மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 27 ] T .சௌந்தர்

பிறமொழிகளும் மெல்லிசைமன்னரும்:  

தமிழ் திரையிசையின் முன்னோடி இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன் , எஸ்.வி. வெங்கடராமன் தமிழ் படங்களில் மட்டும் இசையமைத்துக் கொண்டிருந்த வேளையில் , தமிழ் படங்களுக்கு மட்டுமல்ல தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டிருந்தவர் அன்று இளைஞராக இருந்த சி.ஆர். சுப்பராமன்.

சி.ஆர். சுப்பராமன்

அந்தக்கால புகழ்பெற்ற நடிகையான பானுமதியின்  பரணி பிக்சர்ஸ் கமபனியின் ஆஸ்தான இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் ! பானுமதியின் தாயரிப்பில்  ரத்னமாலா , லைலா மஜ்னு , சண்டிராணி  போன்ற படங்கள் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் வெளிவந்ததுடன், லைலா மஜ்னு , சண்டிராணி   இசைக்காகவும் பேசப்பட்டன.

சுப்பராமனின் அகால மரணத்தால் அவர் நிறைவு செய்யாத படங்களை அவரது உதவியாளர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி நிறைவு செய்தனர். தங்கள் குருநாதர் போலவே பிற மொழிப்படங்கள் சிலவற்றிற்கும் இசையமைத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.

பக்த மார்க்கண்டேயா , தெனாலிராமன் , குடும்ப கௌரவம் , ராஜா மலையசிம்மன்  போன்ற படங்கள் தமிழிலும் , தெலுங்கிலும் 1950 களின் ஆரம்பத்திலேயே மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்தன. 

குறைந்த அளவில் திரைப்படங்கள் வெளிவந்த காலத்தை ஒட்டிக்   கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது  வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த போதிலும் தமிழ் படங்களில் இசையமைப்பதை முதன்மையாகக் கருதியதையும், முன்னுரிமை கொடுத்ததையும் காண்கிறோம்.

1950  களின் தமிழ் சினிமாக்களில் வசனங்கள் என்ற பெயரில் எழுதப்பட்ட பிறர் கேட்பதற்கான செந்தமிழ் நடையில் அமைந்த உரைகள் ,அல்லது செந்தமிழ் நடையில் அமைந்த சொற்பொழிவுகளாக  இருந்தபோதும் அதைப்போலல்லாது  முழுமையாக செவ்வியல் சாராது மெல்லிசைசார்ந்து இசை வழங்கியவர்கள்  மெல்லிசைமன்னர்கள்.

இசையில் மெல்லிசையை முக்கியமாக கருதிய மெல்லிசைமன்னர்கள் பிராந்திய மொழிகள் எதுவானாலும் அந்த மொழிகளின் வழக்காறுகளை, தனித்தன்மைகளை  வெளிக்கொணராது மெல்லிசையை மட்டுமே பிரதானமாகக் கொண்டனர். அதாவது அவர்களது இசை எந்தப்பகுதியைச் சார்ந்த இசை என்பதை அவர்களது இசையை வைத்து கூறிவிட முடியாது மெல்லிசைமன்னர்களின் இசையில் எந்த பிராந்தியத்தின் மண்வாசனையும் வீசாது.

ஹிந்தி திரைப்படங்களில் இசையமைத்த பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த இசையமைப்பாளர்கள் தங்கள் தங்கள் மாநிலம் சார்ந்த இசைகளை தங்களது பாடல்களால் கலந்து கொடுத்தார்கள். வங்காளிகளான சலீல் சௌத்ரி ,ஹேமந்த் குமார் , எஸ்.டி.பர்மன் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வங்காள நாட்டு பாங்கு  இசையையும் , நௌசாத் இசையில் உத்தர பிரதேசத்து இசையையும் , சங்கர் ஜெய்கிஷன் இசையில் பஞ்சாப் இசையையும் நாம் கேட்க முடியும். 

எஸ்.டி.பர்மன் , சலீல்  சௌத்ரி , ஆர்.டி.பர்மன்  போன்றோர் வங்காள  நாட்டுப்புற இசையின் படகுப் பாடல்களை மிக பொருத்தமாக , அழகாக பயன்படுத்தினார்கள். எஸ்.டி பர்மன் இசையில் சுஜாதா என்ற, படத்தில் Sun Mere Bandhu Re என்ற பாடலும், Bandini [1963] படத்தில் ” o janewale ho sake to laut ” என்ற பாடலும் ,   சலீல் இசையில் Char  Diwari படத்தில் “kaise manaaun piyava ” என்று தொடங்கும் பாடலும் , ஆர்.டி.பர்மன் இசையில் ” O Majhi Re Apna Kinara ”  என்ற பாடலும் வங்காளிகள் bhatiali பாடல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.

எஸ்.டி.பர்மன், சலீல்  சௌத்ரி  மட்டுமல்ல ஹிந்தியில் புகழ் பெற்ற வங்காள இசையமைப்பாளராக இருந்த ஹேமந்த் குமார் தாகூரின் பாடல் [ ரவீந்திர சங்கீதம் ] மெட்டுக்களில் அமைத்து  பிரபலப்படுத்திய முக்கிய இசையமைப்பாளராவார்.

இன்று மெல்லிசையின் உச்சங்களாகக் கருதப்படும் இப்பாடல்களின் ஊற்று அவர்கள் சார்ந்த நாட்டுப்புற இசையின் தாக்கத்தின் பிரதிபலிப்புகளே

கே.ராகவன்

மலையாள சினிமாவில் நீலக்குயில்  படத்தில்  அறிமுகமான  ராகவன் மாஸ்டர்  மலையாளத்து நாடன் பாட்டுக்களை அறிமுகம் செய்தார்.  அந்தப்படத்தில் அவரே இசையமைத்துப்பாடிய ” காயலாரிகத்து வலையெண்ரிஞ்சப்போ  வளை கிலுக்கிய சுந்தரி ” என்ற பாடல் மலையாள நாட்டார் பாடலின் இனிமையைக் கொண்டது. மலையாள நாடன் பாடல்களின் மாதுர்யங்களைக் வெளிக்கொண்டுவந்ததில் பாடலாசிரியர் பி.பாஸ்கரன் மற்றும் ராகவன் மாஸ்டர், ஜி.தேவராஜன் போன்றோர்  முக்கிய பங்காற்றினர்..

Kerala People’s Arts Club என்கிற  கம்யூனிஸ்ட் கலை இயக்கத்திலிருந்து வந்த கே.ராகவன் , ஜி.தேவராஜன் மலையாள நாடன் பாடல்களின் மாதுர்யங்களை தங்கள் இசையில் இழைத்து பெருமை சேர்த்தார்கள்

மெல்லிசைமன்னர்களின்  இசையில்  பெரும்பாலும் மொழி வேறுபாடுகளால் அவை இன்ன மொழிப்பாடல் என வேறுபாடுமேயன்றி இசைமுறையில் அவ்வாறு அமைந்திருப்பதில்லை. மெல்லிசை என்ற பொதுமையான திரையிசை  நீரோட்டத்தில் தங்களை வெளிப்படுத்த விரும்பினார்கள் என்ற வகையிலும் அக்காலத்தின் தேவையை ஒட்டியதாக மெல்லிசையை முன்தள்ள வேண்டிய தேவையால் அவர்கள் கவனம் செலுத்தியதும் நம் கவனத்திற்குரியதாகும். இவர்களது முன்னோடியும் ,சமகாலத்தவருமான கே.வி.மகாதேவனின் இசையில் தமிழ்நாட்டு இசைமரபை ஒட்டி பாடல்கள் இருப்பதை நாம் கவனிக்க முடியும். நாட்டுப்புற இசைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதும் அதன் வகைமாதிரிகள் சில என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

ஆனாலும் எந்தவகை இசையென்றாலும் அதைக் கொடுக்கும் ஆற்றல்மிக்க மெல்லிசைமன்னர்கள்  சில படங்களில் அந்த கதை களத்திற்கு ஏற்ப தமது பாடல்களில் நாட்டார் பாங்கில் தந்ததையும் நாம் மறக்க முடியாது. சிவகங்கை சீமை , பாகப்பிரிவினை போன்ற படங்ளின் பாடல்கள் இதற்கு சான்றாகும். ஆனாலும்  அவர்களின்  பெரு விருப்பும் , மனச்சாய்வும் மெல்லிசையின் பக்கமே இருந்தது வெள்ளிடைமலை!

இந்திய சினிமாவில் ஹிந்தியை அடுத்து வியாபாரரீதியில் முன்னணியில் இருந்த தமிழ் சினிமாவில் இசையமைப்பது என்பதும், அதில் முன்னணியில் இருக்க முடிந்தததென்பதும் இலகுவான காரியமல்ல என்ற வகையில் மெல்லிசைமன்னர்கள் கூடியவரையில் தமிழ் சினிமாவிலேயே தங்களை நிலை நிறுத்த விரும்பியமையும் மிக இயல்பானதாகும்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களாக இருந்த போதும் தென்னிந்தியாவின் இதர மொழிகளிலும் இவர்களது இனிமைமிக்க இசையைப்  பயன்படுத்த பலரும் முனைந்தனர். அந்த வகையில் மெல்லிசைமன்னர் தெலுங்கு .மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியது தற்செயலானதன்று.

ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவின் இசையமைப்பாளர்கள் பலரும் தமிழ் திரைப்படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். எஸ்.ராஜேஸ்வரராவ், எஸ்.தட்க்ஷிணாமூர்த்தி , ஏ.ராமாராவ் , ஆதிநாராயணராவ் , மாஸ்டர் வேணு, டி.சலபதிராவ்  போன்றோர் மட்டுமல்ல இசையமைப்பாளர்களும் பாடகர்களுமான கண்டசாலா,ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி , ஆர்.பாலசரஸ்வதி தேவி ,கே. ஜமுனாராணி , பி.சுசீலா போன்ற பலரும் தெலுங்கு மொழிக்காரர்களே! தமிழ் சினிமாவின் மெல்லிசைமுன்னோடியான சி.ஆர்.சுப்பராமனும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவரே.

இக்கலைஞர்களும் தமிழ் திரையை தங்கள் இசையால் வளப்படுத்தியவர்கள்   என்பதை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. கலை என்பது மொழி எல்லைகளைக் கடந்தது. கேட்கக் கேட்க இன்பமளிக்கின்ற அற்புதமான பாடல்களை அவர்கள் நமக்குத் தந்தார்கள். அவற்றில் சில பாடல்கள் …

01  பிருந்தாவனமும் நந்தகுமாரனும் – மிஸ்ஸியம்மா  – ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 

02  வாராயோ வெண்ணிலாவே  – மிஸ்ஸியம்மா  – ஏ.எம்.ராஜா + பி.லீலா – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ் 

03  ஆகா இன்ப நிலாவினிலே  – மாயா பஜார்   – கண்டசாலா + பி.லீலா  – இசை : எஸ்.ராஜேஸ்வரராவ்

04  எந்தன் உள்ளம் துள்ளி  – கணவனே கண் கண்டா தெய்வம்   – பி.சுசீலா – இசை : ஏ.ராமாராவ்

05  அழைக்காதே நினைக்காதே  – மணாளனே மங்கையின் பாக்கியம்   – பி.சுசீலா – இசை : ஆதிநாராயணராவ்

06  கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே  – அடுத்த வீட்டு பெண்    – பி.பி.ஸ்ரீனிவாஸ்  – இசை : ஆதிநாராயணராவ்  

07  கோடை மறைந்தால் இன்பம் வரும்  – மஞ்ச்சல் மகிமை   – கண்டசாலா + பி.சுசீலா – இசை : மாட்ஸர் வேணு

08  மாறாத சோகம் தானோ   – மஞ்ச்சல் மகிமை   – கண்டசாலா + பி.சுசீலா – இசை : மாட்ஸர் வேணு 

இது போன்ற பல சாகாவரம் பெற்ற பாடல்கள்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

தெலுங்கு இசைக்கலைஞர்கள் தமிழ் திரைக்கு இனிய பாடல்களைத் தந்தது போலவே மெல்லிசைமன்னர்களும் தங்கள் இசையால் ஏனைய மொழிப்படங்களையும் வளப்படுத்தினர்.

