இவ்வாலயம் தற்போது அமைந்திருக்கும் இடம் ஆரம்பத்தில் பூஞ்செடி கொடிகள் நிறைந்த ஒரு பூந்தோட்டமாக காணப்பட்டது. இப் பூந்தோட்டத்தின் அருகில் பெரிய அளவிலான 16 படிகளை கொண்ட திருக்குளம் ஒன்றும் இத் திருக்குளத்தின் அருகில் சிறிய மடம் ஒன்றும் இருந்தது. குளத்தின் கிழக்குப் புறமாக பெரிய அரசமரம் ஒன்றும் குளத்தின் தெற்குப் புறம் நடைபாதையாகவும் இருந்தது. குளத்தின் வடக்கு புறத்தில் இருந்த மடத்தில் ஆறுமுகக்குருக்கள் ஐயாவும் மனைவியும் வசித்து வந்தனர். குருக்கள் ஐயா அவர்கள் இப்பகுதி மக்களுக்குரிய சைவக்கிரியைகள் அனைத்தையும் செய்து வாழ்ந்து வந்தார்.
இவ்வாறு சைவப் பணியை குருக்கள் ஐயா செய்து வருகின்ற நாளில் அவருடைய மனதில் இவ்வூரில் “ஓர் கோயில் இல்லையே” என்ற குறை அவரது மனத்தை துன்புறுத்தியது. ஒரு நாள் இத்துன்பத்துடன் தூங்கும் போது விநாயகப் பெருமான் கனவில் தோன்றி “இக் குளத்தினருகே எனக்கு ஓர் ஆலயம் அமைத்து என்னை வணங்கு” என கூறி மறைந்தருளினார். திடுக்கிட்டு எழுந்த குருக்கள் ஐயா அதிகாலையே ஊர்மக்களை அழைத்து அவர்களிடம் தனக்கு விநாயகப் பெருமான் கனவில் திருவாய் மலர்ந்தருளிய செய்தியை ஊாமக்களுக்கு எடுத்துகூறி அவர்களின் உதவியுடன் மிகக் குறுகிய காலத்தில் குளத்தின் அருகே சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து விநாயகப் பெருமானுக்கு தானே பிரதிஷ்டை செய்து அதற்கு நித்திய பூசை வழிபாடாற்றி வந்தார். இவ்வாலயம் வல்வெட்டி கிராமத்தில் உள்ள “வேவில்” என்னும் பகுதியில் இருப்பதால் “வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர்” ஆலயம் என்னும் தெய்வீகத் திருத்தலமாயிற்று.
இத்திருத்தலத்திற்கு அருகில் திருக்குளம், மடமும் இருந்ததனால் “குளத்தடி பிள்ளையார்” எனவும், “மடத்தடிப் பிள்ளையார்” எனவும் இப்பகுதி மக்கள் கூறி வழிபட்டு வந்தார்கள். ஆறுமுகக்குருக்கள் ஐயாவின் மறைவைத் தொடர்ந்து அவரின் மகன் சின்னையாக்குருக்கள் விநாயகப் பெருமானின் கருணையுடன் முறைப்படி அமைக்கப்பட்ட கர்ப்பகிரகத்தையும், அர்த்த மண்டபத்தையும் ஓலைக் கொட்டகையாக மகா மண்டபத்தையும் அமைத்தார். இவரது காலத்திலேயே ஆலயம் இரண்டு வீதிகள் உடையதாகவும், இரண்டு கால பூசைகள் நடைபெற்ற ஆலயமாகவும் ஆலய வளர்ச்சியில் இரண்டாம் படியில் கால் வைத்தது எனவும் கூறலாம்.
சின்னையாக்குருக்களின் காலம் நிறைவு பெற இவரது மகன் சுவாமிநாதக்குருக்கள் ஐயா தொடர்ந்து ஆலயத்தை பராமரித்தும், நித்திய நைமித்திய பூசைகளையும் சிறப்பாக நடாத்தி வந்தார். இவரின் மறைவிற்கு பின் இவரது மைத்துனரான மட்டுவிலைச் சேர்ந்த சுப்பிரமணிக்குருக்கள் காலத்திலேயே கோயிலின் திருப்பணி வேலைகள் மிகப் பெரிய அளவில் இடம்பெற்றது. சுப்பிரமணியக்குருக்கள் அவர்கள் விநாயகப் பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்ததுடன் ஆலயத்திற்கு வரும் அடியார்கள் மீதும் நல்ல அன்புடையவராக இருந்து அடியார்களிடமிருந்து ஆலயத்திற்கு தேவையான பண உதவி, பொருள் உதவி, சரீர உதவி என்பனவற்றை போதியளவில் பெற்று முன்பு ஓலையினால் வேயப்பட்டிருந்த கொடித்தம்ப மண்டபம், மகா மண்டபம் என்பன சிறந்த முறையில் கற்களினால் நிர்மாணிக்கப்பட்டு வசந்த மண்டபத்திற்கும் அத்திவாரம் இட்டு வரிவர்க்கங்கள் மட்டும் அமைப்பித்தார்.
வருடாந்த அலங்கார உற்சவத்தை மகோற்சவமாக மாற்ற விரும்பி கொடித்தம்பம், அடித்தளத்துடன் கூடிய கட்டுத் தேர் என்பவற்றை செய்வித்ததோடு சுற்று மதிலையும் கட்டுவித்து 1959ம் ஆண்டு சித்திரை மாதம் மஹாகும்பாபிஷேகத்தையும் செய்து மஹோற்சவத்தையும் ஆரம்பித்து வைத்தார். இவரது காலத்தில் இவ்வாலயம் சிறப்பான வளர்ச்சிப் பாதையில் சென்றது குறிப்பிடத்தக்கது.
1959ம் ஆண்டு சுப்பிரமணியக்குருக்கள் ஐயாவின் மறைவின் பின்னர் அவரின் மைத்துனர் சுவாமிநாதக்குருக்களின் மகன் திருச்சிற்றம்பலம் ஐயா அவர்கள் ஆலயத்தை பொறுப்பேற்று நடாத்தி வந்தார்கள். இவரின் காலத்தில் மணிக்கூட்டுக் கோபுரம், காண்டாமணி என்பன ஊர்மக்களின் உதவியுடன் அமைக்கப்பட்டது. சுற்றுக்கொட்டகைகள் ஓட்டு கூரைகளாக மாற்றப்பட்டது.
தகவல்:வதனன்