தோட்டப்பகுதியில் ஏதோ ஒரு விதத்தில் இந்திய விடுதலைத் தீயை பரப்பிவிட வேண்டும் என்று நாள்தோறும் அவன் உள்மனம் அவனுக்கு கட்டளையிட்டது.
தோட்டத்துக் கூலி சனங்களில் அவன் மனசில் சில இளம் வாலிபர்கள் இடம் பிடித்தனர். அவர்கள் இருட்டு பட்டதும் அவனை அவனுடைய காம்பராவில் கண்டு கதைக்கத் தொடங்கினர்; அப்படி வந்தவர்களில் வீராசாமியும், வேலாயுதமும், ஐயன் பெருமாளும் கவனத்துக்குரியவர்கள்.
தங்களுடைய துரை ‘போப்பின் நடவடிக்கைகளில் அவர்கள் அதிருப்தியுற்றிருந்தனர். ஒன்றிரண்டு மனிதாபிமானமிகுந்த செயல்களால், தன்னுடைய மிருகத்தனமான உணர்ச்சிகளை மூடிமறைக்கப்பார்க்க முயற்சிக்கும் அவரை அவர்கள் நன்கு அறிந்து கொண்டனர்.
முப்பது வருடங்களுட்ககு முன்பு திருநெல்வேலியில் தாங்கள் செய்ததைப்போல கண்டி தீவாந்திரத்தில் ஒரு செயலை செய்ய முடியாதா என்று மாடசாமி கனவு கண்டு கொண்டிருந்தான்.
கடைசியாக அவனது கனவும் நிறைவேறியது. போப் துரையைக் கொன்று தீர்த்தனர்.
துரையின் கொலைக்குப்பிறகு தோட்டத்தில் நடக்கும் காரியங்களைக் கரிசனையுடன் மாடசாமி கவனித்து வந்தான்.
யார் யார் மீது சந்தேகம் வந்திருக்கிறது? யார் யாரெல்லாம் போலிசாருக்கு உளவு சொல்கிறார்கள்? கொலையில் உண்மையில் சம்பந்தபட்டவர்கள் யார்?
கம்பளையிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்லுவதற்கான வழியிலமைந்திருக்கும் தோட்டப் பகுதிகள் புசல்லாவை நகரில் தான் அமைந்துள்ளன. கம்பளையிலமைந்திருக்கும் பாலம் பிரசித்தமானது. நூற்றியிருபது அடிக்கு அமைந்த அப்பாலம் உண்டானதன் பிறகு தான் தனி உலகமாயிருந்த அந்தப் பிரதேசம் இந்திய கூலிகள் தாராளமாகக் குடியேற்றப்பட்டனர்.
தேயிலைச் செடிகள் மூடி மறைத்திருக்கின்ற இந்தப் பிரதேசம் இன்னும் காட்டர்ந்த பிரதேசம் தான். உயரத்தில் அமைந்திருக்கும் புசல்லாவையிலிருந்து பார்த்தால் கம்பளை ஒரு குக்கிராமமாகத் தெரியும்.
தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் நீண்டுயர்ந்த சவுக்குமரங்கள் நடப்பட்டு இருக்கும். சில மலைகளில் முருங்கை மரங்கள் நடப்பட்டிருக்கும். சில தோட்டங்களில் தங்கள் மலைகளில் கறுவை மரங்களை நட்டிருப்பதைக் காணலாம்.
வெவ்வேறான இந்த மரங்கள் மூலமே மலைகளின் எல்லையை மக்கள் ஊகித்தறிவர், அடுத்தடுத்து அமைந்திருக்கும் பச்சைக் காடுகளில் எந்தவிதமான படிப்பறிவுமில்லாத அவர்கள் தங்கள் தோட்ட எல்லைகளைக் கண்டு பிடிக்கும் மார்க்கமிது.
தேயிலைத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் தேயிலை மலைகளுக்கிடையே எந்தவிதமான வேறு மரங்கள் நாட்டப்படவில்லை. நாட்கள் செல்ல செல்ல பட்சிகளும், பறவைகளும் இந்தப்பகுதிகளில் பரிதவிப்பதைக் கண்டு இந்த மரங்களை நட்டுவிக்க ஆரம்பித்தனர்.
