டைட்டில் இசையும் பின்னணி இசையும்:
இன்றைய நவீன காலத்தில் எல்லாத்துறைகளிலும் கம்பியூட்டர் நுழைந்து வருவதும் தொழில் நுட்பம் சார்ந்து கலைகளும் மாற்றம் கண்டும் வருகின்றன. பின்னணி இசை என்ற சொற்பதம் நாடக நிகழ்த்துக்கலையின் நவீன வடிவமாகிய சினிமாவில் அதிகம் பேசப்படும் பொருளாக அறியப்பட்டது. மேலைநாடுகளில் சினிமாவில் மட்டுமல்ல 1940 களிலிருந்து புதிய வடிவமாகிய காட்டூனிலும் பின்னணியாக இசையுடன் , குரல்களும் பெருமளவில் பயன்டுத்தப்பட்டு வந்தது. இன்றைய நிலையில் கம்பியூட்டரின் விரிந்த செயற்பாடுகளால் கேம் [ Computer Electronics Games ] என்ற ஒரு புதுவகை உருவாகி அதற்கான இசையும் உலகமெல்லாம் பாவனைக்கு வந்துள்ளது. கம்பியூட்டரின் நுண்ணறிவு முயற்சியால் “இயற்கைக்கு நெருக்கமாக வடிவமைக்கப்படும் முயற்சியில் ” உண்டாக்கப்பட்ட ஒருவித செயற்கையான மனித பாத்திரப்படைப்புகள் மூலம் கதை சொல்லுவதும் , அது உலகெங்குமுள்ள சிறுவர் , சிறுமியர்களை பித்துப் பிடிக்க வைத்துள்ளதையும் நாம் அறிவோம். அந்த வகை video – Computer Games களிலும் பின்னணி இசை பயன்படுகிறது. அந்த உருவங்கள் எப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டு , ஒருவித இறுக்கத்துடனான இயந்திரத்தன்மை மிக்கதாக விளங்குகின்றதோ, அவ்வாறே அதற்கான இசையும் ஒருவித வரட்டுத்தனமிக்க இயந்திரத்தனத்துடன் ஒலிப்பதையும் நாம் கேட்கின்றோம்.உலகெங்கும் விற்பனையாகும் அந்த Games ன் இசை என்பது உலகின் எந்த பிரதேசத்து இசையையும் சாராதது என்பது நம் அவதானத்திற்குரியது. அதை வெளியிலிருந்து நாம் கேட்கும் போதே நமக்கு எரிச்சல் உண்டாகிறது. நவீன மோட்டார் வீதிகள் இல்லாத பின்தங்கிய நாடுகளிலும் கூட இந்த Games அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அந்த இசையில் நாம் எந்த உணர்ச்சியையும் , நாடுகளுக்கிடையேயான வித்தியாசங்களை இசையில் கேட்கமுடியாது.
Electronic Games மட்டுமல்ல டாக்குமெண்டரி , விளம்பரப்படங்கள் , குறும்படங்கள் போன்றவற்றிலும் பின்னணி இசை பயன்படுகிறது. தற்போதைய தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற கம்பியூட்டர் மென் பொருள் இசை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகெங்கும் ஒரே ரகமான மென்பொருட்களை எல்லோரும் பாவிப்பதால் பல்லினக் கலாச்சாரம் அழிக்கப்பட்டு ஒற்றைப் பரிமாண செயற்கை இசைகளை உருவாக்கி விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரு லாபமடைவதுன் தாம் நினைக்கும் வர்த்தகம் சார்ந்த கலாச்சாரத்தையும் திட்டமிட்டுப் பரப்புகின்றனர்.
தமிழ் திரையில் 1990 களின் நடுப்பகுதியிலிருந்து இந்த கேடான போக்கு நடைபெற்று வந்தாலும் அதற்கு முன் குறிப்பாக 1950 களின் பிற்பகுதியிலிருந்து 1990 கள் வரையான பகுதி இயற்கை வாத்தியங்கள் அதிகம் பயன்பட்டன. பின்னணி இசையைப் பொறுத்தவரையிலும் இக்காலப்பகுதி தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லலாம்.
இசை என்பது ஒரு கலாச்சாரம் சார்ந்த அம்சம் என்பதால் எந்த ஒரு இசையும் அதன் கலாச்சார பின்னணியிலேயே உருவாகி வளர்கின்றன. அது இந்திய , சீன , ஆபிரிக்க , லத்தீன் அமெரிக்க , அரேபிய , ஐரோப்பிய இசை என பன்முகத்தன்மை மிக்கதாகவும் , சுவைமிக்கதாகவும் இருந்து வருகின்றன. திரைப்படங்களும் அவை சார்ந்த நிலங்களின் இசையாகவுமே இருந்து வருகின்றன.
1940 களில் வெளிவந்த திரைப்படங்களில் பெரும்பாலும் கொஞ்சம் வசனமும் அதிக பாடலும் என்றால் 1950 களில் நீண்ட வசனமும் , அதேயளவுக்கு எண்ணிக்கையில் நிறைந்த பாடல்களும் இடம் பிடித்தன. பின்னணி இசை என்பதற்கான இடமிருந்தால் அல்லவா இசையமைப்பாளர்கள் அந்த இடங்களில் இசையை வழங்க முடியும் ! அந்தப்படங்களில் பின்னணி இசை என்பது பெரும்பாலும் காட்சிகள் மாறும் இடங்களில் மாத்திரம் கையாளப்பட்டன. பாடல்கள் தான் இசை எனக்கருத்தப்பட்ட காரணத்தால் காட்சிகளுக்குப் பொருத்தமான இடங்களிலெல்லாம் ஏற்கனவே வெளிவந்து புகழபெற்ற பாடல்களின் இசையை வாத்தியங்களில் வாசிப்பதை ஒரு வழக்கமாக எல்லா இசையமைப்பாளர்களும் கைக்கொண்டனர்.
தமிழ் சினிமாவில் பாடல்களே முனைப்பாய் இருந்த எல்லாக்காலத்திலும் ஏதோ ஒருவகையில் ஒரு சில வாத்தியங்களைக் கொண்டு பாடல்களை இடையிட்டு பின்னணி இசையாக இசைப்பதும் , சில இடங்களில் வாத்திய குழு வாசிக்கும் நிலைமையும் இருந்தே வந்திருக்கிறது.
தமிழ் திரையைப் பொறுத்தவரையில் தனது புதுமையான பின்னணி இசைக்கோர்வைகளால் அதை தனிச் சிறப்புமிக்க பேசுபொருளாக்கியவர் இசைஞானி இளையராஜா! அவர் மெல்லிசைமன்னர்களின் தொடர்ச்சியாக வந்தாலும் பின்னணி இசையில் அவர் தனித்துவமிக்க முன்னறிந்து கூற முடியாத புதுமையையும் , ஆளுமையையும் காண்பித்து அதற்கான புதிய இசை நடையையும் உருவாக்கிக்காட்டினார். அவருக்கு முன்பிருந்தவர்களும் சரி , அவருக்குப் பின்வந்தவர்களும் சரி காலத்திற்கு காலம் மாறும் மாறுபாடுகளைக் கடந்து அவர் அடைந்த உச்சங்களைத் தொட முடியவில்லை.
திரைப்படம் என்பது முற்றுமுழுதாக இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பதே உலக சினிமா கொடுத்திருக்கிற ஒரு சிந்தனை. பலவிதமான கலைகள்.அதனுடன் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் திரைப்படத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டு இயக்குனர்கள் விவரிக்கும் அம்சங்களை நிறைவேற்றுவபர்களாக செயல்படுகின்றன.அந்த வகையிலேயே பலவிதமான கலைஞர்களும் ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். ஒரு இயக்குனர் தான் வெளிப்படுத்த வேண்டிய கருத்தை அதற்குரியவர்களிடமிருந்து வெளிப்பட வைப்பார். ஆக திரைப்படம் என்பதே ஒரு இயக்குனரின் படைப்பு தான்! ஒரு திரைப்படம் அல்லது குறிப்பிட்ட ஒரு கதை பற்றிய எண்ணத்தை , அது எப்படி வடிவம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை நீண்ட காலம் மனதில் சுமக்கும் அல்லது கற்பனை செய்யும் இயக்குனர் பலவிதமான சிந்தனைகளை கொண்டிருப்பார்.
அந்த வகையில் அந்த திரைப்படங்களில் பணியாற்ற ஓப்பந்தமாகும் இசையமைப்பாளரும் அதற்குரிய தொழில்நுட்பக்கலைஞர்களில் ஒருவரே. ஆனாலும் ஒருபடம் முழுமையடைந்து இசையமைப்பாளரின் பார்வைக்கு வரும் போது அவர் அந்த இயக்குனர் என்னமாதிரியான மனநிலையிலிருந்து அதனைப் படமாக்கினார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வார் என்பது சந்தேகமான காரியம் தான். இயக்குனருக்கும் , இசையமைப்பாளருக்குமான புரிந்துரணரவைப் பொறுத்தே அது அமையும்.
