பிராணாயாமம் என்பதன் பொருள் பிராணன்+அயாமம் அதாவது (உயிர்க்காற்று + கட்டுப்படுத்துதல்). மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே பிராணயாமமாகும்.
பிரணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும் போது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. மனம் அமைதி பெறுகிறது. மன அழுத்தம் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தினசரி பிராணாயாமம் செய்பவர்களுக்கு நோய் வந்தால் அது தானாகவே எளிதாக குணமடைந்து விடும். பிராணாயாமம் பற்றி திருமூலர் அருளிச் செய்த ”திருமந்திரத்தில்” அட்டாங்க யோகம் பகுதியின் நான்கம் பிரிவில் வெளிப்படுத்திய மூச்சுப் பயிற்சி தொடர்பான சிறு விளக்கம் கீழே பதிவாகியுள்ளன.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுப்பிடித்துமூச்சுப்பிடித்துமுறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
திருமூலர் தனது பாடலில்,
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான், தனங்கொளிரட்டிய தாறு நடந்தால், வணங்கிடு ஆமைம்மலம்வா, யுவெழுந்து விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
சாதாரணமாக அதிகப்படியான வேலையோ விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கமோ இல்லாதவர்களுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படாததால் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் பணி நுரையீரலில் அதிகமாக நடக்காததால் அந்தப் பணி நடப்பதற்கான நுண்ணறைகள் குறைவான அளவே இயங்கு நிலையில் இருக்கும். மற்றவை எல்லாம் சுருங்கியோ அல்லது வேறு சிலவற்றால் அடைபட்டோ இருக்கும்.
அந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் வேலை செய்தாலோ மாடிப்படிகள் ஏறினாலோ கொஞ்சதூரம் ஓடமுயன்றாலோ வேகமாக நடந்தால்கூட வியர்த்து விறுவிறுத்து மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும். காரணம் அந்த கூடுதல் வேலைக்குத் தேவையான அளவு கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பணி நுரையீரலில் நடக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.
பிராணாயாமம் என்பது யோகாசனம் கற்றுக்கொள்பவர்கள் அதன் எட்டுப்படிகளில் நான்காவது படியாக பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி வருகிறது. அதை அவர்கள் முழுமையாகப் பயின்றால்தான் அடுத்தடுத்த படிகள் வழியாக சமாதி நிலை என்னும் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.
பிரணாயாமம் செய்வது எப்படி?
கபாலபதி என்னும் மூச்சுப் பயிற்சி செய்யும்போது அதிக அளவு ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்கிறது. மேலும் உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் அதிக அளவில் நீங்கி விடுகின்றன. முதலில் கபாலபதி எப்படி செய்வது என்றுபார்ப்போம். நேராக முதுகு வளையாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூச்சுக் காற்றை சாதரணமாக உள்ளே இழுங்கள். அதை வேகமாக வெளியே தள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அடி வயிறு உள்ளே செல்லும். அது தான் நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என்பதற்கு சாட்சி. இதை சுமார் 20 முறை செய்யுங்கள்.
மூச்சு விடல் பற்றியான இப்பயிற்சியில் 4 நிலைகள் உள்ளன.
1. முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதை பூரகம் என்று பெயர்.
2. இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.
3. இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.
4.வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம்என்று கூறுவர்.
மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.
மூச்சுப் பயிற்சியால் என்ன பயனோ அதனைமட்டும் அடைவதற்காக நாம் சில எளிய முறைகளைக் கையாளலாம்.
ஆதாவது கீழே ஒரு விரிப்பின்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டோ அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டோ ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பயிற்சியைத் துவங்கவேண்டும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் சுவற்றில் ஒரு கடிகாரம் இருப்பது நல்லது. கீழே தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில்கூட நேராக நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.
அதன்பின் ஒரு பத்துத் தடவை முடிந்த வரை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவேண்டும். சுவாசம் சீரானதும் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கத் துவங்கும்போதும் சுவர்க்கடிகாரத்தில் ஒலிக்கும் வினாடிமுள் நகரும் சப்தத்தை எண்ணிக்கொள்ளவேண்டும்.
எத்தனை வினாடிகள் உள்ளிழுப்பதற்கு ஆகிறது என்று எண்ணிக்கொண்டு உள்ளிழுக்க முடியவில்லை என்றால் உடனே வெளிவிடத் துவங்க வேண்டும். வெளிவிடும் நேரம் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக்கொண்டு வெளிவிட முடியவில்லை என்றால் உடனே உள்ளிழுக்கவேண்டும்.
உள்ளிழுப்பதைவிட வெளிவிடுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். உள்ளிழுக்கும் நேரமும் வெளிவிடும் நேரமும் சேர்ந்ததுதான் ஒரு மூச்சுக்கான நேரம்.
ஒரே மாதிரி நேரக் கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூச்சு விட்ட பின்பு மிகவும் எளிதாக இருந்தால் மூச்சின் நேரத்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விநாடிகள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரே நாளில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக எப்போது முடியுமோ அப்போது உயர்த்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறாத அளவு எந்த அளவு வேண்டுமானாலும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே கொள்ளலாம்.
இந்தப் பயிற்சியின் காரணமாக நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும் அதன்மூலம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணிக்காகப் பிராணவாயுவை அளிக்கும் திறனும் அதிகரிக்கின்றது. காரணம் அதுவரை நுரையீரலின் திறக்காத அறைகளெல்லாம் திறக்கிறது. அங்கு இதற்கு முன் நடக்காத வேலைகள் எல்லாம் நடக்கிறது. அவ்வளவே!
இந்தப் பயிற்சிக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்குமளவு இதன் பயன் கூடுதலாக இருக்கும்.
ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது
மூச்சுப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் தூண்டச் செய்து சக்கரங்கள் நன்றாக செயல்பட உதவுகிறது.
உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை குணமாக்கும் சக்தி மூச்சுப் பயிற்சிக்கு உண்டு.
மூச்சுப் பயிற்சி செய்வதால் சகஸ்ரார சக்கரம் தூண்டப்பட்டு, உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
மூச்சுப் பயிற்சி செய்வதால் நினைவாற்றல் பெருகும்.
மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
தினமும் மூச்சுப் பயிற்சி செய்து வர உடலுக்குள் கிருமிகள் நுழைவதைத் தடுத்து நிறுத்தும்.
தினமும் மூச்சுப் பயிற்சி செய்வதால் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.
பதட்டம் ஏற்படாமல் இருக்க மூச்சுப்பயிற்சி மிகவும் பயன்படுகிறது.
பிராணாயாமத்தை முறையாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் வளமையடையும். ஊளைச்சதை கரைந்து விடும். தேவைக்கு அதிகமான கொழுப்புச் சத்துக் குறையும். கண்கள் பிரகாசமடையும். வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியவை மறைந்துவிடும். உடல் உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். சிந்திக்கும் திறன் பெருகும்.