மரபும், வாத்திய இசைவார்ப்புகளும்:
1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்திய மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை, மாலையிட்ட மங்கை பாடல்களால் தனிக்கவனம் பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில் தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி தமிழ் திரையிசையை முன்னோக்கி நகர்த்தியது.
ஒப்பீட்டளவில் 1950 களைவிட 1960 களில் சமூகக்கதைகள் திரையில் இடம் பிடிக்க ஆரம்பித்ததும் பாடல்களிலும் , இசையமைப்பிலும் உணர்வுகளை கதைகளுக்கு பொருத்தமாக வெளிப்படுத்தினார்கள்.காதல் , திருமணம், தாலாட்டு , பிரிவு ,வீரம் போன்ற உணர்வுகள் என பலவிதமான சூழ்நிலைகளும் அக்காலப் பாடல்களில் பிரதிபலித்தன.
தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியிலிருந்து சற்று விலகிவர முனைந்ததும் ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.
தமிழ் திரையிசையின் நவீனத்துவம் [ Modernity ] எனும் பண்பு சி.ஆர்.சுப்பராமன்,மற்றும் அதன் தொடர்ச்சியாக1950 களின் இறுதியில் ஏ.எம்.ராஜா போன்ற இசையமைப்பாளர்களால் அறிமுகமானதெனினும் அதன் முழுமை மெல்லிசைமன்னர்களாலேயே நிறைவானது.பழைய முறையை மாற்றி நவீன இசைக்கருவிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையில் வடித்தார்கள்.
எந்த ஒரு துறையிலும் மாற்றம் நிகழும் காலங்களில், அக்காலங்களின் இயல்புப் போக்குகளையும் அனுசரிக்கும் தன்மை கொண்டதாக இருப்பதை அவதானிக்கலாம்.மெல்லிசைமன்னர்களைப் பொறுத்தவரையில் இந்திய அளவில் ஹிந்தித் திரையிசையின் வல்லாதிக்கமும் , உலக இசையில் பொழுது போக்கு வணிக இசையாக வெற்றியளித்த லத்தீன் அமெரிக்க இசையின் வல்லாதிக்கமும், தமிழ் திரையில் செவ்வியல் இசையின் ஆதிக்கமும் நிலவியது என்பது நோக்கத்தக்கதாகும்.அவற்றின் நல்ல கூறுகளை எடுத்துக் கொண்டு புதுமை காண்பித்தார்கள் ஒழிய அவற்றை அப்படியே பிரதி எடுக்கவில்லை என்பது கவனத்திற்குரியது.
ஹிந்தித் திரையிசையமைப்பாளர்களும் மேலைத்தேய மற்றும் லத்தீன் அமெரிக்க இசையால் கவரப்பட்டிருந்தனர்.1950 களில் புகழபெற்ற இசையமைப்பாளர் சி.ராமச்சந்திரா
பெனி கூட்மன் [ Benny Goodman ] போன்ற மேலைத்தேய கலைஞரைப் பின்பற்றியதையும்,ஓ.பி.நய்யார், எஸ்.டி.பர்மன் போன்ற மூத்த இசையமைப்பாளர்களும் ஆங்காங்கே மேலைத்தேய பாணியை கையாண்டதையும் பார்க்கிறோம். அதனூடே ஹிந்தி பாடல்கள் புதிய மாற்றங்கள் பெற்றதென்பதை 1950,1960 களில் வெளிவந்த படங்களில் காண்கிறோம். ஹிந்துஸ்தானி இசையில் பாடல்களை அமைத்துப் புகழ்பெற்ற இசைமேதையான நௌசாத் அலி கூட மேலை நாட்டு இசையால் பாதிப்படைந்திருக்கிறார் என்பதை அவர் இசையமைத்த Dulari [1949] படத்தின் ஒரு சில பாடல்களில் கேட்கிறோம்.