மற்ற கலைவடிவங்களான ஓவியம் ,நாட்டியம் , கவிதை போன்ற கலைகளைப் போல இசையமைப்பு என்பது முற்றுமுழுதான இசையமைப்பாளரின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு கலை வடிவம் அல்ல. அதில் ஏனையோரின் தலையீடுகளும் இருக்கும். குறிப்பிட்ட இயக்குனர் குறிப்பிட்ட காட்சிகளுக்க்கான இசை இப்படித்தான் வரவேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன் ; இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்கின்ற போக்கு , இந்திய சினிமாக்களில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருக்கிறது.குறிப்பாக இன்றைய ஹொலிவூட் திரைப்பட இசையமைப்பாளர்களும் இந்த நிலைமைக்கு உட்பட்டே இசையமைக்கின்றனர்.
ஹொலிவூட்டின் புகழபெற்ற இளம் இசையமைப்பாளரான ஜேம்ஸ் கோனர் [ James Horner ] பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.
” திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது வேறு ஒருவரின் படைப்புக்கு நாம் வேலை செய்ய அமர்த்தப்பட்டுள்ளோம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அங்கே நான் , இது நல்ல இசையென்று ரசிக்கும் இசையைக் கொடுக்க முடியாது. ஏனென்றால் பிறருக்கும் நமக்கும் இருக்கும் இசை ரசனை என்பது ஒன்றாக இருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்குரியது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அப்படி இருப்பதில்லை என்பதே உண்மை ! நாம் நினைக்கலாம் இது ஒரு நல்ல இசை என்று, ஆனால் உங்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் திரைப்பட இயக்குனர் , ” இன்னும் கொஞ்சம் நல்லா தர முடியுமா , அல்லது இன்னும் கொஞ்சம் சந்தோசமாக ,இனிமையாக தரமுடியுமா ” என்று சொல்லலாம்.. முழுமையாக சொல்ல வேண்டும் என்றால் நம்மைச் சூழ உள்ளோரை சார்ந்தும் , அவர்களை சந்தோசப்படுத்துவதாகவுமே இருக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது.
தமிழ் திரையில் பின்னணி இசை என்பது 1950களிலிருந்து ஏதோ ஒருவகையில் இருந்து கொண்டே வந்துள்ளது. இன்றைய பொருளில் சிறப்பான வாத்திய இசையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு இசை அல்லது ஒரு ஒலி இருக்க வேண்டும் கருத்தோட்டம் இல்லாமலில்லை. மேலைத்தேய சினிமா, மற்றும் ஹிந்தி சினிமாவைப் பார்த்து வளர்ந்தது என்ற நிலையில் பின்னணி இசை அதிக முக்கியத்துவமில்லாமல் விட்டாலும் மாறும் காட்சிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காகவும் பயன்படுத்தினர்.
1960 களின் நவீன இசையின் நாயகர் மெல்லிசைமன்னர்களே என்பது எல்லோரும் அறிந்ததே! அவர்கள் பாடல்களின் வாத்திய இசையில் பலபுதுமைகளைப் புகுத்தியவர்கள் என்பது மட்டுமல்ல ஹிந்தி திரையிசைக்கு நிகராக தமிழ் சினிமா இசையை தரமுயர்த்தியவர்களுமாவார். தனியே பாடல்களில் மட்டுமல்ல படத்தின் பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியத்தின் உரிமைக்காரர்களாகவும் விளங்கினர்.தனது மிக இளவயதிலேயே ஹிந்தி திரையிசையின் சாதனை இசையமைப்பாளரான நௌசாத் இசையால் கவரப்பட்ட மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அந்த இசைப்பள்ளியைச் சார்ந்தவர் என்றே சொல்ல வேண்டும்.
பிறப்பால் மலையாளியான விஸ்வநாதன் நீண்டகாலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து தன்னை தமிழராகவே உணர்ந்தவர் என்ற நிலையிருந்தாலும் தமிழ் நாடக மரபிலிருந்து வந்தாலும் , அவரது முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் , கே.வி.மகாதேவன் போன்ற இசையமைப்பாளர்கள் தமிழ்நாட்டு இசைமரபை, நாட்டுப்புற இசை, செவ்வியலிசை [ கர்நாடக இசை ] போன்றவற்றை கைக்கொண்டது போலல்லாமல் ஹிந்தி இசையைத் தனது முன்னுதாரணமாகவே கொண்டார். மலையாள நாடன் பாட்டுக்களையும் பயன்படுத்தியவரல்ல. தமிழ் இசையில் பரீட்சயமமிருந்தாலும் மெல்லிசை ஒன்றையே நினைத்து மெல்லிசைமன்னர்கள் பயணித்தார்கள் என்பதே உண்மையாகும்.அன்றைய நிலையில் எல்லா மாநில இசையும் ஹிந்தி இசையையே முன்னுதாரணமாகக் கொண்டனர் என்பது பொது போக்காகவே இருந்தது.
ஹிந்தி திரையிசையின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய நௌசாத் இந்திய செவ்வியல் மரபு இசையைப் பயன்படுத்தி புகழ் பெற்றதுடன் 1940களின் இறுதியிலேயே மேலைத்தேய இசையையும் பயன்படுத்தி புதுமைகளைப் புகுத்திய முன்னோடியுமாவார். ஆயினும் 1950களில் ஹிந்தி திரையிசையை செழுமைப்படுத்தியதில் வங்காள இசையமைப்பாளரான அனில் பிஸ்வாஸ் என்பவர் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். அனில் பிஸ்வாஸ் இசையில் 1950 இல் வெளிவந்த Arzoo என்ற திரைப்படத்தில் Title இசையில் வெளிப்படுத்தப்பட்ட இசை , Arragement என்று சொல்லப்படுகிற மேலைத்தேயபாணியில் சுரக்குறிப்புகள் [ Notations ] எழுதப்பதுடன் harmony . மற்றும் Counterpoint போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டன.
ஹிந்தி திரை இசையை நவீனமயமாக்கியதில் நௌசாத் , அனில் பிஸ்வாஸ் போன்ற இசையமைப்பாளர்களின் உதவியாளர்களாக இருந்த தென்னிந்திய கோவா பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள் முக்கிய பங்காற்றினார்கள். கோவாவைச் சார்ந்த இசைக்கலைஞர்கள் மேலைத்தேய செவ்வியல் இசையில் நன்கு பரீட்ச்யமாய் இருந்ததுடன் சர்ச் , உணவு விடுதிகள் மற்றும் கிளப் போன்ற இடங்களில் மேலைத்தேய இசையை இசைத்து தமது வாழ்வாதாரமாகவும் கொண்டிருந்தவர்கள். அவர்கள் போர்த்துக்கேய இசை மரபை பின்பற்றியவர்களாவர். Anthony Consalves , Josique Menzies , Maoro Alfonso போன்ற கலைஞர் மிக முக்கிய பங்காற்றினார்கள்.
பம்பாய் ” புதிய நாடக அமைப்பின் ” [ New Theatre ] கலைஞர்களின் திறமையையும் சினிமா இசையமைப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுடன் கடற்படை , மற்றும் Band வாத்தியக்கவிஞர்கள் பலரும் திரையிசைக்குள் உள்வாங்கப்பட்டனர். அணில் பிஸ்வாஸின் உதவியாளராக, வாத்திய ஒருங்கிணைப்பாளராக இருந்த ராம் சிங் என்பவர் பஞ்சாபைத் சார்ந்த band வாத்தியக்கலைஞராவார். அவர்களது வாசிப்பு இந்திய இசைக்கு இசைவாக அமைந்தததுடன் 1930 , 1940 களின் இருந்த இசைக்கு முற்றிலும் மாறாக புதுமையானதாகவும் , முன்பு அறிந்திராத இசையாகவும் அமைந்தது. அனில் பிஸ்வாஸின் இசைக்கு வளம் சேர்த்ததில் Jerry Fernandes என்ற கலைஞரும் முக்கியமானவராவார். அன்றிருந்த இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் திறமைகளையெல்லாம் பயன்படுத்திய இசையமைப்பாளர்களே பெயரை எடுத்தனர்.
அன்றைய நிலையில் அனில் பிஸ்வாஸ் ஹிந்தி இசையை நவீனப்படுத்தினார் என்று கூறப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் அங்கே இசையமைப்பாளர் நௌசாத்தின் பங்களிப்பே அதிகம் என்கிறார்கள். Kersi Lord என்ற இசைக்கலைஞர் Arranger , Score Composer , Accordian Player எனப் பன்முகம் கொண்டவர். அவர் பின்வருமாறு கூறுகிறார் ..
“
நௌசாத் மிகப்பெரிய வாத்தியக்குழுவை ஆரம்பித்தார். அவரிடம் நான் சேர்ந்தேன். அவருடைய இசை இந்திய செவ்வியலிசை சார்ந்ததாகவும் , மேலைத்தேய வாத்திய இசையும் நன்றாக இருந்தது.”
நௌஸாத்தின் இசைக்கு Ram Sign ,வயலினிஸ்டுக்களான Josique Menzies ,Anthony Consalves போன்றவர்கள் வாத்திய இசையின் ஒருங்கமைப்பாளர்களாகவும் [ Arrangements ] இருந்தனர். Anthony Consalves தனது அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.