1960 களில் வெளிவந்த மெல்லிசைமன்னர்களின் இனிய பாடல்கள் தெலுங்குத் திரைப்படங்களிலும் புகழ்பெறத் தொடங்கின. பெரும்பாலும் தமிழில் மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்த படங்கள் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது, அவர்களது  பாடல்களும் அப்படியே தெலுங்கு மொழிக்கு மாற்றப்பட்டன. இப்படங்களின் இசையமைப்பாளர்கள் வேறு சிலராக இருப்பதால், படங்களின் பின்னணி இசையை அந்தப்படங்களின் “இசையமைப்பாளர்கள்” செய்திருப்பார்கள் என்றே சொல்ல முடியும்.   ஏனெனில் பாடல்கள் அனைத்தும் மெல்லிசைமன்னர்கள் தமிழில் இசையமைத்துப் பெரும் புகழடைந்த பாடல்களே! தமிழில் வெளிவந்த பின்வரும் படங்கள் தெலுங்கு மொழியில் வெளிவந்தன.

பாசமலர் [Raktha Sambandham ]

நெஞ்சில்  ஓர் ஆலயம் [ Maarani Manasula ]

போலீஸ்காரன் மகள் [ Constable Kuluru ]

பாவமன்னிப்பு [ Paapa Parikaaram ]

பாசம் = Manchi Chedu

நிச்சயதாம்பூலம் [ Pelli Thampoolam ]

வீரத்திருமகன் [ Aasa Jeevulu ]

கர்ணன் [ Karna ]

படகோட்டி  [ Kaalam Mirindi ]

சர்வர் சுந்தரம் [ Server Sundaram ]

கறுப்புப்பணம் [ Kaavala Pillalu ]

ராமு [ RAmu ]

மெல்லிசைமன்னர்கள் ஒன்றாக இருந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள் இவையானாலும் , இருவரும் பிரிந்த பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனியே இசையமைத்த படங்களிலும் நல்ல பாடல்களைக் கொடுத்தார். குறிப்பாக 1970களில் குறைந்தளவு தெலுங்குப்படங்களில் இசையமைத்தாலும் சில படங்களில் தனித்துவமான பாடல்களை அமைத்தார். குறிப்பாக மரோ சரித்திரா என்ற படத்தில் நல்ல பாடல்கள் அமைந்தன. இப்படம் பின்னர் ஹிந்தியில் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் வெளி வந்தது. ஏலவே கே.பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை , மன்மதலீலை பின்னர் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் தெலுங்கில் அதே பாடல்களுடன் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன.

மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்:

தமிழ் நாட்டு மக்களின் இசை ரசனையை விட மலையாளிகளின் இசை  ரசனை சற்று வித்தியாசமானது. தங்கள் அடையாளங்களை பேண விரும்புபவர்கள். தங்களது கலை, கலாச்சாரத்தில் பெருமிதத்துடன் கொண்டாடுவது என பலவிதத்திலும் முன்னனணியில் நிற்பவர்கள்.     இவர்களது கலை ரசனையும் வித்தியாசமானது. கல்வியிலும் மேம்பட்டு நிற்பதால் , அதனால் விழிப்புணவு இதற்க்கெல்லாம் அடிகோலியது என்று கூறலாம். இவர்களது முன்னேற்றங்களில் கம்யூனிஸ்டுக்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

பொதுவாக மலையாளிகள் எல்லாவிதமான இசையையும் கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பதை அவர்கள் நடாத்தும் இசை நிகழ்ச்சிகளின் மூலம் காண முடியும். அந்த நிகழ்ச்சிகளில் பாடும் சிறுவயதினர் கூட பிற மொழிப்பாடல்களை மிக அநாசாயமாகவும் , அனுபவித்தும் தங்கள் சொந்த மொழிப்பாடல் போல பாடி பிரமிக்க வைப்பதை நாம் காணலாம். பிற மொழிப்பாடல் என்ற சுற்றில் தமிழ், ஹிந்தி என தனித்தனியே சுற்றுக்கள் வைப்பதும் , கர்நாடக இசை , ஹிந்துஸ்தானி இசை , கஸல் இசை என பலவிதமான இசைச்சுற்றுக்களை அவர்களது இசைபோட்டி நிகழ்ச்சிகளில் காண முடியும். இதைத் தமிழ் இசைப் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்! பிற மொழி சுற்றோ பல்வகையான இசைச் சுற்றோ இருக்கவே இருக்காது.

அதே போலவே பிறமொழிகளில் திறமைமிக்க இசையமைப்பாளர்களை எல்லாம் மலையாளப்படங்களில் பயன்படுத்திருப்பதையும் நாம் காண முடியும். இசையமைப்பாளர்களில் சலீல் சௌத்ரி, நௌசாத் , பாம்பே ரவி , ரவீந்திர ஜெயின், உஷா கண்ணா  மற்றும் பாடகர்களில் மன்னாடே, லதா மங்கேஷ்கர்  போன்ற ஹிந்தி திரையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர்கள் பலரும் மலையாளப்படங்களை தங்கள் பாடல்களால் பெருமைப்படுத்தினர். உதாரணமாக செம்மீன் படப்பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் ஒலித்தன. தேசிய விருதையும் மலையாள சினிமாவுக்கு பெற்றுக் கொடுத்தது.