அந்த மரங்களில் கூடுகட்டி வசிப்பதற்கு பறவைகளும் பட்சிகளும் பழகிப்போயின.
மாரிகாலத்தில் தேயிலைச் செடிகளில் உண்டாகும் புழுக்களையும் பூச்சி வகைகளையும் மரங்களிலிருந்தே பறவைகள் நோட்டம் விடும்.
சுழன்றடிக்கும் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து பறந்து வந்து அவை தேயிலைச் செடிகள் மீதமர்ந்து அவைகளைத் தீனியாக்கிவிடும்.
தேயிலைச் செடியும், அதில் உண்டாகும் புழுவகைகளும், இயற்கையின் வளப்பத்தோடு பறவைகளுக்கு உணவாகும் விதம் பார்த்து மகிழ வேண்டிய ஒன்று.
காரியதரிசி டேவிட்டைச் சந்திப்பதற்காக திருகோணமலை வீதியில் அமைந்திருக்கும் சங்க ஆபிசுக்கு காலை நேரத்திலேயே வந்தான். சங்க ஆபிசில் ஒரு கதவு மாத்திரமே திறந்திருந்தது.
இன்னும் அரைமணி நேரத்தில் டேவிட் ஆபிசுக்கு வந்துவிடுவார். அதற்குள் சலூன் ஒன்றுக்குச் சென்று முகச்சவரம் செய்து கொண்டான்.
முகச்வசரம் செய்ததன் பின்னால் அவன் முகத்தில் புதிய ஒரு பொலிவு உண்டானது.
சலூன் காரன் அவனுக்கு ஏற்கனவே தெரிந்தவன்தான். இதற்கு முன்னர் தொழிற்சங்க ஆபிசுக்கு வந்திருந்த போது அவனைச் சந்தித்து கதைத்திருக்கிறான், அந்தப் பழக்கத்தால், அங்கேயே அவன் மூலமே தன்னுடன் எடுத்து வந்திருந்தான் அணிந்திருந்த பழைய உடுப்புகளை ஒரு காகித உறையில் நன்றாகச் சுற்றி எடுத்துக் கொண்டாள். புது சாரத்தை அணிந்து கொண்டான். தன்னிடமிருந்த மாற்றுச் சட்டையையும் போட்டுக் கொண்டாள்.
‘என்ன ஒரே தடபுடலாக மாப்பிள்ளைக் கோலத்தில் உருமாறி யிருக்கிறீர்கள்?’ என்று சலூன்காரன் வினவிய போதுதான், அவனுக்கு நினைவு வந்தது. தன் நெற்றி இன்னும் விபூதி இல்லாமல் இருப்பது.
சலூன்காரர் ஓர் இந்தியத் தமிழர். அவர் அந்த சலூனில் பின்பக்கத்தில் தான் குடும்பம் நடத்துகிறார். அங்கு போய் தன் நெற்றி முழுக்க நிறைவாக விபூதி பூசிக் கொண்டான். காலை பிளேன் டீ ஒன்றை குடித்து வைத்தான். டீயை குடித்தக் கையோடு அங்கிருந்து புறப்பட்டான். புறப்படுவதற்கு முன் ஞாபகமாக தன்னுடைய உடுப்பு பார்சல் அடங்கிய காகித பேக்கையும் கையில் எடுத்துக் கொண்டான். லாண்டரியில் கொடுத்து உடுப்பில் இருக்கும் கறைகளை அகற்ற வேண்டும். ஆபிசில் நாற்காலியொன்றில் டேவிட் அமர்ந்திருந்தார். வேலாயுதம் போய் முன் வாங்கில் உட்கார்ந்து கொண்டான்.
‘என்ன வேலாயுதம், அருகில் வந்து அமருங்கள்’ என்று அழைத்தார்.
‘என்ன காலையிலேயே வந்திருக்கிறீர்கள்? ஏதும் முக்கிய விஷயமா?’