” நான் 1948 இல் இசையமைப்பாளர் ஷியாம் சுந்தரிடம் சேர்ந்தேன். அவருக்கு வாத்திய இசையிலும் , ஹார்மனி [ Harmony ] இசையிலும் மிகச் சொற்ப அறிவே இருந்தது. அவரது மெட்டுக்களில் நான் அமைக்கும் ஹார்மனிகளை கலப்பதற்கு என்னை அனுமதித்தார். ஆனாலும் அவருக்கு அவை புதிதாக இருப்பததால் சில கட்டுப்பாடுகளையும் விதிப்பார். சிலவேளைகளில் அனுமதிக்க மாட்டார். அது மெட்டை விட்டு வெளியே போகும் எனக் கருதினார். ராக , தாள முறைகளில் அவர் அமைக்கும் மெட்டுக்களை அதன் அமைப்புக்கு கெடாமல் , எந்தப் பிரச்சனையுமில்லாமல் நான் ஹார்மனியுடன் கலந்து கொடுத்தேன்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஹிந்தி திரைப்படத்திற்கு மேலைத்தேய இசையில் பரீட்சயமுள்ள , இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். அவர்கள் பெரும்பாலும் கோவாப் பகுதிலேயே கிடைத்தார்கள்.
1950 களின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி யின் வருகையுடன் Western Style of Music மேலும் வளம் பெற்றது. அவரது உதவியாளர்களாக kanu Gosh, Sebatean போன்றோர் இருந்தனர்
இவ்விதம் ஹிந்தி திரையிசையின் போக்கை மேலோட்டமாகக் கூறுவதன் காரணம் யாதெனின் மெல்லிசைமன்னர்களின் இசை அவர்களை அடியொற்றியதாக இருந்து வந்தது என்பதைக் குறிப்பிடுவதற்கேயாகும். அன்றைய காலத்தில் நௌசாத் மிகப்பெரிய இசையமைப்பாளராக விளங்கினார்.தமிழ் திரையிசையைப் பொறுத்தவரையில் நவீன இசையின் நாயகராக சி.ஆர்.சுப்பராமன் வருகிறார். மேலைத்தேய இசையின் கூறுகளான ஹார்மனி இசையை தனது படங்களில் பரீட்சித்து பார்த்த பெருமை அவரையே சாரும். தனக்கென்று புதிய பாணியை உருவாக்கினார். அவரது அந்த முயற்சியை அவரது இறுதிப்படங்களில் காணமுடியும். குறிப்பாக லைலா மஜ்னு படத்தில் பின்னணி இசையிலும் ,பாடல்கள் சிலவற்றிலும் காண முடியும்.
தமிழ் திரையில் புதுமை இசையின் அடையாளமாக விளங்கியவர் சி .ஆர் .சுப்பராமன்.. நெஞ்சில் நிறைந்து அழியாத இடத்தைப் பிடித்து நிற்கின்ற பல இனிய சாகாவரமிக்க பாடல்களையும் தந்த பெருமைக்குரியவர். சி.ஆர்.சுப்பராமன் ஹிந்தி திரையின் ஒப்பற்ற இசையமைப்பாளராக இருந்த நௌசாத்தின் இசைமுறையையே பின்பற்றினார். சுப்பராமனின் பல பாடல்கள் நௌசாத்தின் பாடல்களையே ஒத்திருக்கும். நௌசாத்தின் இசைப்பள்ளியை சேர்ந்தவரே சி.ஆர்.சுப்பராமன். சுப்பராமனின் இசைப்பள்ளியில் வளர்ந்தவர்கள் தானே மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் ! ஆக மிக இயல்பாக நௌசாத் இசையின் தாக்கம் மெல்லிசைமன்னர்களின் இசையில் இருந்தது,
ஹிந்தி திரையிசையை வளப்படுத்திய நௌசாத் , அணில் பிஸ்வாஸ் , எஸ்.டி. பர்மன் , சலீல் சௌத்ரி போன்ற இசையமைப்பாளர்கள் நல்ல வாத்திய இசை கலைஞர் , உதவியாளர்கள் , இசைநடாத்துனர்கள் போன்றோர்களை தங்கள் இசையில் இணைத்துக்கொண்டு செயற்பட்டனர்.குறிப்பாக சிறந்த வாத்தியக்கலைஞர்களையும் இணைத்துக் கொண்டனர்.மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி ஒரு சிறந்த வயலின் வித்துவான் என்பது பலரும் அறிந்த செய்தி.
தாம் போடும் மெட்டுக்களை சுரப்படுத்தி எழுதவும் , பாடகர்களுக்கு அதை சொல்லிக் கொடுக்கவும் , பின் படங்களுக்கான பின்னணி இசையை ஒருங்கமைக்கவும் உதவியாளர்களை மெல்லிசைமன்னர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் ஜி.எஸ் .மணி , ஜி.கே.வெங்கடேஷ் , ஆர்.கோவர்தனம், ஹென்றி டானியல் , ஜோசப் கிருஸ்ணா போன்றவர்கள் புகழபெற்றவர்கள்.
அன்றைய காலத்தில் பிற இசையமைப்பாளர்கள் பலரும் உதவியாளர்களை வைத்திருந்தனர், கே.வி.மகாதேவனுக்கு புகழேந்தி , ஜி.ராமநாதனுக்கு சுந்தரம் , டி.பி.ராமசந்திரன் என பலரையும் உதாரணம் காட்ட முடியும். பாடல்களே மிக முக்கியமானவை என்ற நிலையிலும் ,இசையமைப்பாளர்களின் வேலை அதுமட்டுமே என்ற நிலையில் அன்றைய படங்களுக்கான பின்னணி இசையைப் பெரும்பாலும் உதவியாளர்கள் செய்தார்கள் என்பதும் முக்கியமானதாகும்.
பின்னணி இசைக்கு அதிகமான வாத்தியங்கள் பயன்படாத அக்காலங்களில் சிலவாத்தியக்கருவிகளை வைத்தே நிறைவு செய்தனர். 1940 ,1950களில் வெளிவந்த படங்களை நாம் நோக்கினால் காட்சிக்குப் பொருத்தமான இசையென்றால் ஏற்கனவே வந்த ஒரு திரைப்பாடலோ அல்லது நன்கு தெரிந்த நாட்டுப்புற மெட்டோ பயன்படுத்தப்படும் வழமையை நாம் காணலாம். இந்த உத்தியை ஜி.ராமநாதன் படங்களில் அதிகம் காணமுடியும். மதுரைவீரன் படத்தில் பின்னணி இசையாக கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த ” உன்னைக் கண் தேடுதே ” மெட்டும் வேறு சில இடங்களில் ,அதே படத்தில் பாடலாக வரும் ” தேடி வந்தேனே புள்ளி மானே ” பாடலின் மெட்டும் பின்னணியாக ஒலிக்கும்.
இதே பாணியை மெல்லிசைமன்னர்களும் தமது ஆரம்பகாலப்படமான ” தலை கொடுத்தான் தம்பி ” படத்தில் அவர்கள் ஏற்கனவே குலேபகாவலி படத்தில் இசையமைத்த ” சொக்கா போட்ட நவாப்பு ” என்ற பாடலை வாத்திய இசையாகவும், அதே போல மகாதேவி படத்தில் சந்திரபாபு , கருணாநிதி தோன்றும் காதல் காட்சியில் ” மன்மதலீலையை வென்றார் உண்டோ ” பாடல் நீண்ட நகைச்சுவை இசையாக வெளிப்படுத்தியமை என்பது அந்தக்காலத்து பொதுவிதி எனலாம்.
பின்னணி இசையின் முக்கியத்துவத்தை அமெரிக்கத்திரைப்படங்கள் 1930களிலேயே மிக அற்புதமாக வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டன.ஐரோப்பாவிலிருந்து சென்ற செவ்வியல் இசை [ Western Classical ] தெரிந்த இசையமைப்பாளர்கள் அமெரிக்கதிரையில் புதிய காவியங்களை படைத்தனர். மேலைத்தேய சிம்பொனி இசைமரபில் பாண்டித்தியமிக்க இசைக்கலைஞர்கள் அமெரிக்கத்திரைப்படங்களுக்கான விரிந்த இசை ஓவியங்களை படைத்து திரையிசையைப் புத்தாக்கம் செய்தனர். அமரிக்கப் பிரமாண்ட தயாரிப்புகளுக்கு தகுந்த பிரமிக்க வைக்கும் இசையை ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் வழங்கி புதுமை காட்டினார்கள்.
1930களில் Max Steiner என்ற வியன்னா இசைமரபில் வந்த இசையமைப்பாளர் மிகப்பிரமாண்டமான தயாரிப்பான King Kong படத்தில் Kong ஐ அறிமுகம் செய்யும் இசையும் , அதே இசை பெண்ணின் மென்மையான இசையாகவும் ,King Kong பெண்ணைக் கையில் வைத்திருக்கும் போது காதல் இசையாகவும் அது மலர்ந்து புதிய அதிசயங்களை நிகழ்த்தியது. Max Steiner ஐ தொடர்ந்து பல ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் ஹொலிவூட் திரையிசையை சிம்பொனி பாணியில் வளர்த்தெடுத்தனர்.
