யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றி இளைப்பாறிய உதவி அதிபர் திரு.செல்வச்சந்திரன்..

யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் பற்றிய தனது நினைவலைகளிருந்து அதன் ஆரம்ப ஆசிரியரும் இளைப்பாறிய உதவி அதிபருமான திரு.செல்வச்சந்திரன் அவர்கள் எமக்குதந்த குறிப்புகளின் படி இக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

கம்பர்மலை அதை சார்ந்த கொம்மந்தறை, மயிலியதனை, நாவலடி, ஊரிக்காடு ஆகிய அயற்கிராமப் பிள்ளைகள் நெடுங்காலமாக சூழ உள்ள உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, கெருடாவில் ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கே சென்று கல்வி கற்று வந்தனர். பிள்ளைகள் கல்வி கற்பதில் படும் இடர்களை உணர்ந்த ஊர்ப் பெரியவர்கள், நலன்விரும்பிகளின் முயற்சியால் உருவானதே யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாகும்.


அன்று அதற்காக அங்கு விளங்கிய கிராம முன்னேற்றச் சங்கம், அதன் தலைவர் திரு வ.தங்கராசா, நலன் விரும்பிகளான திரு செல்லையா, வயித்திலிங்கம், தெய்வசிகமாணி போன்றோர் பெருமுயற்சி செய்தனர். அன்றைய எம்.பி திரு பொன் கந்தையாவிடம் தலைவர் தங்கராசா தலைமையில் சென்று பாடசாலையின் தேவையை எடுத்துக் கூறினர். அவற்றை செவிமடுத்த எம்.பி கந்தையா தம்மாலானவற்றை செய்வதாகக் உறுதி செய்தார்.
எம்.பியின் அனுசரணை கிடைத்தவுடன் பாடசாலை அமைப்பதற்கு முயன்றனர். பாடசாலைக்கான நிலத்தை திரு பெரியார் கிட்டிணபிள்ளை தருவதாகக் கூறி மாத்திரா வளவில் பாடசாலைக்குரிய நிலத்தை வழங்கினார். அந்நிலத்தில் 100 அடி நீளமான கொட்டகை ஒன்றை தாபித்தனர். மாணவர் இருக்கைகள், ஆசிரியர் இருக்கைகள், கரும்பலகைகள் மற்றும் பாடசாலைக்கு வேண்டிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டன.
கிராம முன்னேற்றச் சங்கம் பாடசாலை ஆசிரியர்களாவதற்கு ரூபா 500ம் 25 படிக்கும் பிள்ளைகளுடன் வரவேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர். பயிற்றப்பட்டஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ரூபா 1000 கட்ட வேண்டுமெனவும் விதித்தனர். அதற்கேற்ப பல ஆசிரியர்கள் முன்வந்து அவற்றைச் செய்து உதவி ஆசிரியர் ஆகினர். வல்வை வெங்கடாசலம் பிள்ளை அவர்களும் இன்னுமொரு உடுப்பிட்டியை சேர்ந்த ஆசிரியை ஒருவரும் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் வருகை தந்தனர். திரு வெங்கடாசலம் அவர்கள் தலைமை ஆசிரியராக கடமையாற்றினார்.
பாடசாலையைச் சுற்றி வீட்டு மனைகள் இருந்தன. அதனால் பாடசாலை விஸ்தரிப்புக்கு இடமின்மையைக் கண்ட சங்கத்தினர் பாடசாலையை வேறு இடத்தைத் தேடிய போது பெரியார் கிருட்ணபிள்ளை கொம்மந்தறையில் நிலத்தைத் தருவதாகக் கூறி கொம்மந்தறை மாதா அம்மன் கோவில் வடக்குப்புறமாக 10 பரப்பு நிலத்தை வழங்கினார். அந்நிலம் பிரதான பாதையின் தெற்குப்புறமாக பற்றைகள் நிரம்பிய காட்டுநிலமாக இருந்தது. சங்கத்தினர் அந்நிலத்தின் மத்திய பகுதியை திருத்தி அங்கு 80 அடி நீளம் 18 அடி அகலமான மண்டபம் அமைத்தனர். பிரதான பாதையின் வடக்குப்புறமாக 100 அடி நீளமான கிடுகுக் கொட்டகை ஒன்றும் தாபிக்கப்பட்டது. திரு பொன் கந்தையாவின் அனுசரணையுடன் 21.03.1958 இல் யாழ் கம்பர்மலை அ.த.க பாடசாலையென பதிவும் திறப்பு விழாவும் நடைபெற்றது. புதிய ஆசிரியர்கள் நியமனமும் வழங்கப்பட்டது. புதிய ஆசிரியர்கள் திரு வெங்கடாசலம், திரு தம்பையா, திரு யோகசாமி, திரு துரைராசா, திரு தங்கவடிவேல், திரு சந்திரன், திரு செல்வச்சந்திரன், திருமதி மனோரஞ்சிதம் ஆகியோர் நியமனம் பெற்றனர்.
