முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனம் அல்லது அர்த்த சக்ராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.
அரை சக்கரம் போல் இருப்பதால் அர்த்த சக்ராசனம் என்று சொல்லுவர். மேலும் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்ற பெயரும் உண்டு. இதனை தினமும் செய்து வந்தால் நாம் பெறக்கூடிய பலன்கள் அதிகம்.
செய்முறை
முதலில் விரிப்பின் மீது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து நிற்க வேண்டும். பின்பு இரண்டு கைகளை மேலே தூக்க வேண்டும். பின் மூச்சை உள் இழுத்து கொண்டு நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பின்னால் வளைய வேண்டும்.
அதற்காக ரொம்ப சிரமப்பட்டு அதிகம் வளையக் கூடாது. ஆரம்பத்தில் சிறிது சிறிதாக வளைந்து செய்தால் நாளடைவில் நன்றாக வளைந்து செய்ய முடியும்.
இப்படி பின்னோக்கிய அரை சக்கர நிலையில் சுமார் இருபது வினாடிகள் (20 seconds) மூச்சை நிதானமாக உள்ளிழுத்து கொண்டும், வெளி விட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்.
இருபது வினாடிகள் கடந்த பின், ஒருமுறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின் மூச்சை வெளியேற்றி கொண்டே நிமிர வேண்டும்.
இதுவே பிறையாசனம் அல்லது அர்த்த சக்ராசனமாகும்.
இந்த ஆசனத்தை கைகளை மேலே தூக்காமல், இடுப்பை பிடித்து கொண்டும் செய்யலாம். இந்த ஆசனம் செய்யும் போது கால் மூட்டுகள் வளையாமல் இருக்க வேண்டும்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து மூன்று முறை செய்யலாம்… செய்த பிறகு இதற்கு மாற்று ஆசனமாக அஸ்த பாத ஆசனம் செய்ய வேண்டும்.
அப்போது தான் இந்த ஆசனத்துக்குரிய முழு பலனும் நமக்கு கிடைக்கும்.
பயன்கள் :
பின்புறம் வளைவதால் முதுகு தண்டுவடத்திற்கு நெகிழ்வு தன்மை கிடைக்கிறது. நீண்ட நாள் ஆஸ்துமா பிரச்சனை நாளடைவில் முற்றிலும் குணமாகிறது.
டிபி மற்றும் கிட்னி பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடர்ந்து செய்து வந்தால் முதுகுதண்டு பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் பலம் பெறுகின்றது.
முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம். முதுகு எலும்பு தேய்மானம் உள்ளவர்களும், கழுத்து எலும்பு தேய்மானம் உள்ளவர்களும் குருவின் மேற்பார்வையில் செய்யவும்.. இதய நோய் உள்ளவர்கள் மெதுவாக செய்யவும்.
முதுகு மற்றும் வயிற்றுப்பகுதிகளுக்கு அதிக அளவில் நன்மையை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சி: சக்கராசனம்.