இசையாற்றலும்புதியகுரல்களும்:
திரைப்படங்களில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்களிடம் வாத்தியங்கள் வாசித்தவர்களும் , இசையமைப்பில் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் பலர் தாங்களும் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு உயர்ந்ததையும் நாம் அறிவோம். அந்தவகையில் இந்திய திரைவானில் முதல் இரட்டையர்களாக உருவாகிப் புகழபெற்றவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இணை! இந்த இரட்டையர்கள் இசைக்கலைஞர்களாக இருந்து இசையமைப்பாளர்களானவர்கள்.
நவுசாத்,சி.ராமச்சந்திரா,எஸ்.டி.பர்மன் போன்ற புகழ்மிக்க இசையமைப்பாளர்கள் கோலோச்சிய 1950களிலேயே மிக இளைஞர்காளாக இருந்த போதே மிகப்பெரிய வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர்கள் சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர்கள்.
தமிழில் “அவன்” என்ற என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படப்பாடல்கள் இவர்களின் மெலோடி இசைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த இரட்டையர்களை பின்பற்றி கல்யாண்ஜி – ஆனந்தஜி போன்றவர்களும் இவர்களிடம் உதவியாளர்களாக இருந்த லட்சுமிகாந் – பியாரிலால் போன்றோரும் உருவாகினர்.
மெலோடி யுகத்தில் கொடிகட்டிப்பறந்த ஹிந்தி திரையிசையில் அவ்வப்போது புதிய இளம் இசையமைப்பாளர்களும் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர். புதியவர்களும் தங்கள் இசையால் ஹிந்தி திரையிசையை இளமையாக வைத்துக் கொண்டனர். மூத்த இசையமைப்பாளார்களின் இனிய இசைக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் பாடல்களை,இனிய மெல்லிசைகளை அவர்களும் கொடுத்துக்கொண்டே வந்ததை நாம் அவதானிக்கலாம். இந்த இளம் இசையமைப்பாளர்களின் இசையும் , மூத்த இசையமைப்பாளார்களின் இசையும் பின்னிப்பிணைந்து , ஒருவருக்கொருவர் சவால் என்று சொல்லும் வகையில் இனிய மெலோடியும் , நவீன வாத்திய இசையின் பின்னல்களும் என ஹிந்தி இசையை புதுமையுடனும் , இளமையுடனும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தன. இந்த நிலை 1980களின் இறுதிவரை தொடர்ந்தது.
ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளார்களின் பெயர்களை வரிசைப்படுத்தி, நினைவூட்டிப்பார்த்தால் ஆச்சர்யம் மேலோங்கும்! கேம்சந்பிரகாஷ், நௌசாத் , எஸ்.டி.பர்மன், சி.ராமச்சந்திரா, வசந்த்தேசாய் , எஸ்.என்.திருப்பதி, அனில் பிஸ்வாஸ்,ரோஷன்,குலாம்கைடர்,ஓ.பி.நய்யார், மதன்மோகன்,சலீல்சௌத்ரி,சங்கர்ஜெய்கிஷன்,ஹேமந்த்குமார்,ரவி, கல்யாண்ஜி ஆனந்தஜி ,ஜெயதேவ் , ஆர்.டி.பர்மன் ,ரவீந்திரஜெயின் ,லஷ்மிகாந்த் பியாரிலால்,ராஜேஷ் ரோஷன் ,நதீம் ஸ்ராவன் என இந்த வரிசை நீண்டு செல்லும்.
ஹிந்தியில் புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் போலவே புதிய நடிகர்களும் அறிமுகமாகிக் கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்ல, பழைய நடிகர்களும் புகழபெற்ற படங்களிலும் நடித்துக் கொண்டுமிருந்தனர். திலீப்குமாரைத் தொடர்ந்து 1960களின் மத்தியில் அறிமுகமாகி புதிய அலையை உண்டாக்கிய ராஜேஷ்கண்ணா ஹிந்தி திரையின் புதிய சூப்பர் ஸ்டார் ஆகி, பின் அவரைத் தொடர்ந்து அமிதாப்பச்சன் அறிமுகாகி புகழ் பெற்றார். அந்த வகையில் ஹிந்தி சினிமா புதிய , புதிய மாற்றங்களைக் கண்டு வந்தது.
ஹிந்தி இசையைப்பொறுத்தவரையில் 1940களில் இசையமைத்துப் புகழபெற்ற நௌசாத் ,எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் தொடர்ந்து 1960 ,1970களிலும் இசை வழங்கிக்கொண்டிருந்தார்கள். மென்மையான காதல் நாயகனாக கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்த ராஜேஷ் காண்ணாவின் படங்களுக்கு எஸ்.டி.பர்மன் தனது 70வயதுகளில் இளமைமிக்க இசைவழங்கிக் கொண்டிருந்தார். ஆராதனா , மிலி , அபிமான், ஷர்மிலி போன்ற படங்களின் பாடல்கள் எவ்வளவு தாக்கம் விளைவித்தன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனது 10 வயதுப் பருவங்களில் எங்கள் குக்கிராமத்தில் [கம்பர்மலை , வல்வெட்டித்துறை ] ஒலித்த ஆராதனா படப்பாடல்கள் எஸ்.டி. பர்மனின் சாதனையையும் சினிமா இசையின் வல்லமையையும் நிரூபிக்க போதுமானவை. அந்தக் காலங்களில் அவை என்ன மொழியில் பாடுகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது.ஆனால் அத்தனை பாடல்களின் மெட்டும் மனப்பாடமாக இருக்கிறது. அதே போலவே மலையாளப்படமான செம்மீன் படப்பாடல்களும் அமோகமாக நமது ஊர்களில் எல்லாம் ஒலித்தன.
ஹிந்தித்திரைப்படங்களின் இந்தியாவிற்கு வெளியேயான செல்வாக்கு .அதன் வர்த்தக விரிவாக்கம் போன்றவற்றால் புதிய ,புதிய உத்திகள் அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக திரைப்பட வர்த்தகத்தில் இசையின் பங்கு அதிகம் என்பதால் பாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு ,பரிசோதனைகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டன.மேலைத்தேய பாப் இசையின் போக்குகள் முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டன.இந்தப் போக்கை லஷ்மிகாந்த் பியாரிலால் ,ஆர்.டி.பர்மன் போன்ற அன்றைய இளவட்ட இசையமைப்பாளர்களின் இசையில் நாம் கேட்கலாம். குறிப்பாக ஆர்.டி.பர்மனின் பாடல்களும் ,அவரது பாடல்களில் பயன்படுத்தப்பட்ட வாத்தியங்களில் எழுந்த ஒலிகளும் ,அதைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்ற ஒளிப்பதிவின் தரமும் ஒன்றுசேர்ந்து புதிய இசையின் குறியீடுகளாக அமைந்தன. ஹிந்தி திரை இசையின் புதுமை நாயகனாக ஆர்.டி.பர்மன் பெயர் புகழ் பெற்றது. இக்காலங்களில் ஆர்.டி.பர்மன் இசையில் வெளியான பாபி ,ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற படப்பாடல்கள் அதிக புகழ் பெற்றன.
