தூண்டல் அடுப்பு என்ற பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியம் எல்லாம் பட வேண்டாம்! இது யாவரும் அறிந்த ஒன்று தான். நிறைய வீடுகளில் உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர். இதை கரண்ட் அடுப்பு என்றும் சிலர் சொல்லுவதுண்டு. மின்சாரத்தின் துணை கொண்டு அடுப்பு எரிவதால் இந்த பெயர் வந்ததோ என்னவோ?? ஆனால் இதை கரண்ட் அடுப்பு என்று சொல்வது தவறு. இதை தூண்டல் அடுப்பு(Induction Stove )என்று சொல்வதே முற்றிலும் சரி! அது என்ன தூண்டல்?? சந்தேகம் வருகிறது இல்லையா.. மேலே படியுங்கள்..
இந்த தூண்டல் அடுப்பில், எரிவாயு அடுப்பை போல் தீ எரியாது! அவ்வளவு ஏன், அடுப்பு மேலே சுட கூட செய்யாது.. ஆனாலும் , எல்லாவற்றையும் நிமிடங்களில் சமைத்து முடித்து விடலாம்! அது என்ன மாயம்?? மாயமும் இல்லை , மந்திரமும் இல்லை எல்லாம் ஒரு கணக்கு தான்! இந்த கணக்கை யாரு போட்டா என்று கடைசியில் கண்டிப்பாக சொல்கிறேன்.. கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்! முதலில் தூண்டல் என்றால் என்ன? தூண்டல் அடுப்பு வேலை புரியும் மர்மம் என்னவென்று சற்றே விரிவாக நோக்குவோம்..
தூண்டல் என்றால் தூண்டுவது. அதாவது மின்சார ஆற்றலால் அடுப்பானது இயக்கப்பட்டாலும் , அதன் மேல் வைத்து சமைக்கப்படும் பாத்திரங்களை சூடாக்க, வெப்ப ஆற்றலை அடுப்பானது, பாத்திரங்களின் மேல் தூண்டுவதால் இதன் பெயர் தூண்டல் அடுப்பு ஆயிற்று.
இது எப்படி வேலை செய்யுது என்று இப்போ பார்த்து விடலாம்.
1. இந்த தூண்டல் அடுப்பின் அடியில் ஒரு செப்பு சுருள்(copper coil ) இருக்கும். இந்த செப்பு சுருள் வழியாக நம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் மாறுதிசை மின்னோட்ட மின்சாரம் கொடுக்கப்படுகிறது.
2. அவ்வாறு இந்த செப்பு சுருளுக்கு மாறு திசை மின்னோட்டம் கொடுக்கப்பட்ட உடன் அவை மின்காந்தமாக(Electromagnet ) மாறி ஊசலாட்ட காந்த புலத்தை உண்டு பண்ணி விடுகிறது.
3. ஊசலாட்ட காந்த புலம்(Oscillating Magnetic Field ) , காந்த பெருக்கை உண்டாக்க , அக்காந்தப்பெருக்கு, அடுப்பின் மேலே வைத்திருக்கும் இரும்பு பாத்திரத்தின் அடியில் ஒரு சுழல் மின்னோட்டத்தை(Eddy Currents ) தூண்டுகிறது.
4. அவ்வாறு தூண்டப்படும் சுழல் மின்னோட்டத்தை தடுக்க இரும்பு பாத்திரம் தன் உயர் எதிர்ப்பை(High Resistance ) காட்ட , அவை வெப்ப ஆற்றலாக உருமாறி பாத்திரம் சூடாக ஆகிறது.
தூண்டல் அடுப்பில் எல்லா வகையான பாத்திரங்களையும் உபயோகித்து விட முடியாது.. இரும்பு(Iron ) , உருக்கு இரும்பு(Steel ) ஆகியவற்றால் உருவாக்கிய பாத்திரங்களை மட்டுமே உபயோகிக்க முடியும். செம்பு(Copper ) , அலுமினியம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் இங்கே பிரயோஜன படாது!
ஏன்? ஏன்? ஏன்?
காரணம் இருக்கு…
ஏன் என்றால் செம்பு , அலுமினியம் போன்ற உலோகங்கள் மின்சாரத்தை நன்றாக கடத்த கூடியது(Good conductor of electricity ). ஆனால் இரும்பு, உருக்கு இரும்பு போன்ற உலோகங்கள் மின்சாரத்தை மோசமாக கடத்த கூடியவை(Bad conductor of electricity ). அதனால் அந்த உலோகங்களில் மின்சாரத்தை கடத்த முயலும் போது அது தன்னுடைய உயர்ந்த எதிர்ப்பை(High Resistance ) காட்டும். அவ்வாறு உயர்ந்த எதிர்ப்பு காட்டும் போது அவை வெப்பமாக மாறி விடுகின்றன!
உங்க வீட்டில் உள்ள எந்தெந்த பாத்திரங்களை உபயோகம் செய்யலாம் என்று உங்களுக்கு குழப்பம் நீடித்தால் , இந்த படத்தில் காண்பிப்பது ஒரு காந்தத்தை எடுத்து பாத்திரத்தின் அடியில் ஒட்டி கொள்கிறதா என்று நோக்குங்கள்.. காந்தம் பாத்திரத்தோடு ஒட்டி கொண்டால் அது தூண்டல் அடுப்பில் உபயோகிக்க ஏற்றது என்று நினைவில் கொள்ளுங்கள். மேலும், அந்த பத்திரத்தின் அடி தட்டையாக இருக்க வேண்டியது முக்கியம்!
தூண்டல் அடுப்பில் கிட்டத்தட்ட 90% தூண்டப்பட்ட வெப்பம் பாத்திரத்தின் வழியே உணவை சென்றடைந்து நிமிடத்தில் சமைக்கின்றது! எரிவாயு அடுப்பில் 45% -55% வெப்பமே உணவை சென்றடைகிறது.இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தும் இந்த தூண்டல் அடுப்பை தயவு செய்து வாங்கி விடாதீர்கள், நீங்கள் இதய முடுக்கியை(Pace maker ) உங்கள் இதயத்தில் பொருத்தி இருந்தால்! ஏனெனில் மின்காந்த இடையீடு (Electromagnetic Interference) ஏற்பட்டு , உங்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் !
முடிவாக , யாரு இந்த கணக்கை போட்டிருப்பார்கள் என்று சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா.. அவர் வேறு யாரும் அல்லர் , ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்(James Prescott Joule ) தான்! இவர் கண்டுபிடித்தது தான் சூல்விளைவு(Joule Effect ).அதாவது ஒரு கடத்தியில் (conductor ) மின்சாரம் பாயும் போது , வெப்பம் உருவாகும் என்பதை சொல்வது தான் சூல்விளைவு!
இவர் இதை கண்டு பிடித்தது என்னவோ 150 வருடங்களுக்கு முன்னே, ஆனால் இப்போ சில வருடங்களாய் தான் இவரின் கண்டுபிடிப்பு தூண்டல் அடுப்பாய் நம் சமையலறைகளை அலங்கரித்து கொண்டிருக்கின்றன!