வெளிநாடுகளில் சில இசையமைப்பாளர்கள் இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப திரைப்படம் படமாக்குவதற்கு முன்னரேயே இசையமைப்பதும் , சில இசையமைப்பாளர்கள் படமாக்கிய பின்பு இசையமைப்பதும் என தங்களுக்கு இசைவாக தெரிவு செய்கின்றனர்.
இயக்குனர் ஸ்டிபன் ஸ்பீல்பர்க் தனது படங்களுக்கான இசையை படமாக்கிய பின்னர் இசையமைப்பாளர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுவது வழமை. ஆனால் The Good, the Bad and the Ugly . the films Once Upon a Time in the West and Once Upon a Time in America போன்ற படங்களின் இயக்குனர் Sergio Leone தனது படங்களின் இசையமைப்பாளரான Ennino Morricone முன்கூட்டியே இசையமைத்து வைத்திருக்கும் இசைக்க பொருத்தமாக தனது காட்சிகளை அமைப்பார்.
தமிழ் சினிமாவில் பின்னணி இசை என்பது ஒரு முக்கியமான அம்சமாகப் பேசப்பட்டது அல்லது அதற்கென தனிக்கவனம் செலுத்தப்பட்டது என்றால் அது இளையராஜா காலத்திலேயே! தனி இசைத்தட்டாக இளையாராஜா இசையமைத்து வெளிவந்த How To Name It என்ற இசைத்தொகுப்பை தனது வீடு படத்தின் பின்னணி இசையாகப் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இது போன்றதொரு நிகழ்வு தமிழ் சினிமாவுக்கே புதியதாகும்.
மேலைத்தேய திரைப்படங்களில் காலத்திற்கு காலம் இசையிலும் பலவிதமான புதிய முயற்சிகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. சிம்பொனி இசை சார்ந்த செவ்வியல் இசை , ஜாஸ் , புளூஸ் , ரொக் , 1980 களில் புதிய சிந்தசைசர் சார்ந்த இசை என பலவகை இசை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. முதன் முதலில் சிந்தசைசர் இசை Chariot of fire என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டு பிரமிப்பு ஊட்டியது.
சினிமா இசை என்பது பலவிதமான இசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கும் [ juxtaposition ] இசையாகும்.குறிப்பிட்ட சில செக்கன்களில் நிலைபெற்று ,மாறி மாறி வரும் காட்சிகளுக்கு தகுந்தவாறு அவை அமைக்கப்படுகின்றன. நாம் காணும் காட்சிகளுக்குத் தகுந்த மாதிரி கவலை, மகிழ்ச்சி , நகைச்சுவை என பலவிதமான உணர்வுகளை இசை வெளிப்படுத்துவதுடன் நாம் காணத்தவருகின்ற பிற சங்கதிகளையும் பின்னணி இசை வெளிப்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் பின்னணி இசையில் புது உத்திகளை காண்பிக்க மெல்லிசைமன்னர்கள் தமது ஆரம்பகாலத்திலேயே முயற்சிகளை செய்தனர்
மகாதேவி [1957]
மகாதேவி [1957] படத்தில் பின்னணி இசை என்பது முழுமையான அசத்தலான அதிரடி இசை என்று சொல்லலாம். முழுமையான வாத்திய இசையின் முழக்கத்தைக் கேட்க முடியும். கதையின் விறுவிறுப்பும் ,கவர்ச்சியான வசனங்களும் , சிறப்பானமுறையில் அமைக்கப்பட்ட வாள் சண்டைக்காட்சிகளும் , விறுவிறுப்பான குதிரை ஓட்டங்களும் கொண்ட நேர்த்தியான ஒரு படத்திற்கு சிறப்பான இசை மேலும் அணி சேர்த்திருக்கிறது. அன்றைய நிலையில் அப்படம் மிகச்சிறந்த , புதுமையான இசையைக் கொண்ட படம் என்று கூறலாம். நகைச்சுவைக்காட்சிகளிலும் இசை புதுமையாக இருக்கும். படம் பார்ப்பவர்களை அந்ததந்த உணர்ச்சிகளுக்குள்/ உள்ளிழுக்கும் வகையில் இசையும் இருக்கும்
பாசவலை ,ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ,தலை கொடுத்தான் தம்பி போன்ற ஆரம்பகால படங்களிலும் மெல்லிசைமன்னர்களின் வாத்திய இசையில் இருந்த ஆர்வத்தைப் பின்னணி இசையில் காண்கிறோம்.ஆயினும் 1960களிலேயே அதன் தொடர்ச்சியாக புதிய இசை பிரவாகம் உச்சம் பெறுகிறது. தொடர்ச்சியாக வெளியான படங்களில் அவர்களது இசை விரிந்து செல்கிறது.
பின்னணி இசை பற்றி கூறும் போது அவை காட்சிகளுக்கேற்ற வகையில் வாத்திய இசையாக இருக்கின்ற அதே வேளை படத்தின் முன்னிசையிலும் [ Title Music ] வாத்திய இசையில் சிறப்பான கவனம் செலுத்தியதுடன் புதிய கற்பனைகளுக்கும் இடம் கொடுத்து புதிய ஒலியமைப்பை உருவாக்கிக் காட்டினார்கள்.
பின்னணி இசையில் முக்கியமானதொரு அம்சமாகக் கருதப்படும் theme music என்ற வகை முக்கியமாகக் கருதப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அடையாளப்படுத்துவதாகவும் , சில முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்துவதாகவும் அமைக்கப்படுகின்ற இசையாகவும் , சில சமயங்களில் திரும்பத்திரும்ப வெவ்வேறு விதங்களில் ஒலிக்கும் இசையாகவும் அமைக்கப்படும் இசையாகும்.
ஒருபடத்தின் முக்கியமான ஒரு பாடல் கூட Theme Music ஆக அமைவதுடன் அவற்றை தமது டைட்டில் இசையாகவும் மெல்லிசைமன்னர்கள் மிகச் சிறப்பான முறையில் கையாண்டு இசை உயிர்ப்பின் ஓட்டத்தை வெளிப்படுத்தியிருப்பர். அதில் சிறப்பு என்னவென்றால் ஒரு மெட்டை பலவிதமாக இசைத்து அதன் உள்ளோசைகளை வெளிப்படுத்துவதுடன் ,அதை பல கோணங்களிலிருந்து பார்த்து கற்பனைகளில் விளையாடி இசையின் இன்பங்களை , அதன் பல்வேறு சாத்தியப்பாடுகளை வெளிப்படுத்துதலாகும். இதனை மேலைத்தேய இசையிலேயே அதிகமாக நாம் காணலாம். குறிப்பாக சிம்பொனியில் அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் இதனை Music Variation என அழைப்பர்.
தமிழ்திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பாடல்களை போலவே நாட்டுப்புற இசை , செவ்வியலிசை , மேலைத்தேய இசை போன்றவை பின்னணி இசைக்கு பயன்பட்டுள்ளன. இதில் அதிகமான வேறுபாடுகளை முதன் முதலில் காண்பித்த பெருமையும் மெல்லிசைமன்னர்களையே சாரும்.
கதையின் போக்குகளுக்கேற்ப இசையைப் பயன்படுத்தி காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார்கள். எல்லாவிதமான உணர்வுநிலைகளையும் இசையால் வெளிப்படுத்தி ரசிகர்களை கதையுடன் ஒன்ற வைத்தார்கள். சோகக்காட்ச்சிகளில் நெகிழ்ந்து அழவைக்கவும் , காதல் காட்சிகளில் மகிழ்வூட்டவும், நகைச்சுவைக்காட்சிகளில் கலகலப்பூட்டவும் , பயஉணர்வை வெளிப்படுத்த மிரட்டும் இசையாக பீதியூட்டவும் புதிய வாத்தியங்களில் புதுப்புது இசைப்படிமங்களை உருவாக்கிக் காட்டினார்கள்.
வார்த்தையால் , ஏன் சில சமயங்களில் காட்சிகளால் கூட விளக்க முடியாத உணர்வனுபவத்தை இசையால் உணர்த்த முடிந்ததுடன் , படத்தைப் பார்க்காமலேயே அதன் ஒலிவடித்தைக் கேட்கும் போது அவை இன்னென்ன காட்சிகளை வெளிப்படுத்துகிறது என்று ரசிகர்களை கூற வைக்குமளவுக்கு புதிய படிமங்கள் இசையில் உருவாகின. குறிப்பாக நாகேஷின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு அவர்கள் கொடுத்த வழுக்கி , வழுக்கி ஓடும் இசை தனித்துவமிக்கதாகும். நாகேஷின் நகைச்சுவை நடிப்பின் குறியீடாக பயன்படுத்திய நகைச்சுவை இசை தனித்துவமானது. பணத்தோட்டம் படத்தில் நாகேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் வீரப்பன் தோன்றும் காட்சிகளில் மியூட் ரம்பட் , பியானோ , கஸ்டாநெட், பொங்கஸ் , எக்கோடியன் போன்ற வாத்தியங்களை பிரமிக்கத்தக்க வகையில் பயன்படுத்தினார்கள். இந்தவகை இசையை 1970கள் வரை பயன்படுத்தினார்கள்.
