நான்ஸ்டிக் பாத்திரங்கள் உபயோகம் செய்யாத சமையலறைகள் இன்று மிக குறைவு. ஏனெனில், அது உபயோகிக்க மிகவும் சுலபமானது. குறைந்த எண்ணெயில் , அடி பிடிக்காமல் , மிக வேகமாக சமைத்து விடலாம். அது மட்டுமா! சுத்தம் செய்வதும் மிக எளிது. இந்த விஷயங்கள் எல்லாம் , இதை உபயோகிப்பவர் நன்கு அறிவர். ஆனால், யாருக்கும் தெரியாமல் ஒரு விஷயம் நடந்தேறி கொண்டு தான் இருக்கிறது! அது என்னவெனில், நான்ஸ்டிக் பாத்திரங்கள் , அதிக அளவு சூடாகி விடும் போது , அவற்றில் இருந்து , மணம் இல்லாத நச்சு புகைகள் வெளியேறுகின்றது என்பது !
எதனால் நச்சு புகை வெளியேறுகிறது , என்ன காரணம் , அதை தடுக்க ஏதேனும் வழிகள் உண்டா என்று அடுத்து பார்க்கலாம்! அதற்கு நாம் முதலில் , நான்ஸ்டிக் பாத்திரங்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதனை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்கள் எல்லாம் உலோகத்தினால் உருவாக்கப்படும் பாத்திரங்கள். அவற்றுக்கு, நான்ஸ்டிக் அதாவது ஒட்டாது இருக்கும் தன்மையை கொடுப்பது டெஃப்ளான் பூச்சு(Teflon Coating ) தான்! இந்த டெப்லான் பூச்சு கொண்ட பாத்திரங்களை கவனிக்காமல் அடுப்பில் காய விட்டு விடும் பொழுது PFOA (Perfluorooctanoic acid ) என்ற நச்சு பொருள் வெளியாகிறது!
இந்த நச்சு பொருள் சமையலறையில் சமையல் செய்பவருக்கு பெருத்த ஆபத்தை விளைவிப்பவை!இந்த நச்சு புகைகளை சுவாசிப்பவர்களுக்கு டெஃப்ளான் காய்ச்சல் வருவது கண்டறியப்பட்டுள்ளது! இந்த காய்ச்சல் , குளிர் கபசுரத்தை(Influenza ) போன்றது!
இவ்வளவு ஆபத்துகள் இருக்கிறது என்று தெரிந்தும் , அவ்வளவு சீக்கிரத்தில் இந்த நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களை இல்லத்தரசிகள் விட்டுக் கொடுத்து விட மாட்டார்கள்! ஏனெனில் , அதில் இருக்கும் சவுகரியம் வேறு எந்த பாத்திரங்களிலும் இல்லை என்பதால்! இந்த PFOA போன்ற நச்சு பொருள்கள் எதுவும் வெளியேறாமல் சமைக்க முடியாதா என்று நீங்கள் கேட்பது காதில் கேட்காமல் இல்லை!அதற்கு என்னுடைய பதில், கண்டிப்பாக முடியும்! அதற்கு கொஞ்சம் பொறுமையும் நிதானமும் அவசியம்! நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களை உபயோகிக்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அவை ,
1) நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சமையல் செய்யும் போது , குறைந்த தீயில் சமைப்பதே சிறந்தது.
2) அடுப்பில் அதிக நேரம் நான்ஸ்டிக் பாத்திரத்தை வெறுமனே காய விட்டு விட கூடாது.
3) மரக்கரண்டிகளை உபயோகம் செய்வதே சிறந்தது. உலோக கரண்டிகள் உபயோகித்தால் , அப்பாத்திரங்களில் , கீறல்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது! கீறல்கள் , நச்சு புகைகளை இன்னும் அதிகமாக வெளியேற்றும்!
4) பாத்திரங்களை மிக பதமாக கையாள வேண்டும்.
5) கரண்டிகளை வைத்து , பாத்திரத்தின் விளிம்புகளை டம் டம் என்று அடிப்பது எல்லாம் கூடவே கூடாது.
6)பாத்திரத்தை சுத்தம் செய்யும் போது , மறந்து போய் கூட உலோகத்தினால் ஆன அழுத்தி தேய்ப்பானை (Steel wool ) உபயோகித்து விடாதீர்கள்.
இவ்வாறு பார்த்து பார்த்து நான்ஸ்டிக் பாத்திரங்களை புழங்கும் போது பெரிதாய் பிரச்சனைகள் எதுவும் இல்லை! ஆனால் , என்றைக்கு பாத்திரத்தின் உள்ளே , கீறல்களை உங்கள் கண்களால் காணுகிறீர்களோ, அன்றைக்கு அந்த பாத்திரத்தை தயவு செய்து உங்கள் தலையை சுற்றி தூக்கி எறிந்து விடுங்கள்! ஏனெனில் , இந்த பாத்திரங்கள் வாங்க நீங்கள் கொடுத்த விலையை விட , உங்கள் உயிரின் மதிப்பு , உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகம்!
இல்லை.. இல்லை.. என்னால் கத்தியின் மீது நடப்பது போன்று ஒவ்வொரு கணமும் சூதானமாக எல்லாம் நடக்க முடியாது என்று டெப்லான் பூச்சு கொண்ட நான்ஸ்டிக் பாத்திரங்களை பார்த்து பயந்தவர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம்! நான்ஸ்டிக் பாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் போது , PFOA free என்று அச்சிட பட்டிருக்கிறதா என்று உற்று நோக்கி பின்னே வாங்குங்கள்!