தமிழிலும் பிற மொழி இசையமைப்பாளர்கள், லஷ்மிகாந்த் ப்யாரிலால் போன்றவர்கள்   ஒரு சில படங்களுக்கு இசையமைத்து மறைந்து விடுவார்கள். அவர்களது பாடல்கள் நன்றாக இருந்தாலும் தொடர்ச்சியாக இசையமைப்பதில்லை. அவர்களில் மனோஜ் கியான் , அம்சலேகா போன்றோர் சில படங்களுக்கு இசையமைத்து கொஞ்சம் பெயர் எடுத்தார்கள். ஆனால் பாம்பே ரவி தொடர்ச்சியாக பல மலையாளப்படங்களுக்கு இசையமைத்து பல இனிய பாடல்களை தந்ததுடன், அவரது பாடல்களைக் கேட்பவர்கள் ,அவர் ஒரு மலையாள இசையமைப்பாளர் என்று சொல்லும் வகையில் அவரது பாட்டுக்கள் வாத்திய அமைப்புகளில்  மலையாள மணம் வீசுவதைக் காண முடியும்.

சலீல் சௌத்ரி இசையமைத்த செம்மீன் படம் தென்னிந்தியாவின் முதல் தேசிய பெற்றது. அதே போல பாம்பே ரவி இசையமைத்த சில பாடல்கள் தேசியவிருதுகளையும் பெற்றுக்கொடுத்தது. பாம்பே ரவியின் இனிமைமிக்க இசைக்கு அவர்  இசையமைத்த இரண்டு பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம். 

மஞ்சள் பிரசாதமும் நெற்றியில் சார்த்தி [சித்ரா ]

சாகரங்களே பாடி உணர்த்திய சாமகீதமே [ ஜேசுதாஸ் ]

இவ்வ்விதம் பிற மொழி இசையை ரசிப்பதிலும் ,அவர்களது திறமையை பயன்படுத்துவதிலும்  ஆர்வம் காட்டிய மலையாளிகள் தங்களுக்கென தனித்துவத்தையும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் படத்தயாரிப்பாளர் தாம் பயன்படுத்தும் கலைஞர்களை  புகழ்வதே வழமை என்றாலும்  , அவர்கள் தரும் பாடல்களை ரசித்த இசை  ரசிகர்களும் அவர்களை நன்கு தெரிந்து பெருமைப்படுத்துவதையும் நாம் மலையாளிகளிடம் காண முடியும். மிகப் பெரிய இசை லயிப்பு அவர்களிடம் இருக்கும் .

இசையில் அவர்களது மனச்ச்சாய்வு என்பது பெரும்பாலும் மெல்லிசையும் ,கஸல் மற்றும் முக்கியமாக கர்னாடக இசை ராகங்களின் அடிப்படையில்  அமைக்கப்பட்ட Semiclassical Songs போன்றவற்றிற்கு மிகமுக்கியத்துவம் கொடுப்பதாக  உள்ளன.

1960களின் நடுப்பகுதியிலிருந்து 1990களின்  நடுப்பகுதிவரை மலையாளப்படங்களில் செவ்வியல்சார்ந்த மெல்லிசைப் பாடல்களைக் [ SemiClassical Songs ] கணிசமான அளவில் எல்லா இசையமைப்பாளர்களும் தந்திருக்கிறார்கள். குறிப்பாக பாடகர் ஜேசுதாஸின் குரலை வைத்து அவர்கள் நிகழ்த்தியிருக்கும் ராக வீச்சுக்கள் அற்புதமானவை. அதுமட்டுமல்ல அவரது குரலை பலவிதங்களிலெல்லாம் பயன்படுத்தி தங்களுக்கென இசையையும், இசைக்கலைஞனையும் உருவாக்கியதுடன்  , கொண்டாடியும் மகிழ்ந்தார்கள்.

ஜேசுதாஸ் பாடிய சில  Semi Classical  இசைசார்ந்த பாடல்கள்

தேவி கன்யாகுமாரி  – இசை : ஜி.தேவராஜன்

நாத பிரம்மத்தின் சாகரம் நீந்தி – இசை : ஜி.தேவராஜன்

கோபி சந்தன குறி அணிஞ்சு  – இசை : ஜி.தேவராஜன்

நட்சத்திர தீபங்கள் ஒருங்கி – இசை : ஜி.தேவராஜன்

ராக சாகரமே பிரியா காண சாகரமே -இசை : ஜி.தேவராஜன்

சத்ய  சிவ சௌந்தர்யங்கள் தன – இசை : ஜி.தேவராஜன்

காட்டிலே பால் முழம் – இசை : ஜி.தேவராஜன்

கதிர் மண்டபம் சொப்ன – இசை : ஜி.தேவராஜன்

தமிழ் நாட்டை விட பார்ப்பனீயம் அங்கே இறுக்கமாக இருப்பதால் இவ்விதம் Semiclassical பாடல்கள் செவ்வியலிசை சார்ந்து வருகிறது என இசை தெரிந்த சில கருதுகின்றனர். செவ்வியலிசை [ கர்நாடக இசை ] என்பது பிராமணர்களின் சொத்தா? இக்கருத்தில் உண்மையில்லை என்பதும் ராகம் சார்ந்த மெல்லிசையில் தென்னிந்திய மக்களுக்கு  எப்போதும் ஒரு விருப்பம் இருந்ததென்பதே உண்மையாகும். இதற்கு மலையாளிகள் மட்டும் விதிவிலக்கானவர்கள் என்று கூறிவிட முடியாது. 

