பேஸ் குரலின் சுகந்தம்:
ஒரு பாடகரை அறிமுகம் செய்த இசையமைப்பாளரை [ஈமனி சங்கரசாஸ்திரி ] பார்த்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறார். ” நல்ல பின்னணிப்பாடகரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்: இவர் பாட வேண்டாம்,ஹம் செய்தாலே போதும் கல்லும் உருகும்! “
உற்றுக்கேட்டால் வண்டின் இனிய ரீங்காரம் போல் தான் அந்த குரலிலும் அதிசயக்கத்தக்க பேஸ் குரலின் அதிர்வும்,மென்மையும் இருக்கும்.இந்த ரீங்காரத்தை தான் அந்தப் பாடகரை அறிமுகப்படுத்திய அந்த இசையமைப்பாளரும் கேட்டிருப்பார் போலிருக்கிறது .அதனால் தான்” இவர் பாட வேண்டாம்,ஹம்செய்தாலே போதும் கல்லும் உருகும்! ““என்றார் தயாரிப்பாளர்.அந்தப் பாடகர் தான் பி.பி.ஸ்ரீனிவாஸ்.தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் .
ஓங்கி குரல் எடுத்துப்பாடிய சௌந்தர்ராஜனை மென்மையான மெல்லிசைப்பாடல்களில் பயன்படுத்திய மெல்லிசைமன்னர்கள் ,இயல்பிலேயே மென்மையான குரல்வளம் கொண்ட பி.பி.ஸ்ரீனிவாஸ் என்ற பாடகரை அற்புதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டனர்.
கீழசுருதியில் பாடினாலும் இனிக்கும் என்ற புது மரபை ஏ.எம்.ராஜா ,பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் உருவாக்கிக் காட்டினார்கள்.அதிகமான பிருக்காக்கள் போட்டு அசத்துவது ஒரு விதமென்றால் , மெல்லிய சங்கதிகளை வைத்தும் பாடல்களை இனிமையாகக் கொடுக்கலாம் என்று நிறுவியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.
பொதுவாக பாடலின் சூழ்நிலை ,நடிக்கும் நடிகர்கள் ,அவர்களுக்கேற்ற பின்னணிப்பாடகர்கள் என அன்று இருந்த ஒரு சூழலில் பி.பி.ஸ்ரீனிவாஸ் மூன்றாவது நிலையிலிருந்த ஜெமினி கணேசன், மற்றும் கல்யாணகுமார்,முத்துராமன்,பாலாஜி போன்ற நடிகர்களுக்கு பொருத்தமானவர் என கருதத்தப்பட்டு பயன்படுத்தப்படடவர்.
பலவிதமான சுருதிகளில் பாடும் ஆற்றல்மிக்க சௌந்தர்ராஜனை எப்படி பயன்டுத்தினார்களோ அதுபோலவே, தாழ்ந்த சுருதியில் இனிக்க பாடும் ஸ்ரீநிவாஸையும் அதற்கேற்ப,அவரின் குரலின் தன்மையறிந்து,பாடல்களை இசையமைத்துப் பாடவைத்தார்கள்.பெரும்பாலும் இவர் பாடிய பாடல்கள் காதல்பாடல்களாகவும் ,சில சோகப்பாடல்களாகவும் இருந்ததை நாம் நினைவில் கொள்ளலாம்.
பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பெரும்பான்மையான பாடல்கள் காதல் பாடல்கள்,சோகப்பாடல்கள் என்ற வகையில் மென்மையும் ,இனிமையுமிக்க மெட்டுக்கள் மட்டுமல்ல ,அதற்கேற்ப வாத்திய இசையிலும் மென்மையைக் கையாண்டார்கள்.அங்கங்கே மெல்லிசைமன்னர்களுக்குரிய வேகமும்,தாள அமைப்பில் விறுவிறுப்பும் காட்டினாலும் அவற்றையெல்லாம் தனது மென்மையும், வசீகரமும், ரீங்காமுமிக்க மந்திரக்குரலால் ஆற்றுப்படுத்திவிடுவார்.பின் அது ஸ்ரீனிவாஸ் பாடலாகி விடும்!
இந்திய திரையிசையில் ஒரு பாடகர் பாடிய அத்தனை பாடல்களும் சிறப்பானவை என்று சொல்ல முடியாது.ஆயினும் இந்தக்கருத்து ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்களுக்கு பொருந்தாது என்று சொல்லும் வகையில் இவரது அத்தனை பாடல்களும் சிறப்பாக இருக்கும்.