தங்களுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் போலவே கர்னாடக இசை , நாட்டுப்புற இசை , ஹிந்துஸ்தானிய இசை ஆகியவற்றுடன் லத்தீன் அமெரிக்க இசையையும் பிரதானமாகப் பயன்படுத்தி மெல்லிசைமன்னர்கள் வெற்றிகண்டார்கள்.ராகங்களின் அடைப்படையில் மட்டும் தான் பாடல்களைக் கொடுக்க முடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள் என்ற அடிப்படையிலும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் என்ற வகையிலும் ” ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகி ” என்று தேவாரப்பாடல் கூறுவது போல, ராகங்களின் இயல்பான தன்மையையறிந்து , உரிய விதத்தில் பயன்படுத்தி கரையாத நெஞ்சங்களையும் இசையால் கரைய வைத்தார்கள்.நெஞ்சை உருக்கும் மரபு ராகதளங்களில் நின்று பாடல்களை உயர் நிலையில் அமைப்பது மாத்திரமல்ல , ஒரு பாடல் எப்படி எடுப்பாக ஆரம்பிக்கிறதோ அதே வேகம் தளராமல் , தொய்வில்லாமல் அதன் முடிவு வரை செல்வதை மெல்லிசைமன்னர்களின் பாடல்களில் காணலாம்.தமிழ் இசையுலகில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ராகங்களை விடுத்து ,தமது பாடல்களை புதுமையாகக் காட்ட விளைந்த அவர்கள் தமிழ் மக்கள் அறியாத ஹிந்துஸ்தானிய ராகங்களையும் அதிகமாய் பயன்படுத்தினர்.
பழமையின் இனிமை காட்டி அதற்குள்ளே அடங்கி நிறைவு காணாமல் அதிலிருந்து புதுமை நோக்குடன் இசையை அணுக முனைந்தனர்.பழைய தமிழ் ராகங்களுடன் அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களையும் எடுத்துக் கொண்டு நுண்மையுடன் , இனிமையையும் குழைத்து தந்த பாடல்களில் ஜனரஞ்சகத்தன்மையும் வியத்தகு முறையில் இணைந்திருந்தது.
ஆயினும் அவர்களின் வெற்றியின் அடிநாதமாக விளங்கியது ஹிந்துஸ்தானிய சங்கீதமும் , லத்தீன் அமெரிக்கசங்கீதமுமே என்பதை தமிழ் திரையிசையின் பின்னணியை ஆராய்பவர்கள் அறியலாம்.திரைக்கதையின் போக்குக்குகேற்ப காடசிகளில் என்ன தேவையோ அதற்கேற்ற வகையில் பொருத்தமாக மேற்சொன்ன இரு இசையையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.எளிமையான பாடல் அமைப்பில் மெல்லிசை மிகைப்பைக் காட்டினார்கள்.
அவர்கள் ஆர்வம் காட்டிய ஹிந்தி திரையிசையும் , மேல்நாட்டிசையும் ஒன்று கலந்த புதிய கலப்பிசை, சொல் எளிமையும் இசையின்பமும் ஒன்று கலந்த புது இசைக்கு ஒரு புதிய நடையை உருவாக்கிக் கொடுத்தது.புதிய அழகியலிசையாக அது பிறந்தது.
கதைமாந்தர்கள் வசனம் பேசி ஓய்ந்த காலம் முடிந்த பின், பாடல்களில் செந்தமிழ் கவித்துவம் அழுத்தாத எளிமைப்படுத்தப்பட்ட வரிகளுடன் இசை இடையூறில்லாமல் கைகோர்த்தது மெல்லிசைமன்னர்களின் காலத்திலேயே ! எளிமையான உருவத்தில் ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் ரசிகர்களையும் இலகுவாக இசையை நெருங்க வைத்தது.உணர்வுகளின் உயிரை எடுத்துச் செல்லும் ஒப்புயர்வற்ற சந்தங்களில் பாடல்வரிகள் இலகுவாக அமர்ந்து கொண்டன.
பாடல் வரிகளுக்கு இடையூறில்லாத இனிய வாத்திய இசை அழகுடன் இணைந்து கொண்டது.மெட்டுக்கள் கொடுத்த சௌகரியமான இடங்களில் பாடல் வரிகள் அமர்ந்து கொண்டன.இசையும் பாடல்களும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் இயல்பாய் அமைந்த பாடல்கள் உருவாகின. இனிமையும் பொருள் எளிதில் புரியும் எளிமைமிக்க பாடல்களை மெல்லிசைமன்னர்கள் உருவாக்கினார். இது 1960 களின் பொதுவான போக்காகவும் அமைந்தது.
இந்தப்பின்னணியிலிருந்து பார்க்கும் போது மெல்லிசையை ஒரு இயல்பானதாக்கிய பெருமையும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமூர்த்தியினரையே சேருகிறது.மெல்லிசையில் எளிமையையும் இயல்பான போக்கையும் அமைத்துக் காட்டி, இதனூடே இசையில் ஒரு இயற்பண்புவாதம் [ Naturalism ] என்று சொல்லும் வகையில் எளிய மக்களும் பாடும் வகையிலமைந்த பாடல்களை உருவாக்கினார்கள். இசையில் விடுபட்டுப்போன ,அல்லது தமிழுக்கு புதியதான சில நுணுக்கங்களை கூர்ந்து நோக்கி அதன் அழகியல் வசீகரங்களை வெளிக்கொணரும் வண்ணம் இசையில் மாயங்கள் செய்யும் ஒலிகளை வெளிப்படுத்தினர்.
எல்லாம் நம்மிடம் இருக்கிறது கற்பனையை உடைத்து நிஜத்தில் இல்லை என்பதை பறைசாற்றும் வண்ணம் இசையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தனர்.அதனூடே மெல்லிசையின் புதிய ஒலிகளையும், புதிய ஒலிவண்ணத் சாயல்களையும் பயின்று வந்தனர்.
பல்வேறு இசைமரபுகள் இணைந்த இசையால் விளைந்ததென்னவென்றால் ‘காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்’ என்ற கம்பன் வாக்குக்கு அமைய பாடல்கள் பிறந்தன.
இசையின் தலையாய கடமை இனிமை என்பதும், புதுமை என்பது அது மரபை அறுத்துக் கொண்டெழுவதுமல்ல என்பதிலும் தெளிவு கொண்டியங்கியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
அந்தவகையில் 1960 களின் திரையிசையை ஆக்கிரமித்த இசையமைப்பாளர்கள் என்றால் அது மெல்லிசைமன்னர்களே என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது.தமிழ்த்திரையின் வகைமாதிரிச் சூழலுக்கு நாடகபாணிப்பாடல்களை பொருத்துவது என்ற சலிப்பு நிலை தொடர முடியாத ஒரு சூழலை மெல்லிசையால் உருவாக்கி, புதுமை என்பது காலத்தின் கட்டாயம் என்று நிலைக்கு உயர்த்தியவர் மெல்லிசைமன்னர்களே.!
வழமையான சட்டகங்களில் மடக்கிப்பிடிபடாத வகையில் , அல்லது வழமையான ராகமடிப்புகளில் சிக்காத, நழுவி ஓடி இனிமை காட்டும் ஒரு புதிய மெல்லிசை ஸ்தூலம் பெறுகிறது.மெல்லிசையில் புதிய அணுகுமுறைகள் தேவை என்பதை உணர்ந்து மெல்லிசையில் புதிய மரபை உருவாக்கினார்கள்.
மரபின் வளர்ச்சியையும் அதன் போக்கையும் இனம் கண்டு , புதிய வாத்திய இசையால் அதையூடுருவி செழுமைப்படுத்திய பாங்கு மிக வியப்புக்குரியதாகவே உள்ளது.குறிப்பாக வாத்தியக்கருவிகளையும் , மனிதக் குரல்களையும் ,பின்னணி இசையாகவும் பயன்படுத்திய நூதனப்பாங்கு இசையின் புதிய அழகியலாக செம்மைபெற்றதுடன் , வாத்திய இசை எவ்விதம் அமைக்க வேண்டும் என்ற புதிய வழி காட்டுதலாகவும் அமைந்தது.
இதே போலவே அமெரிக்கத்திரைப்படங்களும் புதியதொரு இசைவடிவத்தை 1930 களில் வேண்டிநின்றன.16 . 17 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெருவளர்ச்சியடைந்த செவ்வியலிசையின் அம்சங்களை மேல்நாட்டுத் திரையிசை உள்வாங்கி கொண்டது.மேலைத்தேய செவ்வியல் இசையின் தாக்கத்தை 1930 ,1940 களில் வெளிவந்த ஹொலிவூட் திரைப்படங்களில் கேட்கலாம் . Erich Wolfgang Korngold ,Dmitri Tiomkin , Alfred Newman போன்றோரின் இசையமைப்பை இதற்கு உதாரணம் காட்டலாம். அமெரிக்க சினிமாவில் இவர்களது செவ்வியல் இசைப்பாணி புதிய பாச்சலை ஏற்படுத்தியது.மகத்தான வெற்றிப்படங்கள் என்று இன்று போற்றப்படுகின்ற பல படங்களின் வெற்றிக்கு பின்னணியில் இவர்களது இசையும் முக்கிய பங்காற்றியுள்ளது.
செவ்வியலிசையின் மூல வடிவம் படிமங்கள் , புதியகாலவழிப்பட்ட திரைப்படம் எனும் நவீன கலைவடிவத்திற்கிசைய அவர்களது இசைப்புலமையாலும் , சிந்தனை ஆழத்தாலும் மேலைத்தேய செவ்வியலிசையின் புதிய பரிமாணங்களாக மாற்றமடைந்தன.
மொஸாட் ,பீத்தோவன் , ஹைடன் , பாக் போன்ற செவ்வியலிசைமேதைகளால் செழுமை பெற்ற செவ்வியல் இசைமரபை கொண்டு சென்ற இளம் ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் ஹொலிவூட் திரையிசைக்கு புதிய பரிணாமம் கொடுத்தார்கள்.
ஐரோப்பிய செவ்வியலிசையில் உச்சம் பெற்ற வாத்திய இசையின் நிலைக்கு நாம் வந்தடைவதென்றால் குறைந்தது நூறு வருடமாவது செல்ல வேண்டும்.அந்தளவுக்கு ஏராளமான இசைப்படைப்புகளை அவர்கள் படைத்திருக்கிறார்கள்.ஒருவர் தன வாழ்நாளில் கேட்டுவிட முடியாத அளவுக்கு இசைத் தொகுதிகள் குவிந்து கிடக்கின்றன.
அந்த நோக்கில் வாத்திய இசையின் அவசியம் குறித்த ஒரு சிறு பொறியை கொடுத்தது திரைப்படங்களே.இந்தியாவில் முன்னணி வகித்துக் கொண்டிருந்த ஹிந்தி திரையிசை வாத்தியத்திலும் சிறந்து விளங்கியது. 1950 களின் தமிழ் திரை இசையமைப்பாளர்களுக்கு இந்த விழிப்புணர்ச்சியற்று இருந்த நிலையை 1960 களில் வாத்திய இசையின் இனிமையை தங்களால் முடிந்தளவு நிவர்த்தி செய்ய அவற்றை வெற்றிகரமாகப்பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் மெல்லிசைமன்னர்களே !
வாத்திய இசையின் பற்றாக்குறையை புதுமையுடனும் பிரக்ஞைடனும் நிவர்த்தி செய்ய முயன்றமை மட்டுமல்ல , அதன் உயிர்த்துடிப்புகளை இனம் கண்டு மரபு ராகங்களில் அமைந்த மெட்டுக்களின் சுவைகளையும் அதனுடன் இரண்டறக்கலந்தனர்.இசைப்பாடலில் பல்லவி ,அனுபல்லவி , சரணம் போலவே, வாத்திய இசையிலேயே முன்னிசை , இடையிசை போன்றவற்றிலும் கவனம் செலுத்தினார்கள்.
மெட்டுக்கள் பிரதானம் என்ற நிலையில் , ஒரு பாடலுக்குக்கான மெட்டுக்களை அமைப்பதே இசையமைப்பாளர்களின் பிரதான கடமையாக இருந்த நிலையில் அதற்கான பின்னணி இசை அமைப்பதென்பது அக்கால இசையமைப்பாளர்களின் உதவியாளர்களாலும் நிறைவு செய்யப்பட்டு வந்தன என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.இந்த நிலை 1970 களின் மத்தியில் இளையராஜாவின் வருகைவரை பின்னணி இசை குறித்த புரிதல் , விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது. நீடித்திருந்தது.1950, 1960 களில் மெட்டுக்கள் தான் முக்கியம் அதற்கான பின்னணி இசை என்பது பிரதானமற்றது,என்பதுடன் குறிப்பிட்ட பாடல்களையே மெல்லிய வாத்திய இசையாக இசைத்தால் போதும் என்ற நிலை சினிமாக்காரர்கள் மத்தியிலும் , ரசிகர்கள் மத்தியிலும் ஒரு மனப்போக்காக வளர்ந்திருந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
வாத்திய இசை என்பது பாடப்படும் பாடலுக்கு பின் ஓடும் ஒரு சங்கதி என்றும், பாடகரை நிதானமாகப் பின்பற்றும் செயல்முறை எனவும் கர்னாடக இசைக்கச்சேரிகளில் உணடாக்கப்பட்ட ஓர் முறை போன்று நினைக்கப்பட்ட காலம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.மேடை நாடகங்களில் இடைவேளைகளில் ஹார்மோனிய இசை இடைவெளிகளை நிரப்பப் பயன்டுத்தப்பட்டதையும் பொருத்திப் பார்க்கலாம்.
நாடக மரபிலிருந்து இந்த முறையைப் பின்பற்றி வந்த மெல்லிசைமன்னர்களுக்கு முன்பிருந்த ,அவர்களின் சமகாலத்து தமிழ் திரை இசையமைப்பாளர்களுக்கும் இந்த விழிப்புணர்ச்சியற்ற நிலையை உள்ளிருந்து பார்த்தவர்கள் என்ற நிலையில் 1960 களில் தங்களால் முடிந்தளவு வாத்திய இசையின் இனிமையை புதுமையுடனும் பிரக்ஞைடனும் நிவர்த்தி செய்ய மிகுந்த சிரத்தை எடுத்தனர். 1960 களில் இந்த நிலையை கணிசமான அளவு மாற்றியமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களே!
ஓவியத்தில் கோடுகள், அதன் இயல்பான போக்கு ,வேகம், குறியீடுகள் மற்றும் வண்ணங்கள் அதன் பொருத்தப்பாடு ,அதனுடனிணைந்தெழும் தாள அசைவுகள் என பல்வகைப் பொருத்தப்பாடுகள் இணைந்து அழகு சேர்ப்பது போல இசையிலும் மெட்டு ,அதற்கு இசைவாகப் பயன்படுத்தப்படும் வாத்தியங்களின் ஒத்திசைவான இசை [ Harmony ] , தாளம் மற்றும் பாடகர்களின் குரல்களில் எழும் இசைக்கார்வைகள் போன்றவை அழகுக்கு அழகு சேர்ப்பனவையாகும்.
தங்கள் ரசனையின் அடிப்படையில் பாடல்களை அமைத்து தங்களுக்கானதாகவும் அதேவேளை மற்றவர்களுக்கானதாகவும் தந்து இசையின் உயிர் நிலையைக் காண்பித்தார்கள்.
பாடல்களில் மெல்லிசைமன்னர்கள் தந்த ஜீவமகரந்தங்களை சுமந்த இசைக்கோர்வைகளைக் கேட்ட மூத்தசகபாடி இசையமைப்பாளர்கள் வியந்து பாராட்ட நேர்ந்தது.புதிய மரபை உருவாக்கிக்கிக் காட்டிய இவர்களை யாராலும் மறுக்கவும் முடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.பழமை மாறாத முன்னையவர்களின் இனிய தொடர்ச்சியாகவே அது இருந்தது!
மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவர்களான எஸ்.எம்.சுப்பையாநாயுடு , ஆர்.சுதர்சனம் , கே.வி.மகாதேவன் போன்ற மூத்தசகபாடி இசையமைப்பாளர்களிடமும் இவர்களின் தாக்கத்தை பார்க்கிறோம். ஈடற்ற செல்வமான மரபின் எழிலையும்,வனப்பையும் காட்டி தனது தனித்துவமான இசையால் கானமழை பொழிந்துகொண்டிருந்த இசைமேதை ஜி.ராமநாதனின் இசைமாளிகையிலும் இவர்களது இசை நுழைந்தது.
ஜி.ராமநாதன் இறுதிக்கால படங்களில் மெல்லிசைமன்னர்களின் வாத்திய இசையின் பாதிப்புக்களை, அதன் எதிரொலிகளை நாம் கேட்கிறோம். குறிப்பாக
அவர் இசையமைத்த தெய்வத்தின் தெய்வம் படப்பாடல்களை இதற்கு சிறந்த உதாரணமாக காட்டலாம்.புற யதார்த்தமாக இருந்த மெல்லிசைமன்னர்களின் பாதிப்பே அதன் காரணம் என்பதை நான் சொல்லித் தெரியத்தேவையில்லை.
இவர்களது இசை முன்னவர்கள் தொடர்ச்சியின் பெருமிதமாகவே இன்று அதை நாம் நோக்க வேண்டியுள்ளது.இதே போன்றதொரு நிலையை இளையராஜாவின் வருகைக்கு பின்னர் வாத்திய இசையில் எழுந்த ஆச்சர்யங்களால் சமகால முன்னோடிகள் வாயடைத்துப் போனதும் ,அதை பெருமை பொங்க மெல்லிசைமன்னரே அங்கீரித்ததுமான ஒரு நிலையை ஒப்பிட்டு நோக்கலாம்.
வாத்திய இசையில் கவனம் செலுத்திய மெல்லிசைமன்னர்கள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தினார்கள் என்று சொல்லலாம்.எந்த வாத்தியமாய் இருந்தாலும் அவற்றை பட்டியில் அடைக்காமல் இசைவெள்ளத்தில் ஓட வைத்தார்கள்.
காலவரிசையில் வரிசைவரிசையாக அவர்கள் கொடுத்த வெற்றிப்பாடல்களின் வழியே அவற்றை நோக்குதல் பயன்தரும்.அவை காலத்திற்கு காலம் கண்சிமிட்டி விட்டு மறையும் பாடல்கள் அல்ல என்பதையம் காலம் கடந்து நிற்கும் இசைச் சிற்பங்களாக அவை நிலைபெற்றதையும் காண்கிறோம்.
அக்காலத்தில் வெளிவந்த பல பாடல்களை இவர்களின் பாடல்களுக்கு அருகருகே வைத்துப் பார்த்தால் மெல்லிசைமன்னர்கள் வாத்திய இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தமை புரியும்.பெரும்படியாக மெடுக்களிலேயே சிறப்புக் கவனம் செலுத்தப்பட்ட அன்றை சூழ்நிலையில் மெட்டுக்களை இசைக்கருவிகளால் மேம்படுத்த முனைந்த ஆர்வம் முன்னெழுவதையும் இவர்களிடம் காண்கின்றோம். வாத்திய இசையின் பாலபாடத்தை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர்கள் இவர்களே என்று கூட சொல்லலாம்.
இவர்கள் 1950 களில் இசையமைத்த படங்களின் சில பாடல்களைக் கூர்ந்து நோக்கினால் வாத்திய இசையின் நெருங்கிய பிணைப்பையும், கவர்ச்சியையும், தனிநடையையும் எளிதில் காணலாம்.அவை புதுமையின் துளிர் காலம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.தமிழ் சினிமா இசைத்துறையில் புதிய அணி ஒன்று மரபைதழுவிக் கொண்டே புதிய பாதையும் வகுத்துக் கொண்டு முகிழ்த்த வரலாறு அங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.வாத்திய இசையின் வாசத்தை , அதன் செம்மையை காட்ட முனைந்த சில பாடல்களை உதாரணமாகத் தருகின்றேன்.
பாடல்: 1
1954 இல் வெளிவந்த வைரமாலை படத்தில் இடம்பெற்ற ” கூவாமல் கூவும் கோகிலம் ” என்ற பாடலின் பல்லவி முடிந்து வரும் இடையிசையில் இணக்கமும் இனிமையும் குழைந்த இனிய வாத்திய இசையையும் அனுபல்லவிக்கும் , சரணத்திற்குமிடையில் வரும் இசையிலும் இனிய குழைவையும் கேட்கிறோம்.
பாடல்: 2
“விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே ” என்கிற பாடலிலும் [ புதையல் 1957 ]
இந்தப்பாடலின் அழகான முன்னிசையிலும் இடையிசையிலும் மெல்லிசைமன்னர்களின் முன்னோக்கிய பார்வையை நாம் அவதானிக்கலாம்.
பாடல்: 3
தென்றல் உறங்கிய போதும் [ பெற்ற மகனை விற்ற அன்னை 1957 ]
உயிர் தொடும் குழலிசையும் வயலின்களும் இணைந்து அமுத நிலையை தரும் இசைவார்ப்பு நெஞ்சை அள்ளும் வகையில் , உணர்வு நிலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் இனிய இசை.இதயவானிலே ரீங்காரமிடும் ஆபேரி ராகத்தின் எழுச்சியைக்காட்டும் உயர் இசை.
பாடல்:4
தங்க மோகன தாமரையே – புதையல் [1957 ]
புதுமையான வாத்தியங்களுடன் கோரஸ் இணைக்கப்பட்ட இனிமையான பாடல் . சைலபோன் [ xylophone] எனகிற வாத்தியத்தை மிக இயல்பாக பயன்படுத்தி இனிமை காட்டுகிறார்கள்.
பாடல்:5
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே – பதிபக்தி [1959 ]
விறுவிறுப்பான ,துள்ளும் நடையில் செல்லும் இந்தப்பாடலில் சாரங்கி என்ற இசைக்கருவியையும் , புல்லாங்குழலிசையையும் மிக அருமையாக பயன்படுத்தினார்கள்.
பாடல்: 6
தென்றல் வந்து வீசாதோ தென்பாங்கு பாடாதோ [ சிவகங்கை சீமை 1959 ]
தாலாட்டின் மென்மைக்கு சாமரம் வீசும் மென்மையான இசைக்கோர்வையால் வியக்க வைக்கும் வாத்திய பிரயோகங்கள்.ஆச்சர்ய இசையமைப்பு.நம்மை புதிய கற்பனையில் மிதக்க வைக்கும் ஆற்றல்மிக்க வாத்திய பிரயோகங்கங்கள்.எத்தனை முறை பாராட்டினாலும் போதாது.அபாரமான இசை!
பாடல் 7
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ [ பாகப்பிரிவினை 1959]
மனதைப்பிழியும் சோகப்பாடல்.எவ்வளவு துயரம்! எவ்வளவு உணர்ச்சிமிக்க இசை !கேட்கும் போதெல்லாம் என் மனதை கரைய வைக்கும் பாடல்.மெதுவாக ஆரம்பிக்கும் இப்பாடலின் உச்சம் முதலாவது சரணத்திற்கு [ கை கால்கள் விளங்காத கணவன் குடிசையில் ” என்ற வரிகளுக்கு முன் வரும் ] வாத்திய இசை உச்சம் காட்டி நெஞ்சை நெகிழ வைக்கிறது.தனது இயலாமையின் கையறு நிலையை நொந்து கொள்ளும் வகையில் பாடல் வரிகள் அமைத்து விட இசையோ எழுச்சியில் உச்சம் தந்து மனதை நோகடிக்கிறது.இது தான் பாடலின் உச்சம் என்று சொல்லலாம்.அதோடு நின்று விடவில்லை பாடலின் இரண்டாவது சரணத்திற்கு [ மண் வளர்த்த பெருமை எல்லாம் ] முன் வரும் இசையோ , தனது மனைவியின் பெருமையை கூறும் போது கனிவு பொங்கி அணைத்து ஆறுதல் தருகிறது.வாத்தியங்களின் பிரயோகம் அதியற்புதமானவை !
1960 களில் வெளிவந்த தமிழின் மெல்லிசைமுறையின் வெற்றிப்பெருமிதம் என்றாலே மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணையினரே என்பதை பாடல்கள் நிரூபணம் செய்தன.
கலையம்சமும் , கேட்கக்கேட்கத் திகட்டாத தெள்ளமுதமாகவும்,வார்த்தையால் வணிக்கமுடியாத இனிமையுடனும் விளங்குகின்ற பாடல்கள் தான் எத்தனை எத்தனை ! இசையில் புதிய சௌந்தர்யத்தை அலுக்காத வண்ணம் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்!
தமிழுக்கு இளமைமிக்க இசை இவர்களால் கரையேறியது.மரபுடன் சம்போகம் செய்து களித்துப் பிறந்த இசை சுண்டியிழுக்கும் தாளத்தின் ஞானாலயத்துடன் சமநிலையில் வியாபித்துப் பரந்தன.
ப,பா வரிசையில் இயக்குனர் பீம்சிங் இயக்கிய தொடர் வெற்றிப்படங்களிலும், அதற்கு முன்பே 1950 இல் வெளிவந்த ஒரு சில படங்களிலும் புதிய இசையின் நறுமணங்களை, புதிய வாசனைச் சேர்க்கைகளை நுகரச் செய்தார்கள். 1960 இல் நான்கைந்து படங்களுக்கு இசையமைத்தாலும் அதிலும் மெல்லிசையின் ரஸத்துளிகளைத் தரத் தவறவில்லை.உதாரணத்திற்கு சில பாடல்கள்.
பாடல் 1
படிக்கப்படிக்க நெஞ்சிலினிக்கும் பருவம் என்ற காவியம் – இரத்தினபுரி இளவரிசி [1960]
டி.ஆர்.மகாலிங்கத்தின் முத்திரையுடன் கூடிய பாடல் என்று கருதப்படும் அந்தப்பாடலில்
தடுத்தவர் வெல்வதில்லை சரித்திரமே சொல்லும்
அடுத்தவர்கள் அறியாமல் ரகசியமாய் செல்லும்
காதல் ரகசியமாய் செல்லும் …
என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் வயலின் இசை நெஞ்சில் அலைகளை மிதக்க வைக்கிற இனிமையில் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள்.அதுமட்டுமல்ல பாடலில் புல்லாங்குழலிசை பயன்படுத்தப்பட்ட முறையும் வியந்து பேசவைப்பதாய் உள்ளது.எஸ்.ஜானகியின் குரலையும் வாத்தியத்திற்கு இணையாக பயன்படுத்தியதோ அபாரம்.
பாடல்: 2
குறிப்பாக “கவலையில்லாத மனிதன்” [ 1960 ] படத்தின் டைட்டில் இசையிலேயே அப்படத்தின் பல பாடல்களையும் இசைமாலையாக இசையமைத்து புதுமை காட்டினார்கள்.அதுமட்டுமா அப்படத்தின் பெரும்பாலான பாடல்களிலும் வசீரம் மிகுதியாகவே உள்ளன.
“காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும் ” என்ற பாடலில் பெண்கள் குரல்களையும் , ஆண்களை குரல்களையும் வெவ்வேறு விதங்களிலும் ,அவற்றுடன் புல்லாங்குழல் இசையையும் பயன்படுத்திய பாங்கும் ,அதை நாட்டுப்புறப்பாணியில் தந்ததும் அதிஉச்சம் என்றே வேண்டும்.
பாடல்:3
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை [ 1960 ] படத்தில் குழலிசையை சிறப்பாக பயன்படுத்திய “துணிந்தால் துன்பமில்லை சோர்ந்துவிட்டால் இன்பமில்லை ” என்ற பாடல் இசையின் சிறப்பை எடுத்துக்காட்டும் இசைச்சிற்பமாகும்.
“பகைமை நீங்கிவிடும் பாட்டாலே – பெரும்
பசியும் நீங்கிவிடும் கேட்டாலே
கசப்பான வாழக்கையை இனிப்பாக்குவது பாட்டு என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை மேலும் அழகாக்கி விடுகிறார்கள் மெல்லிசைமன்னர்கள்.
பாடல்: 4
அதுபோலவே ” சலசல ராகத்திலே தம்மோ டும்மோ காலத்திலே ” [ பாடியவர்: பி.சுசீலா] என்ற பாடலும் அழகுக்கு அழகு சேர்த்த பாடலாகும்.இப்பாடலில் குழலிசையும் , வயலிகளின் இனிய உரசல்கள் பீறிட்டுக் கிளம்புவதையும் காதாரக் கேட்கலாம்.
பாடல்:5
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ” [ பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி + குழுவினர் ]என்று தொடங்கும் பாடலில் இனிமையுடன் கலந்து இழையும் புதுவிதமான குரலிசையையும் [Chorus ] ,விறு விறுப்பான தாள அசைவையும் கேட்கலாம்.
பாடல்: 6
ஏழைப்பெண் பாடுவதாய் அமைந்த “எங்க வாழ்க்கையிலே உள்ள சுவையைப் பாருங்க மனமுள்ள முதலாளி ” [ பாடியவர்கள் : பி.சுசீலா.கே.ஜமுனாராணி + குழுவினர் ] என்ற பாடல் கடம் தாளவாத்தியத்துடன் எளிமையாக ஆரம்பித்து , பின் பணக்கார்கள் கொண்டாட்டமாகப் பாடுவதாக லத்தீன் அமெரிக்க இசைப்பாணியில் , அதன் தாளலயத்தையும் ,வாத்தியபரிவாரத்தையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் பாடல்.இருவேறு உலகங்களை இசையால் வெளிப்படுத்தும் இனியபாடல்.
பாடல்: 7
அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா [ ஆளுக்கொரு வீடு [ 1960 ]
மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்த சாரங்கி , வயலின் ,சித்தார் போன்ற வாத்தியங்களை மிக இயல்பாக நூலிழைகளைப் போல இழைத்து வியக்க வைக்கிறார்கள்.இதன் மூலம் பட்டுக்கோட்டையாரின் உயிரோட்டமான வரிகளை நம் நெஞ்சங்களில் நீக்காதவண்ணம் விதைத்துவிடுகிறார்கள்.
இவ்விதம் பல்வேறு விதமான இனிய வாத்தியக்கலவைகளை 1950 களில் வெளிவந்த பாடல்கள் சிலவற்றில் காண்பிக்கிறார்கள். 1960 களில் அவர்களின் இசையாளுமை கட்டறுத்து ஓடுவதைக் காண்கிறோம். ஆரோக்கியமான சவாலாக பல பரிசோதனைகளை இக்காலத்தில் நிகழ்த்துகிறார்கள் என்று சொல்லத்தூண்டுகிறது. தங்களுக்கு கிடைத்த இசைக்களத்தை வாத்திய இசைக்கலவைகளால் மரபாக ஒட்டி உறவாடி வந்த முறைகளிலும் ,அதனை மீறியும் புதுமையுடன் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்கள்.
[தொடரும் ]