ஆனால் தமிழ் திரைப்படங்களின் செல்வாக்கு ஓர் குறிப்பிட்ட எல்லைகளுக்குட்ப்பட்டிருந்தலும் அது ஒரு பிராந்திய சினிமாவாகவே கருத்தப்பட்டிருந்ததாலும் அதன் எல்லையும் மட்டுப்பட்டிருந்தது. அதனாலேயே புதுமையும் புகமுடியாமலிருந்து. அதுமட்டுமல்ல அது குறித்த விழிப்புணர்வும் இருக்கவில்லை.
1970களில் தமிழ் திரையில்.எம்.ஜி.ஆர்,சிவாஜி போன்ற நடிகர்களின் வல்லாதிக்கம் அதிகமிருந்ததெனினும் ,கே.பாலசந்தர் போன்ற இயக்குனர்களின் புகழ் மெதுவாகக் கசியத் தொடங்கியது. பாலசந்தர் வங்காள கதைகளை தமிழில் மாற்றிக் கொடுத்து சில மாற்றங்களை உருவாக்க முனைப்புக்காட்டிக்கொண்டிருந்தார். காவியத்தலைவி ,அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்கள் இதற்கு சான்று பகரும். அதைத்தொடர்ந்து மத்தியதரவர்க்கத்தின் உள்ளக்குமுறல்கள் உந்தித்தள்ளப்பட்ட ஆரம்பித்தது.
ஆனால் 1970களின் இசையைப் பொறுத்தவரையில் ஒரு சில இசையமைப்பாளர்கள் அறிமுகமானாலும் அவர்கள் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் இசையின் சாயலில் இசை வழங்கிக் கொண்டிருந்தனர் என்றே சொல்ல வேண்டும். ஹிந்தியில் புதிய இசையமைப்பாளர்கள் தங்களின் இசையால் ,பழமையைப் புதுமையால் மெருகேற்றிக் கொண்டே இருந்தனர். அத்தனை பேரும் தங்களது தனித்துவங்களை காண்பித்து மிகச் சிறந்த பாடலைகளைக் கொடுத்துள்ளனர்.
ஹிந்தி இசையமைப்பாளர்கள் தங்களது இசையில் புது,புது வாத்திய இசைக்கோர்வைகளால் புதுமை செய்து கொண்டிருந்தாலும் 1950 களிலேயே புகழபெற்றிருந்த திறமையும்,அனுபவமும் மிக்க முகமது ரபி,கிஷோர் குமார் ,முகேஷ் ,மன்னாடே ,லதா மங்கேஸ்கர் ,ஆஷா போஸ்லே போன்ற பாடக,பாடகிகளையே பயன்படுத்திய வண்ணமே சாதனை செய்து காட்டினார்கள்.
குறிப்பாக 1970களில், பழம்பெரும் இசையமைப்பாளரான
எஸ்.டி.பர்மன் இசையில் வெளிவந்த பாடல்கள் மெல்லிசையின் சிகரங்களைத் தொட்டன. வாத்திய இசைச் சேர்ப்பிலும் இனிமையிலும் கொடிமுடிகளைத் தொட்டன. அவரது வசீகரமிக்க அக்கால பாடல்களில் குறிப்பாக ஆராதனா படப்பாடல்களில், வாத்திய இசையில் அவரது மகனும் புகழபெற்ற இசையமைப்பாளருமான ஆர்.டி.பர்மனின் பங்களிப்பு இருந்தது என்ற கருத்தும் உலாவின! தந்தையின் அழகுமிக்க மெலோடிகளுக்கு உயிர்த்துடிப்பு மிக்க வாத்திய இசை வழங்கி சாகாவரம் வரம்பெற்ற பாடல்களைத் தந்தார்கள்.சிலர் அந்தப்பாடல்களை ஆர்.டி பர்மன் தான் இசையமைத்தார் என சிலர் சொல்வதுண்டு.
திரை இசையில் இது போன்றதொரு சம்பவம் என்றென்றும் நிகழ்ந்ததில்லை.1940 மற்றும் 1950 களின் மிக ஆரம்ப காலத்தில் ஒரு படத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்கள் தங்கள் ,தங்கள் பாணியில் இசையமைத்திருக்கிறார். ஒருவர் போடும் மெட்டுக்கு இன்னொருவர் பின்னணி இசை வழங்கவில்லை.ஒருவர் பாடல்களுக்கு இசையமைக்க வேறு ஒருவர் படத்தின் பின்னணி இசையை அமைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ் திரை இசையில் அப்படி ஒரு சூழ்நிலை மெல்லிசைமன்னருக்கு நிகழ்ந்தது.
சி.ஆர்.சுப்பராமனுடன் ஆரம்பித்த தமிழ் திரையின் மெல்லிசைப்பரம்பரையில் வந்த இரண்டாவது பரம்பரையான விஸ்வநாதன் போடும் மெட்டுக்களுக்கு வாத்திய இசை கோர்வைகளை அமைக்கும் வாய்ப்பை அந்த மரபில் வந்த மூன்றாவதும் நிறைவானதுமான பரம்பரையைச் சார்ந்த இசைஞானி இளையராஜா பெற்றார்.
அந்த நிகழ்வு மெல்லத் திறந்தது கதவு [1986] என்ற படத்தில் நிகழ்ந்தது. இன்று அந்தப்பாடல்களை ரசிக்கும் பலர் அவை இளையராஜாவால் இசையமைக்கப்பட்ட பாடல்கள் என்றே கருதுவதை நாம் அறிவோம். உண்மை என்னவென்றால் அந்தப்பாடல்களின் மெட்டுக்களை மெல்லிசைமன்னர் போட்டார், அதற்கு பின்னணி இசையை மட்டுமே இசைஞானி அமைத்தார். ஆனால் அந்த வாத்திய இசை விஸ்வநாதன் அமைத்த மெலோடியின் ஆழமான உந்துவிசையில் பிறந்த எழுச்சி இசை என்று சொல்லலாம். மெல்லிசைமன்னரின் இனிய மெட்டுக்களுக்கு அதற்கிசைந்த [ Harmony ] வகையில் அமைத்து அப்பாடல்களை என்றென்றும் இளமையாக்கியவர் இளையராஜா.மெல்லிசையின் ஞானப் பரம்பரையின் இணைவு அது. ” அது ஒரு ஆத்மார்த்த இணைவு ; அப்படி யாருடனும் நான் இணைந்து செய்ததில்லை ” எனப் பின்னாளில் மெல்லிசைமன்னர் கூறினார்.