‘தலைபோகிற விஷயம். அதனால் தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்’
‘யாருக்குத் தலைபோகிறது கேட்டுவிட்டுச் சிரித்தார். எத்தகைய இடையூறுகளையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் தன் இயல்பு மாறாமல்.
தலையே போய்விட்டது என்று கூறி விஷயங்களை விபரமாக அவரிடம் எடுத்து விளக்கினான்.
டேவிட் உஷாரானார்.
அகில இலங்கை தோட்டத் தொாலாளர் சங்கத்தின் கிளை பொன்றை ஆனைமலை தோட்டத்தில் சங்கம் அமைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருப்பதை அவர் அறிவார். தம்முடைய சங்கம் மலைப்பிராந்தியத்தில் வேரூன்ற வேண்டுமானால் இப்படி ஏதாவது ஒரிரு சம்பவங்கள் நடந்தே ஆக வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்து வருகிறார்.
உண்மையில் தம்மிடம் வரும் தோட்டத் தொழிலாளிகளிடம் இப்படியான சம்பவங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர் அடிக்கடி பேசி வருகிறார். கேரள நாட்டைச் சேர்ந்த மலையாளி அவர்; உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரத்தை நன்கு அறிவார்; மலாயாவில் தொழிலாளர்கள் செய்த கிளர்ச்சிகளும், அதன் பயனாக ஐந்து தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அவர் அவர்களிடம் எடுத்து பலமுறை கூறி இருக்கிறார். வேலாயுதம் கூறியதைக் கேட்டதும் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று வேலாயுதத்துக்கு கூறிய அவர்,
‘இனிதான் நீங்கள் உங்கள் மத்தியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குறிப்பாக இதில் சம்பந்தப்பட்ட அத்தனைப்பேரும்,
வேறொருவரிடமும் இது குறித்து கதைக்கக் கூடாது. கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்! என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
அவருக்கு வணக்கம் கூறி, ‘உடுப்பு பார்சல் இங்கேயே இருக்கட்டும். பிறகு வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று ஆபிசுக்கு வெளியில் வந்தான்.
அவன் மனம் லேசாகிவிட்டிருந்தது.
வெளியில் வந்து முப்பது அடி தூரம் நடந்திருப்பாள். அவனை யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். யாராயிருக்கும் என்று திரும்பி பார்த்தான்.
‘வேறு யாரும் வரலையா?’ ‘இல்லை , நீங்க யாரு?’ ‘ஆனைமலை தோட்டத்தில் இருந்து தானே வந்திருக்கிறீர்கள்’ ‘ஆமாம்!’ ‘வேலாயுதம் நீங்க தானே’
ஆமாம்
‘நான் தேடிவந்த ஆளு நீங்கதான், வாங்க போவோம்!’ ‘எங்கே “
‘உங்களைக் கைது செய்யும்படி போலீஸ் ஆணை பிறப்பித்திருக்கிறது’ என்று கூறி, கைவிலங்கை எடுத்துக் காட்டியதும் வந்திருப்பது ‘மட்டி யில் இருக்கும் போலீஸ் என்பதைக் கண்டு கொண்டான்.
‘என்னை எதற்காகக் கைது செய்கிறீர்கள்?’
உங்கள் தோட்டத்துரை கொலை செய்யப்பட்டு இருக்கிறார். உங்கள் மீது சந்தேகம் உள்ளது. மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
‘எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது’ என்று கூறியவன் அவருடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.
‘யூனியன் விஷயமாகப் பேசுவதற்குக் கண்டிக்கு வந்தேன். மூன்று நாட்களாக நான் தோட்ட பக்கமே போகவில்லை’ என்று கூறியவளிடம் ‘இருக்கலாம் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டேசனுக்குப் போய் கதைத்துக் கொள்ளலாம்’ என்று சாதாரணமாக பேசினார். அவரது பதவியில் போலீஸ் மிடுக்கு தெரிந்தது.
