என்னைப்போல் தானே
நீங்களும்
வீடுதாண்டி
வெளியேறுவதையே
விடுதலையென நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்
எல்லா வீடும் ஒன்றுபோலில்லை
ஒரு வீடு சிறகுகள்
தருகிறது
ஒரு வீடு சிலுவையில் ஏற்றுகிறது
ஒரு வீடு சிறைக்
கூடமாகிறது
என்னைப்போல் தானே
நீங்களும்
வீட்டுக்கு
வெளியேதான்
வாழ்வென்று ஒன்றிருப்பதாய்
நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்
அவரவர்க்கும்
உள்ளுக்குள் ஒரு வீடிருப்பதும்
அது
உட்புறமாய்
தாழிடப்பட்டிருப்பதும்
மறந்து வீணே
வாசற்படிகளில் நின்று தேம்பிக்கொண்டிருக்கிறோம்
இனி
திறக்க வேண்டியதும் மறுத்தால்
உடைத்துக்கொண்டு
வெளியேற வேண்டியதும்
தத்தமது இதயத்தின்
கதவுகளைத்தானே
தவிர
வீட்டின் கதவுகளை
அல்ல
—ரிஸ்கா முக்தார்—