1970களின் கால கட்டத்தை நாம் உற்றுநோக்கும் போது ஹிந்திப்பாடல்களின் ஆதிக்கம் அதிகமிருந்ததை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். வித்தியாசமான இசையை ரசிப்பது மனித சுபாவங்களில் ஒன்று தான். நான் மேலே குறிப்பிடட ஆராதனா, செம்மீன் வகைப்படங்களில் வெளிவந்த இனிய பாடல்கள் ரசிக்கப்பட்டாலும் , தமிழ் பாடல்களை இசைரசிகர்கள் ஒதுக்கி விடவில்லை என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும். இலங்கை தமிழ் வானொலியில் அரை மணி நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் தமிழ்பாடல்களே ஒலித்துக் கொண்டிருந்தன.
வானொலி தாண்டி ஒலிபெருக்கி உரிமையாளர்களால் சமூக நிகழ்வுகளில் ஹிந்திப்பாடல்கள் சரளமாக ஒலித்துக்கொண்டிருந்தன என்பதற்கப்பால் , தாம் ஹிந்திப்பாட்டு மட்டும் தான் கேட்போம் என்று சொல்லக்கூடிய தம்மை “வித்தியாசமானவர்கள் ” எனக் காட்டிக்கொள்ள ஆசைப்பட்டவர்களும் இருந்தார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். இப்படியானவர்கள் எப்போதும் எக்காலத்திலும் இருப்பவர்கள் தான்!
பொதுவாக இசைக்குமட்டுமல்ல எல்லாக்கலைகளுக்கும் ஒரு எல்லைக்கப்பால் நெருக்கடிகள் வருவது இயல்பான ஒன்றே.ரசனையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.அந்தவகையில் மெல்லிசைமன்னருக்கு 1970கள் ஒருவகையில் நெருக்கடியான காலகட்டமே !
1970 களின் ஆரம்பத்திலிருந்து மெல்லிசைமன்னரின் இசை ,தன்னைச் சுற்றியுள்ள இசைப்போக்குகளை அனுசரித்தகாவே தெரிகிறது.ஹிந்தி இசையமைப்பாளர்கள் , ஹிந்தி திரையுலகிலும்,அதற்கப்பாலும் பெற்ற முன்னுரிமை போல தமிழில் இல்லையென்றாலும் தனது இசைப்பணிக்கு நியாயம் செய்தவர் விஸ்வநாதன்.
மெல்லிசைமன்னரின் இசையில் எத்தனை எத்தனை இனிய மெட்டுக்கள் ! தனது படைப்பு வேகத்திற்கு ஜீவ எழுச்சி தரும் மெட்டுக்களை தொய்வில்லாத ,தெளிந்த ,சீரான நீரோட்டமிக்க பாடல்களைத் தந்தார். அதில் ஹசல்,கர்நாடகம், ஜாஸ் மற்றும் இவையெல்லாம் இசைப் பிரவாகத்தில் குழைத்தெடுக்கப்பட்டவை சில சமயங்களில் ஒன்றை ஒன்று மருவி செல்லும் , ஒன்றை ஒன்று தொட்டு கணத்தில் மறையும் மற்றும் ஆழமிக்க ராகங்களில் மெல்லியதாகத் தொட்டு இசையின் இன்பங்களை இசைவீச்சுகளாய் விதந்துரைக்கும் வகையில் பாடல்களைத் தந்தார்.
ஹிந்தி திரையில் பல புதிய இசையமைப்பாளர்கள் தோன்றி , பழைய ,தேர்ந்த பாடகர்களையே வைத்துக் கொண்டு இசையை நவீனமாக்கினார்கள் என்றால் தமிழில் மெல்லிசைமன்னர் புதிய குரல்களை வைத்து தனது இசையைப் புத்தாக்கம் செய்தார். இக்காலத்தில் தான் பின்னாளில் அதிகம் புகழ்பெற்ற சிந்தசைசர் என்ற வாத்தியத்தின் ஆரம்ப இசைக்கருவியான காம்போ ஓர்கன் [ Combo organ ] போன்ற எலக்ட்ரோனிக் இசைக்கருவி அறிமுகமாகியது.
இக்காலங்களில் மெல்லிசைமன்னர் [1970 களின் ஆரம்பத்திலும், நடுவிலும்] புதிய பாடகர்,பாடகிகளை அறிமுகம் செய்தார்.குறிப்பாக ஜேசுதாஸ் , வாணி ஜெயராம் , ஜெயசந்திரன் ,பாலசுப்ரமணியம் போன்றோர் முன்னணிக்கு வந்தனர்.
1970 முதல் 1973 வரை வெளிவந்த படங்களில் புதியவர்களின் குரல்களில் சிலபாடல்கள் வெளிவர ஆரம்பித்தன.குறிப்பாக வாணி ஜெயராம்,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாட ஆரம்பித்தனர். ஆனாலும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் வாணிஜெயராம்,ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் ,பாலசுப்ரமணியம் போன்றவர்களை 1974 ஆம் ஆண்டிலிருந்து அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.
ஜேசுதாஸ் குரல்: உயிர்க்குழலின் வசீகரம்
இசையில் முதுமை தட்டிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய மெல்லிசைமன்னர் புதுக்குரல்களை பயன்படுத்தினார். இசையில் செயற்கையான நடிப்பு கலந்த நீர்த்துப்போன தன்மையை உதறி இசையின் தனி ஆற்றலை செறிவாகக் காட்ட முனைந்த போது ஜேசுதாஸ் தவிர்க்க முடியாதவரானார்.
குரலில் வசீகரமும் ,ஆண்மையும்,ஆழமும் ,மென்மையும் ,கனமும், கம்பீரமும் ,தெய்வீக உணர்வைக் கிளரவும் செய்யும் ஒரு விசித்திர குரலுக்கு சொந்தக்காரர் ஜேசுதாஸ். இரண்டுக்கட்டை சுருதிக்குட்டபட்ட குரல் தன்மை கொண்டவர்.கீழ் சுருதியில் பாடினால் எல்லோரையும் பிரமிக்க வைக்கும் அவர் தேவைப்படின் மேலேயும் பாடும் ஆற்றல் கொண்டவர்.