பதுளைபகுதிகளில் நடக்கும் குழப்பங்களும் மஸ்கெலியா பகுதிகளில் நடக்கும் குழப்பங்களும், தோட்டங்களுக்கு அவைகளை அடக்கப்போகும் போலீசாருக்கெதிராக தோட்டமக்கள் கிளர்ந்தெழுந்த சம்பவங்களும் போலீசார் அவர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான செய்திகளும் அவரை அப்படி அடங்கி பேசவைத்தன.
பதுளை வெவச தோட்டத்தில் ஆறு போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளையும், அவர்களின் போலீஸ் உடைகளையும் பறித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அணிந்திருந்த எண்களைப் பறித்துக் கொண்டு அவர்கள் நடத்திய போராட்டம் போலீஸ் வட்டாரத்தையே கலங்கடித்திருந்தது. அவர்களை மரியாதையாய் நடத்தவும் கூடியவரையில் இணங்கிப் போக முயற்சிக்கவும் போலீஸ்காரர்களுக்கு இரகசிய ஆணைபிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் கம்பளைக்குப் போக வேண்டும். ஒரு மணி நேரமாவது ஆகும். அதற்கிடையில் அவருடன் கதைத்துப் பார்ப்போம் என்ற எண்ணம் வேலாயுதத்துக்கு தோன்றியது.
திருகோணமலை வீதியிலிருந்து கண்டி புகையிரதநிலையத்துக்கு நடந்தே போனார்கள். நண்பர்களை போலவே கதைத்துக் கொண்டு சென்றனர். ஸ்டேசனில் கோச் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. ஸ்டேசனில் கோச்சை எதிர்பார்த்து ஒரு சிலர் பரபரப்புடன் காத்துக் கிடந்தனர். ஆட்கள் அதிகமில்லை.
இருவரும் பிரயாணிகள் தங்கும் அறைக்குள் சென்றனர். போலீஸ்காரர் பிரயாணச் சீட்டு கொடுப்பவரிடம் சென்று டிக்கட் இல்லாத பயணத்துக்கு ஒழுங்கு பண்ணினார்.
ரயிலில் ஏறி இருவரும் ஜன்னல் ஓரத்தில் எதிரெதிர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.
‘தான் பிடித்துச் செல்லும் வேலாயுதம் கொலைகாரர்களின் ஒருவனாக இருக்கவேண்டும்’ என்று போலீஸ்காரர் வேண்டிக் கொண்டார். தனக்குக் கிடைக்கப்போகும் பதவி உயர்வுகள் அவர் மனக்கண் முன்னாள் படம் எடுத்து ஆடியது.
வேலாயுதத்துக்கோ தன் தாயின் நினைவு வந்தது. தன்னுடன் சேர்ந்து போப் துரைக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் நினைவு வந்தது.
அடுத்த லயக்காம்பராவில் இருக்கும் புவனேஸ்வரியின் நினைவு அவனை வாட்டியது. அவளுடன் கடைசி நேரத்தில் கதைக்க முடியாமற் போனது அவனுக்கு கவலை தந்தது.
அவளது அண்ணன் தன்னோடு நடந்த சம்பவங்களில் கடைசி வரை துணைவந்திருந்தான். அவன் மூலம் தற்போது விஷயங்கள் வெளியாகி இருக்கலாம். என்ன இருந்தாலும் தான் அவளிடம் கதைப்பது போலிருக்காது.
இன்னும் மூன்று மாதங்களில் தனக்கு மனைவியாகப் போகும் ஒருத்தி எவ்வளவு கனவுகளைச் சுமந்து கொண்டிருப்பாள்? மாடசாமி கூறிய கதைகள், அவனது மலர்ந்த முகம் மனக்கண் முன் விரிகிறது.
வீராசாமியைச் சந்தித்து பேசியபின்னர்தான் மற்ற நடவடிக்கை களைப் பற்றி தீர்மானிக்க முடியும். மதுரையில் தனது அண்ண னின் முகம் நினைவுக்குவந்தது. வயற்காட்டில் தமது வயலில் உழுது கொண்டிருக்கும் அவரது மேலாடையில்லாத உடம்பு அவன் நினைவில் தோன்றி கலங்கடித்தது.