வள்ளுவரின் மனைவி வாசுகி

வள்ளுவரின் மனைவி என்பதைத் தவிர வாசுகியின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. மறைமலை அடிகளின் கூற்றுப்படி வாசுகி “நாகி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார் .இவர் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் வேளாண் தொழில் செய்து வந்த மார்கசேயன் (அல்லது மார்கசகாயன்) அவரது மனைவி அம்புஜம் ஆகியோரது மகள்களில் ஒருவர் ஆவார் .

ஒரு சமயம் மார்கசகாயனின் பயிர்களை நோய் தாக்கியபோது, வள்ளுவர் அவற்றை குணப்படுத்தி உதவியதாகக் கூறப்படுகிறது .அதற்கு நன்றி கூறும் விதமாக மார்கசகாயன் வள்ளுவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்தார் என்று நம்பப்படுகிறது .

வள்ளுவர் வாசுகியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு வாசுகியை சோதிக்க எண்ணி ஒரு கைப்பிடி மணலை சமைக்கச் சொன்னார் என்றும், வாசுகி அதை அரிசியாக மாற்றி சமைத்து அவருக்கு அறுசுவை உணவளித்ததாகவும் மரபுவழிக் கதைகள் கூறுகின்றன .

மயிலையில் திருவள்ளுவர் கோயிலில் காணப்படும் வாசுகியின் சன்னிதி

வாசுகி ஒரு சிறந்த தமிழ் இல்லத்தரசியாக அறியப்படுகிறார் .எனினும், இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை .வள்ளுவரையும் வாசுகியையும் குறித்த எராளமான வரலாற்று நம்பகத் தன்மையற்ற புனைவுக் கதைகள் கூறப்படுகின்றன. இவை பெரிதும் வரலாற்றுப் பகுப்பாய்வுப் பொருளாக இருந்துவந்துள்ளன .இவற்றில் பலவற்றிற்கு சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை .

வள்ளுவர் வாசுகியிடம் தினமும் தனது சாப்பாட்டுத் தட்டில் ஒரு பற்குச்சியும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் வைக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதை அவ்வாறே பின்பற்றி வந்த வாசுகி ஒன்றைக் கண்டு வியந்தார். இவ்விரண்டையும் தான் வேண்டியதன் காரணத்தைக் கூறாத வள்ளுவர் இவற்றை ஒருநாள் கூடப் பயன்படுத்தாமலேயே இருந்துவிட்டார். இருந்தும் இதற்கான காரணத்தை ஏதும் வினவாமல் வாசுகி தன் வாழ்நாளின் இறுதிவரை தன் கணவனின் இந்தக் கட்டளையை நிறைவேற்றி வந்தார்.

தனது மரணத்தருவாயில் வாசுகி கணவரின் இச்செயலுக்குக் காரணமறியாமல் வருத்தத்துடன் காணப்பட்டார். இதையுணர்ந்த வள்ளுவர், காரணமுரைக்காமல் இருந்தமைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, “நான் உண்ணும்போது அரிசிப் பருக்கை ஏதும் தவறுதலாக தரையில் விழுந்துவிட்டால் அது பெரும் பாவமாகும். அச்சமயம் தட்டிலுள்ள பற்குச்சியினைக் கொண்டு கீழே விழுந்த பருக்கையை எடுத்து கிண்ணத்திலுள்ள தண்ணீரில் அலசி பின்னர் அதனை உண்ண எண்ணியே அவற்றை வேண்டினேன். இன்றுவரை அப்படி ஏதும் நிகழாததால் அவை தேவைப்படாமற் போய்விட்டன. நம் உணவை வீணாக்குவது பொரும் தவறு” என்று பதிலளித்தார். இதைக் கேட்ட வாசுகி தன் ஐயம் தீர்ந்ததை எண்ணி நிம்மதியுற்றார்.

இந்நிகழ்வு வள்ளுவரின் நேர்மையையும் கணவன் மீதான வாசுகியின் பக்தியையும் எடுத்துரைப்பதாக உள்ளது .
வாசுகியின் தெய்வீக குணங்களையும் கணவன் மீது கொண்ட பக்தியையும் சித்தரிக்கும் பல தொன்மைக் கதைகள் வழக்கில் உள்ளன:
ஒருமுறை வாசுகி கிணற்றில் நீரிரைத்துக் கொண்டிருக்கையில் வள்ளுவர் அவரை அழைக்க, வாசுகி சற்றும் சிந்திக்காது இழுத்துக்கொண்டிருந்த கயிற்றை அப்படியே விட்டுவிட்டு தன் கணவரிடம் விரைந்தார். அவர் திரும்பி வரும் வரை நீரைத் தாங்கிய குடத்துடன் கயிறு அப்படியே அசையாது அதன் நிலையில் நிற்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது .
ஒரு நாள் காலை, சூடான சாதத்தைப் பரிமாறும் வழக்கத்திற்கு மாறாக வாசுகி முந்தைய நாள் வடித்த சாதத்தைப் பரிமாறினார். வள்ளுவரும் “சாதம் கொதிக்கிறது” என்று கிண்டலாகக் கூற, வாசுகி உடனே விரைந்து சென்று ஒரு விசிறியைக் கொண்டு வந்து வள்ளுவரின் அருகில் நின்று அன்னத்தை விசிறத் துவங்கினார் .

ஒரு நண்பகல் நேரத்தில் வள்ளுவர் தன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தறி ஒன்று தவறிக் கீழே விழுந்து விட்டது. நண்பகல் வெளிச்சத்தில் கீழே விழுந்த பொருள் கண்களுக்கு நன்கு புலப்பட்ட போதிலும் வள்ளுவர் தனது மனைவியிடம் விளக்கு ஒன்றை எடுத்து வருமாறு கூற வாசுகியும் கேள்வி ஏதும் கேட்காது உடனே பணிந்து விளக்கை எடுத்து வந்தார் .
மரணம்
வாசுகி இறந்தபின் வள்ளுவர் அவரது உடலை அமர்ந்திருந்த நிலையில் தகனம் செய்தார் .வாசுகியின் மரணப்படுக்கையில் வள்ளுவர் வாசுகியை நோக்கி ஒரு பாடலையை இயற்றியதாகக் கூறப்படுகிறது. நாலடிகளைக் கொண்ட அப்பாடல் வரிகள் வள்ளுவர் தன் மனைவி மீது கொண்ட ஆழமாக அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தது
வாசுகியின் மரணத்தின் போது வள்ளுவா் பாடியதாகக் கருதப்படும் பாடல் இதோ:
அடிசிற் கினியாளே! அன்புடை யாளே!
படிசொற் கடவாத பாவாய்!—அடிவருடிப்
பின்தூங்கி முன்எழூஉம் பேதையே போதியோ!
என்தூங்கும் என்கண் இரா.

அவ்வகையில் தன் மனைவி மீது பாடல் புனைந்த ஒரே தமிழ்ப் புலவராக வள்ளுவர் போற்றப்படுகிறார். காலப்போக்கில் தமிழ் மரபில் அப்பாடலின் வரிகள் தனித்தனியே பொன்மொழிகளாக மாறிவிட்டன .

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *