக்கத்திற்கான ராணி எறும்புகளையும் ஆண் இளவரசர் எறும்புகளையும் உற்பத்தி செய்கிறது. இப்படியாக உருவாக்கப்படும் குடியிருப்புகளில், இனப்பெருக்க சுழற்சி மீண்டும் தொடங்குகிறது.

கார்டியோகொண்டிவா எலிகன்ஸ்’ (Cardiocondyla elegans) எறும்பு இனத்தில், ஒரு குடியிருப்புக்குள்ளேயான உறவுகளும் அதன் காரணமான இனப்பெருக்கமும் இருக்கத்தான் செய்கிறது என்று ஆய்வாளர் ‘விடால்’ தெரிவிக்கிறார். ஒவ்வொரு ராணி எறும்பும், அதனது வாழ்நாளில் எட்டு ஆண் எறும்புகளுடன் உறவு கொள்வதாகத் தெரியவருகிறது. அவற்றில் நான்கு உறவுகள், அதே குடியிருப்பைச் சேர்ந்த அவற்றின் உடன் பிறப்புகளான ஆண் எறும்புகளுடனும், மற்ற நான்கு உறவுகளும் வெளி குடியிருப்புகளைச்சேர்ந்த ஆண் எறும்புகளுடனும் நிகழ்வதாக ஆய்வுக்குழுவினர் நம்புகின்றனர்.

சில விடை தெரியாத புதிர்களும் உள்ளன. ராணி எறும்பைச் சுமந்து செல்லும் வேலைக்கார எறும்பு, எப்படி அருகில் உள்ள குடியிருப்புகளைத் தவிர்க்கிறது? தொலைவில் உள்ள எந்தக் குடியிருப்பின் வாயிலில் ராணி எறும்பை இறக்கிவிடவேண்டும் என்பதை வேலைக்கார எறும்பு எதன் அடிப்படையில் முடிவு செய்கிறது?

இந்த எறும்புகளை வைத்து ஆய்வுக்கூடத்தில் செய்யும் சோதனைகளிலிருந்தே, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ராணி எறும்புகளை வலுக்கட்டாயமாக, மற்ற எறும்புக் குடியிருப்புகளுக்குத் தூக்கிச் செல்வதைப் பார்க்கும்போது, ராணி எறும்புகள் எங்கு, எவற்றுடன் உறவு கொள்ளவேண்டும் என்பதை வேலைக்கார எறும்புகளே தீர்மானிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு எறும்புக்குடியிருப்பைச் சேர்ந்த கன்னி ராணிகள் எந்தக்குடியிருப்பைச் சேர்ந்த ஆண் எறும்புகளுடன் உறவு கொள்ளவேண்டும் என்பதை, வேலைக்கார எறும்புகளே முடிவு செய்கின்றன. உறவு கொண்டு, கருவுற்ற ராணி எறும்புகளைக் குடியிருப்பைவிட்டு வெளியேற்றும்போது, எவற்றை முதலில் வெளியேற்றவேண்டும் என்பதையும் வேலைக்கார எறும்புகளே முடிவு செய்கின்றன. வெளியேற மறுக்கும், ராணி எறும்புகளைக் கொன்றொழிப்பதும் வேலைக்கார எறும்புகளே, இதனைத்தான், ‘ஆளப்படுபவர், ஆள்பவராகிறார்’ (Ruled become ruler) என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

பொதுவாக, அனைத்து விலங்குகளிலும் ஆண், பெண் இணைசேர்தல் என்பது இயற்கையானது. ஆனால், அவற்றிற்கிடையில் மூன்றாவதுவிலங்கு துணைசெய்வதில்லை. எறும்புகளில் கூட அப்படி இல்லை. இனப்பெருக்கக் காலத்தில், இறகுமுளைத்த ஆண் மற்றும் பெண் எறும்புகள் தங்கள் குடியிருப்புகளைவிட்டுப் பறந்து சென்று உறவு கொள்கின்றன.

இதுவரையிலும் அறியப்பட்டதில், கார்டியோகொண்டிலா எலிகன்ஸ்’ (Cardiacondyla elegans) எறும்பு இனத்தில் மட்டும் தான், ராணி எறும்புடன், வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த ஆண் எறும்புகள் உறவுகொள்வதற்கு, மூன்றாவதாக வேலைக்கார எறும்புகள் துணைசெய்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் (third party helping ants for mating). இப்படிப்பட்ட கலப்புறவுகள் என்பதே, மரபணுவைப் பரவலாக்கி (gene diversity) அதன்மூலம், அந்த எறும்பு இனத்தின் இருத்தலைத் (survival) தக்கவைத்துக்கொள்வதேஆகும்.

நம் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியாத, அளவில் சிறிய எறும்புகளை (2le – 3Ie) நான்கு ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து, முனைவர் பட்டத்திற்காக, இப்படிப்பட்ட ஆய்வுகளை செய்திருக்கிறார், ஜெர்மனியின் ரீகன்பெர்க்

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த (LIniversity of Regensberg) ‘ மதில்டே விடால்’ (Ms. * Mathilde Vidal) என்னும் ஆய்வு மாணவி. இந்த ஆய்வு மாணவியும் இவரது குழுவினரும். 2014 முதல் 2019 வரையிலும் ஃபிரான்சு நாட்டின் தென்பகுதியில், 175 கார்டியோகொண்டிலா எலிகன்ஸ் ‘ (Cardiocondyla elegans) எறும்புக் குடியிருப்புகளைத் தங்களது ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

நமது பல்கலைக்கழகங்களிலும் , கல்லூரிகளிலும், முனைவர் பட்ட ஆய்வுகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை எண்ணிப்பார்க்காமல் அவ்வளவு எளிதாக என்னால் கடந்து போக முடியவில்லை. பறக்கும் பட்டம் போல முனைவர் பட்டம் பெறுவதும், அவர்கள் அடிக்கும் தம்பட்டமும், இதுபோன்ற காத்திரமான ஆய்வுகள், ஒன்று அல்லது இரண்டு என்னும் அளவில்கூட நம் ஆய்வு மாணவர்களிடமிருந்து வருவதில்லை என்பதையும் அது நம் கல்விப் புலத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதையும் மிகுந்த கவலையுடன் பதிவு செய்யவேண்டியுள்ளது.

Ref. Paper published in May 3 (2021) in the journal, Communications Biology

குறிப்பு: ராணியைச் சுமந்து செல்லும் வேலைக்கார எறும்பு கார்டியோகொண்டிலா எலிகன்ஸ் ‘ (Cardiocondya elegans)

கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர் (பணிநிறைவு)

This image has an empty alt attribute; its file name is kai-m-kaddi.gif

இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.
உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய: oorum.uravum@gmail.com
முகநூல் : https://www.facebook.com/oorum.uravum.16

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *