சங்கம் வளர்த்த தாய்த்தமிழின் தேன் சுவையோ,
இசைத்தமிழின் மென்சுவையோ;
தென்றலுடன் பாடிவரும் பழந்தமிழோ;
யாவும் கலந்த முதன்மொழியின் தித்திப்புடன் நிமிர்ந்தாடும் நெற்கதிரின் கலையமுதோ;
மானிடன் கண்டுகொண்ட இன்பத்தின் ஊற்றே,
தாய்த்தமிழின் முதல் நாளும், இறக்கை விரித்துப்பறந்துவரும் செந்தமிழின் திருநாளும்,
தைத்திருநாளே தைப்பொங்கலென தமிழன் சித்தரிக்கும் நன்நாளன்றோ;
மான்களும் முயல்களும் துள்ளிவிளையாட, எலிகளும் அணில்களும் ஓடிவிளையாட, சிறுவர் சிறுமியர் கூடிவிளையாட;
ஆதவன் கதிர் கொடுக்க, கோவில்மணி இசைஎழுப்ப, மூதாட்டி பார்வையிலே, மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலமிட்டு;
உலகமே திலகமென குங்குமப்பொட்டிட்ட மனையாளும், கார்மேகக்கண்களுக்கு மைதீட்டி மல்லிகை மலர் சூடிய இளம் மங்கையரும்,
கண்படினும் கருங்கண் பட்டுவிடக்கூடாதேயென கரும்பொட்டிட்ட குஞ்சுக்குழந்தைகளும் ஓடிவிளையாட;
பட்டுவேட்டி சட்டையணிந்து முறுக்குமீசையுடன் பெரியோரும் வாலிபவட்டங்களும் முன்நிற்க;
தேன்கரும்புச்சாற்றுடனே பாலும் சோறும் மண்பானையில் பொங்கி வடிய;
நலமாய் யாவரும் இன்பமாய் வாழ்கவென மனசார வாழ்த்தி, சொந்த பந்தங்களுடன் கூடியிருந்து,
சக்கரைப்பொங்கலை சுவைத்து மகிழும் நாளல்லவோ நம் பொங்கல் பெருநாள்.
பொங்குதமிழ் பொங்கிவர விடுதலை வீரராக ஒன்று கூடி வாழ்வோம் என்றென்றும்.
ஆக்கம் :லுக்ஸ் ஆனந்தராஜா