இந்திய சினிமாவில் பின்னணிப்பாடகர்களில் செவ்வியல் இசையில் முழுநேர இசைக்கச்சேரி நிகழ்த்தக்கூடியவரும் , சினிமா சங்கீதம் என்று சொல்லப்படும் மெல்லிசையிலும் சரிநிகராக ,அதை கலந்து பாடாமல் ,அவற்றின் தனித்தன்மைகளை அறிந்து பாடும் ஆற்றல் மிக்க ஒரே பாடகர் ஜேசுதாஸ்.
தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த குரலாக கே.ஜே .ஜேசுதாசின் குரல்வளம் அமைந்தது. மலையாள சினிமாவிலும் ஹிந்தி சினிமாவிலும் பாடி புகழபெற்ற அவர் குரல் வளத்திலும் ,இசை வளத்திலும் சிறந்து விளங்குபவர்.
பாடும் முறையில் புதிய சகாப்தம் ஒன்றை உருவாக்கி தனது வசீகரமான குரலால் , பாடல் என்பது இசைமட்டுமல்ல குரல்வளம் என்பது அதுவே தனி அனுபவநிலை தரக்கூடிய ஒன்று என்று பரவலான மக்களை உணரவைத்தவர் ஜேசுதாஸ். மலையாளத்தில் பாட ஆரம்பித்த இவரை தமிழில் அறிமுகம் செய்தவர் வீணை வித்துவான் எஸ்.பாலசந்தர்.பொம்மை படத்தில் ” நீயும் பொம்மை நானும் பொம்மை ” என்ற பாடலைப்பாடினாலும் உடனடியாக பல பாடல்களை பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1950 களில் மெதுவாக ஆரம்பித்து 1960 களில் வளர்ந்து கொண்டிருந்த மலையாள சினிமாவில் தங்கள் தனித்துவத்தை பேணும் புதியதொரு இசைப்பாணியை மலையாள இசையமைப்பாளர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஜி.தேவராஜன் ,ராகவன் ,வி.தக்ஷிணாமூர்த்தி,எம்.எஸ்.பாபுராஜ் போன்றவர்கள் அதன் வழிகாட்டிகளாகத் திகழ்ந்தனர். இவர்களின் ஆதர்ச பாடகராக வளர்ந்து வந்தவர் ஜேசுதாஸ். ஜேசுதாஸ் ஒரு நிலையான இடம்பிடிக்கும் வரை ஏ.எம்ராஜா , புருசோத்தமன், கோழிக்கோடு அப்துல்காதர் ,பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் சிரேஷ்ட்ட பாடகர்களாக விளங்கினர்.
தமிழில் 1960 களிலேயே ஒரு சில பாடல்களை பாடும் வாய்ப்பை ஜேசுதாசுக்கு சிலர் வழங்கினர்.அதில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. மெல்லிசைமன்னர்கள் இசையில் 1964 தொடக்கம் 1970 கள் வரையான காலப்பகுதியில் அவ்வப்போது சில பாடல்களைப்பாடினார்.
01 நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா- காதலிக்க நேரமில்லை [1964] – ஜேசுதாஸ் +சுசீலா + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 என்ன பார்வை உந்தன் பார்வை – காதலிக்க நேரமில்லை [1964] – ஜேசுதாஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
03 சுகம் எதிலே – பறக்கும் பாவை [1966] – டி.எம்.எஸ் + ஜேசுதாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 04 அலங்காரம் கலையாமல் – நம்ம வீட்டு லட்சுமி [1968] – ஜேசுதாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
1960 களில் தமிழில் சில படங்களில் பாடினாலும் 1970 களின் ஆரம்பத்திலேயே மலையாளத்திலும் விஸ்வநாதன் இசையில் குறிப்பிடத்தகுந்த பாடல்களை ஜேசுதாஸ் பாடினார். அதற்கு எடுத்துக்காட்டான சில பாடல்கள் இங்கே..
01 ஈஸ்வரன் ஓரிக்கல் – லங்காதகனம் 1971 – கே.ஜே.யேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
02 வீணை பூவே குமாரன் ஆசாண்டே – ஜீவிக்கான மாருன்னு போய ஸ்த்ரீ 1971 – கே.ஜே.யேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
03 ஸ்வர்க்க நந்தினி – லங்காதகனம் 1971 – கே.ஜே.யேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
04 ஆ நிமிசத்தின் நிர் விருதியில் – சந்திர காந்தம் 1974 – கே.ஜே.யேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
1960 களின் நடுப் பகுதிகளிலேயே தனது ஆற்றலால், மலையாளத்தில் தனக்கென ஓர் தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட ஜேசுதாஸ் 1970 களின் முன்னணிப்பாடகராக விளங்கினார்.தேசிய விருது பெற்ற , புகழ்பெற்ற செம்மீன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமான சலீல் சௌத்ரி இசையில், ஜேசுதாஸ் பாடிய “கடலின் அக்கரை போனோரே” அதிக புகழ் சேர்த்தது. இப்படப்பாடல்கள் இலங்கையிலும் ,ஹிந்திப்பாடல்களுக்கு நிகராக குக்கிராமங்கள் எங்கும் ஒலித்தன.
சலீல் சௌத்ரி ஹிந்திப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த மிகப்பெரிய இசையமைப்பாளர்.அவர் இசையமைத்த Madhumathi, Do Bigha Zamin போன்ற பல படங்களில் அவரது சாகாவரம் பெற்ற பாடல்களைக் கேட்கலாம். அக்காலத்தில் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கலை அமைப்பான IPTA [Indian Peoples Theater Association] என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
செம்மீன் படத்தின் இயக்குனாரான ராமு காரியத் , ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கடசியின் கேரளா பிரிவின் கம்யூனிஸ்ட் கலைக்குழுவான [ K.P.A.C.] Kerala People’s Arts Club என்ற அமைப்பை சார்ந்தவர். அந்த தொடர்பால் சலீல் சௌத்ரி மலையாள படமான செம்மீனுக்கு இசையமைத்தார். ஜேசுதாஸின் பாடும் ஆற்றலை வியந்து அவரை ஹிந்தித் திரையில் அறிமுகம் செய்தார் சலீல்.
ஜேசுதாஸின் குரல்வளம் பற்றிய பிரமிப்பு பரவலான இசைரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல இசையமைப்பாளர்கள் மத்தியிலும் இருந்தது என்பதை சலீல் சௌத்ரியின் கூற்று வெளிப்படுத்தியிருக்கிறது..