உணர்வுகளை குறியீடாகப் பயன்படுத்திய ஓர் மரபு தமிழுக்குண்டு. ராகங்களின் நுண்ணிய உணர்வுகளை மெல்லிசைமன்னர்களும் பயன்படுத்தினார்கள். பொதுவாக மோகனம் என்ற ராகம் மகிழ்ச்சியின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதை பாதகாணிக்கை படத்தில் ஜெமினி , சாவித்ரி நாடகக்காட்சியில் குழலிசையாகவும் , அதே போல கல்யாணி ராகத்தை படங்களின் ஆரம்பக்காட்சியில் மகிழ்ச்சியின் சூழலைக் காட்டவும் பயன்படுத்திருப்பர். பாவமன்னிப்பு படத்தின் முதல் காட்சியில் கல்யாணி ராகம் பின்னணி இசையாக வரும். இது போல ஏராளமான படங்களில் இந்த முறையைக் கையாண்டுள்ளனர்
அதே போல சோக உணர்வை வெளிப்படுத்த சிவரஞ்சனி ராகத்தையும் , அதற்கிணையாக ஏனைய பல ராகங்களையும் மெல்லிசைமன்னர்கள் ஏராளமான படங்களில் பயனப்டுத்தினார்கள். மெல்லிசைமன்னர்கள் தமது ஆரம்பக் காலத்தில் இசையமைத்த பதிபக்தி படத்தில் தாயுடன் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்து கொண்டே சாவித்திரி சட்டி பானைகளை விற்பதற்கு எடுத்து வைக்கும் காட்சியில் , காட்சியை இடையூறு செய்யாத மெல்லிய பின்னணி இசையாக சிவரஞ்சனி ராகத்தை , ஆர்ப்பரிக்கும் இசையாகவும் வயலின் சேர்ந்திசையாக நெஞ்சை உருக்கும் சோக இசையாகவும் இசைத்து இனம்புரியாத உணர்வுகளையெல்லாம் வெளிக்கொணர்ந்திருப்பர்.
ஒருபடத்தின் குறிப்பிட்ட ஒரு பாடலை எடுத்துக் கொண்டு அதை பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தகுந்தமாதிரி பலவிதங்களில் இசைப்பது மட்டுமல்ல ,அதனை டைட்டில் இசையாகவும் பயன்படுத்தி இனிமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்களே ! குறிப்பாக பார் மகளே பார் , பாலும் பழமும் , நெஞ்சம் மறப்பதில்லை , காதலிக்க நேரமில்லை , புதியபூமி , பெற்றால் தான் பிள்ளையா, பணம் படைத்தவன் போன்ற படங்களில் வரும் டைட்டில் இசை என்பதே அந்தந்தப் படத்தின் பாடல்கள் தான். வேறு சில படங்களில் , அந்தப்படத்தில் இடம் பெற்ற இரண்டு மூன்று பாடல்களின் கலவையாக டைட்டில் இசை இருக்கும். கவலை இல்லாத மனிதன் படத்தின் டைட்டில் இசையில் அப்படத்தின் எல்லாப்பாடல்களும் வாத்திய இசை மாலையாக அமைத்திந்திருக்கும்.
அதே போல பாசம் படத்தின் டைட்டில் இசையாக சிறுவன் ஒருவன் தவறு செய்து சிறைக்கு செல்வதும் , மீண்டும் பெரியவனாக வளர்வதுமாக வரும் காடசியின் பின்னணியிசையாக கானடா ராகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு, பல்வேறு விதங்களில் இசைத்து பருவ காலமாற்றத்தை காண்பித்ததுடன் அந்த சிறுவன் வளர்ந்து எம்.ஜி.ஆறாக வருவதுமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பாசம் படத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நாயகன் ஊரைவிட்டுப் போன தனது தாயைத் தேடி அலையும் காட்சியில் ” உலகம் பிறந்தது எனக்காக ” பாடலின் வாத்திய இசையாக வரும். வயலின் சோலோவாக தொடங்கும் இசை எக்கோடியன் பொங்கஸ் , குழு வயலின் இசையுடன் மயங்கி விழும் இடம் மற்றும் திருடர்கள் இருக்கும் இடம் வரை வரும் . அதைத் தொடரும் திருடர்கள் அவருக்கு சாப்பாடு கொடுக்கும் காட்சி வசனங்களற்று வரும் இடத்தில் எக்கோடியன் , மேண்டலின் , குழு வயலினிசை என ஒரு என ஒரு இசைநாடகத்தையே நடாத்திக்காட்டுகிறார்கள் இசையமைப்பாளர்கள். நாயகன் திருடனாவது அந்தக்காட்சியின் மூலம் காட்டப்படுகிறது
பாவ மன்னிப்பு
டைட்டில் இசை
மத ஐக்கியம் குறித்த கதைக்கு முதன் முதலில் கோயில் இசையும் அதைத்தொடர்ந்து சர்ச் இசையும் ஒலிக்கும் இந்த இசையில் புதுமையான ஹோரஸ் இசையும் , விறுவிறுப்பான வயலின் இசையும் அதைத் தொடர்ந்து பொங்கஸ் தாளத்துடன் இணைந்து வரும் “வந்த நாள் முதல் ” பாடலின் மெட்டில் பலவிதமான பாணிகளில் [Variations ] இசை இணைந்து வரும்.. அதைத் தொடர்ந்து வரும் கோயில் காடசியின் பின்னணியில் மங்களகரமான கல்யாணி ராகம் பின்னணியுடன் இணைந்து படத்தின் முதல் காட்சியாய் மலரும் !
பாதகாணிக்கை
இந்தப்படத்தின் முகப்பு இசையில் [Title Music] ரேவதி, சாருகேசி , ஹமீர் கல்யாணி, சாரங்கா உள்ளிடட ராகங்களை ராகமாலிகையாக அமைத்திருப்பார்கள் ஆரம்பிக்க காட்சியில் கோயிலிலிருந்து நாதஸ்வரத்துடன் கதாபாத்திரங்கள் ஊர்வலமாக வருவதும் கிராமிய சூழலை மிக அற்புதமாக வெளிப்படுத்தும். ஜெமினி கணேஷன், விஜயகுமாரி மற்றும் சாவித்திரி என முக்கோணக்காதலை வெளிக்காட்டும் இந்த திரைப்படத்தில் இந்தப்பாத்திரங்கள் அறிமுகமாகும் காட்சிகளில் மோகனராகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
கற்பகம்:
கற்பகம் படத்தில் பண்ணையார் ரங்காராவ் , தனது மாப்பிள்ளை ஜெமினியின் நற்குணத்தை பார்த்து பெருமைப்படும் போது தனது மகளை பார்த்து “எப்படி” என்பது போல ஒரு பெருமிதப்பார்வை பார்ப்பார் , அப்போது வெட்கமும் ,பெருமிதமும் கொள்ளும் கே.ஆர்.விஜயா முகம் காட்டப்படும் போது ஒரு சொற்ப நேரத்தில் குழலிசை ஒலிக்கும் !
அதே போல ஜெமினியை இழிவுபடுத்துவதாக எண்ணி அகங்காரம் பிடித்த முத்துராமன் “அவனை உங்க மருமகன் ஆக்குங்க..எனக்கென்ன ” என்று சொல்லும் பொழுதில் , ஆனந்தத்துடன் குதூகலிக்கும் ரங்காராவ் ” இப்போ தாண்டா நீ உருப்படியா ஒரு செய்தி சொல்லியிருக்கிறாய் ” என்ற இடத்தில் ஒரு குதூகலமான குழலிசை வரும்!
கற்பகம் படத்தில் அண்ணனின் மகளில் பாசம் வைத்து வளர்க்கும் கே.ஆர்.விஜயா – ஜெமினி தம்பதிகள் , குடும் பத் தகராறால் பிரித்தெடுக்கப்படும் குழந்தையின் பிரிவால் வாடும் காட்சி தொடக்கம் , பாசமற்ற உண்மையான தாய் , தந்தையுடன் அந்நியப்பட்டு குழந்தை தப்பி ஓடிவந்து விஜயாவிடம் வந்து சேருவதும்,குழந்தையின் தாய் ஷீலா பலவந்தமாக பறித்து செல்லுவதும் , குழந்தை கதறுவதும் அவர்களைத் தொடர்ந்து விஜயா ஓடிவருவதும் , அதே நேரத்தில் வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டு நின்ற முரட்டுக்காளை கட்டறுத்துக் கொண்டு ஓடி வந்து குழந்தையை முட்ட வரும் போது விஜயாவை முட்டுவதும் அந்தக்கணத்திலேயே விஜயா மரணமடைவதுமான அந்த நீண்ட தொடர் காட்சியில் வரும் பலவிதமான பின்னணி இசையும் . திருமணத்தில் சோகமான ராகமான கானடா ராகத்தையும் , முதலிரவுக்காட்சியில் சோகமான வகையில் ” ஆயிரம் இரவுகள் ” பாடல் ஒலிப்பதும் அந்தக்காட்சிகளைத் தொடர்ந்து படம் முடியும்வரை , உணர்ச்சி மிகுந்த பல காட்சிகளில் அங்கங்கே நெஞ்சைத் தொடும் இசையை மெல்லிசைமன்னர்கள் வழங்கியிருப்பார்கள்.