சாதாரண ஒரு தமிழ் ரசிகர் எடுத்த எடுப்பில்  மலையாளிகள் கொண்டாடும் ஒரு பாடலை ரசிக்க முடியுமா எனது சந்தேகம் தான் நமக்குத் பரிட்சயமான ராகங்களில் இசைக்கப்பட்டாலும் , வாத்திய எளிமையாலும் , இசையமைப்பின் முறையாலும்  அவை தனித்தடத்தில் பயணிக்கும் இசை என்று சொல்லலாம். உதாரணமாகச் சில பாடல்கள்:

தளிரிட்ட கினாக்கள் தன் தாமரை – மூடுபடம் 1963  – எஸ்.ஜானகி  – இசை : எம்;எஸ்.பாபுராஜ்   

தாமசம் எண்டே வருவான் – பார்கவி நிலையம்  1964 – ஜேசுதாஸ்   – இசை : எம்;எஸ்.பாபுராஜ்  

ஏன்டா சொப்னத்தில்  தாமரை பொய்கையில் – அச்சாணி – ஜேசுதாஸ் – இசை: ஜி தேவராஜன்

தமிழ், மலையாளம் சினிமாக்கள் சமகாலத்திலேயே தொடங்கப்பட்டன. எனினும் 1940 களிலேயே தமிழ் சினிமா கணிசமான அளவில் வளர்ந்தது போல  1950 களிலேயே மலையாள சினிமா இந்த  பயணம்  சூடுபிடிக்க  ஆரம்பித்தது. சென்னையில் வளர்ந்திருந்த சினிமா ஸ்டுடியோக்கள் அன்றைய தென்னிந்திய சினிமாக்களின் மையமாக இருந்தது. குறைந்தளவிலான சந்தை வாய்ப்பைக் கொண்ட மலையாள சினிமாவில் பெருமுதலீடுகளற்ற படங்களே வெளியாயின.ஆனாலும் தங்கள் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்ற ஆவல் மலையாளத் திரைத்துறையினரிடம் இருந்தது என்பது கவனத்திற்குரியது.

1950 களில் மெகபூப் , அகஸ்டின் ஜோசப், வைக்கம் மணி போன்ற பாடி நடிக்கும் நடிகர்களுடன்  சாந்தா நாயர் , பி. லீலா , மெகபூப்  போன்ற பாடாக, பாடகர்கள் பிரபலமாக இருந்தனர். அகஸ்டின் ஜோசப்என்பவர்  கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது  நல்லதங்காள் [ 1950 ] படத்தில் இக்கலைஞர்களின் பாடல்களை நாம் கேட்கலாம் . இந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் பின்னாளில் புகழ் பெற்ற வி.தட்க்ஷிணாமூர்த்தி.   

இசையைப் பொறுத்தவரையில் 1960 களில் புது எழுச்சியும் ,தனித்துவமும் உருவாகியது. மலையாள சினிமா இசையை வளப்படுத்தியதில்  கே.ராகவன் ,ஜி.தேவராஜன் , பாபு  ராஜ் , வி. தட்க்ஷிணாமூர்த்தி , பி.ஏ. சிதம்பரநாதன் , எம்.பி.ஸ்ரீநிவாசன் , எம்.கே.அர்ஜுனன்  போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர் 

வி.தட்க்ஷிணாமூர்த்தி இசையில் கர்னாடக இசையும் ,அது சார்ந்த மெல்லிசையும்,கே.ராகவன் இசையில் நாட்டார்பண்பும் , மெல்லிசையும் , வடக்கன் பாட்டுகளும் ,பாபுராஜ் இசையில் கஸலும், மாப்பிள்ளை பாட்டுகளும், மெல்லிசையும் , பி.ஏ.சிதம்பரநாதன் இசையில் மெல்லிசையும் ,தேவராஜன் இசையில் நாட்டார் இசை  மெல்லிசையும் , எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையில் மெல்லிசையும் , Semiclassical இசையும் , எம்.கே.அர்ஜுனன் இசையில் மெல்லிசையும் என மலையாள திரை இசைக்கென சிறப்பான ஒரு தனித்துவத்தைக் காட்டி வளர்த்தெடுத்தனர்.

இக்காலப்பகுதியில் தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பாடி புகழபெற்ற  பின்னணிப்பாடகர்களான ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் முன்பு அதிகம் பாடிக்கொண்டிருந்தனர். 

1960 களில் வீசிய புதிய அலையில் சில புதிய  மலையாளப்பாடகர்களும் அறிமுகமாயினர். இவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் , பிரமானந்தன் , ஜெயச்சந்திரன், மாதுரி , வசந்தா போன்றோரின் பெயர்கள் அதிகம் பேசப்பட்டன.

 

குறிப்பாக கே.ஜே.ஜேசுதாஸ் தனக்கென மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தார்.தனது குரல் வளத்தால் எல்லோரையும் கவர்ந்த ஜேசுதாஸ் இசையமைப்பாளர்களின் அபிமானத்திற்குரிய பாடகரானார். அவரது பாடும் திறனுக்கும் , குரலின் இனிமைக்கும்  ஏற்ப பாடல்கள் வடிமைக்கப்பட்டன. மலையாளிகள் தங்களுக்கென ஓர் தனித்துவமான பாடகன் கிடைத்து விட்டான் என்று கொண்டாடினார்கள். சினிமா நடிகர்களுக்கு இணையாக அவர் போற்றப்பட்டார். அவரது வருகையின் பின்னர் தான்  மலையாள இசை அரங்கின் பொற்காலம் உருவாகியது. அவர் வரும் வரை ஏ.எம்.ராஜா , பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் பாடிக்கொண்டிருந்தனர்.

மலையாள பாடல்களையும் அது குறித்த மலையாளிகளின் பேட்டிகளையும் கேட்டால் அவர்கள் தங்கள் இசை தமது ஆத்மாவை தழுவுபவை என்பதைக் குறிப்பிடத் தவறுவதில்லை. தமக்கான தனித்துவத்தை பேணுவதில் பேரவா  என்று நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஹிந்திப்பாடல்களும் ஹசல் இசையும் அவர்களது இசை கச்சேரிகளிலும் [ கான மேளா ]  ஒலிப்பதை நாம் காண முடியும்.

