மண்ணும் வாழ்வும் அதன் மாந்தர்களும் வாழ்வியலின் வரலாற்று அடுக்குகளில் மன ரீதியாக கிளர்த்தெழும் உணர்வுகளின் வெளிப்பாடே மரபெனச் சுட்டி நிற்கிறது. இதில் உறவுகளின் உன்னதமான உணர்ச்சிக் குவியலில் காலமும் அழகாக கோலமும் வரைந்து செல் வடுக்குகளும் கலாச்சாரமும் பண்பாடும் உணவுமென சிறப்படையாளமாகி உணர்வோடு உயிரோடு மனசுக்குள் ஜக்கியமாகி தெள்ளித் தெளித்த புள்ளிகளின் கூட்டுறவென மனங்களின் சங்கமத்தில் மரபுத்திங்கள் நாளாம் உழவர் திருநாளாம் ‘தைப்பொங்கல்’ தமிழர் நாளென தரணியெங்கும் தமிழ் மணக்கும் நிலமகள் பூரிப்போடு பால் பொங்கும் மனம்போல் கொண்டாடும் நாளாம்!
புலம்பெயர் புகலிடமெங்கும் ‘தமிழ்’ மீதான பற்றுதலின் அடையாளமாய்.., புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் பெரிய பிரித்தானியா மாநகர் இலண்டன் கிறின் வீச்சில் ‘GABTA’ என்றொரு தமிழ் அமைப்பை நடத்தி வருகின்றனர். ‘GABTA’ மேட்டிமை கொள் மொழியென இதர மொழி குறுக்கிப்பார் மனம் கொள்ளாமல் சம தளத்திலும் எம் மரபு வழிக் கொண்டாட்டங்களையும் மறவா இளைய தலைமுறைக்காக பல நிகழ்வுகளை ஒழுங்கும் செய்தும் நடாத்தி வருகின்றது.
‘GABTA’ பல ஆண்டுகளாக தமிழர், மரபுத்திங்களாகிய ‘தைப்பொங்கல்’ விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றது. ஆனால், இந்த பெருந்தொற்று COVID-19 சூழலில் இவ்வமைப்பினர், சென்ற வருடம் ‘பொங்கல் விழா’வை நடாத்த முடியாத நிலையில் ‘ZOOM’ மின் வலைப்பின்னலுக்குக் கூடாக ஓர் ஒன்று கூடலை நடாத்தி முடித்திருந்தார்கள்.
2022 இல் இலண்டன் மாநகராட்சி ‘தமிழ் மரபு மாதம்’ என தை மாதத்தினை பிரகடனப்படுத்திய நிலையில், ‘GABTA’ அமைப்பினர் COVID 19 பெருந்தொற்று இக்கட்டான நிலையிலும் ‘தைப்பொங்கல்’ ஒன்றுகூடலை நடாத்திட இந்த ஒரளவுக்கு சீரான நிலமையைக் கருத்தில் கொண்டு, இவ்வருடமும் கட்டுக்கோப்பாகவும் பொழுது போக்கு அம்சங்களை குறைத்து பொங்கல் விழாவை 22/1/2022 அன்று கொண்டாடுவதுஎன தீர்மானத்திருந்தார்கள்.
இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக இவ்வருடத் ‘தைப்பொங்கல்’ ஒன்றுகூடலைப் புதிய சிறப்புமிக்க அம்சமாக எமது பாரம்பரிய உணவுகளைக் கொண்டு சிறப்புற அமைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. இம்முயற்சியானது எமக்கும், எமது அடுத்த தலைமுறையினருக்கும் எமது பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கால கட்டம் இதுவென உணர்த்து இவ்வமைப்பைச் சார்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும் தாங்கள் விரும்பிய பாரம்பரிய ஏதொரு உணவு வகையைக் கொண்டு வந்து சிறப்பித்தனர்.
காலை பத்து மணியளவில் ‘தைப்பொங்கல்’ விழா ஆரம்பமானது. ஒருபுறம் ஆண்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் திறந்த வெளியரங்கில் குதுகலத்துடன் பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றிப் பொங்கலை ஆரம்பித்தனர்.
புலமும் பலமும் கல்வியில் மகுடம் கொள் சூழலும் புதிய விடுதலையென முகம் பூரிக்கும் கணமதில் நிலமகளாய் நெல் அரிசி களையும் அழகும் வாழை குலை ஈன்றிடும் பொத்தியாய் குவியும் கையிரண்டழகும் பொங்கி வழியும் பால் பானையில் அரிசியிடும் நேர்த்திதனை பார்த்தெழும் புன்சிரிப்பும் முதுமை முதிர்ச்சி மனம் நிறை மகிழ்ச்சி தரும் தருணம் அது வானம் காணும் நிலவாய் கதிரவன் மையல் கொள்ளும் கிழக்கு உதய வானமாய் மாவிலை தோரணங்கள் காற்றில் ஆடியது!
ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என பெண்கள் ஒரு பக்கம் வடை, சுடுவதும் வெண்பொங்கல் தயாரிப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்க, இன்னொரு பகுதியினர் பாரம்பரிய உணவுகளை அலங்காரப்படுத்தி ஆவணப்படுத்துவதற்கு எற்றவாறு அழகுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்தத் தைப்பொங்கல் விழா எற்பாட்டாளர்கள் யாருக்காக இவ்வாறான கலாச்சார நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல எண்ணிச் செயல்பட்டார்களோ அவர்கள் குதூகலமாக ஓடித்திரிவைதையும் காணக்கூடியதாக இருந்தது.
ஒரு இனத்தினுடைய அடையாளங்கள் காப்பாற்றப்படுவதற்கும், அந்த இனம் பொதுத்திரட்சி அடைவதற்கும், தமிழ் பேசும் மக்களின் பொது அடையாளமாக தைப்பொங்கல் விழாவை முன்நிறுத்தி செயல்ப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.சுவரில் இருந்து புடுங்கி எறியப்படும் ஆணி கூட தனது அடையாளத்தைச் சுவரில் விட்டுச் செல்கின்றது. அதே போல் தென்னை மரத்தில் இருந்து விழும் தென்னை மட்டை தனது அடையாளத்தை தென்னை மரத்தில் ஆழமாக விட்டுச்செல்கின்றது. எமது மொழியும் பண்பாடும் வேர்களும் மிகவும் தொண்மையானது. இவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே எமது வரலாற்று கடமையாகும்.
ஆக்கம்:N.R.மூர்த்தி
இக் கட்டுரையையோட்டிய நிகழ்வு காணெளியாக கீழே தரப்பட்டுள்ளது
அனைவருக்கும் உழவர் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்