தென்னிந்தியாவின் புகழ்பூத்த மதுரையம்பதியிலிருந்து இலங்கைக்கு தான் வந்த காலம் வேலாயுதத்தின் நினைவுக்கு வந்தது. தன் சித்தப்பா முறையான ஒருவருடன் தன் பதின்மூன்றாவது வயதில் கப்பல் மூலம் இந்த நாட்டுக்கு வந்து தோட்டத்தில் பேர் பதிந்து வேலை செய்யத் தொடங்கினான். தான் வந்த அதே கப்பலில் பிராமண குலத்தைச் சேர்ந்த அய்யர் ஒருவர்வந்தது அவனுக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
ஜெகஜோதியான நிறத்தில் மற்றவர்களிலிருந்து தனித்து நின்ற அவரின் தோற்றம் கப்பலில் தனியாக அவரை இனம் காட்டியது.
புசல்லாவை நகரில் பொதுக் கூட்டம் ஒன்றில் அவரை மீண்டும் காணும் சந்தர்ப்பம் கிட்டியது. கூட்டத்தினரை தன் பேச்சால் அவர் வசீகரித்துக் கொண்டிருந்தார்.
கம்பளை நகரில் காங்கிரஸ் நடத்திய கூட்டமொன்று மக்கள் திரளாக கூடியிருந்த நேரத்திலும் அவரை மேடையில் கண்டிருக்கிறான்.
தோட்டப் பகுதிகளில் ஏழைத் தொழிலாளர்களிடம் வீராவேசமான பேச்சுக்களை பல நேரங்களில் கேட்டிருக்கிறான். அவரின் பேச்சுக்கள் கேட்டிருந்த தம்மை புதிய ஓர் உலகுக்கு அழைத்துச் செல்வதாக உணர்ந்தான். அவரின் பேச்சைக் கேட்பதற்கு பலமுறை தன்னுடன் வீராசாமியும் வந்திருக்கிறான்.
அவனும் அவரின் பேச்சு தன்னை மெய்மறக்க வைத்திருப்பதை பலமுறை வீராசாமியிடம் கூறி ஆச்சரியப்பட்டிருக்கிறான். அவர்களிருவரும் ஒருமுறை ஜவகர்லால் நேருவின் பிரசங்கம் ஒன்றை கண்டி போகம்பரை மைதானத்தில் கேட்டிருக்கின்றனர். இப்படி பல தடைவைகள் கூட்டங்களுக்கு போய்வருவதில் தொடங்கிய அறிமுகம் அவர்களிரு வரையும் இணைபிரியாத நண்பர்களாக்கியது.
தென் ஆபிரிக்காவில் குடியேறிய இந்தியர்களைப் போல இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வாழும் இந்தியர்களின் வாழ்க்கையும்
சாறிறக்கப்பட்ட சக்கையாக இருக்கிறது. அதைச் சத்துள்ளதாக்க வேண்டும். நாமும் மனிதர்களாக மதிக்கப்படல் வேண்டும் என்ற கருத்துக்கள் அவர்களிருவரையும் ஒருதிசைநோக்கி பயணிக்க வைத்தது.
தினந்தோறும் வேலைத்தளத்தில் தாம் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதைக் கவனித்தனர். மனிதர்களை மனிதர்களாக நடத்த சகமனிதர்களால் தான் முடியும். தோட்டங்களில் தங்களிடம் வேலைவாங்குபவர்கள் தங்களை அசாத்திய மனிதர்களாக பாவித்துக் கொண்டு வேறு உலகில் சஞ்சரிப்பதை அவர்களறிவார்கள்.
அந்தானை தோட்டத்து சித்தாண்டி கங்காணி தன் மகளின் மானத்தைக் காக்க, தோட்டத் துரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை அவர்கள் கேட்டு வியந்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் மத்தியில் அப்படி ஒரு சம்பவம் எப்போது நிகழும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். நுவரெலியா ‘கிறேன் ஹோட்டலில்’ ஜவகர்லால் நேரு அவரது மனைவி கமலாவுடனும் மகள் இந்திரா பிரியதர்சினியுடனும் வந்து ஒருமாத காலம் தங்கியிருந்த போது சாரிசாரியாக தோட்டத்து சனங்கள் அங்கு சென்று வந்தது அவன் நினைவில் நிழலாடியது.
நோய்வாய்பட்டிருந்த கமலாவுக்கு நுவரெலியாவின் சீதோஷ்ணம் சுகமாயிருக்கும் என்ற எண்ணத்தில் நேரு இங்கு வந்திருந்தார். இந்தியர்கள் வாழ்க்கைத் தரத்தைக் கண்டதும் அவர் கலங்கினார். தன்னுடைய மொழிவேறாக இருந்தாலும், அவர்கள் பேசுவதைத் தன்னால் விளக்கிக் கொள்ள முடியாது போனாலும், மொழி கடந்த உணர்வை அவர்கள் தங்கள் உணர்ச்சியால் காட்டினார்கள். தங்களைப் பார்க்க வரும்போது அவர்கள் தங்களுடன் எடுத்து வரும் கோவா, லீக்ஸ் என்ற காய்கறிகள், பிச்சஸ், மாம்பழம் என்று பழவகைகள், ரோஜா, அந்தூரியம் என்று மலர்வகைகள் அவரைப் பேசவிடாது தடுத்து விட்டிருந்தது.
அவர்கள் கொண்டுவரும் பொருட்கள் அவருக்கு அவர்கள் காட்டும் அன்பின் அடையாளங்கள். அவைகளை வேண்டாம் என்று கூறி எப்படி தடைசெய்ய முடியும்?
இரவு பத்து மணி வரைக்கும் கூட்டம் கூட்டமாக வரும் அந்த ஏழைத் தொழிலாளர்கள் அவரைத் திணறடித்தனர். அவர்கள் காட்டிய பாசப்பிணைப்பில் அவர் மெய்மறந்திருந்தார்.
‘கிறேன் ஹோட்டலுக்குச் சென்று அவரைப் பார்த்து விட்டு பத்து மணிக்குப்பிறகு இரவு முழுக்க நடந்து வந்து காலையில் ஆனைமலைத் தோட்டத்துக்கு வந்தது அவன் நினைவுக்கு வந்தது.
அது நடந்து ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்து இந்த மக்களுக்கென ஒரு சங்கத்தை தோற்றுவிக்கிறார்.
ஒரு வருடத்துக்குப் பிறகு கம்பளையில் நேருநகரில் கூட்டம் நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்காக கம்பளை நகர் விழாக்கோலம் பூண்டது. அந்த அரங்கம் தென்னங்கீற்றுகளால் அலங்கரிக்கப் பட்டது. அக்கம் பக்கத்து தோட்டத் தொழிலாளர்களும், தூரத்து நகர்ப் புறங்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களும் உற்சாகத்தோடு கூடியிருந்தனர், இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வந்திருந்தனர். இந்தியாவின் தொழில் அமைச்சர் கிரியும், சட்டசபை உறுப்பினர் சத்தியமூர்த்தியும் அன்று செய்த பிரசங்கங்கள் கூடி இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தன. சத்தியமூர்த்தியின் பேச்சைக் கேட்டு தெருவில் கிடந்து மிதிப்படும் தூசியாக இருந்த தொழிலாளர்கள் சர்வ வல்லமை படைத்த சக்தியாக மாறினார்கள்.”
அந்த கூட்டத்தில் தான் இலங்கைக்கு வந்தபோது கப்பலில் தன்னுடன் பிரயாணம் செய்த நடேச அய்யரும் பிரசங்கம் செய்ததை நினைத்துக் கொண்டான்.
‘எத்தனைப் பெரிய காரியங்களைச் செய்து, எங்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ணி இருக்கிறார்கள்.’
‘நமது தலைமுறையில் உழைப்பாளி சமூகம் மேலெழ வேண்டும். நாள்தோறும் அடிமைப்பட்டு தோட்டங்களுக்குள்ளாகவே கிடந்து அமிழ்வதை விட்டொழிக்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக வளர்ந்தது.
அதற்கு நாம் வழி காட்ட வேண்டும். ஒவ்வொரு தோட்டத்திலும் இப்படி ஒரு நிலை உருவாகுமானால் நமது அடிமை வாழ்க்கை இல்லாது போகும் என்ற முறையில் அவன் சிந்தனை ஓடியது. சிந்தனையோட்டத்தில் அவன் வரைந்த, தன்னிடமிருந்த தூரிகையை வைத்து வரைந்த சித்திரம் தான் இன்று ஆனைமலைத் தோட்டத்தில் அரங்கேறி இருக்கிறது. இதனைவிட அழகான ஓவியங்களை நமது தோழர்கள் வருங்காலத்தில் வரைவார்கள். அப்படி வரைவதற்கு நமது சங்கம் பக்கதுணையாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு நினைவில் பட்டது, தான் மாத்திரம் வெறுமனே தனக்குள்ளாகவே சிந்திப்பதில் அர்த்தமில்லை என்று.
உடனே நாம் போய், சங்கத்து காரியதரிசியைச் சந்திக்க வேண்டும்.
ஆனைமலைத் தோட்டத்தில் வசிக்கிற மாடசாமிக்கு ஐம்பத்தைந்து வயது நடந்து கொண்டிருக்கிறது. ஐம்பத்தைந்து வயது ஆகிவிட்ட தென்பது அவனுக்குத்தான் தெரியுமே தவிர தோட்டத்தில் வசிக்கும் வேறு யாரும் அவளை நாற்பது வயதுக்குள் தான் மதிப்பிடுவர்.
உடல்வாகும் சுறுசுறுப்பும் அவனுக்கு உடன் பிறந்தவைகள். எதையும் ஆற அமர சிந்தித்து நிதானமாக முடிவெடுப்பதில் அவன் சமர்த்தன்.
கடந்த முப்பது வருட காலமாக, ஆனைமலைத் தோட்டத்திலேயே தொடர்ந்து ‘கூலி’யாக தொழில் செய்யும் அவனை ‘கங்காணி’ ஆக்கி பார்க்க சாத்தப்பன் கங்காணி பலமுறை முயற்சித்தும் சில்லறைக்கங்காணி யாகுவதற்கு கூட அவன் ஒத்துவரவில்லை .
அதெல்லாம் நமக்குச் சரிப்படாதுங்க. இப்ப செய்யுற தொழிலே போதும். இதில் விருத்தியாகி விமோசனம் கிடைத்தால் போதும் என்று தட்டிக் கழித்துக் கொண்டே நாட்களை ஒட்டிவிட்டான்.
கங்காணி வேலைக்கு ஆளாய்ப் பறக்கிற தோட்ட சமூகத்தில் இப்படியும் ஒருத்தனா?
மாடசாமியும் அவனது பெண்டாட்டி மங்கத்தாயியும் ஒரு நாள் கூட வேலைக்கு சீக்கு போடுவதில்ல. வேலை கொடுக்கப்படும் நாட்களிலெல்லாம் வேலை செய்கின்றனர். ஆண்டு முழுக்க வேலை செய்து காசு சேர்க்கின்றனர். அந்த குடும்பத்துடன் நெருங்கி பழகுவதற்கு யாருக்கென்றாலும் விருப்பம் வரும்.
‘பாரத ஜாதியைச் சேர்ந்தவன் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் மாடசாமிப்பிள்ளை தென் தமிழகத்துக்கு ஓட்டப் பிடாரத்தைச் சேர்ந்தவன். வெள்ளாள சாதியைச் சேர்ந்தவன். பதினைந்து பேரோடு இவளையும் ஒருவனாக குற்றம் சாட்டி ‘ஆஷ் கொலை வழக்கில் சிறைபிடிக்க
போலீசார் வலை விரித்தனர். அவர்களது பிடியில் அகப்படாமல் தப்பிப் பிழைத்து இலங்கைக்கு ஓடி வந்து தோட்டத்தில் கூலியாக சேர்ந்தவனவன்.
அந்த சம்பவம் மாடசாமிப் பிள்ளையின் நெஞ்சில் ஆழமாய்ப் பதிந்து போய்விட்டது. ‘ஆரியர்களுக்கு ஓர் ஆப்தவாக்கியம் என்ற அறிக்கை அவன் மனதில் எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது.
திருநெல்வேலி ரயில்வே சந்திப்பில் ஆஷ்துரை கொலை செய்யப்பட்ட அந்த நாளை மறக்கவே முடியவில்லை.
1911, ஜூலை 17, என்பது பாடசாமியின் வாழ்க்கையில் மறக்க முடியாத தினமாகி, கடந்த முப்பது ஆண்டுகளில் அவனை ஆட்டி வந்திருக்கிறது.
இந்தியாவில் தனது கிராமத்தைச் சேர்ந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை சிறையிலடைக்கப்பட்டதையும், அவர் தோற்றுவித்த சுதேசிக் கப்பல் கம்பெனி செத்தொழிந்ததையும் நினைக்கையில் அவனுக்கு வலித்தது. ஆஷ்துரையை பழிதீர்க்க வேண்டிய அவசியம் அதனால் தான் நேர்ந்தது. கொலை செய்த கையோடு தன்னுயிரையும் மாய்த்துக் கொண்டான் வாஞ்சிநாதன்.
எத்தனைத் தீவிரமாக அவனுடன் சேர்ந்து மாடசாமி உழைத்திருக்கிறான்? பத்தாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து நாட்டுக்குள் வந்த வெள்ளைக்காரன், நம்மை நிமிர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு அடிமையாக்குவதா?
பாரத ஜனங்களை ஆஷ் துரைக்கு பார்த்தாலே பிடிக்காது என்றாகிவிட்டது. புழுவாக நெளிந்து கொண்டிருந்த இந்தியர்கள் நிமிர்ந்து நின்றனர். மணியாச்சி ஜங்சனில் அவனைத்தீர்த்துக் கட்டியவுடன் தான் அது அடங்கியது.
தாங்கள் செய்யும் செயலை மகாத்மா காந்தி அங்கீகரிக்க வில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதற்காக அப்படிச் செய்யாமல் வாய்மூடி மௌனியாக இருக்க அவர்களால் முடியாதிருந்தது.
ஜூன் 17இல் ஆஷ்துரையை கட்டுக் கொன்றதோடு அவர்கள் வாளா விருக்கவில்லை, இரண்டு நாட்களின் பின்னர் சிஐடி இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை சுட்டுக் கொண்டனர்.
ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய நிர்வாகம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அவர்களைத் தேடி வலைவிரித்தது. தங்களைச் சேர்ந்த பத்து பேர் கைதாகி விட்டதை அறிந்ததும், இனி இங்கிருந்தால் தன்னால் தப்பிக்க முடியாது என்றுணர்ந்த மாடசாமி கடல்வழியாக இலங்கை வந்தடைந்தான். இலங்கையிலும் தேயிலைத் தோட்டம் தான் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம் என்றறிந்து கொண்டான். புசல்லாவ பகுதியில் ஆனைமலைத் தோட்டத்தில் குடியேறினாள். அன்று முதல் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று தன்னை ஒதுக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான்.
நாகரிகம் எட்டிப்பார்ப்பதற்கு அஞ்சும் பிரதேசம் தோட்டப் பகுதித் தேயிலையின் பசுமையால் மூடுண்டு பிற மாவட்டங்களிலிருந்து கத்தரித்து விடப்பட்ட அழகிய பூமி, மாடசாமியின் பூர்வீகம். பாட்டன் பூட்டன் பிறப்பு என்பதையெல்லாம் கேட்டுத் தெரிவதற்கு யாருமில்லை என்றானபோது அவனது வாழ்க்கை ஓடத் தொடங்கியது.
‘கங்காணி பதவி கொடுத்து தன்னை விலை பேச நினைக்கிறார்கள் என்பதே அவன் கண்டுவந்த உண்மை. வெள்ளைக் காரர்களின் நீசச் செயலுக்கு துணை போக வேண்டியிருக்கும் என்ற நினைப்பே அவனுக்கு வெறுப்பை யூட்டியது.
தன் இனத்துப் பாரதப் பெண்களை தம் காமச் செயல்களுக்கு இரையாக்கும் இங்கிலீஷ்காரன் அள்ளித் தெளிக்கும் ஆபாச வார்த்தைகளைக் கேட்பதற்கே அவனுக்குப் பிடிப்பதில்லை.
‘வாஞ்சிநாதனுடன் செயல்பட்டவனா நான்? நீல கண்டன், ஆறுமுகம் என்ற துடிப்புமிகுந்த இளைஞர்களுடன் செயலாற்றியவனா நான்? வாஞ்சிநாதனுக்குக் கடிதம் எழுதி அவனுடைய பதில் கடிதம் பெற்று இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவனா நான்? என்று பலகேள்விகள் மாடசாமியை தவிக்கச் செய்தன.
தொடரும்.