முகமது ரபி , முகேஷ் , கிஷோர் குமார் ,மன்னாடே போன்ற ஜாம்பவான்களளைத் தனது இசையில் பாட வைத்த சலீல் சௌத்ரி ஜேசுதாஸின் குரல் பற்றி கூறியது மிகவும் முக்கியமான கருத்தாகும். 1980 களில் Filmfare என்ற ஆங்கில சினிமா இதழில் ஜேசுதாஸ் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது. அக்கட்டுரை , சலீல் சௌத்ரி கூறிய அந்தக்கருத்தையும் குறிப்பிட்டு எழுதியிருந்தது . அதை எனது நினைவிலிருந்து எழுதுகிறேன்.அந்த கட்டுரையின் மறுபக்கத்தில் முழுப்பக்கத்திலும் ஜேசுதாஸ் ,ஜெய்சந்திரன் ,இவர்களுக்கு நடுவில் வாணிஜெயராம் நின்ற வண்ணம் பாடுவதாக உள்ள படமும் இருந்தது.
சலீல் கூறிய கருத்தின் சாரம் இது தான்.
” நாம் ஹிந்தியில் செவ்வியல் இசை சார்ந்த பாடல்கள் என்றால் பாடகர் மன்னாடே யை பாடவைப்போம். மெல்லிசை சார்ந்த பாடல்கள் என்றால் ரபி ,கிசோர் போன்றோர் பாடுவார்கள். ஆனால் செவ்வியல் இசை பாடுவதிலும் குரல் வளத்திலும் இவர்களையெல்லாம் விஞ்சியவர் ஜேசுதாஸ். அதனால் தான் இவரை Unimitable Singer என்று சொல்கிறேன்.”
ஜேசுதாஸ் பற்றி சலீல் சௌத்ரி சொன்ன விஷயம் சாதாரண விஷயமல்ல. அவரது குரல்வளம் பற்றிய பிரமிப்பும்,பெருமையும் கேரளமக்கள் மத்தியில் அதிகம் உண்டு. கேரளாவில் ஜேசுதாஸ் நடிகர்களை விட அதிக புகழ் பெற்று விளங்குபவர். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு பாடகனுக்கு இத்தையதொரு நிலை கிடைக்குமா என்றால் சந்தேகமே ! சினிமா மெல்லிசை பாடுவது மட்டுமல்ல கர்நாடக இசையிலும் தனது திறமையை ஒன்றுசேரக் காண்பிக்கும் வல்லமை ஜேசுதாஸிடம் உண்டு. ஒன்றின் சாயல் பிறிதொன்றில் விழாமல் கச்சேரிகள் செய்யும் ஆற்றல் எல்லரையும் வியக்கவைப்பதாகும்.
ஜேசுதாஸின் குரல்வளம் பற்றிய பிரமிப்பு இலங்கையிலும் சாதாரண ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது.1980 ஆம் ஆண்டு இலங்கையில் ஜேசுதாஸ் இசைநிகழ்ச்சிசெய்ய வந்ததையொட்டிய காலத்தில் அவரது பாடல் முறை,குரல்வளம் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. எங்கள் ஊரில் ஒரு ரசிகர் அவரின் குரல் பற்றிய வியப்பை பின்வருமாறு கூறினார்.” மற்றப்பாடகர்கள் எல்லோரும் சாதாரண மைக்கில் பாடுகிறார்கள் ; ஜேசுதாஸ் ஒரு ஸ்பெஷலான செப்பு கோனில் [ Copper Cone] பாடுவதால் தான் இவ்வளவு சிறப்பாக இருக்கிறது ” என்றார். அவர் கூறிய அந்தக் கருத்து நம்மை சிரிக்க வைத்தது.நாம் ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் இசை ரசிகர்கள் என்ற சாதாரண நிலையில் பேசுவதாக அப்போது நினைத்தோம்.
இது போன்றதொரு கேள்வி நமது ஊரைத் தாண்டியும் இருந்தது என்பதை இலங்கை வானொலியும் நிரூபித்தது. இலங்கை வானொலிக்காக அவரைப் பேட்டி கண்ட திரு.பி.எச் .அபதுல்ஹமீத் கேட்ட கேள்விகளில் அவரது குரல்வளம் பற்றியதும் இருந்தது.அதன் தொடர்ச்சியாக ” உங்கள் குரலை நான் கேட்டிருக்கிறேன் ,அது இயல்பானது தானா என்பதை நமது நிலைய ஒலிவாங்கியிலும் கேட்க விரும்புகின்றேன்” என்று கூறி, ஜேசுதாஸ் பாடிக் காண்பித்த பின் “ஆமாம் இயல்பான குரல்தான் என்பதை ரசிகர்களும் உணர்வார்கள் ” என்று முடித்தார். இந்தவிதமான நிலைமை தமிழ் நாட்டிலும் இருந்தது.
தென்னிந்திய சினிமாவில் வெங்கடேஸ்வரா ராவ் என்ற இயற்பெயர் கொண்ட பாடகர் அவரது கனமான குரலுக்காகவே ” கண்டசாலா ” என்று புகழ் பெற்றார். அவர் கீழ் சுருதியில் அவர் பாடினாலும் மிக நன்றாக இருக்கும். கனமான குரலுக்கு எடுத்துக்காட்டாக கண்டசாலா பெயர் பாவிப்பது வழமையான நிலையில் கனமான ,ஜேசுதாஸ் குரலும் அவருக்கு இணையாக பேசப்பட்டது.
இரு குரல்களும் இனிமையிலும் ,கனத்திலும் வெவ்வேறானவையே. இரு பாடகர்கள் முறித்த ஒப்பீடு சாதாரண ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது. அது குறித்து குமுதம் இதழிலும் “லைட்ஸ் ஒன்” என்ற பகுதியில் “கண்டசாலா – ஜேசுதாஸ் எந்த குரல் கனம்” என்ற கேள்விக்கு ,குமுதம் வழமையான பாங்கில் ” கண்டசாலா குரல் கதிரையை தூக்கும் ; ஜேசுதாஸ் குரல் யானையைத் தூக்கும் ” என்று பதிலளித்தது.
1960 படங்களில் ஒருவகை இசை; 1970 படங்களில் ஒருவகை இசை; 1980 படங்களில் ஒருவகை இசை என மெல்லிசைமன்னர் தனது இசைப்பாணிகளை மாற்ற முனைப்புக்காட்டினார். அவற்றின் அடிப்படியாக ,அதன் உந்துணர்வாக மெல்லிசை இருந்தது அதன் அடிப்படை உந்துணர்வாக மெல்லிசை தான் இருந்தததெனினும், புதிய குரல்களிலும் ,புதிய சில வாத்திய சேர்க்கைகளாலும்,தொனிகளிலும் வித்தியாசமாக ஒலித்தன. இக்காலகட்டத்தில் எலக்ட்ரோனிக் கருவியான ஆர்கன் காம்போ என்கிற சிந்தசைசர் கருவியின் முன்னோடியான வாத்தியக்கருவி அறிமுகமானது. புதிய பாடகர்களின் குரல்களின் தன்மைகளுக்கேற்ப தனது மெட்டுக்களை அமைப்பதன் மூலம் மாறுபாடுகளைக் காண்பித்தார். மெல்லிசைமன்னரின் இசைக்கு புதிய அணிகலனாக ஜேசுதாஸ் குரல் அமைந்தது.
தமிழிலும் சில பாடல்களை பாடிக்கொண்டிருந்த ஜேசுதாஸ் மெல்லிசைமன்னரின் இசையில் அதிகமாகப் பாடத்தொடங்கினார். குறிப்பாக எம்.ஜி.ஆர் தனது படங்களில் ஜேசுதாஸ் பாட வேண்டும் என்று தீவிரம் காட்டினார். எம்.ஜி.ஆர் படத்தில் ஜேசுதாஸ் நல்ல பல பாடல்களை பாடினார்.
எம்.ஜி.ஆர் படங்களில் ஜேசுதாஸ் பாடிய தனிப்பாடல்கள்.
01 இந்த பச்சைக் கிளிக்கொரு – நீதிக்கு தலை வணங்கு 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
செல்வந்த வீட்டு இளைஞன் தான் செய்த தற்செயலான குற்ற மனஉளைச்சலால் வீட்டை விட்டு வெளியேறி ,பணக்கார வீடொன்றில் வேலைக்காரனாக சேர்கிறான்.அந்த வீட்டுப்பெண் ஒரு பாட்டு பாடும்படி கேட்கும் போது தனது தாய் தனக்குப் பாடிய தாலாட்டு பாடலை அடியொற்றி தனது சோகத்தையும் ,அவளுக்கு புத்திமதி சொல்லும்படியாகவும் ,வாழ்வின் அனுபவத்தையும் சேர்த்து சொல்லும் பாடல்..
பாத்திரத்தின் உணர்வை நேரடியாக வெளிப்படுத்தும் அலங்காரமற்ற அற்புதமான மெட்டு, அதுனுடன் பாடுபவரின் மென்சோககுரல் என இணைந்து இதயத்தைப் பிணிக்கும் ரசவாதப் பாடல்.
02 என்னைவிட்டால் யாருமில்லை – நாளை நமதே 1973 – ஜேசுதாஸ்- இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் – ஊருக்கு உழைப்பவன் 1974 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 இரவுப் பாடகன் ஒருவன் – ஊருக்கு உழைப்பவன் 1974 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 நாளை உலகை ஆழ வேண்டும் – ஊருக்கு உழைப்பவன் 1974 – ஜேசுதாஸ்- இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
எம்.ஜி.ஆர் படங்களில் ஜேசுதாஸ் பாடிய ஜோடிப்பாடல்கள்.
01 தங்கத் தோணியிலே – உலகம் சுற்றும் வாலிபன் 1973 – ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 நீல நயனங்களில் – நாளை நமதே 1973 – ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 விழியே கதை எழுது – உரிமைக்குரல் 1973 – ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 காதல் என்பது காவியமானால் – நாளை நமதே 1973 – ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 அழகெனும் ஓவியம் இங்கே – ஊருக்கு உழைப்பவன் 1974 – ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 தென்றலில் ஆடும் கூந்தலைக் கெண்டேன் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
07 இது தான் முதல் ராத்திரி – ஊருக்கு உழைப்பவன் 1974 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
07 தங்கத்தில் முகம் எடுத்து – மீனவ நண்பன் 1974 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
ஏனைய நடிகர்களின் படங்களில் ஜேசுதாஸ் பாடிய பாடல்கள்.
01 அதிசய ராகம் ஆனந்த ராகம் – அபூர்வ ராகங்கள் 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 மனைவி அமைவதெல்லாம் – மன்மதலீலை 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 தெய்வம் தந்த வீடு – அவள் ஒரு தொடர்கதை 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 தானே தனக்குள் ரசிக்கின்றாள் – பேரும் புகழும் 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 கண்ணனின் சன்னதியில் – ஒரு கோடியில் இரு மலர்கள் 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
07 இறைவன் உலகத்தை படைத்தானா – உனக்காக நான் 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
08 வீணை பேசும் – வாழ்வு என்பக்கம் 1975 – ஜேசுதாஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
மெல்லிசைமன்னரின் இசையில் ஜேசுதாஸ் , புகழ் பெற்ற பாடகிகளான சுசீலா ,எஸ்.ஜானகி போன்றோருடன் இணைந்து நல்ல பாடல்களை பாடினார். காலமாற்றத்துடன் வந்த இளமைக்குரலான வாணி ஜெயராமுடன் இணைந்து பாடிய பாடல்கள் மூலம் புதிய ஜோடிப் பாடகர்கள் எனக் கவனமும் பெற்றனர். இருவரும் தேனும் பாலும் இணைந்தது போல பல இனிய பாடல்களை பாடினர்.
01 செண்டுமல்லி பூ போல – இதயமலர் 1975 – ஜேசுதாஸ் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 தென்றலில் ஆடும் கூந்தலை – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 இது தான் முதல் ராத்திரி – ஊருக்கு உழைப்பவன் 1974 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 தங்கத்தில் முகம் எடுத்து – மீனவ நண்பன் 1974 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் – பயணம் 1976 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 அந்தமானைப் பாருங்கள் அழகு – அந்தமான் காதலி 1975 – ஜேசுதாஸ் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
07 நினைவாலே சிலை செய்து – அந்தமான் காதலி 1976 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
08 இது இரவா பகலா – நீல மலர்கள் 1978 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
09 கண்ணனை நினைத்தால் – சுப்ரபாதம்1976 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
10 கங்கை ஜமுனை இங்குதான் – இமயம் 1976 – ஜேசுதாஸ்+ வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
11 மலரே குறிஞ்சி மலரே – டாக்டர் சிவா 1975 – ஜேசுதாஸ்+ எஸ்.ஜானகி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இது போன்ற பாடல்களை மெல்லிசைமன்னரின் இசையில் பாடிப் புகழ் பெற்ற ஜேசுதாஸ் – வாணி ஜோடி பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி புகழ் பெற்றனர்.
நல்ல பாடல்களைக் கொடுத்துக்கொண்டிருந்த மெல்லிசைமன்னர் விஸ்வநாதனுக்கும் ,பாடகர் ஜேசுதாசுக்கும் அவ்வப்போது மோதல்களும் நடைபெற்றதாக பத்திரிகைகள் எழுதின.” “விஸ்வநாதன் இசையில் நான் இனி பாட மாட்டேன்” என்று ஜேசுதாஸ் கூறியதாக 1970களின் இறுதிகளில் குமுதம் பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பூட்டியது.இருதரப்பு நியாகங்களும் பேசப்பட்டன. வாத்தியம் வாசிப்பவர் ஒருவர் போதையில் தவறாக வாசித்ததால் எழுந்த சர்ச்சையே விரிசலுக்கு காரணமாகியது. ஆனாலும் சில கால இடைவெளிகளுக்குப்பின் இருவரும் இணைந்து நல்ல பாடல்களைத் தந்தனர்.
***பி.ஜெயசந்திரன்:
தமிழ் திரைப்படங்களில் அதிகமாக இல்லையென்றாலும் ,பாடிய அனைத்துப் பாடல்களும் சிறப்பானவை என்று சொல்லத்தக்க வகையில் பாடல்களை பாடிய இருவர் பெயரைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஒருவர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ; மற்றவர் பி.ஜெயசந்திரன். மலையாள திரைப்படங்களில் ஏலவே பாடிக்கொண்டிருந்த ஜெய்சந்திரனை தமிழில் அறிமுகம் செய்தவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.அவரது இசையில் நல்ல பல மலையாள பாடல்களையும் ஜெயசந்திரன் பாடினார்.
குரல் வளத்தில் ஜேசுதாஸின் சாயல் கொண்டவர். பாடும் போது தேவையில்லாத மிமிக்கிரி காட்டாமல் திறந்த குரலில் மிக இயல்பாகப் பாடுபவர். கேட்போரைப் பரசவப்படுத்தும் குரலுக்குச் சொந்தக்காரர்.
முகமது ரபி மற்றும் ஜேசுதாஸை தனது அபிமானப் பாடகர்களாகக் கருதுபவர். ஜேசுதாஸின் மிகத் தீவிரமான ரசிகர். ஜேசுதாஸ் பாடிய ஆரம்பகால மலையாள பாடலை ஒன்றைக் கேட்க 24முறை ஒரு படத்தை தியேட்டரில் பார்த்ததாகக் கூறியிருக்கின்றார். மிகச் சிறந்த இசைரசிகன். தான் ரசித்த மற்றப் பாடகர்களின் பாடல்களையும் பாடிக்காண்பிப்பவர். பெண் பாடகிகளில் சுசீலாவை தனது அபிமானப்பாடகி என்பவர்.
ஜேசுதாஸ் பயின்ற இசைக்கல்லூரியில் மிருதங்கம் பயின்றவர். கல்லூரி இசைப்போட்டி ஒன்றில் பாடலுக்கான விருதை ஜேசுதாசும், அதே ஆண்டில் மிருதங்கப் போட்டியில் ஜெய்சந்திரனும் முதல் பரிசு பெற்றவர்கள்.
1960களில் தான் பாடிய பாடல் பதிவு ஒன்றிற்காய் ஜேசுதாஸ் இவரை அழைத்துச் சென்று இவருக்கு இசை ஆர்வத்தை தூண்டினார். மலையாள இசையமைப்பாளர் ஜி.தேவராஜன், பாபுராஜ் மூலம் பல வாய்ப்புகள் பெற்று நல்ல பாடகனாக வளர்ந்தவர்.
இசையமைப்பாளர்களில் விஸ்வநாதனுக்கு இணையில்லை என்று கருதும் பி.ஜெயசந்திரன் அவரது தீவிர ரசிகருமாவார்.
மலையாளத் திரைப்படங்களில் 1960 களின் இறுதியிலும் 1970 களின் ஆரம்பத்திலும் மெல்லிசைமன்னரின் இசையில் பாட ஆரம்பித்த இவர் மெல்லிசைமன்னரின் இசையில் மலையாள சினிமாவின் சாகாவரமிக்க பாடல்களையும் பாடிய பெருமைக்குரியவர்.அவற்றுள் சில பாடல்கள்.
01 சுப்ரபாதம் … நீல கிரியுட சகிகளே – பணிதீராத்த வீடு 1973 – பி.ஜெயசந்திரன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 சொர்ண கோபுர நர்த்தகி சில்பம் – திவ்வியதர்சனம் 1973 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 கிலுக்காதே கிலுக்கும்ன கிலுக்கம்பட்டி – மந்ரகொடி 1972 – பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
04 ராஜீவை நயன் நீ உறங்கு – சந்த்ரகாந்தம்1974 – பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
மெல்லிசை மன்னரால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தமிழிலும் பல இனிய பாடல்களை பாடியுள்ளார். முக்கியமான சில பாடல்கள்.
01 தங்க சிமிழ் போல் இதழோ – மணிப்பயல் 1973- பி.ஜெயசந்திரன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 பொன்னென்ன பூவென்ன கண்ணே – அலைகள்19 73 – பி.ஜெயசந்திரன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
03 எத்தனை மனிதர்கள் உலகத்திலே – நீதிக்குத் தலை வணங்கு 1974 – பி.ஜெயசந்திரன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
04 மந்தார மலரே மந்தார மலரே – நான் அவனில்லை 1974 – பி.ஜெயசந்திரன் + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 அமுதத் தமிழில் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 வசந்த கால நதிகளில் – மூன்று முடிச்சு 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
07 கண்ணனின் சன்னதியில் – ஒரு கொடியில் இரு மலர்கள் 1976 – பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
08 கலைமகள் அலைமகள் – வெள்ளிரதம் 1976 – பி.ஜெயசந்திரன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
09 அன்பே உன் பேர் என்ன ரதியோ – இதயமலர் 1975 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
10 கவிதை அரங்கேறும் நேரம் – அந்த ஏழு நாட்கள் 1982 – பி.ஜெயசந்திரன் + எஸ்.ஜானகி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
11 தென்றலது உன்னிடத்தில் – அந்த ஏழு நாட்கள் 1982 – பி.ஜெயசந்திரன் + எஸ்.ஜானகி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
***வாணி ஜெயராம்:
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் முன்னணிக்கு கொண்டுவரப்பட்ட முக்கியமான தமிழ் பாடகி வாணி ஜெயராம். கர்நாடக இசை , ஹிந்துஸ்தானி இசை போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவரான இவர் ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் இசையமைப்பாளாரான வசந்த் தேசாய் என்பவரால் ஹிந்தி Guddi [1971] என்ற திரைப்படத்தில் பின்னணிப்பாடகியாக அறிமுகமானவர். அந்தப்படத்தில் ” போலெ ரீ பப்பி ஹாரா ” என்ற பாடலைப் பாடி புகழ் பெற்றார். ஹிந்தி மட்டுமல்ல இந்தியாவில் பல மொழிகளிலும் பாடும் வாய்ப்புப் பெற்ற பன்மொழிப்பாடகி என்ற பெயரும் பெற்றார்.