1950 களின் நடுப்பகுதியில் ஆங்காங்கே பல்வேறு இசையமைப்பாளர்களிடமும் மிக நல்ல பாடல்களை பாடினார்.அவற்றில் சில மிக அருமையான மெல்லிசைப்பாடல்களாகவும் அமைந்திருந்தன.
ஜி.ராமநாதன் இசையிலும் நல்ல பாடல்களைப் பாடினார்.அவற்றுள் முக்கியமான பாடல்கள் சில :
01 கனியோ பாகோ கற்கண்டோ – கற்புக்கரசி – பி.பி.ஸ்ரீனிவாஸ் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை.ஜி.ராமனாதன்
பொதுவாக இசையமைப்பில் தனது தனித்துவத்தைக் காண்பிக்கும் வல்லமையும் ,உயர்ந்த சுருதியில் பாடிக்காட்டும் வல்லமையும் வாய்ந்த ஜி.ராமநாதன் , பி.பி.ஸ்ரீனிவாசுவுக்காக,அவரது சுருதிக்கேற்ப கொஞ்சம் அடக்கி இசையமைத்த பாடல் இது என்று சொல்லலாம். இன்னுமொரு சிறப்பு எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைந்து பாட வைத்தது.இது போன்ற இணைகள் தமிழ் சினிமாவில் அரிதாகவே நிகழ்ந்துள்ளன.பாடலின் பல்லவி போலவே கனியும், பாக்கும் இணைந்த இரு மதுரக்குரல்களின் சுநாதத்தை இந்தப்பாடலில் நாம் கேட்கலாம்.
02 கம கமவென நறுமலர் – சமயசஞ்சீவி 1957 – பி.பி.ஸ்ரீனிவாஸ் + ஜிக்கி – இசை.ஜி.ராமனாதன்
ஜிக்கியுடன் இணைந்து பாடிய இந்தப்பாடல் ராமநாதனின் கம்பீர இசைக்கு ஓர் எடுத்துக்காட்டு.ஜிக்கியுடன் மிகச் சில பாடல்களையே ஸ்ரீனிவாஸ் பாடியிருக்கிறார்.
கலைமதியும் வானுடன் விளையாடுதே ” என்று ஜிக்கி உயர்த்தி பாடும் போது ” என் கண்ணும் கருத்தும் உன் அழகில் ஆடுதே ” என்று மென்மையாக உயர்த்தி அதற்கு ஈடு கொடுத்திருக்கும் பங்கு அருமையாக இருக்கும்.
03 காற்றுவெளியிடை கண்ணம்மா – கப்பலோட்டிய தமிழன்-பி.பி.ஸ்ரீனிவாஸ்+பி.சுசீலா – இசை.ஜி.ராமனாதன்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.உண்மையைச் சொன்னால் பாரதிக்கு ஓர் இசை அஞ்சலி ஜி.ராமநாதனால் செய்யப்பட்டுள்ளது என்று சொல்ல கூடிய அளவுக்கு அத்தனை பாடல்களும் தலைசிறந்த முறையில் இசையமைக்கப்பட்டுள்ளன.பாரதி பாடல்களை இத்தனை இனிமையாக இதற்கு முன் யாரும் இசையமைக்கவில்லை என்று துணிந்து கூறும் வகையில் அத்தனை பாடல்களும் அந்தந்த உணர்ச்சிகளுக்கேற்ப அருமையாக இசையமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடல்கள் என்று சிலவற்றை நாம் தெரிவு செய்யின் ” காற்று வெளியிட கண்ணம்மா” என்ற இந்தப் பாடலுக்கும் ஓர் இடமிருக்கும்.
04 இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே – வீரபாண்டிய கட்டபொம்மன் – பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா – இசை i: ஜி.ராமநாதன்
வேறு பல இசையமைப்பாளர்களிடமும் இவர் பாடிய பாடல்கள் நினைவு கூறத்தக்கன.அவற்றுள் சில.