கேரளத்து திருமணங்களில் பாடி புகழ்பெற்ற பாபுராஜ் என்ற இசைக்கலைஞர் அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆரம்ப காலத்தில் அவருடன் பாடகர் ஜேசுதாஸ் ,ஜெயசந்திரன் போன்றோர் இணைந்து பாடியுமிருக்கின்றனர். அவர் பின்னாளில் திரை இசையமைப்பாளரான பின்பு இரு பாடகர்களை  நன்கு பயன்படுத்திக் கொண்டார். பாபுராஜ் குறித்து பின்னாளில் நினைவு கூறும் ஜெயசந்திரன் அவரது பாடும் முறையையும் , ஹார்மோனியம் வாசிக்கும் திறமையையும் குறித்துப் பேசியிருக்கிறார். பாபுராஜ் மட்டுமல்ல சலீல் சௌத்ரி ஹிந்தி திரையில் மிகவும் புகழபெற்றவர். புதிய ஒலிநயங்களையெல்லாம் வெளிப்படுத்துவதில் வல்லவர்.

மலையாளப்பாடல்கள் தனித்துவமானவையாகவும் இருப்பதற்கு தனித்துவம் மிக்க மண்சார்ந்த அதன் பாடல் வரிகளும் முக்கியகாரணங்களாகும். மலையாள நாட்டுப்புற மக்களின் வேர்களிலிருந்து வளர்ந்த கலைஞர்களின் பங்களிப்பு அங்கே அலாதியானது. அவை மலையாள வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் நன்கு பிரபலித்தன. அதில் கம்யூனிஸ்டுக்களின் பங்களிப்பே அதிகம். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கலைக்குழுவின் கேரளா பிரிவான “கேரளா மக்கள் கலைமன்றத்தினர் ” ஆற்றிய பங்கு மலையாள சினிமா வளரவும் ,நல்ல ரசனை உருவாகவும் வழி காட்டியது.

மலையாள சினிமாவில் பாடல்கள் எழுதிய கவிஞர்களான பி.பாஸ்கரன், வயலார்  போன்றவர்களும் , மலையாள சினிமாவில் நிரந்தர புகழ்பெற்ற  கதாசிரியர் வாசுதேவன் நாயர், ராமு காரியத் போன்றோர் அந்த அமைப்பிலிருந்து வந்தவர்களே. இவர்கள் பாடல் எழுதுதல் , வசனம் ,  இயக்கம் என பல ஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்கினர்.

இந்த பின்புலத்தில் மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னர் எப்படி இசை அமைத்தார் என்பது சுவாரஸ்யமானது ஆகும் . தமிழ் சினிமா இசை இந்தியாவின் அதிக புகழ்பெற்ற வணிக சினிமாவான ஹிந்தி திரையிசையை அடியொற்றி வந்ததும் , அதன் பகட்டான popular  இசைசார்ந்து இருந்ததையும்  காணமுடியும். அதில் நன்கு தேர்ச்சி பெற்ற மெல்லிசைமன்னரின் இசை மண்ணும் , மக்களின் இசைசார்ந்து வளர்ந்த ஒரு தனிப்போக்கைக் கொண்ட இசை ரசனைக்கு பொருந்துமா என்ற கேள்வி நியாயமானது. ஆனாலும் அடிப்படையில் ராகம் சார்ந்த மெல்லிசையில் வல்லவர்களாயிருந்த மெல்லிசைமன்னர் முற்று முழுதாக தமிழில் தான் அமைப்பது போன்ற இசை தராமல் ஏற்கனவே மலையாளிகள் வளர்த்தெடுத்த இசைப்பாங்கைச் சார்ந்து வழங்கினார். அல்லது கொஞ்சம் அடக்கி வாசித்தார் என்று சொல்லலாம் .   

தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக்கொண்டு வளர்ந்த மலையாள சினிமா இசையை பல்வேறு விதமான இசையமைப்பாளர்களும் வளப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் பிறப்பால் மலையாளியாகவும் தமிழ் திரை இசையில் முன்னணி இசையமைப்பாளராகவும் விளங்கிய மெல்லிசைமன்னரை  1970 களிலிருந்து பயன்படுத்தத் தொடங்கினர்.

1950களிலேயே  ஜெனோவா [ 1953  ] .லில்லி  [ 1958  ] என ஒரு சில படங்களுக்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்தாலும் அவை குறிப்பிட்டு சொல்லும் அளவில் இல்லை எனலாம். அவரது முதல் படமான ஜெனோவா [ 1953  ] தமிழிலும் , மலையாளத்திலும் வெளியான போதும் அப்பாடல்கள் பிரபலமடையவில்லை.

எம்ஜி.ஆர் நடித்த ஜெனோவா [1953] படத்தில் இடம் பெற்ற பல பாடல்களை ஏ.எம்.ராஜா , பி.லீலா போன்றோர் பாடினர். அப்பாடல்களை இப்போது கேட்கும் போது மெல்லிசைமன்னரின் இனிய இசை ரசிக்கும்படியாக இருப்பதை காணமுடியும்.

அதே போல லில்லி [1958] படப்பாடல்கள் கேட்க கிடைக்கின்றன. லில்லி [ 1958  ] என்ற படத்தில் பிரேம்நசீர் , சத்யன் போன்றோர் நடித்தனர்

” ஆலப்புழா கடவினு ஞானும் கோட்டிற்கேறி  ” என்று தொடங்கும், பாடகர் மகபூப் பாடிய பாடல் நாட்டுப்புற இசையில் அமைந்திருக்கும்.

” ஜேசு நாயகா பிரேமா நாயகா ” என்று தொடங்கும் பாடல் சாந்தா நாயர் மாற்று பி.லீலா குழுவினர் பாடியிருப்பார்கள். இவை தவிர ஜி.கே.வெங்கடேஷ் , ஏ.எல்.ராகவன் போன்றோர் பாடிய பாடல்களும் இருப்பதாக பாட்டு புத்தகம் தகவல் தருகிறது. 

1970  களில் தங்கள் தனித்துவமான இசையால் தமக்கென ஓர் தனித்துமான மெல்லிசை அமைப்பை உருவாக்கி வளர்த்தெடுத்துக் கொண்டிருந்த இத்தனை மலையாள இசையமைப்பாளர்களும் களமாடிக்கொண்டிருந்த மலையாள சினிமாவில் மெல்லிசைமன்னரின் மீள் வருகை அமைகிறது.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும்அதிக எண்ணிக்கையிலமைந்த வாத்தியக்குழுவை பயன்படுத்திப்பழகிய மெல்லிசைமன்னர் மலையாள பாடல்களை .தமிழ் போல அல்லாமல் மலையாள இசையமைப்பாளர்களின் போக்கிலேயே பெரும்பாலான பாடல்களை குறைந்த அளவில் வாத்தியங்களை பயன்படுத்தித்  தந்தார் என்று சொல்லலாம்.

1960  களின் நடுப்பகுதியிலிருந்து மலையாளத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் வி.தட்க்ஷிணாமூர்த்தி – ஜேசுதாஸ் கூட்டணி , தேவராஜன் – ஜேசுதாஸ் கூட்டணி , பாபுராஜ் – ஜேசுதாஸ் கூட்டணி , எம்.கே.அர்ஜுனன் – ஜேசுதாஸ் கூட்டணி,  சலீல் சௌத்ரி – ஜேசுதாஸ் கூட்டணி என இசையமைப்பாளர்களும் பாடகர்கரும் என  இசையில் ஏராளமான பாடல்கள் வெளியாகி புகழின் உச்சியில் ஜேசுதாஸ் இருந்தார்.

மலையாள இசையமைப்பாளர்களால் இனிமையூட்டப்பட்ட ஜேசுதாஸின் குரல் வளத்தால் நிறைந்த மலையாளத்திரையிசை பாடல்களை தனது இசையாலும் வளப்படுத்திய பெருமை மெல்லிசைமன்னருக்கு உண்டு. அந்தவகையில்  Semi Classical  பாணியில் மட்டுமல்ல ஹசல் பாணியிலும் தன்னாலும் இசையமைக்க முடியும் என மெல்லிசைமன்னரும் நிரூபித்தார் என்பதற்கு உதாரணமாக அமைந்த பாடல்கள் சிலவற்றை கீழே தருகின்றேன். மேலே குறிப்பிட்டது போலவே பின்னாளில் மெல்லிசைமன்னரின் இனிய இசையால் விஸ்வநாதன்  – ஜேசுதாஸ் கூட்டணியிலும் பல வெற்றிப்பாடல்கள் உருவாகின. இந்தப்பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது என்று கூறலாம்.

01  சுவர்க்க நந்தினி  சொப்ன விகாரி நீ –  லங்காதகனம் 1971 – ஜேசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

02  புஷ்பாபரணம் வசந்த தேவண்டே    –  சந்ரகாந்தம்  1971 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

03  ஆ..நிமிசத்திண்டே  –  சந்ரகாந்தம்  1971 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

04  கதகளி  கேளி தொடங்கி –  அஜயனும்  விஜயனும்  1976 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

05  மறந்நுவோ நீ ஹ்ருதயேசவ்ரி   –  அக்சயபாத்ரம்   1977 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

06 அஷ்டாபதியில்   – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 – ஜெயசந்திரன்   – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

07  சுப்ரபாதம் சுப்ரபாதம்  –  பணி தீராத வீடு  1973 – ஜெயச்சந்திரன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

08  கற்பூர தீரத்தின்    –  திவ்யதரிசனம்  1974 – ஜெயச்சந்திரன் – மாதுரி  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

09  ஸ்வர்ணக்கோபுர நர்த்தகி  சில்பம் –  பணி தீராத வீடு  1974 – ஜெயச்சந்திரன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

10  பூக்காலம் இது பூக்காலம்  –  ஸ்நேகத்திண்டே முகம் 1978 – ஜேசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

அதேபோலவே மெல்லிசைபாங்கிலும் தமிழ் பாடல்களை போலல்லாது அங்கேயும் வேறுபட்ட வகையில் மிகுந்த தனித்துவமிக்க பாடல்களையும் தரமுடியும் என்று மெல்லிசைமன்னர் நிரூபித்தார்.

01  ஈஸ்வரன் ஒருக்கால்  –  லங்காதகனம் 1971 – ஜேசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

02  சூர்யன் இன்னொரு நட்ஷத்திரம்   –  லங்காதகனம் 1971 – ஏசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

03  நட்சத்திர ராத்யத்தில்    –  லங்காதகனம் 1971 – ஜேசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

04  ஆகாச பூரணி  –  திவ்யதரிசனம்  1974- ஏசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

05  ஸ்வர்க்கமென்ன  கானகத்தில்    –  சந்ரகாந்தம்  1971 – ஜேசுதாஸ் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

06  புஷ்பாபரணம் வசந்த தேவண்டே    –  சந்ரகாந்தம்  1971 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

07  ஆ..நிமிசத்திண்டே  –  சந்ரகாந்தம்  1971 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

08  வீணை பூவே குமாரன் ஆஸாண்டே  –  சந்ரகாந்தம்  1974 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

09  பிரம்ம நந்தினி   – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 – ஜேசுதாஸ் + வசந்தா  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

10  வீணை பூவே குமாரன் ஆஸாண்டே  – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

11  சில்பி தேவா சில்பி   – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

12  கதகளி  கேளி தொடங்கி –  அஜயனும்  விஜயனும்  1976 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

13  மறந்நுவோ நீ ஹ்ருதயேசவ்ரி   –  அக்சயபாத்ரம்   1977 – ஜேசுதாஸ்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

14  அஷ்டாபதியில்   – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 – ஜெயசந்திரன்   – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஜெயச்சந்திரன்