இல்லையேல் என்னை போல , அனோடைசஸ்டு (Hard Anodised Cookware) சமையல் பாத்திரங்களை வாங்கி உபயோகிக்க ஆரம்பியுங்கள்!
அது என்ன அனோடைசஸ்டு சமையல் பாத்திரம் என்று வியப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம் அதை பற்றி கொடுத்து விடுகிறேன். அலுமினியத்தால் ஆன பாத்திரங்களின் மேற்பரப்பில் பூச்சு கொடுப்பதற்கு பதிலாக , சில வேதியியல் செயல் முறைகளால், அப்பாத்திரத்தின் மேற்பரப்பு கனத்தை அதிகரித்து விடுகின்றனர். அது எத்தகைய கனம் என்றால் , எஃகுவை (Steel ) விட இரு மடங்கு அதிக கனம் கொண்டது. இதனுடைய சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் ,
1) 1) இது சத்தியமாக நான் ஸ்டிக் சமையல் பாத்திரம் கிடையாது , ஆனால் நான் ஸ்டிக் பாத்திரத்தை போன்று வழுவழுப்பான மேற்பரப்பை கொண்டது.
2) இதில் தாரளமாக உலோக கரண்டியை பயன் படுத்தலாம், எந்த கீறலும் விழாது(Scratch Resistant ).
3) நான் ஸ்டிக் பாத்திரங்களை போலவே , எண்ணெய் குறைவாக பயன்படுத்தினாலே போதுமானது.
4)வெப்பம் ஒன்று போல பரவுவதால், மிதமான தீயிலேயே, சீக்கிரம் சமைத்து விடலாம். எரிபொருளும் மிச்சமாகும்.
5) அதிக தடவை பாத்திரத்தை புழங்கிய பின்னும், புதிது போலவே காட்சி அளிக்கும்.
6) மேலும் , எந்த விதமான நச்சு புகைகளும் வெளியேறாது.
7) நீடித்து உழைக்க கூடியது.
8) தூண்டல் அடுப்பில்(Induction stove ) உபயோகம் செய்வதற்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அநோடைஸ்டு பாத்திரங்கள் நீடித்து உழைக்க கூடியது! அதற்காக குரங்கு கையில் கொடுத்த பூமாலையாக அதை உங்கள் இஷ்டத்துக்கு எல்லாம் உபயோகிக்க கூடாது. சில விஷயங்களை மறவாது பின்பற்ற வேண்டும். அவை,
1) இது நான்ஸ்டிக் பாத்திரங்கள் இல்லை என்று சொன்னேன் அல்லவா, ஆதலால் சமையல் செய்யும் போது , அருகில் இருந்து கவனித்து கொண்டால் , கருகாமல் பார்த்து கொள்ளலாம்! ஏனெனில், இந்த வகை பாத்திரங்கள் , எளிதில் சூடேறி , வேகமாக சமைக்கும் வல்லமை படைத்தவை!
2) சமைத்து முடித்த பின்னே , சூட்டோடு சூடாக , தண்ணீரில் கழுவி விட நினைக்காதீர்கள். சூடு ஆறும் வரை சற்றே பொறுங்கள். அதன் பின்னே ஒரு பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் நொடியில் கழுவி விடலாம்.
3) எண்ணெய் பிசுக்கு கறைகளை , துப்புரவாக இப்பாத்திரங்களில் இருந்து நீக்க வேண்டும். அதற்கு , நீங்கள் இந்த பாத்திரங்களின் மேல் , கீறல் பயம் இல்லாமல் , உலோகத்தால் ஆன அழுத்தி தேய்ப்பானை(Steel wool) பயன் படுத்தலாம்! நொடியில் எண்ணெய் பிசுக்கு கறைகள் நீங்கி விடும்!
4) இந்த எண்ணெய் பிசுக்கு கறைகளை , ஒரு வேளை நீங்கள் எடுக்க தவறினால் , அடுத்த தடவை நீங்கள் அப்பாத்திரங்களை உபயோகிக்கும் போது , அந்த எண்ணெய் பிசுக்கு கறைகள் சூட்டில், உங்கள் புத்தம் புது பாத்திரங்களின் மேல் நிரந்தரமாக படிந்து , சிறிது நாட்களிலேயே பழையது போன்ற தோற்றம் வந்து விடும். உங்கள் வீட்டு தோசை சட்டியை எடுத்து பாருங்கள்! நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். இதை Baked on grease என்று ஆங்கிலத்தில் கூறுவர். இதை எடுப்பது மிக கடினம்! பாத்திரத்தை சேத படுத்தாமல் கண்டிப்பாக எடுக்க முடியாது!
ஆக, இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை வரம் என்று நினைப்பவர்கள் , உங்கள் எண்ணம் போலவே , அதை பாதுகாப்பாக பயன்படுத்தி பயன் பெறுங்கள்!
இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை சாபம் என்று நினைப்பவர்கள், என்னை போல் அனோடைஸ்டு பாத்திரங்கள் ( Hard Anodised Cookware ) பக்கம் மாறி கொள்ளுங்கள்!
உங்கள் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக வாழுங்கள்!