வாத்திய இசை ஜாலங்கள்;
தென்னிந்திய ,வட இந்திய வாத்தியங்களுடன் மேலைத்தேய வாத்தியங்களை கலந்து மெல்லிசைமன்னர்கள் பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அதிகமான அளவில் தங்களுக்கு எட்டிய வாத்தியங்களையெல்லாம் ஒன்று விடாமல் 1960களிலேயே பயன்படுத்திக்காட்டினார். அதற்கேற்ற சிறந்த கலைஞர்களும் அவர்களுக்கு அன்று கிடைத்தனர். ஒவ்வொரு வாத்தியத்திலும் அவர்கள் தலைசிறந்த கலைஞர்களாக விளங்கினர் என்பதை அன்றைய வாத்தியக்கலைஞர்களாக இருந்த பலர் கூறியிருக்கின்றனர். குறிப்பாக இசைஞானி இளையராஜா ” விஸ்வநாதன் இசைக்குழுவில் இருந்த பியானோ கலைஞரான பிலிப் போன்றோருக்கு அருகில் போகவே பயமாக இருக்கும் ; அவ்வளவு திறமைசாலிகள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மெல்லிசைமன்னர்களின் இசையில் பின்னணியாக ஒலித்த வாத்தியங்களில் புல்லாங்குழல் ,வயலின் ,செனாய் , பியானோ போன்ற வாத்தியங்களை மிக அதிகமாய் பயன்பட்டன எனலாம். குறிப்பாகக் குழலிசை வார்த்தையில் சொல்ல முடியாத அளவில் எண்ணிறைந்த படங்களில் பயன்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல குழு வயலின் இசையை அற்புதமாகக் கையாண்டு வியக்க வைத்தார்கள்.
பாலும் பழமும் படத்தில் மனைவின் பிரிவால் சிவாஜி வாடும் பழைய நினைவுகளை மீட்டும் காட்சியில் ஒத்தடம் கொடுக்கும் குழலிசை , அதனுடன் இசைந்து வரும் வயலின், எக்கோடியன் என பின்தொடரும் இதயத்தைத் தொடரும் இசை ! அதே போல ஆராய்ச்சி செய்து களைத்து சிவாஜி உறங்கும் காட்சியில் அருமையான குழலிசை. அதே போல பாசம் படத்தில் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி மாட்டு வண்டியில் போகும் போதும் இனிய குழலிசை வரும். கர்ணன் படத்தில் சிவாஜி தேவிகாவை சந்திக்கும் முதல்காட்சியில் வரும் கனிந்த குழலிசை.
புதிய பறவை படத்தில் சிவாஜி சரோஜாதேவியுடன் தேயிலைத் தோட்டத்தில் நடந்து வரும் காட்சியில் வயலினிடன் இணைந்த இனிய குழலிசை அருமையாக இருக்கும். அதே படத்தில் உறக்கம் கலைந்த சரோஜாதேவி, சிவாஜியுடன் உரையாடும் இரவுக்காட்சியில் வரும் பின்னணி இசையில் வயலின் ,எக்கோடியன், ஹம்மிங் என கலந்து வரும் இனிய இசையில் குழலும் கலந்து இனிமை சேர்க்கும்..
தந்திக்கருவிகளில் தலையாயது வயலின் என்பார்கள். மேலைநாட்டு செவ்வியலிசையிலும் பிரதான பங்குவகிப்பது வயலின் இசைக்கருவி என்பதுடன் உலக சினிமாக்களிலும் கனதியான இசையைத் தரும் கருவி வயலின் என்றால் மிகையல்ல ! மெல்லிசைமன்னர்கள் அதன் சிறப்பறிந்து எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் பொருத்தமாக பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள்
குறிப்பாக மேலைத்தேய பாணியை இசையை சில படங்களில் கையாண்ட மெல்லிசைமன்னர்கள் ஹார்மோனி இசைக்கு இசைவாக குழு வயலின் இசையை அற்புதமாக பயன்படுத்தியமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக, அவர்களின் பொற்காலம் எனக்கருதப்படும் 1960களில் வெளிவந்த புதிய பறவை , பணத்தோட்டம் , பாலும் பழமும், பாவமன்னிப்பு மற்றும் இன்னும் படங்களைக் கூறலாம். ஆனால் பின்னணி இசையில் அவர்களின் படைப்பாற்றலின் உச்சம் , நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வெளிப்பட்டது என்று நான் கருதுகிறேன்.
பொதுவாக கதை சொல்வதில் ஒரு இயந்திரகதியான வேகம் இருந்த தமிழ் திரைப்படச் சூழலில் இசையமைப்பாளர்களுக்கு அதிக இடமிருப்பதில்லை. விரைவான கதை நகர்த்தல் ,எடிட்டிங் போன்றவை அதற்கு காரணமாக இருக்கின்றன. பின்னணி இசைபற்றிய அதிக விழிப்புணர்ச்சியும் அந்தக்காலத்தில் இருக்கவில்லை. திரைக்காட்சிக்கு பின்னால் ஓடும் ஏதாவது ஒரு சத்தம் இருப்பது என்றே கருதப்பட்டது.
ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் ஒரு சாதாரண கதை என்றிருந்தால் அதுவும் ஏனைய படங்களை போலவே தான் இருந்திருக்கும். ஆனால் அந்தப்படம் மனதில் பயபீதியை எழுப்பக்கூடிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதால் தனியே வசனங்களாலோ , பாடல்களாலோ அந்த உணர்வைக் கொண்டுவர முடியாது என்பதால் மட்டுமே பின்னணி இசையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அந்த இசை இல்லையென்றால் படத்தில் எந்த உணர்வும் சரியாக வெளிப்பட்டிராது போயிருக்கும்.
சாதாரண நடைமுறை வாழ்வில் கேட்க ஆவலைத் தூண்டும் பேய் ,பிசாசு கதைகள் போன்றவற்றிற்கு தனியிடம் இருந்து வந்துள்ளது. மந்திர தந்திர , பேய், மறுபிறவி போன்றவை பற்றிய புனைகதைகளைக் கேட்பதில் பொதுவாக மனிதர்களுக்கு எப்போதும் ஒரு ஆவல் இருந்து வந்திருக்கின்றது.நம்மையும் ,நமது சூழலையும் ஏதோ ஒரு மர்மம் சூழ்ந்திருப்பதாக மனதில் ஒரு இனம்புரியாத பயம் மனிதர் மனதில் ஓட்டிக்கொண்டே இருக்கிறது. அதன் மேல் கட்டப்பட்ட கற்பனைக்கதை தான் நெஞ்சம் மறப்பதில்லை. முற்பிறப்பு பற்றிய கற்பனைக்கதை! ஹிந்தியில் திலீப்குமார் – வையந்திமாலா நடித்துப் புகழ்பெற்ற மதுமதி படத்தின் பாதிப்பு கொண்ட கதை!
பாடசாலை விடுமுறைக்கு நண்பனின் ஊருக்குச் செல்லும் கதாநாயகன் அங்கு அனுபவிக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் கதையாகச் சொல்லப்படுகிறது. ஊருக்கு உள்ளே போகும்போதே தனக்கு ஏற்கனவே அந்த இடங்கள் பரீட்சயமாக உள்ளதை உணர்கிறான்.
நண்பனின் வீட்டிலேயே பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நண்பனது சகோதரி பற்றிய மர்மத்தையும் அவள் சில மாதங்களுக்கு முன் தண்ணீர் எடுக்க சென்று நீண்ட நேரம் காணாமல் போனதாகவும் , தேடி போன போது, ஊருக்கு எல்லையிலிருக்கும் ஒரு பாழடைந்த மண்டபத்தின் அருகில் உள்ள பூங்காவில் சித்தப்பிரமை பிடித்த நிலையில் இரவு வரை நின்றதாகவும் , அதிலிருந்து அவளை ஒரு அறையில் பூட்டி வைத்திருப்பதாகவும் நண்பன் கூறுகிறான்.
“அந்த பாழடைந்த மண்டபத்திற்கு யாரும் போவதில்லை, அங்கே பேய்கள் இருப்பதாகவும் “ நண்பன் கூற கதாநாயகக்கனுக்கு அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. அன்றிரவே தனியே இரண்டு மைலுக்கு அப்பால் இருக்கும் அந்த பாழடைந்த மண்டபத்தை பார்க்க எல்லோரும் உறங்கிய பின் புறப்படுகிறான். அவனுடன் மெல்லிசைமன்னர்களின் இசையும் பின் தொடர்கிறது.
//…வீட்டிலிருந்து மெதுவாக நடக்கின்றான்..சுழலும் வயலினிசை ஆரம்பித்து முடிய காட்டுக்குள் பிரவேசிக்கும் காட்சி ஆரம்பிக்கிறது ,, அபபோது எக்கோடியன் , கிளாரினெட் வாத்தியங்களை இசைக்க காட்டுப் பறவைககள் , புள்ளினங்கள் சத்தம் இரவின் ஒலிநயங்களுடன் அசைகிறது….பங்களாவை சற்று நெருங்கும் போது சைலபோன் இசைக்கருவியின் அதிர்வோடு பறவையினங்களின் ஒலி ஓங்கி ஒலித்து மறைகிறது….இப்போது பறவைகளின் ஒலிமட்டும் கேட்கிறது ,,, திடீரென பலமாக வயலினிசை ஒலிக்க மெல்லிய புகைகளினூடே ஒரு வெள்ளை உருவம் கலந்து மறைகிறது… இப்போது பாழடைந்த மண்டப வாசல் தெரிகிறது ..காற்று ஒலியுடன் நரிகளின் ஒலியும் கேட்கிறது…மண்டப வாசலை நெருங்கிவிட்டான் .. குருவியின் ஒலியுடன் சைலபோன் கருவியும் ஒலித்து மறையும் தருணம் பின்னாலிருந்து ஒரு பெண்ணின் ஓலம் ஹம்மிங்காய் [ நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலின் ஹம்மிங் ] எழுகிறது…கதாநாயகன் சற்றுப்புறமும் தேடுகிறான்….ஆனால் யாரையும் காணவில்லை …காற்று ஓசையுடன் கிளாரினெட் மற்றும் குழு வயலின் இசை ஆரம்பிக்கிறது..கமரா மண்டபத்தின் பக்கவாட்டிலிருந்து பிரதான வாசலை நெருங்குகிறது …மீண்டும் அந்தப் பெண்ணின் அழுகை ஒலி ஹம்மிங்காக ஒலிக்கிறது …சற்றுமுற்றும் பார்த்த நாயகன் குனிந்து திரும்புகிறான் ..அப்போது நிலத்திலிருந்து , சருகுகள் காற்று வேகத்தில் பறக்க , யாரோ நடப்பது போல சலங்கை ஒலியும் கேட்கிறது….நாயகன் மண்டபவாசலை நோக்கித் திரும்புகிறான்…உள்ளே இருந்து வெள்ளைப்புகையிலிருந்து ஓர் பெண் வெள்ளை உருவாக அவனை நோக்கி கிட்ட வந்ததும் மறைந்து விடுகிறாள் ..பயந்து போகிற நாயகன் , காடுகளைக் கடந்து தலை தெறிக்க தனது வீடு நோக்கி ஓடி வீடு சேர்கிறான்….அப்போது குழு வயலின்இசை உச்சம் பெறுகிறது … நாயகன் வேர்த்து விறுவிறுத்து ஓடி பாதுகாப்பாக வீடு வந்து சேர்கிறான்…. //
பாழடைந்த மண்டபத்தைப் பார்த்த ஆவல் முழுமையடையாததால் அடுத்த நாள் இரவு மீண்டும் செல்கிறான். மீண்டும் மெல்லிசைமன்னர்களுக்கு அருமையான வாய்ப்பாக அமைகிறது.
மீண்டும் இரவுக்காட்சி
இரவு சாப்பாடு முடித்தபின் உறக்கமில்லாமல் தவிக்கும் நாயகன் சிகரெட் புகைத்த வண்ணம் அங்குமிங்கும் உலாவுகிறான். மீண்டும் பாழடைந்த மண்டபத்தில் ஒலித்த பெண்ணின் அவலமும் , துயரமும் கலந்த ஓலம் [ Hamming] காதில் ஒலிக்கிறது.எங்கும் நிசப்தம் .. சற்றுமுற்றும் பார்க்கிறான்… மீண்டும் அதே அவல ஓலம் சற்று நீண்டு ஒலிக்கிறது…மீண்டும் இரவின் அமைதி ஒலி..! மேல்மாடியிலிருந்து படிகளிலிருந்து கீழே இறங்கி வருகிறான் ….[ இனம் புரியாத உணர்வை வெளிப்படுத்துவது போல வயலினிசை மேலெழும்புகிறது ].. வயலின் முடியும் தருணத்தில் மீண்டும் நாயகன் காட்டுக்குள் நுழையும் காட்சி ஆரம்பிக்கிறது. – அந்தக்காட்சியில் வயலினுடன் , ஓபோ , குழல் இணைந்து கொள்ள இரவு ஒலியுடன் , காற்றின் ஒலியும் இணைந்து நீண்டு ஒலிக்க … மண்டப வாயிலில் நின்று திரும்பிப் பார்க்கும் போது திடீரென வெண்தாடி வைத்த கிழவனின் கோர உருவம் கண்ணில் தென்பட அதிர்ச்சியில் வீழ்கிறான்..[ அந்தக்காட்சியில் வயலினிசை உச்சம் பெற்று ஒலிக்கிறது ] விழுந்தவன் ஓடிவந்து மீண்டும் அந்த இடத்தை பார்க்கிறான், அவன் பார்த்த அந்த உருவம் மறைந்துவிட்டது. [ வயலின் இசை மீண்டும் ஒலிக்கிறது ] பயத்தில் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கும் போது தடக்கி விழுந்து விடுகிறான். எழுந்து தன்னைச் சுதாரிக்க முனையும் போது மீண்டும் அந்தப் பெண் குரலின் அவலம் அவனைத் தடுக்கிறது.
திரும்ப வருகிறான் …[ வயலின் குழு இசையும் , புல்லாங்குழல் இசையும் இணைந்து திடீர் அதிர்ச்சி கொடுக்க வெள்ளை உடை உடுத்திய ஓர் பெண் உருவம் தெரிகிறது.. வயலின் இசை மேலெழுகிறது.. அந்தப் பெண்ணை நோக்கி நாயகன் மண்டபவாசலின் படியேறுகிறான் …அவளைத் தேடுகிறான் … [ அந்த 10செக்கனிலும் வயலின் இசை ஒலிக்கிறது ].. மீண்டும் பெண் குரல் நீண்டு ஒலிக்கிறது…. நாயகன் அவளை நோக்கி நடந்து நெருங்குகிறான். காற்றின் அசைவில் ஒலிகேட்க மண்ணில் கிடந்த சருகுகள் காற்றில் அசைந்து போகின்ற அதே வேளையில் யாரோ நடக்கும் நடந்து போகும் ஒலி போலவும் சலங்கை ஒலியும் இணைகிற போது அதைத்தொடர்ந்து வயலினிசையும் , ஓபோ இசையும் கலந்து ஒலிக்கும் கனிந்த இசையுடன் மீண்டும் பாடல் ஆரம்பிக்கிறது! “நெஞ்சம் மறப்பதில்லை ” பாடலின் பல்லவி நீண்டு ஒலித்து , ஒற்றைக் குயிலின் அழுகுரலுடன் நிறைவடைகிற போது அந்தப்பெண்ணின் உருவமும் புகையாய் மண்டபச்சுவரில் மறைகிறது
மண்டபச் சுவரை நாயகன் உற்றுப் பார்க்கிறான்… மண்டபச்சுவரில் தெரியும் ஓர் ஆணின் மங்கிய உருவம் அவனைப்போலவே இருப்பதை பார்க்கும் போது மீண்டும் அந்தப்பெண்ணின் பாடல் கேட்கிறது… நிசப்தம் ..நாயகன் முகம் க்ளோசப்பில் காட்டப்படுகிற வேளையில் இரவு பூச்சி , புள்ளினங்கள் ஒலி மட்டும் கேட்கிறது… திடீரென மாடிப்படியிலிருந்து பெரிய கல் ஒன்று உருண்டு விழுகிறது … மீண்டும் அமைதி ,, இரவின் ஒலி மட்டும் கேட்கிறது … மீண்டும் வயலினிசை எழுகிறது ..அதனுடன் சைலபோனும் ஒலித்து ஓய… திடீரென இன்னுமொரு ஓவியம் [ நம்பியார் ] சுவரில் தெரிகிறது ..ஓவியத்தை உற்றுப் பார்க்கின்றான்…. அமானுஷ்யம் தரும் சைலபோனும் , வயலினும் இணைந்து வரும் இசையுடன் காற்றின் வேகமும் இணைந்து தொடர சுவரிலிருந்த நம்பியார் ஓவியம் எக்காளமிட்டு சிரிப்பது தெரிகிறது .. நாயகன் முகம் காட்டப்படுகிறது ..ஏதோ ஒரு தெளிவு பிறந்தது போல முகம் மாறுகிறது.. காட்சி நினைவுச் சுழி போல சுழல்கிறது …அந்த நினைவுச் சுழி நதி நீரோட்டத்தில் கலந்து வருகிறது … நாயகன் முகம் அதனுடன் இணைத்துக் காட்டப்படுகிற அந்த காட்சியில் எரிமலை ,கடல் கொந்தளிப்பு , மேகங்களின் விரைந்த ஓட்டம் , மின்னல் வெட்டு எனக் காட்சிகளின் அடுக்கப்பட்ட [ Montage ] தொகுப்பாக காட்டப்படுகிறது.