01 ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா – மக்களை பெட்ரா மகராசி -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ யு.சரோஜினி – இசை: கே.வி.மஹாதேவன்
02 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் – சாரதா -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: கே.வி.மஹாதேவன்
03 கன்னிப்பருவம் அவள் மனதில் – கப்பலோட்டிய தமிழன்-பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சூலமங்கலம் ராஜலக்ஸ்மி – இசை: சி.என்.பாண்டுரங்கன்
04 கனிந்த காதல் இன்பம் என்றாலே – அழகர்மலைக் கள்ளன் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா- இசை: பி.கோபாலன்
05 தென்னங்கீற்று ஊஞ்சலிலே – பாதை தெரியுது பார் – பி.பி.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி – இசை: எம்.பி.ஸ்ரீனிவாஸ்
06 மாலையில் மலர்ச்சோலையில் – – அடுத்த வீட்டுப் பெண்- பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை:
07 கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே – அடுத்த வீட்டுப் பெண் – பி.பி.ஸ்ரீனிவாஸ்- இசை:
08 ஏன் சிரித்தாய் என்னை பார்த்து – பனித்திரை – பி.பி.ஸ்ரீனிவாஸ்- இசை:கே.வி.மகாதேவன்
ஏற்கனவே பல இனிய பாடல்களை பாடிய ஸ்ரீநிவாஸை தங்கள் மெல்லிசை வெள்ளத்தில் கலக்க வைத்து அதிக புகழ் பெற வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்களே!!
மெல்லிசைமன்னர்களின் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களும் சிறப்பானவை என்று சொல்லிவிடலாம்.
01 அழகே அமுதே – ராஜா மலையசிம்மன் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சூலமங்கலம்ராஜலக்ஸ்மி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசையின் சுகம் வீசும் இனிய பாடல்.
02 அன்பு மனம் கனிந்த பின்னே – ஆளுக்கொரு வீடு 1960 – பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி
இந்த அருமையான காதல் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது பலருக்குத் தெரியாது.ஏன் இதைப்பாடிய ஸ்ரீனிவாஸ்,” இது கண்ணதாசன் எழுதியதென்று எண்ணியிருந்தேன்;பின்னாளில் தான் கல்யாணசுந்தரம் பாடல் எனத் தெரிந்து கொண்டேன் ” என்று கூறியிருந்தார்.
03 நீயோ நானோ யார் நிலவே – மன்னாதி மன்னன் 1960 – பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா+ ஜமுனாராணி -விஸ்வநாதன் ராமமூர்த்தி
மனதை வருடும் மென்மையாக சோகத்தைப் பூசிய இனிய பாடல்.பாடலின் தன்மையில் இரவும்,நிலவும் வீசும் சுகத்தை நாம் உணரலாம்.சுகத்திற்கு சுவையூட்டும் இனிய குரல்கள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.இப்பாடலில் மேலைத்தேய மியூட் ரம்பெட் என்ற வாத்தியக்கருவியின் இனிய ஒலியை மிகக்கச்சிதமாக பயன்டுத்திய பங்கு மெல்லிசைமன்னர்களின் ஆராவத்தை வெளிப்படுத்தும்.
பூவிரிச் சோலையில் மயிலாடும்
புரிந்தே குயில்கள் இசைபாடும்
காவிரி அருகில் நானிருந்தாலும்
கண்ணே என்மனம் உன்னை நாடும்
என்ற வரிகளுக்கு பின்வரும் மியூட் ரம்பெட் இசையை நாம் மிகவும் ரசிக்கலாம்.
இது போன்ற சில பாடல்களை மெல்லிசைமன்னர்களின் இசையில் ஆரம்பத்தில் பாடினார் எனினும் பின்னர் வந்த காலங்களில் அதிகம் பாடும் வாய்ப்பைப் பெற்றார். அத்தனையும் நம் மனதுக்கு கரும்பானான பாடல்கள் என்றால் மிகையில்லை.இன்னாருக்கு இன்னார் பாடுவது என்ற பாங்கில் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஜெமினி கணேசனுக்கு அதிகம் பாடும் வாய்ப்பை பெற்றார்.அந்த வகையில் ” காலங்களில் அவள் வசந்தம் ” என்ற பாடல் மூலம் ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார்.
காலங்களில் அவள் வசந்தம் பாடல் என்னுடைய வாழ்வில் வசந்தம் தந்த பாடல் என்று அவரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்.
1960 களின் திருநாட்களாய் அமைந்த மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இனியின் இசையில் இவர் ஏனைய பின்னணிப்பாட,பாடகிகளுடன் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையின் உச்சங்களைத் தொடும் பாடல்களே !
மெல்லிசைமன்னர்களின் லாகிரி இசையில் புது ,புது அனுபவ எழுச்சி தரும் பாடல்கள்.குறிப்பாக பி.சுசீலா ,எஸ்.ஜானகி போன்றோருடன் இவர் பாடிய பாடல்கள் வார்த்தையில் விளக்க முடியாத நாதக் கோலங்களாகும்.
பி.சுசீலாவுடன் இணைந்து பாடல்கள்.
01 நாளாம் நாளாம் திருநாளாம் – காதலிக்க நேரமில்லை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
இந்தப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.
திலங் ராகத்தில் அதுவரை யாரும் எண்ணிப்பார்க்க முடியாத புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட இனிய பாடல்.
02 அனுபவம் புதுமை – காதலிக்க நேரமில்லை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
லத்தீன் அமெரிக்க பாணியில் அமைந்த இந்தப்பாடலில் சைலபோன் ,பொங்கஸ்,குழல் ,கிட்டார் ,விசில்,எக்கோடியன் ,வயலினிசை என ஆர்ப்பரிக்கும் பாடல். ” பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே” என்ற வரிகளில் 1940 களில் வெளிவந்த Bésame Mucho” [Kiss me a lot] என்ற பாடலின் தாக்கம் துல்லியமாகத் தெரியும் பாடல். காதலர்களின் புதிய காதல் அனுபவத்தை வெளிப்படுத்தும் பாடல்.
சிங்காரத் தேர் போல குலுங்கிடும் அவள் வண்ணம் – ஆகா
சித்தாடை முந்தானை தழுவிடும் என் எண்ணம் – என்ற இடங்களை ஸ்ரீனிவாஸ் பாடும் போது அவ்வளவு கனிவு ,குழைவு!
அதே போல “
ஒரு தூக்கமில்லை ஒரு ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை …..
என்ற இடங்கள் சுசீலாவிவின் குரலில் மேட்டின் சுகம் அதிஅற்புதமாக வெளிப்பட்டு நிற்கும்.
03 யார்யார் யார் அவள் – பாசமலர் 1961 – பி.பி.ஸ்ரீனிவாஸ் + பி.சுசீலா – விஸ்வநாதன் ராமமூர்த்தி
மலையிலிருந்து வரும் குளிர்காற்றின் இதம் இந்தப்பாடல்.அருமையான ஹம்மிங்குடன் சுசீலா தேனாக ஆரம்பிக்க ஸ்ரீனிவாஸ் வண்டாய் உறுமும் இனிமை அற்புதம்.தேனும் பாலும் கலந்த இனிமையை ” ஊர் பேர் தான் தெரியாதோ என்று சுசீலா கூவ …என்ன ஒரு அருமை!
மலையிலிருந்து வரும் இசை என்று அர்த்தப்படுகிற “பகாடி ” என்ற ராகத்தில் அமைக்கப்பட்ட பாடலை மலைகளின் பின்னணியில் படமாக்கியது தற்செயலான செயலல்ல என்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.
04 நெஞ்சம் மறப்பதில்லை – நெஞ்சம் மறப்பதில்லை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தலைப்புக்கேற்ற பாடல்.தமிழ் சினிமாப் பாடல்களில் எத்தனையோ ஹம்மிங் வந்திருக்கின்றன.ஆனால் இது போல உயிரை வதைக்கும் ஒரு ஹம்மிங் இதுவரை வரவில்லை என்று சொல்லுமளவுக்கு அத்தனை ,கனிவும்,குழைவும்,ஏக்கமும் ஒன்று சேர்ந்த ஒரு ஹம்மிங் இது!
நெஞ்சம் மறப்பதில்லை ….. என்று சுசீலா இழுத்துப்பாடுவதும்,
இது சோதனையா நெஞ்சின் வேதனையா – உன்
துணையே கிடைக்கவில்லை
உன் துணையே கிடைக்கவில்லை …
என்ற இடங்களில் மெட்டு நம் நெஞ்சை உருக வைக்கிறது. அது போலவே
ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும் மறுபிறப்பினிலும் -நான்
என்றும் நினைத்திருப்பேன் …
என்று ஸ்ரீனிவாஸ் பாடும் போது பாடல் உச்சம் பெறுகிறது.நெஞ்சம் மறப்பதில்லை என்ற வரிகளை பல சங்கதிகளில் பாட வைத்திருப்பது மெல்லிசைமன்னர்களின் இசைத்திளைப்பையும்,ஆற்றலையும் காட்டுகிறது.
