இறைமகன் இயேசு பிறந்தநாளே கிறிஸ்மஸ் பண்டிகை. கன்னி மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் மரியா முன்பு கபிரியேல் தூதர் தோன்றி, அருள் மிகப் பெற்ற மரியாவே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்று கூறினார். இந்த வாழ்த்தை கேட்டு மரியா கலங்கி நின்றார். உடனே வானதூதர், மரியாவை பார்த்து ”மரியாவே அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைப் பெற்றுள்ளீர், இதோ கருவுற்று ஒரு மகனை பெறுவீர், அவருக்கு இயேசு என பெயரிடுவீர், அவர் உன்னத கடவுளின் மகனாவார். அவர் பெரியவராய் இருப்பார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது” என்று வானதூதர் கூறினார்.
உடனே மரியா, இது எப்படி நிகழும். நான் கன்னி ஆயிற்றே என்றார். அதற்கு வானதூதர், தூய ஆவி உம் மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். பின்னர் மரியா, நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார். பின்னர் வனதூதர் திடீரென அவரை விட்டு மறைந்து விட்டார்.
இந்த நிலையில், கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருப்பதை அறிந்த யோசேப்பு நேர்மையானவரும் நீதிமானுமாய் இருந்ததால் மரியாவை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல் மறைவாக விலக்கிட நினைத்தார். அவர் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கையில், வானதூதர் யோசேப்பின் கனவில் தோன்றி, தாவீதின் மகனே, மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்சவேண்டாம். அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான், ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களில் இருந்து மீட்பார் என்றார்.
”இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார், அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார்” என ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முன் இருக்கிறார் என பொருள்.
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தூதர் பணித்தவாறே மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். அகுஸ்து சீசர், மக்கள் தொகையை கணக்கிட கட்டளையிட தம் பெயரை பதிவு செய்ய யோசேப்பு, மரியாயோடு யூதேயாவிலுள்ள பெத்லேகம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அந்நேரம் மரியாவுக்கு பேறுகாலம் வர, விடுதியில் இடம் கிடைக்காததால் மாட்டுத் தொழுவத்தில் தெய்வமகன் பிறந்தார். குழந்தையை துணிகளால் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது இடையர்கள் வயல்வெளியில் தங்கியருக்கும் போது தூதர் தோன்றி அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி ஒன்று, இன்று ஆண்டவராகிய மெசியா தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என கூறினார். பின் இடையர்கள் மரியா, யோசேப்பு குழந்தையும் கண்டார்கள். பின் கடவுளை போற்றி புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
கிறிஸ்துமஸ் மரம் : வரலாறு தரும் தகவல்
உலகில் இன்றைக்கு ” கிறிஸ்துமஸ் ” பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் “கிறிஸ்மஸ் மரம்” இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம் பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி இந்தப் பழக்கம் உருவானது?
அந்தப் பழக்கம் எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள் வழிவழியாக விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாகபிடித்துக் கொள்கிறோம். கால மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் இதன்பாற்பட்டதுதானோ!
நதிமூலம்:
“கிறிஸ்மஸ் மரம்” ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது. நதிமூலம் பார்க்கிறபோது நம்மை 11ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ கனிவகைகளை, எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும் நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர். கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.
15ம் நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து கொண்டாடியிருக்கின்றனர். ஆதாம் – ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியை நிர்ணயித்து, மனிதப்புனித சந்ததி உருவாக காரணமாயிருந்த “கனி” மரத்தினை வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டி எடுத்து வீடுகளில் வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.
முதல் மரம்:
“கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள
அல்சாஸில் (Alsace ) முதல் “கிறிஸ்மஸ் மரம்” வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஆஸ்திரியா என வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.
பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக இந்த மரத்தை அளித்தனர். இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.
அறுவடைத் திருநாள்:
இங்கிலாந்தில் பாகான் என்ற இனத்தவர்கள் மதச் சடங்குகளில் மரங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றனர். எப்படி தமிழகத்தில், சடங்கோ, திருமணமோ, கோவில் திருவிழாக்களோ வாழை மரம்முக்கிய பங்கு வகிக்கிறதோ அதுபோல இங்கிலாந்திலும் இடம் பெற்றே வந்திருக்கிறது. ட்ரூயிட்ஸ்(Druids) என்பார் (விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஓக் மரங்களைஅலங்கரித்து பழங்களை தொங்கவிட்டு சிறு மெழுகுவர்த்தி விளக்குகளை மரக் கிளைகளில் தொங்கவிட்டும் தங்கள் அறுவடைத் திருநாளைச் சிறப்பித்திருக்கின்றனர்.
ரோமானியர்கள், சேட்டர்நலியா என்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே வரும் விழாநாளிலேயே மரங்களை அலங்கரித்து மரத்தைச் சுற்றி பரிசுப் பொருட்கள் இனிப்பு வகைகளை வைத்து கொண்டாடும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.
11ம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங் இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப் புன்னகை மாறாத பைன், ஸ்புரூஸ், சைப்ரஸ், யீ அல்லது ·பர் போன்ற மரங்கள், துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும் உன்னத மரங்கள் என நம்பினர்.
உயிர்த்தெழுந்தது:
அது சரி. மரம் எப்படி கிறிஸ்மஸ் விழாவின் பிரிக்கமுடியாத அங்கமானது? அதைக் கடைசிவரை சொல்லாமல் சஸ்பென்ஸா கொண்டு போறேனேன்னு பாக்குறீங்களா? இதோ உங்கள் ஆவல் பூர்த்தியாகும் நேரம் வந்துவிட்டது!
ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதர் St.போனி ஃபேஸ் (St.Boniface) என்பார்தான் இதற்கு மூல காரணமாகக் கருதப்படுகிறார். ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக ‘ஓக்’ மரங்களை வெட்டி அழித்து வந்தனர். மின்சாரம் இல்லாத அந்நாட்களில் குளிரை விரட்ட ‘ஓக்’ உருட்டுக் கட்டைகள்தான் வீட்டு “Fire Place”ல் பயன்படுத்திவந்தனர்.
குடும்பங்களை வெதுவெதுப்பாக, கதகதப்பாக வைத்திருப்பதில் மையப் பொருளாக ‘ஓக்’ திகழ்ந்தது. இப்படியே மரங்கள் வெட்டி அழிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களின் முகவரியே தெரியாமல் போய்விடும். எனவே ஒரு ‘ஓக்’ மரம் வெட்டப்பட்டால் அந்த இடத்தில் மூன்றாம் நாளே ஒரு மரக் கன்று துளிர் விட வேண்டும். எப்படி, மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்து எழுந்தாரோ அதைப் பிரதிபலிக்க வேண்டும், என்று புனிதர் போனிஃபேஸ் வேண்டுகோள் விடுத்தார். இதன் பிறகு ஜெர்மானியர்கள் ஒரு ‘ஓக்’ மரம் வெட்டினால் ஒரு ‘ஓக்’ மரம் அல்லது ஒரு
‘·பிர்’ மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள் இல்லங்களில் ‘ஓக்’ மரங்களையோ ‘·பிர்’ மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.இந்தப் பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ்ஸும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டது.
ourjaffna.com என்ற இணையதளத்திலிருந்து …… நன்றி