சிந்தனையிற் சில பல நல் லெண்ணமெல்லாம்
சேர்த்தங்கே அலையலையாய் மோதிக்கொண்டு
வந்தனையும் போததனை எழுத என்றால்
வழியில்லை -தடைகள் பல வந்திருக்கும்:
முந்தி எமக்குறவென்று சொல்லிக் கொண்டு
முமுநாளும் வந்திருந்து பேசிப் பேசித்
தொந்தரவு தருகின்ற பேர்கள் ஓர் பால்,
தொலையாத இல்வாழ்க்கைத் தொல்லை ஓர் பால்
கடமை, அது. இது, என்று சொல்லி எம்மைக்
கட்டாயப் படுத்துகிற சமூக சட்டம்
மடமையது என்பதற்கு மனமுமில்லை,
மகிழ்ந்த தனைக் கைக் கொள்ளுங் குணமுமில்லை.
சடபுடெனப் பேசி எனக் கிப்போ நேரம்
சற்றுமிலை, மன்னியுங்கள்” என்று சொல்லித்
திடமுடனே சென்றென் அலுவல் செய்யும்
திறமுமிலை, தமிழில் அதற்கிடமுமில்லை.
இந்த விதத் தொல்லைகள் சற்றில்லயானால்
எண்ணங்கள் மலை மலையாய்க் குவியும் போது
தந்தி என ஒருவன் வந்தலறி விட்டால்
தகவல் என ஒருவன் வந்துளறி விட்டால்
முந்தி, அட, மூளையிலே நிறைய வந்த
முழுவதும் ஓர் மூலையிலே ஒடுங்கிப் போகும்:
அந்த அதைப் பின்னே போய்த் தேடிப் பார்த்தால்
அகப்படுமா…’ அநியாயும், சிதைந்திருக்கும்….
எண்ணங்கள் வரும்போதிலிடைஞ்சலின்றி
எழுதவுத்தான் வாய்ப்பிருந்தால், எண்ணியெண்ணிக்
கண்ணுந்தான் தெரியாமல் மூடிக்கொள்ளக்
கற்பனையில் ஆழ்ந்திட்டால் அதுவும் போச்சு!
இன்னொன்று கவிதையிலே எழுதவந்தால்
எதுகைக்காய் எண்ணமெலாம் மாறிப்போகும்
பண்ணென்றும் பாட்டினிலே சொல்ல வந்தால்
பண்ணுக்காய்ப் பொருள் சிதைவு பட்டுப் போகும்.
வசனத்திற் சொல்ல என எடுத்துக் கொண்டால்
வடிவான தமிழ்க் கவியில் வடியுமின்பம்
வசனத்தில் வருகுதிலை…. என்ன செய்ய ??
வாழ்வினிலே இடையிடையில் வந்தடிக்கும்
விசனத்தின் அலையொன்று மெல்லெழுந்து
வீசிவிட்டால் எண்ணமெலாம் வேறாய்ப்போக,
வசனத்திற் கவிதையினில் அல்ல, வேறே
வாய்விட்டுச் சொல்லி எதற் கென்றாய்ப் போகும்.
வாய்விட்டுச் சொல்லவுந்தான் வந்து விட்டால்,
‘வந்தபடி சொல்லுவதோ அல்ல இந்தப்
பாழ்பட்ட – ஏன் அது போல பேர் மெச்சப்
பாருலகுக் கேற்ற படி பதமையாக்கி
ஏய்பட்டுப் பிறர் புகழை ஏந்து தற்காய்
எண்ணத்தை மாற்றுவதோ-” என்றேன்றெண்ணி
நாட்பட்டுப் போச்சுதடா! நடக்காதந்த
நயவஞ்சம், அதற்கெதிராய்த் துணிந்துவிட்டேன்