என் அருமை குழந்தாய்
தெவிட்டாத தீங்கனியே!
நீ பிறந்த போது நான்
கடல் கடந்து இலண்டனில்.,
மீண்டு உன்னிடம் வந்தபோது
நீ நடைபயின்று தவழ்ந்து விளையாடினாய்.
தோள் மீதும், மடி மீதும் இருத்தி
அன்பு முத்தங்கள் தந்தேன்.
உன் வாய் மழலை மொழி கேட்டு
நெஞ்சார மகிழ்ந்தேன்!
உன் துடி ஆட்டம் எல்லாம் கண்டு
மனதிலே பல கனவுகள் கண்டேன்
மூன்று வயது அளவில் அப்பாவுடன்
வாகனத்தில் ஸ்டோரிங் பிடித்து
வெட்டி போடும் லாவகம் கண்டேன்
கடலிலே, நீச்சல் தடாகத்திலே
நீ! நீச்சல் அடிக்கும் துணிகரம் கண்டேன்
நீ! பெரியப்பாவுடன் சிலம்பாட்டம்
பழகி வரும் எழிலைக் கண்டேன்
இரவானதும்
அம்மா, அம்மாவென்று அம்மாவின்
அரவணைப்பில் கிடப்பாய்.
காலையில்
அப்பா, அப்பா என்று அப்பாவுடன்
சுற்றித் திரிவாய்.
அக்கா, அண்ணாவுடன் அகமகிழ்ந்து
விளையாடுவாய்
இவையெல்லாம் பார்த்துப்பார்த்து
நானும் ஆனந்த பரவசமானேன்.
கல்வி பயிலும் காலம் வந்தது
பாலர் பாடசாலைக்கு அம்மாவுடன் சென்று
பாலர் வகுப்பில் சேர்த்தோம்.
காலை கூட்டிச்சென்று பாடசாலை விட்டு,
மதியம் கூட்டி வருவேன்
பாடசாலை போய்வரும் போது
உன் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தேன்
பாடசாலை விட்டு மாணவருடன்
யூனிஃபார்ம் உடை உடுத்து புத்தகப் பையுடன்
குடுகுடுவென்று ஓடி வருவாயே
அந்நிகழ்வு இன்றும் என்
மனக்கண்ணில் நிழலாடி வருத்துதே பேரா
உன் திருவிளையாடல்களை சில நாட்கள்
கண்டு மகிழ்ந்த உன் மாமாவும் அத்தையும்
சொல்லொணாத் துயரில்
இன்னொரு மாமாவும் அத்தையும்
மாறாத் துயர் கொண்டு மாய்கிறார்கள்
சித்தி சுவிசிலிருந்து
உன்னை நான் காணவும் பேசவும் இல்லை
நான் பாவி! என்று தேம்பி தேம்பி அழுகின்றாள்
இளம் கனியே ஆரமுதே
சிட்டுக் குருவியாய் சிறகடிக்கும்
பிஞ்சு வயதிலேயே யார் இந்த விதி வரைந்தார்
என்நெஞ்சம் வேகுது ஐயா
இலட்சியத்தில் முதல் விழுந்து
விதையாகி போன எந்தன்
மாவீரன் பெயரை எடுத்து
ஆசையுடன் இட்டேனே சங்கர் என்று
உங்கள் விழிகளில் நீ வரைந்த
கனவுகள் வலிக்கிறதே என் பேரா
என்ன சொல்லி ஐயா நாம் மாற்ற எம் மனதை
கிட்ட நின்று தொட்டு அழ
முடியாமல் போனேன்
தேம்பி அழுகின்றேன் மீண்டு ஒருகால் வாராயோ
இந்த மண் மீது உன் கனவுகள் மெய்ப்பட
உயிர் உள்ளவரை உன் நினைவுகளுடன்
தாத்தா செல்வச் சந்திரன்