பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.
இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம். இதே பனைமரங்கள் அமெரிக்கா தேசத்திலே வளருபவையாக இருந்திருந்தால் பனங்கிழங்குகளின் மருத்துவக் குணங்களை உலகறிந்திருக்கும்.
கருப்பட்டிகள் அருமருந்தாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.நுங்குகளின் மகத்துவம் பேசப்பட்டிருக்கும். ஒடியல், புழுக்கொடியல், மாவகைகள் உலக சந்தையிலே பெரும் இடத்தைப் பிடித்திருக்கும். பனையின் ஒவ்வொரு பகுதிகளும் உலகின் உபயோகத்திற்கு வந்திருக்கும்.
ஆனால் பாவம் இந்தப் பனைமரங்கள் பாவப்பட்ட எம்மக்கள் மத்தியிலே தோன்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
பானங்களிலே அதிகூடிய புரதச்செறிவுடைய பானம்நுங்கு என்பது நம்மில் பலருக்கு தெரியாது. பால் தான் புரதச்செறிவுடைய பானம் என்று நினைத்துக் கொள்கிறோம். 100g பாலிலே 3.3g புரதம் இருக்கிறது. ஆனால் 100g நுங்கிலே 10.8g புரதம் இருக்கிறது. பாலினைப்போல் 3 மடங்கு புரதச் செறிவுள்ள பானம் நுங்கு என்பதை மனதில் நிறுத்துவோம்.
நுங்கினுடைய உலர்நிறையிலே 60% புரதமும் 30% மாப்பொருளும் இருப்பதுடன் மிகக்குறைந்தளவு கொழுப்பே இதனில் காணப்படுகிறது. பனங்கூடல்களுக்குள் வசிக்கும் எமது சிறார்கள் புரதக் குறைபாட்டினால் அவதியுறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இந்த நுங்கின் மகத்துவம் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.
எம்மத்தியிலே ஒரு கோடிக்கும் அதிகமான பனைகள் இருந்தும் அவற்றில் இருந்து கிடைக்கும் பனம்பழங்களில் 5 வீதமான பனம்பழங்கள் கூட உபயோகப்படுத்தப்படுவதில்லை. வண்டுகளிடமிருந்தும் புழுக்களிடமிருந்தும் அவற்றை முற்றாகக் காப்பாற்றி அனைத்துப்பழங்களையும் முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்பது சம்பந்தமான வழிமுறைகளை நாம் ஆராயவில்லை.
புரதச்சத்தது நிறைந்த விற்றமின்கள்,கனியுப்புக்கள் நிறைந்த எமது அரும் சொத்தான பனம்பழங்கள் வீணடிக்கப்பட்டு மண்ணுக்கு உரமாகிக்கொண்டிருக்கின்றன.
பனம்பழங்களின் உலர்நிறையில் 11 வீதம் புரதமும் பெருமளவு பீட்டா (β) கரோட்டினும் ஏனைய விற்றமின்களும் இரும்பு, கல்சியம் போன்ற கனியுப்புக்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தப் பனம்பழங்களை மக்கள் விரும்பி உண்ணக்கூடிய வகையில் எவ்வாறு மாற்றங்கள் செய்வது என்பது சம்பந்தமான பல ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சோடாவுக்கு மாற்றீடாக பனம் பழங்களிலிருந்து பலவகையான சுவையான பானங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இடியப்பத்தினுள்ளும் பிட்டினுள்ளும் பனங்களி சேர்த்து சமைப்பதன் மூலம் அவற்றின் சுவையும் நிறமும் ஊட்டச்சத்தும் மெருகு பெறும் என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். பனங்களிகளை இலகுவில் பிரித்தெடுப்பது பாதுகாக்கும் பொறிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.
பனம்பழங்களின் மருத்துவக் குணங்களும் அதிலே காணப்படும் நோய் எதிர்ப்புத்தன்மையும் விஞ்ஞானபூர்வ ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த முயற்சி வெற்றி அளிப்பின் நாம் பனம்பழங்களை ஈய உறைகளில் சுற்றி அவற்றில் ஸ்ரிக்கரும் ஒட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையும் ஏற்படலாம்.
பலவிதமான விளம்பர யுத்திகளுடன் இறக்குமதியாகி அதிக விலையில் விற்பனையாகும் ஓட்ஸ் வகைகள் எமது அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறும் நிலை காணப்படுகிறது. ஆனால் எமது சொந்த மண்ணில் விளையும் ஓட்ஸி லும் சிறந்த அதிக நார்த்தன்மை கொண்ட மலிவான இயற்கையான பனங்கிழங்குகளை நாம் புறக்கணித்து விடுகின்றோம். பனங்கிழங்குகள் அதிகளவு நார்த்தன் மையும் மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டிருப்பதுடன் உலர்நிறையில் 12 வீத புரதத்தையும் பல விற்ற மின்கள் கனியுப்புக்களையும் கொண்டிருக்கின்றன.
பனங்கிழங்குகளில் இருக்கும் மாப்பொருளானது குறைந்த வேகத்திலே உடலினுள்அ கத்துறிஞ்சப்படுவதால் இது நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த உண வாக காணப்படுகின்றது. பனம்பழங்களின் பயன்கள்அனைத்தையும் எடுத்த பின்பு அதன் கொட்டைகளை பனம்பாத்தி போடுவதன் மூலம் பனங்கிழங்குகளை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் பனம்பழங்களும் பனம் விதைகளும் பயனுடையவையாக மாற்றம் பெறும். அத்துடன் பனங்கிழங்குகளை பதப்படுத்தி பனங்கிழங்குகளாகவே பாதுகாக்கும் பொறிமுறை கண்டறியப்பட வேண்டும்.
பனம்பழம் பத்தும் செய்யும்!
* பனை மரத்தை பொறுத்தளவு பனை சுளை, பனங்கள் அதன் மூலம் கிடைக்கக்கூடிய கருப்பட்டி, பதநீர் போன்றவை மேலும், பனங்கிழங்கு போன்றவை நமக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதேபோல பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பழமே பனம்பழமாகும்.
* பனை மரத்தில் சுளைக்காக வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டால் காய் முற்றி பழமாக பழுத்துவிடும். இது உருவத்தில் தேங்காயை விட பெரிதாகவும், உருண்டையாகவும் இருக்கும்.
* பழம் கருப்பு நிறம் கொண்டதாக இருக்கும். தலையில் அதாவது மேல்பகுதியில் லேசாக சிவந்த நிறத்துடனும் காணப்படும்.
* பனம்பழத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகள் இருக்கும். பனம் பழத்தில் நார் நிறைந்து காணப்படும். நார்களின் நடுவே ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்தச் சாறு இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
* பனம்பழத்தை அவித்தும் சுட்டும், அதன் சாற்றை எடுத்து வதக்கியும் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடும் முறை நம்முடைய தொன்று தொட்டு பாரம்பரியமாக இருந்துவருகிறது. ஆனால், இன்றைக்கு பனம்பழம் சாப்பிடும் பழக்கம் கிராமப்புறங்களில் மட்டும் தான் இருக்கிறது.
* பனம்பழத்தில் பப்பாளி, மாம்பழத்தைவிட கூடுதலாக வைட்டமின் சி மற்றும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பனம்பழச் சாற்றில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, உலோக உப்புகள், சர்க்கரை, வைட்டமின் சி மற்றும் கரோட்டின் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, பார்வைத்திறனை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் ஏ சத்து இந்த பழத்தில் பெரிய அளவு இருக்கிறது.
* பனம்பழம் சிறந்த சத்துணவாகும். இதில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இந்தப்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
* பனம் பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் நெருப்பு மூட்டி சுட்டும் சாப்பிடலாம் அல்லது நீரில் வேக வைத்தும் சாப்பிடலாம். ஒரு பழத்தில் பாதி அளவு வரை ஒருவர் உட்கொள்ளலாம்.
* நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குள் உண்டுபண்ணி சரும நோய்களை பனம்பழம் சரி செய்கிறது.
* பனம்பழம் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
* நீரிழிவு பாதிப்புள்ளவர்களும் பனம்பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
* பனம்பழத்தை கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள், பித்தப்பை பாதிப்பு இருப்பவர்கள், கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
* பனம்பழச்சாற்றுடன் மாவு சேர்த்துப் பிசைந்து பணியாரம் செய்து சாப்பிடுவார்கள். தேங்காய், வாழைப்பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்பு பலகாரங்கள் செய்வார்கள். தக்காளி ஜாம் போலவும் பனம்பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள்.
* பனம்பழத்தின் சாற்றை சருமநோய்களுக்குப் பூசுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
* பனம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் கரப்பான், சிரங்கு, மலச்சிக்கல், பித்த வாயு அதிகரித்து நோய்கள் உண்டாகும் என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது.
* பனம்பழத்திலிருந்து எடுக்கப்படும் சாற்றை, வெயிலில் காய வைத்து அதன்மீது மீண்டும் சாற்றை ஊற்றி, நன்றாகக் காய வைப்பார்கள். அது நன்றாக இறுகி இனிப்புக் கட்டிகளானதும் அதை பயன்படுத்துவார்கள். குறிப்பாக இலங்கை(யாழ்ப்பாணத்தில் இதை பன்னாட்டு என்பார்கள்) மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயன்படுத்துகின்றனர்.
நுங்கு சாப்பிடுவதால் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
1. நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.
2. இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
3. பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
4. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.
5. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
6. கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
7. இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
8. நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.
9. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
10. நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
11. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.
12. பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.
13. நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.
14. வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளையும் இந்த நுங்கு சுளைகளால் சரி செய்யலாம். கர்ப்பிணிகளும் இந்த நுங்கை உண்டால் மலச்சிக்கலை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அசிடிட்டி பிரச்னையும் இருக்காது.
15.நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து உண்டால் அத்தனை ருசியாகவும், குளிர்சியாகவும் இருக்கும். கூடுதல் சுவைக்கு சர்க்கரை தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி (Palm fruit) விடும். இந்த பனம் பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.
பனங்கிழங்கின் பயன்கள்
மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
உடலுக்கு எதிர்ப்புச் சக்தியாகவும் (Immunity) செயல்பட்டு உடலைக் காக்கும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.
- உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.
- உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும்
- பனங்கிழங்கை மஞ்சளுடன் (turmeric) சேர்த்து வேக வைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து (Iron) அதிகமாகும்.
- பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் (Coconut milk) சேர்த்து சாப்பிட்டு வந்தால்,
- பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.
- சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி (Immunity) அதிகமாகும்.