தூங்கிப் பல நாட்களாகிச்
சோர்ந்திருக்கும் நெஞ்சிலே
ஊர வந்த காற்றிலே
சேர்ந்து வந்த தாலாட்டிலே
நெஞ்சுருக மெய் சிலிர்த்து
தன்னையே தான் மறந்து
எங்கோ ஒரு பாயிலே
கன்னமதில் நீர் வழியச்
சொந்தங்களின் துணை தேடும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?
அரை குறை உணவோடு
நிறை காணா வயிற்றோடு
பஞ்சான உடைதன்னால்
பிஞ்சான உடல் போர்த்து
பெற்றவர் தரும் பாசத்தினை
மற்றவர் பாய்தனில் தேடி
வெறுமையை மனஞ்சுமக்க
தாயின்றித் தந்தையின்றி
தனிமையோ நிலமையெனத்
தவித்துக் கலங்கி நிற்கும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?
என்றாவது ஒரு நாளில்
யாராவது ஒரு வள்ளல்
சுவை கொண்ட பாயாசம்
பசி தீர ஊற்றிவிட்டு
அத்தோடு அவர் போக
உண்டியற்று நாள் போயும்
இனிப்பூறும் அச்சுவை எண்ணி
நாய் போல வாயூறப்
புறங்கையைத் தான் நக்கிக்
கற்பனையில் சுவைகாணும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?
கொஞ்சியாட யாருமின்றித்
துஞ்சிப்போகும் இரு விழியால்
அஞ்சிக் கெஞ்சித் தினமும்
கஞ்சி தருவார் யாரோவென
இன்பமற்ற பிறப்பெடுத்து
குற்றம் செய்த கைதிபோல
விதி செய்த சதியானது
எதுவென்று தெரியாது வாழும்
அங்கு ஒரு பிஞ்சின் ஏக்கம்
உங்களுக்குத் தெரிகின்றதா?????
கவிஞர் ஜெகசோதிலிங்கம் (கனடா )