ஜேசுதாஸ் அதியுச்ச நிலையில் பாடிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஜெயச்சந்திரன் தனது தனித்துவமான பாடும் முறையால் பல இனியபாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். மெல்லிசைமன்னருக்கும் ஜேசுதாசுக்கும் இடையே சில உரசல்கள் இருந்த காரணத்தால் வேறு சில பாடகர்களும் பாடும் வாய்ப்பை பெற்றனர். அதில் கணிசமான அளவில் பாடும் வாய்ப்பைப் பெற்று தலை சிறந்த பாடல்களை பாடியவர் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் – விசுவநாதன் கூட்டு அணியில் பல இனிய பாடல்கள் வெளி வந்தது போலவே ஜெயசந்திரன் – விஸ்வநாதன் கூட்டு அணியில் பல பாடல்கள் வெளிவந்தன. எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்:

01  பஞ்சவடியிலே  –  லங்காதகனம் 1971 – ஜெயசந்திரன்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்  

02  திருவாபரணம் சார்த்தி  –  லங்காதகனம் 1971 – ஜெயசந்திரன்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்  

03  மலரம்பனெழுதிய மலையாளக் கவிதை –  மந்திரக்கொடி  1971 – ஜெயச்சந்திரன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்      

04  சுப்ரபாதம் சுப்ரபாதம்  –  பணி தீராத வீடு  1973 – ஜெயச்சந்திரன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

05  கற்பூர தீரத்தின்    –  திவ்யதரிசனம்  1974 – ஜெயச்சந்திரன் – மாதுரி  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

06  ஸ்வர்ணக்கோபுர நர்த்தகி  சில்பம் –  பணி தீராத வீடு  1974 – ஜெயச்சந்திரன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

07  கற்பூர தீரத்தின்    –  திவ்யதரிசனம்  1974 – ஜெயச்சந்திரன் – மாதுரி  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

08  அஷ்டபதியிலே   – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 -ஜெயசந்திரன்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

09  கிலுக்காதே கிலுக்கும்னா கிலுக்காம்பட்டி –  மந்திரக்கொடி  1971 – ஜெயச்சந்திரன் + சுசீலா – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.

 ஜேசுதாஸ் , ஜெயசந்திரன் மட்டுமல்ல ஜோலி ஏப்ரகாம் , எஸ்.ஜானகி , பி.சுசீலா, வாணி ஜெயராம்  போன்ற பலருக்கும் புகழ் தரும் பல பாடல்களை தந்தவர் விஸ்வநாதன். எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்.

01  மாலினி தடமே   – ஜீவிக்கான் மரன்னு பொய ஸ்த்ரீ     1974 – எஸ்.ஜானகி   – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

02  வீணே பூவே குமாரன் ஆசாண்டே  [ ஜானகி  ]

03  நிஷீதினி நிஷிதீனி –  யக்ஷகானம்   1976 – எஸ்.ஜானகி – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

04  வசந்தமே நீ வன்னு விழிச்சால்   –  கூட்டவும் சிஷ்யனும் 1976 – எஸ்.ஜானகி – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

05  மதுரமுள்ள நொம்புரம்  –  அக்சயபாத்ரம்   1977 – வாணி    – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

06 முல்லைமாலை  சூடிவண்ண  – ஆயிரம் ஜென்மங்கள் 1976  – வாணி  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்         

07  பிரியமுள்ள சேட்டன் அறிவான்  –  அக்சயபாத்ரம்   1977 – சுசீலா – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

08  கதிர் மண்டபம் ஒருக்கி  -மந்திரக்கொடி  1973 – சுசீலா – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

09  ரஜனி கந்தி விடார்னு  –  பஞ்சமி   1976 – ஜோலி ஏப்ரகாம்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

மேலே குறிப்பிட்ட பாடகர்கள் மட்டுமல்ல தானே பல பாடல்களையும் பாடி தன்னை மலையாள சினிமாவிலும் நிலைநிறுத்தியவர் மெல்லிசைமன்னர். அவர் பாடிய பல பாடல்கள்  இன்றும் இசை நிகழ்சிகளில் பாடப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்

01  பிரபாதம் அல்லா நீ   –  சந்த்ரகாந்தம்  1971 – விஸ்வநாதன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

02  ஹ்ருதயவாகினி ஒழுக்குன்னுவோ      –  சந்த்ரகாந்தம்  1971 – விஸ்வநாதன் – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

03  கண்ணீர் துள்ளியே   –  பணி தீராத வீடு  1973 – எம்.எஸ்.விஸ்வநாதன்  – இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

தன்னுடைய வழமையான பாணியிலிருந்து சற்று மாறுபட்டும் , மலையாள இசையமைப்பாளர்கள் வளர்த்தெடுத்த  பாணிக்கும் நெருடலில்லாமல் அதனுடன் இசைந்து போகக்கக்கூடியதும் அதே வேளை தனது தனித்துவ திறமையால் ஆங்காங்கே தனது வாத்திய இசை பிரயோகங்களாலும் மக்களை மகிழ்விக்கும் பல இனிய பாடல்களை மெல்லிசைமன்னர் தரத்தவறவில்லை என்பதும் நம் அவதானத்திற்குரியது.

மாறும் கலாச்சார சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை தகவமைக்கவும் படைப்புணர்வின் ஆற்றலை நன்கு வெளிப்படுத்தவும் , அதன் பின்புலத்தில் அவர் பல்வேறு விதமான கற்பனை விரிவுகளை வளப்படுத்துவதிலும் பல்வேறு இசைவகைகளில் அவர் காட்டிய ஆர்வம் அவற்றின் மூலங்கள், அவற்றிலிருந்து  உயிர்ப்பு ஒலிநயங்களும் , பிற சேர்க்கைகளும்  அவர் படைப்புக்கு உதவியிருக்கும் என்பதை நாம் வியப்புடன் நோக்குகின்றோம்.

[ தொடரும்  ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *