இசையமைப்பும்இராகங்களும்: தமிழ்ராகங்கள்.
ஒரு பாடலுக்கான இசையமைப்பு என்பது படத்தின் இயக்குனர் ,தயாரிப்பாளர் ,நடிகர்கள் ,பாடலாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் என பலர் சம்பந்தப்பட்ட ஓர் நிகழ்வாகும்.
படத்தின் சூழ்நிலையை ஒட்டி இசை அமைக்கப்படுவதால் இவர்கள் அனைவரதும் சங்கமம் நிகழ்கிறது. தமிழ் சினிமாவில் அவரவர் பெற்றிருக்கும் அந்தஸ்த்துக்குத் தக்கவாறு அங்கு தலையீடுகள் வெளிப்படும்.
கலைஞர்கள் நாடுவது முழுமையான சுதந்திரம்.அது எல்லா நேரமும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் பணபலம் கொண்ட தயாரிப்பாளர்களும் , புகழ்பலம் கொண்ட நடிகர்களும் தங்கள் தகுதியை மீறி தேவையற்ற அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.ஒருமுகப்படுத்தி நிற்கவேண்டிய இசையமைப்பாளர்களது ஒருமுகச்சிந்தனை பலதிசையிலும் சிதைக்கப்பட்டது. அது பரிசோதனை முயற்சிகளை எண்ணிப்பார்க்க முடியாத சோதனையான காலம் என்று சொல்லலாம். இது போன்ற தடங்கல்களை ஒருவிதமான பொறுமையோடு தான் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.கலைத்துறையாயினும் , தொழில்நுட்பத் திறனாயினும் மேல் சொன்னவர்களுக்குக் கீழ்ப்படிந்தே செயல்பட நேர்ந்தது. இசையைப் பொருத்தவரையில் ஒருவிதமான தத்தளிப்பே நியதியாக இருந்தது.
இசையமைப்பில் போது மேலெழும் அசாதாரண அகஎழுச்சியலை, வினோதமான, கற்பனை வளமற்ற தயாரிப்பாளர்கள் ,நடிகர்களின் குறுக்கீடுகளால் அதன் ஜீவ ஓட்டம் குலைக்கப்பட்டன. அதை மீறமுடியாத இசைக்கலைஞன் தயாரிப்பாளர்கள், நடிகர்களைக் குசிப்படுத்தும் ஒரு முறையைக் கையாண்டு, அவர்கள் ஏற்கனவே கேட்ட இசைமாதிரிகளை ஜாடைகாட்டி தற்காலிக விடுதலை பெற்றுவிடுகிறான். சினிமாவின் வணிகம் சார்ந்து எழும் நிர்பந்தங்கள் இசையமைப்பளர்களை அடிபணிய வைத்திருக்கிறது.
நடிகர்கள் ,தயாரிப்பாளர்கள் என அவரவர் செல்வாக்கு,புகழுக்குத் தக்கவாறு அந்தத் தலையீடுகள் வெற்றியும் பெறும். இசை என்றால் பாடல்கள் என்ற நிலையில் அவை இருந்தன. படைப்புத்திறனை அழிக்கும் இந்தத் தலையீடுகளை அன்றைய இசையமைப்பாளர்கள் சகித்துக் கொண்டார்கள்.
இசையமைப்பு என்பது இசையமைப்பாளரின் பொறுப்பு என்ற ரீதியில் அவர்களுக்கான சுதந்திரம் மிக முக்கியமானதொரு அம்சமாக இருக்கிறது. மேற்சொன்ன யாரோ ஒருவரது தலையீடு அவர்களின் படைப்புச் சுதந்திரத்திற்கு குறுக்கே வந்து விழுந்துவிடுகிறது. இந்தக் குறுக்கீடுகளுக்கிடையே தங்கள் பணியைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு இசையமைப்பாளர்கள் ஆளாக நேர்ந்தது. ஆயினும் அதையும் தாண்டி இனிய பல பாடல்களை அவர்கள் உருவாக்கினார்கள் என்பது ஆச்சர்யமான ஓர் விடயமாகும்.
தங்களது இசையின் தார்மீக பலத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்துக் கொண்டதுடன் ,தங்களுக்குரிய ராஜ தந்திரத்துடன் இந்த தடைகளையெல்லாம் கடந்தும் வந்திருக்கின்றனர். போட்டி போடும் நடிகர்களுக்கு ஒரே விதமான மெட்டுக்களை வெவேறு விதங்களில் மாற்றி கொடுத்ததையும் நாம் காண்கிறோம்.நடிகர்கள் தங்களுக்கிடையே நடக்கும் போட்டிகளில் இசையமைப்பாளர்களையும் அதற்குள் இழுப்பதும், மற்றவருக்கு நல்ல பாடல்களை அமைப்பதாகவும் கூறி அவர்களை குற்றவாளிகள் போலவும் நடத்தி வேலை வாங்கியிருக்கின்றனர்.
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை
இந்தப்பாடல் வெளிவந்த பொது ” விசு ,நீயும் அண்ணனான எம்.ஜி.ஆறும் மலையாளிகள் எனபதால் அவருக்கு நல்ல பாடல்கள் கொடுக்கிறாய் ! எனக்கு ஏன் இப்படிப்பாடல்கள் தருவதில்லை ? ” என்று சிவாஜி சீண்டிய போது ..மெல்லிசைமன்னர் உங்களுக்கு எதுவுமே புரியவில்லை; அந்தப்பாடலை நான் எழுதவில்லை , நீங்கள் எழுதியவரைத்தான் போய் கேட்கவேண்டும் ; நான் மெட்டு மட்டும் தான் போட்டேன் ” என்றாராம்.இதைக்கூறியவர் அந்தப்பாடலை எழுதிய கவிஞர் புலமைப்பித்தன்.
படைப்பு நிகழ்கின்ற போது கிடைக்க வேண்டிய சீரான ஓட்டம், அமைதி இந்தக் குறுக்கீடுகளால் அது தடைபடுகிற போது அவர்களது கலைத்திறன் பிரகாசமற்றுப் போகிறது. இசையமைப்பாளர்களது சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் பாடல்களும் பிரகாசமான உந்துதலைப் பெறும். தலையீடுகளற்ற கலையே உயரங்களைத் தொடுகின்ற ஆற்றலை பெறுகிறது.
இத்தகைய தடைகளையெல்லாம் தாண்டியே மெல்லிசைமன்னர்கள் மிக அருமையான பாடல்களையெல்லாம் தந்தார்கள். சலிப்பு தந்து கொண்டிருந்த பழைய போக்குகளை மாற்றவும் ,புதிய புதிய வாத்தியங்களை , புதிய இசைக்கோர்வைகளை நிகழ்த்திக்காட்டும் தாகமும் இசையின் மீதான தீவிர பிடிப்பும் மிக்க அவர்களால் குறுகிய காலத்திலேயே ஓர் புதிய அலையை உருவாக்க முடிந்தது. அது 1960 களில் அத்தனை வீரியத்துடனும் ,வேகத்துடனும் நடைபெற்றது.
பாரம்பரியமான ராகங்களையும் குறிப்பிட்ட ஒரு சில வாத்தியங்களையும் வைத்துக் கொண்டு நிகழ்த்தப்பட்ட திரையிசைக்கு மாறாக , பழைய ராகங்களுடன் மெல்லிசைமன்னர்கள் புதிய ,புதிய ராகங்களை குறிப்பாக ஹிந்துஸ்தானி இசை ராகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். அவைமட்டுமல்ல குறிப்பிட்ட ராகங்களின் இனிய பகுதிகளை அதன் உச்சநிலையை பின்புலமாக வைத்துக் கொண்டு அல்லது மறைபொருளாக வைத்துக் கொண்டு அவற்றின் நாத அலைகளையும் எடுத்துக்காட்டினார்கள்.
தமிழ் செவ்வியல் இசையின் கனதியான இராகங்களை எடுத்துக்கொண்டு அதன் அடர்த்தியை மெல்லிசை என்னும் நீரில் கரைத்தார்கள். நீலமாய்க் காட்சி தரும் கடல் நீரை கையால் அள்ளிப்பார்க்கும் போது நீலம் தெரியாமல் இருப்பது போல ராகங்களின் சாயல்களை சில இடங்களில் மறைத்தும் ,சில இடங்களில் மறையாமலும் மெல்லிசை ஜாலம் காட்டினார்கள்.
நமது பண்பாட்டில் இசை என்பது இராகங்களை அடிப்படையாகக் கொண்ட கலையாகவும் , உலக அரங்கில் தனித்துமிக்கதாகவும் விளங்குகின்றது. உலக மக்கள் யாவரும் இசைக்கலையில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் இசைக்கு ஓர் இலக்கணத்தை முதன் முதலில் மிகப் பழங்காலத்திலேயே அமைத்தவர்கள் தமிழர்கள்.
எந்த ஒரு பாடல் வடிவத்தை நாம் எடுத்தாலும் அவை ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையிலோ அல்லது ஓர் ராகத்தின் சாயலிலோ அமைந்து விடுவதையும் காண்கிறோம். நமது இசையில் ராகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.
திரை இசையைப் பொறுத்தவரையில் இராகம் தெரிந்தால் தான் இசையமைக்க முடியும் என்ற நிலை இல்லை என்பதை பல இசையமைப்பாளர்களை உதாரணம் காட்டி கூறிவிடலாம்.ஹிந்தி திரையில் மிக முக்கியமான இசையமைப்பாளராக விளங்கிய ஓ.பி.நய்யார் என்பவர் ” எனக்கு “ச ” வும் தெரியாது ” ப ” வும் தெரியாது என ஓர் தொலைக்காட்ச்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
திரை இசையமைப்பாளர்கள் சங்கீத வித்துவங்களல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சங்கராபரணம் பாடல்கள் செவ்வியலிசைப் பாடல்களா என்ற சர்ச்சை வந்த போது தனக்கு ஒரு சில ராகங்கள் தான் பரீட்சயம் ” என்று கே.வி.மகாதேவன் கூறினார். இசையமைப்பாளர்களுக்கு ராகம் தெரியாவிட்டாலும் தங்களுக்குத் தேவை ஏற்படும் போது அதனை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். பலருக்கு நல்ல இசைத்தெரிந்த உதவியாளர்கள் இருப்பதையும் நாமறிவோம்.
இசையமைப்பாளர்களுக்கு ராகங்கள் தெரியாவிட்டாலும் ,தேவை ஏற்படும் பொது அது பற்றிய ஞானம் உள்ளவர்களை வைத்து சீர் செய்வதையும் வழமையாகக் கொண்டார்கள்.பழைய இசையமைப்பாளர்கள் தங்களுக்கன்று உதவியாளர்களை வைத்திருப்பது வழமையாக இருந்தது. மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி இணையரில் விஸ்வநாதன் மெட்டுக்களை உருவாக்குவதில் திறமையும் ,ஆற்றலுமிக்கவர். ராமமூர்த்தி கர்நாடக இசை தெரிந்த நல்ல வயலின் கலைஞரும் மெட்டுக்களை அமைப்பதிலும் வல்லவர். விஸ்வநாதன் , ஒரு சமயம் தங்களது இசையமைப்புப் பற்றி பின்வருமாறு கூறினார்.
” ஒரு டைரக்டர் பாடல் சூழ்நிலையைச் சொல்லும் போது நாம் அதற்கு என்ன ராகம் பொருந்தும் என சிந்திப்போம்.ராமமூர்த்தியண்ணா சில ராகங்களை தனது வயலினில் அதன் வடிவத்தை வாசித்துக் காட்டுவார். அதிலிருந்து அந்த ராகங்களின் தன்மை என்பதை அறிந்து, அதை அடிப்படையாக வைத்தும் பாடல்களை அமைத்திருக்கின்றோம்.”
மெல்லிசைமன்னர்களுக்குப் பல திறமைவாய்ந்த உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் கோவர்த்தனம்,ஜி.எஸ்.மணி, ஜி.கே.வெங்கடேஷ் ,ஹென்றி டானியல், ஜோசப் கிருஷ்ணா எனப் பலர் இருந்தனர். இரட்டையர்களாக இருந்த போதும் ,பின்னர் இருவர் பிரிந்த போதும் இவர்கள் உதவியாளர்களாகத் தொடர்ந்தனர். இவர்களில் ஜி.எஸ்.மணி என்பவர் ஒரு கர்னாடக இசைக்கலைஞர். 1950 ,1960 களிலேயே மெல்லிசைமன்னர்களின் உதவியாளராக இருந்தவர்.விஸ்வநாதன் அமைக்கும் மெட்டுக்களை அதன் வேகத்திற்கு உடனுக்குடன் சுரப்படுத்தி எழுதுவது அவரது வேலை. ஒரு மெட்டை சுரப்படுத்தி எழுதிவிட்டால் பின் பாடகர்களுக்கு எந்த நேரத்திலும் சொல்லிக் கொடுக்கும் வசதி கிடைத்துவிடும். ஆர்.கோவர்தனம் என்பவரும் மிகச் சிறிய வயதிலேயே சுரஞானம் மிக்கவராக இருந்தார். பின்னாளில் ஒரு நல்ல இசையமைப்பாளராக மாறி. ” அந்த சிவகாமி மகனிடம் சேத்தி சொல்லடி ” ” கங்கை நதியோரம் ராமன் நடந்தான் ” நல்ல பல பாடல்கள் தந்தவர்.
மெல்லிசைமன்னர்களின் முக்கியமான உதவியாளர்களில் ஹென்றி டானியல், ஜோசப் கிருஷ்ணா முக்கியமானவர்கள்.இருவரும் மேலைத்தேய இசையில் ஆர்வமிக்கவர்கள். ஜி.ராமநாதன் இசையமைத்த ” யாரடி நீ மோகினி ” என்ற உத்தமபுத்திரன் படப்பாடலின் பின்பகுதியில் வரும் Rock And Roll இசை ஹென்றி டானியல் அமைத்தார் என்பார்கள்.
சமீபத்தில் பாரதியாரின் பூட்டனான ராஜ்குமார் பாரதி எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்தும் ,அவரது பெருமை பற்றியும் பேசும் போது அவரிடம் தான் பாடிய அனுபவத்தை விவரித்தார். அவர் தனக்கு சொல்லிக் கொடுத்த குறிப்பிட்ட பாடலில் அந்த ராகத்தின் சில இடங்களில் வேறு ராகத்தின் சாயலிருந்ததாகவும் அதுபற்றி தான் அவரிடம் கூறிய போது , “திருத்திவிடலாம்” எனக் கூறி ,அவருடன் எப்போதும் இருக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவரை அழைத்து இதைப்பார் எனக்கூறியதும் அவர் அதைத் திருத்தினார் என்றார். ராஜ்குமார் பாரதி ஒரு கர்னாடக இசை வித்துவான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போலவே அவரிடம் மேலைத்தேய வாத்தியங்கள் வாசித்த இசைக்கலைஞர்கள் ” இது D ” , ” இது C ” என்று மேலைத்தேய இசைநுணுக்கங்களைப் பற்றி சொல்லும் போது கேட்டுத் தெரிந்து கொள்வார் என்று கூறுகின்றனர். சிலர் அவரின் “அடக்கம்” என்று இவற்றை கூறுவர். பின், அடடா அவரை அப்படி சொல்லிவிட்டோமே என்பதை மறைப்பது போல “அந்த இசைக்குறித்து அவருக்கு எல்லாம் தெரியும் ; ஆனால் தெரியாதது போல கேட்பார் “ என்பார்கள். மெல்லிசைமன்னர் எம் .எஸ்.விஸ்வநாதனிடம் வாத்தியம் வாசித்த சில கலைஞர்கள் ,அவர் பற்றிய நினைவு நிகழ்ச்சிகளில் இவ்விதம் உளறியதை நாம் பார்த்திருக்கின்றோம்.
தனது முன்னோர்களின் சில குறைபாடுகளையெல்லாம் தெரிந்தே இளையராஜா தான் அமைக்கும் மெட்டுக்களை சுரப்படுத்தவும் அல்லது மேலைத்தேய பாணியில் நோட்ஸ் எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார். எல்லாவற்றையும் தனியாக செய்யும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி பலரும் குறிப்பிடும் முக்கிய அம்சம் என்னவெனில் அவரது இசையார்வம் மற்றும் அவரது இசையமைக்கும் ஆற்றல் ஆகும். பொதுவாகவே இசையமைப்பு என்பது தனிக்கலை. ஏனைய கலைகளை போலவே தன்னெழுச்சியாக வரக்கூடிய கலையே இசையமைக்கும் கலை!
எந்த ஒரு இசையையும் ஒருவர் கற்று தேறலாம், வாத்தியக்கருவி வாசிக்கலாம்,பாடலாம்! ஆனால் அவர்களெல்லாம் இசையமைப்பாளர்கள் ஆகிவிட முடியுமா என்பது சந்தேகம் தான்.அனால் பாடத்தெரியாத ஒருவர் , வாத்தியம் வாசிக்கும் ஒருவர் அல்லது வாசிக்கத்தெரியாத ஒருவர் கூட இசையமைப்பாளர் ஆகிவிட முடியும்.
இசையமைப்பதென்பது தனிக்கலை. பழந்தமிழர்கள் இதை பாடலமுதம் என்று அழைத்தனர்.
வாத்தியக்கலையில் பாண்டித்தியமிக்க சில கலைஞர்கள் இசையமைப்பில் ஈடுபாடுகாட்டினார்கள் என்பதற்கு வட இந்தியாவில் சித்தார் மேதை ரவிசங்கர், புல்லாங்குழல் கலைஞர் சௌராசையா , சந்தூர் கலைஞர் சிவகுமார் சர்மா போன்றோரையும் குறிப்பிடலாம். இந்த மூவரும் மேலைநாட்டிலும் அறியப்பட்ட கலைஞர்கள். வங்காள திரைப்பட இயக்குனரான சத்யஜி ரெயின் உலகப்புகழ்பெற்ற தொடர்படமான ” பாதர் பாஞ்சாலி ” படத்திற்கு இசையமைத்தவர் ரவி சங்கர்.
” பாதர் பாஞ்சாலி ” படத்திற்கு பின்னர் தனது படங்களுக்கு வேறு சில வாத்தியக்கலைஞர்களை பயன்படுத்திய சத்யஜித் ரே தனது படங்களுக்குத் தானே இசையமைத்தார். அவர் எடுத்த படங்களுக்கு வட இந்திய செவ்வியலிசைக்கு அப்பாற்பட்ட இசையின் தேவை இருந்ததால் மேலைத்தேய சங்கீதத்தில் ஈடுபாடுமிக்க ரே தானே இசையமைப்பாளராக மாறினார். அவர் தொடர்ந்து செவ்வியல் இசை வித்துவான்களை படத்தின் பின்னணி இசைக்கும் பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டார்.
ஹிந்துஸ்தானிய சங்கீத வித்துவான்கள் இசையமைத்த படங்களின் பாடல்களை விட சாதாரண இசையமைப்பாளர்களின் பாடலிகளில் தெளிந்த நீரோட்டமிக்க வாத்திய இசையும் நாம் காணலாம்.
உலக இசையரங்குகளில் நல்ல வயலின் வாத்தியக்கலைஞர்களாகப் பெயர்பெற்ற எல்.சுப்பிரமணியம், எல்.சங்கர் போன்ற கலைஞர்கள் சினிமாவில் இயங்காதவர்கள். ஆனாலும் கர்னாடக இசையில் பாண்டித்தியமிக்க கலைஞர்கள் சினிமாவில் அதிகம் வெற்றி பெறவில்லை என்ற பழியைக் கொஞ்சம் போக்கியவர்களாக டி.ஆர்.பாப்பா , குன்னக்குடி வைத்தியநாதன், எல்.வைத்தியநாதன், ஷ்யாம் போன்றோர் இருந்தனர். பழம்பெரும் இசையமைப்பாளரான டி.ஆர்.பாப்பா அதிக வருமானம் தரும் சினிமாத்துறையை விட்டு வானொலியில் வயலின் கலைஞராக தனது வாழ்வை நிறைவு செய்தவர்.
குன்னக்குடி வைத்தியநாதன் அகத்தியர் ,ராஜராஜ சோழன் போன்ற படங்களுக்கும் எல்.வைத்தியநாதன் ஏழாவது மனிதன் மற்றும் விருதுகள் பெற்ற சில படங்களுக்கும் இசையமைத்தார்கள்.தமிழ்நாட்டில் வாத்தியக்கலைஞர்கள் சினிமாவிலும் ஓரளவு வெற்றி பெற்றதில் குன்னக்குடி வைத்தியநாதன் , ஷ்யாம் , எல்.வைத்தியநாதன் ,வி.நரசிம்மன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
புகழ்பெற்ற வயலின் வித்துவான் லால்குடி ஜெயராமன் ” தில்லானா ” என்ற பெயரில் வாத்திய இசைகளோடு [Orchestra] மிக அருமையான ஒரு இசைத் தொகுப்பை வெளியிட்டார்.அந்த இசைவடிவத்தை செம்மைப்படுத்தியவர் திரைப்பட இசையமையமைப்பாளரான ஷ்யாம் என்பவர்.
சினிமா இசையை பார்ப்பன சனாதனிகள் தீண்டக்கூடாத இசையாகக் கருதியதும், செவ்வியலிசையை தங்கள் சொத்து எனச் சொந்தம் கொண்டாடிக் கொண்டதும் ,ஆனாலும் அதிக வருமானம் தருகின்ற தொழிலாக இருப்பதாலும் அது குறித்த இரண்டும் கெட்டான் மனநிலையிலும் அதை தள்ளி வைக்கவே முனைந்தனர். சிலர் ஆர்வத்தால் இசைபற்றிய பழமை பேசும் பண்பாட்டை உதறி துணிந்து ஈடுபட்டு வந்தனர்.
ஆனாலும் சினிமா இசையமைப்பாளர்கள் செவ்வியல் இசை ராகங்களில் நல்ல பாடல்களைக் கொடுக்கும் போது அவற்றை மட்டம் தட்டவும் , கேலி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டார்கள். காலமாற்றத்தில் ஊடே சில நெகிழ்வுகள் இருந்தாலும் சிலரது போக்கில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஆனால் பெரும்பாலான மக்கள் சினிமா இசையைக் கொண்டாடினர். இந்த ஆற்றலை உணர்ந்த சில கர்நாடக இசை வித்துவான்கள் சினிமாவில் பாட முனைந்தனர்.அவர்களில் பாலமுரளி கிருஷ்ணா , மதுரை சேஷ கோபாலன் ,மதுரை சோமு போன்றோர் முக்கியமானார்கள். பின்னாளில் பல கர்னாடக இசைப்பாடக ,பாடகிகளும் படையெடுத்தனர். 1990களில் சந்தானம் என்ற புகழ்பெற்ற கர்னாடக இசை வித்துவான் மெல்லிசை மன்னருடன் இணைந்து சங்கமம் என்ற இசை நிகழ்ச்சி நடத்தும் நிலையும் வந்தது.
உண்மையில் சினிமா இசையமைப்பு என்பதும் கர்னாடக இசை அல்லது செவ்வியலிசைப் பயிற்சி என்பதும் வேவேறுவிதமான பயிற்சி முறைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலதிகாலமாக தமிழ் மக்கள் செவ்வியலிசையையும் , மெல்லிசையையும் போற்றியே வந்திருக்கின்றனர். இதில் ஆதிக்க மனப்பான்மை வரும் போதே பிரச்சனையாகிறது.
யார் எதை பேசினாலும் இசையமைப்பாளர்கள் தங்கள் பணியில் கண்ணாயிருந்தனர். சினிமாவுக்கு என்னவிதமான பாடல்களையும் கொடுக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தனர்.தேவைப்படும் போதெல்லாம் கர்னாடக இசைவல்லுனர்கள் வியக்கும் வண்ணம் ராகங்களில் பாடல்களை அமைத்தும் காட்டினர்,
மெல்லிசைமன்னர்கள் அறிமுகமான காலங்களிலேயே செவ்வியலிசை சார்ந்த பாடல்களை மரபு மாறாமல் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தார்கள். அவற்றுள் சில பாடல்கள் இங்கே :
01 ஆடும் கலை எல்லாம் பருவ – படம் : தென்னாலிராமன்[ 1956 – பாடியவர் : பி.லீலா -இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி காம்போதி ராகம் –
02 கலைமங்கை உருவம் கண்டு- படம் :மகனே கேள் 1957 – பாடியவர்கள் : சீர்காகாழிகோவிந்தராஜன் + எம்.எல்.வி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி
03 ஆடாத மனம் உண்டோ – மன்னாதிமன்னன் 1960 – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : லலிதா
04 முகத்தில் முகம் பார்க்கலாம் – தங்கப்பதுமாய் 1959 – பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :கல்யாணி
05 அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – பாசவலை1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் :கரகரப்ரியா
06 மோகனைப் புன்னகை ஏனோ – பத்தினித் தெய்வம்1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் :மோகனம்
07 வருகிறார் உனைத்தேடி – பத்தினித் தெய்வம்1956- பாடியவர்கள் : எம்.எல்.வி + சூலமங்கலம் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் :அடானா
ராகங்களில் பாட்டமைப்பதையென்பது ஒரு குறிப்பிட்ட ராகங்களையே சுற்றி வந்தன என்பதை பழைய பாடல்களைக் கேட்கும் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகும்.குறிப்பாக மோகனம்,கல்யாணி, காம்போதி ,சிந்துபைரவி ,சிவரஞ்சனி போன்ற ராகங்களைக் குறிப்பிடலாம். பல ராகங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. 1940 மற்றும் 1950 களில் நேரடியாக அல்லது மிக தெளிவாகத் தெரியும்படியான விதத்தில் பழையபாணியில் பாடல்கள் இசையமைக்கப்பட்டன. அன்றைய நாடகமேடைகளின் பாதிப்பாகவும் அவற்றின் எதிரொலியாகவும் அவை அமைந்தன.
காலமாற்றத்தினால் ஏற்பட்ட ஒரு தேக்க நிலையும் மெல்லிசையின் வற்றிய தன்மையை போக்கும் விதத்தில் மெல்லிசைமன்னர்கள் மெல்லிசைபாடல்களை தாம் ஏற்கனவே நன்கு அறிந்த ராகங்களிலும் , புதிய ராகங்களிலும் தர முனைந்து செயற்பட்டனர். ராகங்களின் பொதுவான தன்மைகளையும் ,அதன் விசேஷ குணங்களையும் புரிந்து கொண்டே தங்களது தனித்துவத்தையும் காண்பிக்கும் விதமாக ராகங்களின் உயிர்நிலைகளை எடுத்துக் கொண்டு , கிளர்ச்சியும் எழுச்சியும் ஊட்டக்கூடிய விதத்தில் பாடல்களை அமைத்தார்கள். அவர்களுக்கு முன்னிருந்த ஹிந்தி இசை தந்த பாதிப்பினால் மரபு ராகங்களைத் தொட்டுக்கொண்டே புதுக்குறியீடுகளாக எண்ணற்ற பாடல்களை தந்தனர்.
தங்கள் காலத்திற்கேற்ற புதுமை நாடிய கலைஞர்களாக விளங்கிய மெல்லிசைமன்னர்கள் படைத்த இசை யில் மரபு ராகங்களை மட்டுமல்ல ,புதிய ராகங்களையும் குறியீடுகளாக வைத்துக் கொண்டு அதில் புதுப்புது அழகுகளைக் காட்டினர். அதில் பலவிதமான மனவெழுச்சிகளையும் புதுப்புது மெட்டுக்களையும் அள்ள, அள்ள குறையாத புதையலாக படைத்தளிக்க ராகங்களை பயன்படுத்தினர்.
.ஒவ்வொரு ராகத்திலும் அத்தனைவிதமான உணர்ச்சி பாவங்களையும் மனதை ஊடுருவும் பாடல்களாக்கித்தர இசைஇலக்கணங்களைச் சார்ந்தும், மீறியும் படைப்பின் எல்லைகளைத் தொட்ட சாதனைகள் வியக்க வைப்பவை.
இதிலிருந்து மெல்லிசைமன்னர்களின் ஆழமான ரசிப்பும் ,இசை குறித்த நுணுக்கமான பார்வையும் வெளிப்படும். ஓரளவு இசைஞானமிக்கவர்களையும் ராகங்களை நுணுக்கரிய நோக்கில் கேட்க தூண்டியது மட்டுமல்ல , ராகங்களின் நுண்ணலகுகளை, உள்ளொருமைகளையும் விரித்து காட்டி வியக்க வைத்தார்கள்.அதுமட்டுமல்ல, ராகங்கள் என்றால் எல்லோரும் தள்ளி நிற்கிற நிலையில் மலைக்க வைக்கும் விதத்தில் ஒரு பாமரனும் தைரியமாக அடையாளம் காணும் எளிமையான விதத்தில் கொடுத்த எளிமையும் உயர்ந்து நிற்கிறது.
இனி ஒவ்வொரு ராகத்திலும் எத்தனை விதமான பாடல்களை மெல்லிசைமன்னர்கள் தந்தார்கள் என்பதை பார்ப்போம். எத்தனை, எத்தனை பாவங்கள், இனிமைகள்! எதை எடுப்பது ,எதை விடுவது என்று திகைக்கவும் வைத்து விட்டார்கள்!!
01. ராகம் : கல்யாணி
01 நான் என்ன சொல்லிவிட்டேன் – பலே பாண்டியா 1962 – பாடியவர் : டி.எம்.எஸ். – இசை : விஸ்வநாதன் ராம்மூர்த்தி : ராகம் : கல்யாணி
02 சித்திரை மாதம் – ராமன் எத்தனை ராமனடி 1970 – பாடியவர் : பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி
03 நிலவே நீ சாட்சி – பவானி 1967 – பாடியவர்: பி.சுசீலா — இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி
04 தித்திக்கும் பால் எடுத்து – தாமரை நெஞ்சம் 1968 – பாடியவர்: பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி
05 தானே தனக்குள் ரசிக்கின்றாள் – பெரும் புகழும் 1976 – பாடியவர்: ஜேசுதாஸ் – இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி
06 அழகெனும் ஓவியம் இங்கே – ஊருக்கு உழைப்பவன் 1974 – பாடியவர்: ஜேசுதாஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : கல்யாணி
02. ராகம் : மோகனம்
01 ஆலயமணியின் ஓசையை – பாலும் பழமும்1961 – பாடியவர்: பி.சுசீலா. – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனம்
02 வந்த நாள் முதல் – பாவமன்னிப்பு 1961 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனம்
03 வெள்ளிக்கிழமை விடியும் வேலை – நீ 1965 – பாடியவர்: பி.சுசீலா — இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம்
04 வெள்ளிமணி ஓசையிலே – இருமலர்கள் 1968 – பாடியவர்: பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம்
05 தங்க தோணியிலே – உலகம் சுற்றும் வாலிபன் 1973 – பாடியவர்: ஜேசுதாஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம்
06 ஒரு ராஜா ராணியிடம் – சிவந்த மண் 1971 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனம்
03. ராகம் : மோகனகல்யாணி
01 நான் உன்னை சேர்ந்த செல்வம் – கலைக்கோயில் 1961 – பாடியவர்: பி.பி.எஸ்.+பி.சுசீலா. – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனகல்யாணி
02 புன்னகையில் ஒரு பொருள் – பவானி 1966 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி : ராகம் : மோகனகல்யாணி
03 தித்திக்கும் பால் எடுத்து – தாமரை நெஞ்சம் 1968 – பாடியவர்: பி.சுசீலா — இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனகல்யாணி
04 சிரித்தாள் தங்கப்பதுமாய் – கண்ணன் என் காதலன் 1968 – பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனகல்யாணி
05 சிரித்தாலும் கண்ணீர் வரும் – பெண் என்றால் பெண் 1968 – பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் : மோகனகல்யாணி
04. ராகம் : சிவரஞ்சனி
01 நான் பேச நினைப்பதெல்லாம் – பாலும் பழமும் 1961 – பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- :ராகம் : சிவரஞ்சனி
02 வேண்டும் வேண்டும் உந்தன் உறவு – வசந்தத்தில் ஒரு நாள் 1982– பாடியவர்: எஸ் .பி.பி +வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி
03 பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த – நினைத்ததை முடிப்பவன் 1975 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி
04 ஆண்டவனே உன் பாதங்களை நான் – ஒளிவிளக்கு 1968 – பாடியவர்: பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி
05 ஆனந்தம் விளையாடு வீடு – சந்திப்பு [1983] – பாடியவர்: டி.எம்.எஸ் +பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி
06 சோதனை மேல் சோதனை – தங்கப்பதக்கம் 1974 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- :ராகம் : சிவரஞ்சனி
05. ராகம் : சாருகேசி
01 அம்மம்மா கேளடி தோழி – படம் கறுப்புப் பணம் 1964 : – பாடியவர் : எல்.ஆர்.ஈஸ்வரி இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி :ராகம் : சாருகேசி
02 ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு – படம் : எங்க பாப்பா 1966 – பாடியவர்: டி. எம்.எஸ் + எம்.எஸ்.ராஜேஸ்வரி -இசை : விஸ்வநாதன்:ராகம் : சாருகேசி
03 தென்றலில் ஆடை பின்ன – படம் கண்ணே பாப்பா 1972 : – பாடியவர்: பி.சுசீலா இசை : விஸ்வநாதன் :ராகம் : சாருகேசி
04 அழகிய தமிழ் மகள் இவள் – படம் ரிக்ஸாக்காரன் 1972 : – பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா இசை : விஸ்வநாதன்:ராகம் : சாருகேசி
05 சந்திர திசை பார்த்தேன் தோழி – படம்: கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1981 – பாடியவர்:வாணி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சாருகேசி
06. ராகம் : சிந்துபைரவி
01 என்னை யாரென்று எண்ணியெண்ணி – படம் : பாலும் பழமும் 1961 – பாடியவர் : டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : சிந்துபைரவி
02 ராமன் எத்தனை ராமனடி – படம் : கௌரிகல்யாணம் 1967 – பாடியவர் : பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் – ராகம் : சிந்துபைரவி
03 தரை மேல் பிறக்க – படம் : படகோட்டி 1964 – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : சிந்துபைரவி
04 எங்கே நீயோ நானும் அங்கே – படம் :நெஞ்சிருக்கும் வரை 1967 – பாடியவர்: பி..சுசீலா – இசை : விஸ்வநாதன் – ராகம் : சிந்துபைரவி
07. ராகம் : சுத்ததன்யாசி
01 நீயே எனக்கு என்றும் – பலே பாண்டியா 1962 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி
02 தொட்டால் பூமலரும் – படகோட்டி 1964– பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- ராகம் : சுத்ததன்யாசி
03 கண்கள் எங்கே – கர்ணன் 1964 – பாடியவர்: பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி
04 இனியவளே என்று பாடி வந்தேன் – சிவகாமியின் செல்வன் 1974 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி
05 நம்ம ஊரு சிங்காரி சிங்கபூர் – நினைத்தாலே இனிக்கும் 1978 – பாடியவர்: எஸ்.பி.பி – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்- ராகம் : சுத்ததன்யாசி
08. ராகம் : நடபைரவி
01 விண்ணோடும் முகிலொடும் – புதையல் 1957 – பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராகம் : ராகம் : நடபைரவி
02 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – படகோட்டி 1964– பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : நடபைரவி
03 பார்த்த ஞாபகம் இல்லையோ – புதிய பறவை 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : நடபைரவி
04 நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு – ஆனந்த ஜோதி 1962– பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : ராகம் : நடபைரவி
05 பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாலும் பழமும் 1961– பாடியவர்: டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : நடபைரவி
06 ஓடம் கடலோடும் – கண்மணிராஜா 1975 – பாடியவர்: எஸ்.பி.பி + சுசீலா – இசை: விஸ்வநாதன் – ராகம் : நடபைரவி
09. ராகம் : பகாடி
01 அத்தை மகனே – பாதகாணிக்கை 1957 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : பகாடி
02 யார் யார் யார் அவள் – பாசமலர் 1961– பாடியவர்: பி.பி .எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : பகாடி
03 வான் மீதிலே இன்பத்தேன்மாரி – சண்டிராணி 1953 – பாடியவர்: கண்டசாலா + பி.பானுமதி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : பகாடி
04 கண்ணுக்கு குலமேது – கர்ணன் 19642– பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : பகாடி
05 கண் படுமே பிறர் கண் படுமே – காத்திருந்த கண்கள் 1962– பாடியவர்: பி.பி .எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : பகாடி
06 ஒரு நாள் இரவில் – பணத்தோட்டம் 1963– பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : பகாடி
10. ராகம் : ஆபேரி
01 தென்றல் உறங்கிய போதும் – பெற்ற மகனை விற்ற அன்னை 1957 – பாடியவர்: ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராகம் : ஆபேரி
02 சிங்காரப்புன்னகை – மகாதேவி 1957 – பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- ராகம் : ஆபேரி
03 மலர்ந்தும் மலராத – பாசமலர் 1961– பாடியவர்: டி.எம்.எஸ். + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : ஆபேரி
04 செல்லக்கிளியே மெல்லப்பேசு – பெற்றால் தான் பிள்ளையா 1967 – பாடியவர்: டி.எம்.எஸ். + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி- ராகம் : ஆபேரி
05 பொன்னென்ன பூவென்ன கண்ணே – அலைகள் 1973 – பாடியவர்: ஜெயச்சந்திரன் – இசை: விஸ்வநாதன் – ராகம் : ஆபேரி
06 செண்டுமல்லிப் பூ போல் – இதயமலர் 1976 – பாடியவர்: ஜேசுதாஸ் + வாணி – இசை: விஸ்வநாதன் – ராகம் : ஆபேரி
07 தென்றலுக்கு என்றும் வயது – பயணம் 1976– பாடியவர்: எஸ்.பி.பி – இசை: விஸ்வநாதன் – ராகம் : ஆபேரி.
08 கவிதை அரங்கேறும் நேரம் – அந்த ஏழு நாட்கள் 1982 – பாடியவர்: ஜெயச்சந்திரன் + ஜானகி – இசை: விஸ்வநாதன் – ராகம் : ஆபேரி
09 ராகங்கள் பதினாறு – தில்லு முல்லு 1982– பாடியவர்: எஸ்.பி.பி – இசை: விஸ்வநாதன் – ராகம் : ஆபேரி
11. ராகம் : தேஷ்
01 சிந்து நதியின்மிசை நிலவினிலே – கை கடுத்த தெய்வம் 1963 – பாடியவர்: டி.எம்.எஸ். + எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : தேஷ்
02 கண்ணனை நினைத்தால் – சுப்ரபாதம் 1974 – பாடியவர்: ஜேசுதாஸ் + வாணி – இசை: விஸ்வநாதன் – ராகம் : தேஷ்
03 இதுதான் முதல் ராத்திரி – ஊருக்கு உழைப்பவன் 1975– பாடியவர்: ஜேசுதாஸ் + வாணி – இசை: விஸ்வநாதன் – ராகம் : தேஷ்
04 நானென்றால் அது அவளும் நானும் – சூரியகாந்தி 1973 – பாடியவர்: எஸ்.பி.பி. + ஜெயலலிதா – இசை: விஸ்வநாதன் – ராகம் : தேஷ்
பாரம்பரியமாக கேட்டு ரசித்த பிரபல ராகங்களை மட்டுமல்ல கேட்டுப் பழக்கமில்லாத புதிய ,புதிய ராகங்களையும் கலந்து தந்து அவற்றுடன் ஹிந்துஸ்தானி இசை ராகங்களையும் இணைத்து இசைரசிகர்களின் மனதில் ஆழப்பதியும்வண்ணம் தந்த அதிசயத்தையும் காண்கிறோம்.
[ தொடரும் ]