அப்போது நாட்டுப்புறப்பெண்ணாக நாயகியின் [ தேவிகா ] உருவமும் , நம்பியாரின் உருவமும் நாயகனுக்கு தெளிவாகத் தெரிகிறது …. அதோடு பழைய நினைவுகளுக்குத் திரும்புவதாக பாடல் ஆரம்பிக்கிறது .. படத்தின் கதையும் Flashback ஆக ஆரம்பிக்கிறது!
மெல்லிசைமன்னர்களின் பின்னணி இசையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசை மிக முக்கியமானதொரு அம்சமாகும். இது போன்றதொரு ஹார்மோனி இசையான சிம்பொனி அமைப்பு சார்ந்த இசையை அவர்கள் வேறு படத்தில் பயன்படுத்தவில்லை அல்லது இவ்வளவு விரிந்த இசைக்கான ஒரு களம் – வெளி அவர்களுக்கு வேறு படங்களில் கிடைக்க வில்லை என்று எண்ணுகிறேன்.
” நெஞ்சம் மறப்பதில்லை ” என்ற படத்திற்கு நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை அமைத்து , அதையே படத்தின் Theme Music ஆகப் பயன்படுத்தியதுடன் அந்த மெட்டைச் சார்ந்தே பின்னணி இசையை பலவிதமாக, மேலைத்தேய இசை முறையில் சொல்வதானால் Music variations என்ற அமைப்பு முறையை பயன்படுத்தி சாதனை படைத்தார்கள். இந்த Music variations என்ற இசைநுட்பத்தை மேலைத்தேய செவ்வியலிசைக்கு [ Western Classical ] அறிமுகம் செய்து புகழ் பெற்றவர் ஜோசப் ஹைடன் என்பவராகும்.
இந்த வகை இசையை மேலைத்தேய இசை நன்கு தெரிந்தவர்களே இசையமைக்க முடியும்.கட்டுரையின் ஆரம்பத்தில் ஹிந்தி திரையிசையில் பெரிய ஜாம்பவான்களாயிருந்த நௌசாத் , அணில் பிஸ்வாஸ் போன்றோருக்கு அவர்கள் அமைக்கும் மெட்டுக்களிலேயே , அவர்களின் அனுமதியுடன் அவர்களின் உதவியாளர்களாயிருந்த அல்லது வாத்தியக்கலைஞர்களை ஒருங்கிணைப்பாளர்களாயிருந்த கோவாவைச் சேர்ந்த மேலைத்தேய இசை தெரிந்த கலைஞர்கள் எவ்விதம் கார்மோனி இசையை அமைத்துக் கொடுத்தார்கள் என்ற குறிப்பைத் தந்தேன். அதுபோல ஒருவராக மெல்லிசைமன்னர்களின் உதவியாளராக இருந்த ஹென்றி டானியல் இருந்திருப்பார் என நினைக்கிறேன்.
மெல்லிசைமன்னர்களின் பின்னணி இசையில் முக்கிய பங்காற்றியதில் வயலின் முக்கியமானது. மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி ஒரு சிறந்த வயலின் வித்துவான் என்பது முக்கியமானதாகும். நல்ல வயலின் கலைஞர்களும் அவர்களது இசைக்குழுவில் இருந்ததுடன் அவர்களது உதவியாளர்களாகவும் இருந்துள்ளனர். பிற்காலத்தில் புகழபெற்ற இசையமைப்பாளராக வளர்ந்த சியாம் என்பவர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர் முட்டுமல்ல மெல்லிசைமன்னர்களின் பலஉதவியாளர்களில் ஒருவரான ஹென்றி டானியல் சிறந்த இசைநடாத்துனராகவும் [ Conductor ] வயலின் பகுதிக்கு பொறுப்பானவர்கவும் விளங்கினார். ஹென்றி டானியல் உதவியாளராகப் பணியாற்றிய படங்களில் வயலின் இசை அற்புதமாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
பொதுவாக மெல்லிசைமன்னர்களுக்கு பல இசை உதவியாளர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களில் ஹென்றி டானியல் பற்றி இதுவரை யாரும் பேசியதும் இல்லை , தகவல்களும் இல்லை. ஆனால் எனது அவதானத்தில் அவர் உதவியாளராக இருந்த அத்தனை படங்களிலும் வயலினிசை சிறப்பாக இருப்பதையும் மேல்நாட்டு ஹார்மோனி இசை சார்ந்து தரம் மிக்கதாக இருப்பதையும் அவதானித்திருக்கிறேன்.
மெல்லிசைமன்னர்களின் உதவியாளர்களாக இருந்த ஜி.கே .வெங்கடேஷ் , ஆர்.கோவர்தனம் , ஜோசப் கிருஷ்ணா போன்றோர் பிற்காலத்தில் இசையமைப்பாளராக இருந்தனர் என்பதை பலரும் அறிவர். ஆனால் ஹென்றி டானியல் பற்றிய செய்திகள் மேகம் மூடிய நட்சத்திரமாகவே இருக்கிறது. புதிய பறவை படத்தில் கப்பலில் ஓர் ஆங்கிலேயர் பாடுவதாக அமைந்த பாடலைப் பாடியவர் ஹென்றி டானியல். புதிய பறவை படத்தின் டைட்டிலில் பின்னணி பாடியவர் பெயரில் அவரது பெயரும் இருக்கிறது. அது மட்டுமல்ல ஜி.ராமநாதன் உத்தமபுத்திரன் படத்தில் இசையமைத்த ” யாரடி நீ மோகினி ” பாடலின் பின்பகுதியில் வரும் ரோக் அண்ட் ரோல் பகுதி ஹென்றி டானியலின் பங்களிப்பாகும்.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தைப் போல சிறப்பாக அமையாவிட்டாலும் ராமன் எத்தனை ராமனடி , உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் சில காட்சிகளில் பொருத்தமான ஹார்மோனி இசையை நாம் கேட்க முடியும்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் ஊரில் சாப்பாட்டு ராமனாக , அப்பாவியாக , ஏழையாக இருந்த சிவாஜி , ஊரில் பணக்காரியான கே.ஆர் . விஜயாவின் மீது கொண்ட காதலால் , அவளின் தூண்டுதலால் , பெரிய நடிகனாக, பெரும் செல்வந்தனாக மாறி ஊருக்குத் திரும்பிய போதும் அவளை அடைய முடியாத ஏமாற்றத்தால் , அந்த வேதனையால் , அவர்கள் உலாவிய பழைய இடத்திற்கு வருவதும் , பழைய சம்பவங்களை நினைவூட்டிப் பார்க்கும் காட்சியில் வரும் இசையும் – அதே போல உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி சௌகார் ஜானகி வாய்ச்சண்டை உச்சம் பெற்று சிவாஜி அடிப்பதும் , வீட்டை விட்டு வெளியே போவதும் சிவகுமார் ஓடிச் சென்று உள்ளே போகும்படி வேண்ட , சிவாஜி மீண்டும் சௌகாருடன் சமாதானமாவதுமான காட்சியில் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கும்
பலவிதமான வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தியும் , ராகங்களை பயன்படுத்தியும் , பல்வேறு இசைவகைகளைப் பயன்படுத்தி ஏராளமான படங்களுக்கு இசைவழங்கிய விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை கனதியான பின்னணி இசையை 1960களிலேயே தந்தார்கள் என்பதும் , பிரிவுக்குப் பின்னர் அதன் தொடர்ச்சி ஓரளவு சிறப்பாய் இருந்ததும் வர வர பின்னணி இசையின் போக்கு மாறியதையும் ஒரே விதமான இயந்திரத்தன்மை இருந்ததையும் அவதானிக்க முடியும். 1970களிலேயே சில படங்களில் இரைச்சல்கள் அதிகமிருந்தததையும் குறிப்பிடலாம்.
பல ரகங்களில் இசை என்று கூறும் போது நகைச்சுவைப் படங்களில் தனித்துவமிக்க இசையையும் விஸ்வநாதன் பயன்படுத்தினார். அவற்றில் காட்டூன் இசையின் வேகமும் ,சாயல்களும் அதிகமிருக்கும். அவற்றிற்கு உதாரணமாக அன்பே வா , உத்தரவின்றி உள்ளே வா , பாமா விஜயம் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.
உயர்ந்தமனிதன் , ராமன் எத்தனை ராமனடி போன்ற சிவாஜியின் படங்களில் வித்தியாசமான இசையும் , எம். ஜி .ஆர் படங்களில் விறுவிறுப்பான ஓட்டங்கள் கொண்ட இசையென சில வித்தியாசங்களையும் விஸ்வநாதன் காண்பித்தார். அவரைப் பொறுத்தவரையில் கதைக்கு தேவையான இசையைக் கொடுத்தார் என்றே நாம் கருத வேண்டியுள்ளது.
பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசைகளில் கவனம் செலுத்தியது மட்டுமல்ல சினிமா இசைக்கு வெளியேயும் மெல்லிசை மன்னர்கள் பலவிதமான இசை முயற்சிகளிலும் தமது பங்களிப்பை செய்திருப்பது அவர்களின் பல்துறை இசைசார்ந்த ஈடுபாடாக இருந்தது.
[ தொடரும்…]