எத்தனை சந்ததிகள் மாறி மாறி வந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் மறப்பார்களா என்று சொல்ல முடியாது.
05 மதுரா நகரில் தமிழ் சங்கம் – பார் மகளே பார் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
06 போக போக தெரியும் – சர்வர் சுந்தரம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
07 பால் வண்ணம் பருவம் – பாசம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
08 என்னைத் தொட்டு – பார்மகளே பார் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
09 காற்று வந்தால் – காத்திருந்த கண்கள் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
10 இதழ் மொட்டு விரிந்திட – பந்தபாசம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
11 நான் உன்னை சேர்ந்த செல்வம் – கலைக்கோயில் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடிய பாடல்கள்.
12 பூஜைக்கு வந்த மலரே வா – பாதகாணிக்கை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
என்ன ஒரு ஆர்ப்பரிப்பான ஆரம்பம்,குதூகலம்! என்ன ஒரு மென்மையான பாடல் எடுப்பு! பாடலுக்கான வாத்திய அமைப்பு , கோரஸ்,பாடிய முறை அத்தனையும் அற்புதம்.மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளிவந்த அதி உச்சிப்பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்!
13 இந்த மன்றத்தில் ஓடிவரும் – போலீஸ்காரன் மகள் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
14 பொன் என்பேன் – போலீஸ்காரன் மக்கள் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
15 அழகுக்கும் மலருக்கும் – நெஞ்சம் மறப்பதில்லை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
16 ஆண்டொன்று போனால் – போலீஸ்காரன் மகள் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
17 சித்திரமே சொல்லடி – காதலிக்க நேரமில்லை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
18 நான் உன்னை சேர்ந்த செல்வம் – கலைக்கோயில் –பி.பி.ஸ்ரீனிவாஸ்+ சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
19 இந்த மன்றத்தில் ஓடிவரும் – போலீஸ்காரன் மகள் –பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எஸ்.ஜானகி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மோகனராகத்தில் அமைந்த இந்த இரண்டு பாடல்களும் கேட்பவர்களை எப்போதும் மெய்மறக்கச் செய்கின்ற பாடல்கள்.
எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய பாடல்கள்
18 கன்னி வேண்டுமா – மோட்டார் சுந்தரம்பிள்ளை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர் ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
19 கண்ணிரண்டும் மின்ன மின்ன – மோட்டார் உந்தரம்பிள்ளை -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர் ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
20 சந்திப்போமா – சித்தி -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன்
21 கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம் – சித்தி -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன்
22 ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் – சித்தி -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ எல்.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன்
ஏனைய பாடகர் ,பாடகிகளுடன் இணைந்து பாடல்கள்.
23 ஆதி மனிதன் காலத்தாலும் பின் – பாழே பாண்டியா -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ கே.ஜமுனாராணி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
24 அத்திக்காய் காய் – பலேபாண்டியா -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா + டி.எம்.எஸ்.+ கே.ஜமுனாராணி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
25 காதல் என்பது இதுவரை – பாதகாணிக்கை -பி.பி.ஸ்ரீனிவாஸ் + சந்திரபாபு + சுசீலா + ஏ.ஆர்.ஈஸ்வரி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
26 காலம் செய்த கோமாளித்தனத்தில் – படித்தால் மட்டும் போதுமா -பி.பி.ஸ்ரீனிவாஸ் + ஏ.எல்.ராகவன் + ஜி.கே.வெங்கடேஷ் குழு – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
27 அவள் பறந்து போனாலே – பார் மக்களே பார் -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ். – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
28 பொன் ஒன்று கண்டேன் – படித்தால் மட்டும் போதுமா -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ். – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
29 நல்லவன் எனக்கு நானே – படித்தால் மட்டும் போதுமா -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ். – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
30 றிடும் மண்ணில் எங்கும் – பழனி -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ் + சீர்காழி – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
31 மழை கொடுக்கும் கொடையும் – கர்ணன் -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ் + சீர்காழி + திருச்சி லோகநாதன் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
32 விஸ்வநாதன் வேலை வேண்டும் – காதலிக்க நேரமில்லை -பி.பி.ஸ்ரீனிவாஸ் + குழு – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
33 வாழ்ந்துபார்க்க வேண்டும் – நெஞ்சிருக்கும் வரை -பி.பி.ஸ்ரீனிவாஸ் + டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
தனியே பாடிய சில பாடல்கள்.
34 காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
35 நிலவுக்கு என் மேல் – போலீஸ்காரன் மக்கள் -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
36 இளமைக் கொலுவிருக்கும் – ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
37 சின்ன சின்ன கண்ணனுக்கு – வாழ்க்கைப்படகு -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
38 நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ – வாழ்க்கைப்படகு -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
39 கண்படுமே பிறர் கண்படுமே – காத்திருந்த கண்கள் -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
40 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் – நெஞ்சில் ஓர் ஆலயம் -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
41 உடலுக்கு உயிர் காவல் – மணப்பந்தல் -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
42 மனிதன் என்பவன் – சுமைதாங்கி -பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
43 உன்னழகைக் கண்டு கொண்டால் – கொடிமலர் – பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன்
44 நிலவே என்னிடம் நெருங்காதே – ராமு – பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை: விஸ்வநாதன்
கஸல் சங்கீதத்தில் அலாதி பிரியமும் பாடும் ஆற்றலுமிக்க ஸ்ரீனிவாஸ் இனிய சங்கதிகளை மிக லாவகமாகப்பாடுவதில் வல்லவமை பெற்றவர்.அவர் பாடிய அத்தனை பாடலிலும் இத்தன்மையை நாம் காணலாம் எனினும் ஒரு சில பாடல்களை உதாரணம் கூறலாம்.
“துள்ளித் திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று ” [காத்திருந்த கண்கள் 1962 ] பாடலில்
“சொல்லி வைத்து வந்தது போல்
சொக்க வைக்கும் மொழி எங்கே “
என்ற வரிகளை பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடும் போது கவனித்து பாருங்கள்.நழுவி ஓடும் அருமையானதும் , இலகுவாகத் தோற்றம் தருவதுமான ,ஆனால் பாடுவதற்கு மிகவும் நிதானம் கோரக்கக்கூடிய சங்கதியை மிக அருமையாக, அனாயாசமாக பாடியிருப்பார் என்பதை கவனித்துக் கேட்டால் அவரது ஆளுமை புரியும்.
” இளமை கொலுவிருக்கும் ” [ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் 1962 ] பாடலில் “அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ ஓ.. ஓ.. ஓ..” என்ற வரிகளை பாடும் போது என்னே கனிவு ,சுகம்!
** கண்படுமே பிறர் கண்படுமே [ [காத்திருந்த கண்கள்] பாடலில் ” ஆடவர் எதிரே செல்லாதே ,அம்பெனும் விழியால் கொல்லாதே ..தே…தே ….” என்ற வரிகளும்..
** யார் யார் யார் அவள் யாரோ [ பாசமலர்] பாடலில் “அவள் யாரோ …ஓ…ஓ..” ,,அதுமட்டுமல்ல ” சலவைக்கல்லு சிலையாக தங்கப்பாளம் கையாக மலர்களிரண்டும் விழியாக ” என்ற இடத்திலும் என்னே ஒரு இதமான குழைவு ! குறிப்பாக “அவள் யாரோ …ஓ…ஓ ” அந்த வரிகளை இறுதியிலும் பாடும் பாங்கு மிக அருமை!
1960 களில் தான் பாடிய பாடல்கள் குறித்து பின்னாளில் அவர் பின்வருமாறு கூறினார்.
“எனக்குப் பிடித்தது இதமான ,மிதமான ,இனிமையான இசை.அந்தமாதிரி இசை திரையில் அநாதரைக்கு ஒலித்தது என்னுடைய அதிஷ்ட்டம்.அப்படிப்பட்ட பாடல்களை பாடக் கிடைத்த வாய்ப்பு என் பாக்கியம் “
அந்தக்காலத்து ஜேசுதாஸ் ஆன பி.பி.ஸ்ரீநிவாஸின் பேஸ் குரல் இனிமையை கச்சிதமாகப் பயன்டுத்தியது போல
” வெண்கலக் குரலோன் ” சீர்காழி கோவிந்தராஜனையும் உயிர்ப்புமிக்க பாடல்களில் பயன்படுத்தினர்.
[ தொடரும் ]
முழு தொடர்களை பார்வையிட >>>>