பி.சுசீலா ,லதா மங்கேஷ்கர் போன்றோரின் பாடல்களைக் கேட்டு சினிமா இசையில் ஆர்வம் கொண்டதாகவும் ,குறிப்பாக தனது இசை ஆர்வத்தை வளர்ப்பதில் இலங்கை வானொலியும் ஒரு காரணம் என்று பின்னாளில் வாணி ஜெயராம் கூறியது குறிப்பிடத்தக்கது.
அவர் பாடிய முதல் ஹிந்தி பாடலே அதிக புகழ் பெற்றதால் இந்திய அளவில் அறிமுகமானார் வாணி ஜெயராம். இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை வந்த வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் பாடும்வாய்ப்பையும் பெற்றார்.
வாணி ஜெயராமின் முதல் பாடலான “ஓரிடம் உன்னிடம் என் தேவையை நான் கேட்பது ” என்று தொடங்கும் பாடலை சங்கர் கணேஷ் இசையில் , 1973 இல் வெளிவந்த ” வீட்டுக்கு வந்த மருமகள் ” படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடினார். தமிழ் சினிமாவில் வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் இதுவே ! அதற்கு முன்னே “தாயும் சேயும்” என்ற வெளிவராத படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் பாடினார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் “சொல்லத்தான் நினைக்கிறேன் ” [1973 ] படத்தில் ” மலர் போல் சிரிப்பது பதினாறு ” என்ற பாடலே ! பலர் நினைப்பது போல ” மல்லிகை என் மன்னன் மயங்கும் ” என்ற பாடலோ அல்லது ” ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் ” என்ற பாடலோ அல்ல. இந்த இரண்டு பாடல்களும் வெற்றி பெற்றதால் பலரும் அவ்வாறு நினைக்க ஏதுவாயிற்று.
என்னவிதமான பாடல்களையும் அனாயாசமான முறையில் பாடும் குரல் வளமும் ,இசைவளமும் பெற்ற வாணி ஜெயராமை மிக அருமையான இனிய சங்கதிகளை வைத்து, அழகான இயல்பான ஓட்டமிக்க விதம்,விதமான பாடல்களை கொடுத்து பாட வைத்து தனது கற்பனை வளத்தை வெளிப்படுத்தியவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.
இக்காலங்களில் மெல்லிசைமன்னரின் இசை அனுபவம், இசைமெருகின் வீச்சுகளாக அமைந்ததையும், அவரின் மட்டற்ற படைக்கும் ஆர்வத்தை விரிவாக்கம் செய்வதாகவும், புதுமையின் ஊற்றுக்களாகவும் இனிய புதுக் குரல்கள் பயன்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
**மெல்லிசைமன்னரின் இசையில் வாணி ஜெயராம் பாடிய தனிப்பாடல்கள் சில:
01 மலர் போல்சிரிப்பது பதினாறு – சொல்லத்தான் நினைக்கிறேன் 1973 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 மல்லிகை என் மன்னன் மயங்கும் – தீர்க்க சுமங்கலி 1973 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
03 ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் – அபூர்வ ராகங்கள் 1975 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 கேள்வியின் நாயகனே – அபூர்வ ராகங்கள் 1975 – வாணி ஜெயராம் + சசிரேகா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 நாதமெனும் கோவிலிலே – மன்மதலீலை 1975 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் – வாழ்ந்து காட்டுகிறேன் 1975 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
07 எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது – அவன் தான் மனிதன் 1973 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
08 மல்லிகை முல்லை பூப்பந்தல் – அன்பே ஆருயிரே 1976 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
09 சந்திர பிறை பார்த்தேன் – கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1976 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
10 பொங்கும் கடல் ஓசை – மீனவ நண்பன் 1974 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
11 கந்தனுக்கு மாலையிட்டாள் – ஊருக்கு உழைப்பவன் 1976 – வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
* வாணி ஜெயராம் ஜேசுதாஸுடன் இணைந்து பாடிய பாடல்கள்
/ செண்டுமல்லி பூ போல – இதயமலர் 1975 –
/ தென்றலில் ஆடும் கூந்தலைக் கெண்டேன் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976
/ இது தான் முதல் ராத்திரி – ஊருக்கு உழைப்பவன் 1974 –
/ தங்கத்தில் முகம் எடுத்து – மீனவ நண்பன்1974
/ ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம் – பயணம் 1976 –
/ அந்தமானைப் பாருங்கள் அழகு – அந்தமான் காதலி 1975
/ நினைவாலே சிலை செய்து – அந்தமான் காதலி 1976 –
/ இது இரவா பகலா – நீல மலர்கள் 1974 –
/ கங்கை ஜமுனை இங்குதான் – இமயம் 1976 –
*வாணி ஜெயராம் ஜெய்சந்திரனுடன் இணைந்து பாடிய பாடல்கள்:
01 அமுதத் தமிழில் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 வசந்த கால நதிகளில் – மூன்று முடிச்சு 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 அன்பே உன் பேர் என்ன ரதியோ – இதயமலர் 1975 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 மழைக்காலமும் பனிக்காலமும் – சாவித்திரி 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
05 திருமுருகன் அருகினில் வள்ளிக்கு குறத்தி – சாவித்திரி 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
06 கண்ணன் முகம் காண – சாவித்திரி 1976 – பி.ஜெயசந்திரன் + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
*வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய பாடல்கள்
01 மேடையில் ஆடிடும் மெல்லிய – வண்டிக்காரன் மகன் 1976 – எஸ்.பி.பி + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
02 இலக்கணம் மாறுதோ – நிழல் நிஜமாகிறது 1978 – எஸ்.பி.பி + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
03 நேரம் பௌர்ணமி நேரம் – மீனவ நண்பன் 1974 – எஸ்.பி.பி + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
04 பாரதி கண்ணம்மா – நினைத்தாலே இனிக்கும் 1978 – எஸ்.பி.பி + வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
ஒவ்வொரு காலத்திலும் சில மாறுதல்கள் வருவது தவிர்க்க முடியாதவை.ஒவ்வொரு கட்டத்திலும் விளைகின்ற மாற்றம் தாக்கங்கள் விளைவித்தாலும் நமக்கான சில பண்புகள், மரபுகள் நம்மையறியாமல் தொடர்வது போல இசையிலும் அது நிகழ்ந்திருக்கிறது. பாடல்களில் உள்ளுறையாக இருக்கும் ராகங்களும்,அவற்றை பயன்படுத்தும் பாங்கும்,இசையமைப்பும் அவ்விதமே மாறி வந்திருக்கின்றன.சினிமா என்ற வரம்புக்குள் அவற்றைப் புது தினுசாக ராகங்களையும் கையாண்ட வல்லாளர்களில் மெல்லிசைமன்னர்கள் முக்கியமானவர்கள்.
[தொடரும் ]