புதிதாக கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்கள் நியமனம், சங்கீத ஆசிரியர், பாடசாலை காவலாளி நியமனம் என்பன சிறப்பாக நடந்தேறின. அடுத்து கரவெட்டியை சார்ந்த செல்லையா பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொம்மந்தறை நமசிவாயம் குடும்பத்தினர் இப்பாடசாலைக்கு எதிராக கிந்துபோட்டுக்கு நிலம்வழங்கி கிந்து போட் பாடசாலையை ஆரம்பித்தனர். பாடசாலைக்கு புதிதாக ஆசிரியர்களை நியமித்து கிந்து போட் பாடசாலை நடைபெற்றது. நமசிவாயம் அவர்சார்ந்தோர் அ.த.க பாடசாலைக்கு எதிராக பல சச்சரவுகளில் ஈடுபட்டுவந்தனர். பாடசாலை திறப்பு விழாவன்று சச்சரவுகள் ஏற்பட்ட போது அவை எல்லாம் அடக்கப்பட்டு விட்டன. போலிஸ் காவலும் போடப்பட்டது. கிந்து போட் பாடசாலை அ.த.க பாடசாலைக்கு அண்மையிலேயே இருந்தது. கிந்துபோட் ஆசிரியர்களுக்கு கிந்து போட் வேதனமும் வழங்கி வந்ததோடு பாடசாலையை பதிவு செய்வதிலும் முயற்சி செய்து வந்தது. பாடசாலை பதிவுக்கு வந்த போது தலைவர் தங்கராசா முயற்சியால் பொன் கந்தையா தலையிட்டு பதிவு தடைப்பட்டுவிட்டது.
திரு செல்லையா அதிபரானதும் பாடசாலையின் காட்டு நிலம் துப்பரவில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். கொம்மந்தறையிலேயே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியதுடன் இராம, இலட்சுமர் என இருவரை துணையாக வைத்திருந்தார். பாடசாலை மாணவர்கள், மற்றும் நலம் விரும்பிகள் துணையுடன் காடாக இருந்த காரை, காண்டை, மற்றும் தாளைகளை எல்லாம் அழிக்கப்பட்டன. முதலில் கிழக்கப்புறமாக 100 அடி நீளம் 20 அடி அகலமான கட்டிடம் அமைத்து பாடசாலையாக மாறியது. பாடசாலையின் மேற்குப்பறமாக 100 அடி நீளமான கட்டிடம் அமைக்கப்பட்டு விஸ்த்தரிக்கப்பட்டது. மேற்குப் புறமாக வேலிபோல் அமைந்திருந்த தாளம் பற்றைகள் அழிக்கப்பட்டு பாடசாலையைச் சுற்றி வேலி அமைத்ததோடு முன் பக்கத்தில் கேற்போட்டு பூட்டும் போட்டுவைத்தார்.
உடுப்பிட்டி எம்.பியாக இருந்த பொன் கந்தையா அவர்கள் பாடசாலையின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பேருதவி புரிந்து வந்தார். 21.03.1958 ஸ்தாபிதம் பெற்ற பாடசாலை படிப்படியாக வளர்ந்து வடமராட்சியில் முதன்மை பெற்ற கல்லூரித் தகைமையோடு விளங்கியது. கிராம முன்னேற்றச் சங்கம் அமைத்த கட்டிடத்தை விட பெருங்கட்டிடங்கள் அமைந்தன. பாடசாலையின் வடபகுதியான நிலம் சுவிகரிக்கப்பட்டு இணைக்கப்பட்டது.
தனியே இயங்கவென அமைக்கப்பட்ட கிந்து போட் பாடசாலை கட்டிடம், மாணவர்கள், ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர். அப்போதைய எம்.பி சிவசிதம்பரம் கதிரவேலு ஆசிரியர் மற்றும் நலன் விரும்பிகளின் முயற்சியால் இருபாடசாலைகளையும்; ஒன்றிணைக்க உதவினார். கிந்து பாடசாலை புதிய ஆசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்க உதவியதுடன் பாடசாலை இணைப்பிலும் ஈடுபட்டு உதவினார். அவர் உதவியால் திரு கதிரவேலு, சுப்பிரமணியம், ஞானசுந்தரம், துரைராசா,இராசலட்சுமி மற்றும் கிந்து போட் நியமித்த இரு ஆசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது.
கல்வி கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் விசேட கணித, விஞ்ஞான ஆசிரியர்கள, சங்கீத ஆசிரியர், பாடசாலை காவலாளியும் நியமனம் பெற்றதுடன் பாடசாலையால் சுவிகரிக்கப்பட்ட நிலமும் விளையாட்டு நிலமாக திருத்தி அமைக்கப்பட்டது. தொடர்ந்து திரு இராஜலிங்கம் உடுப்பிட்டி எம்.பியாக இருந்த போது அவர் பங்களிப்பினால் சுவிகரிக்கப்பட்ட நிலத்தின் மேற்கு புறமாக திரு கதிரவேலு தற்காலிக அதிபராக இருந்த போது மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு நிலம் திருத்தம் நடைபெற்று வந்தது.


திரு கந்தசாமி அதிபரான காலத்தில் நடுப்பகுதியாகச் சென்ற பிரதான பாதை பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நலன்விரும்பிகளின் உதவியுடன் பாடசாலைக்கு கிழக்கு தெற்காக மாற்றி அமைக்கப்பட்டது.


பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்களின் அயராத உழைப்பினால் கல்வி அபிவிருத்தியிலும் பல்வேறு பாடசெயற்பாடுகளிலும் புகழ் பெற்று விளங்கியதுடன் சிறந்த மதி ஆற்றலையும் நற்பண்புகளையும் சிறந்த ஆளுமையையும் கொண்ட சிறந்த மாணவர்களை வருடந்தோறும் உருவாக்கியதுடன் மற்றய கல்லூரிகளுக்கும் வழங்கி வருவதுடன் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. பாடசாலை கல்வித்துறை இசை, நடனம் ஆகிய கலைத்துறை, விளையாட்டுத்துறை ஆகியவற்றில் முதன்மை பெற்றிருப்பதோடு, இத்துறை சார்ந்த மாவட்டப் போட்டிகளிலும் முதன்மை பெற்றுவருகின்றது. இப்பாடசாலை கோயில், குளம்,வயல்கள், விவசாயப் பெருநிலங்களின் சூழலின் மத்தியில் அமைந்திருப்பது பாடசாலையின் சிறப்பை மேலும் எடுத்துக் காடடுவதாக உள்ளது.
எமது கிராமங்களில் இருந்து புலம் பெயர்ந்த இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களும் நலன் விரும்பிகளும் ஒன்றிணைந்து தாம் வாழ்ந்த மண் தாம் கற்ற பாடசாலையின் விருத்தியை நோக்காகக்கொண்டு பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியக் கிளை ஒன்றை தாபித்து வருடந் தோறும் திரு சுதாகரன் முன்னின்று பூபாள இராகங்கள் நிகழ்வை நடாத்தி மலரும் வெளியிட்டு அதன் மூலம் பெறும் நிதியை தாம் கற்ற பாடசாலையின் விருத்திக்காக உதவியும் வந்தது போற்றத்தகுந்ததாகும்.
பூபாள இராகங்கள் நிகழ்வு மூலம் தமிழின் பெருமையையும் ஈழத்தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் நிகழ்ச்சியாகää உலகமெல்லாம் ஒலிக்கக் கூடிய வகையில் திட்டமிட்டு நடாத்தி சிறப்பான மலரையும் வெளியிட்டு வந்தது போற்றற்குரியதாகும். மேலும் ஈழ தமிழ் அறிஞர்களும் புலம் பெயர்ந்து வாழும் கலைஞர்களும் பங்குபற்றி சிறப்பித்ததும் இலண்டன் ஏனைய தமிழ் மக்களும் நிகழ்ச்சியை பார்த்து சமூக உணர்வை பேணவும் இந்நிகழ்வு அமைந்திருப்பது மகிழ்வும் பெருமையும் அடையவைக்கின்றது.
புழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக்கிளையின் காத்திரமான பங்களிப்பினால் பாடசாலையை சுற்றி எல்லைச்சுவர் அமைக்கப்பட்டது. விடுபட்ட நிலம் கொள்வனவு செய்யப்பட்டு எல்லைச் சுவர் அமைக்கப்பட்டது. பாலர்களுக்கான விளையாட்டு முற்றம் பாடசாலை நூலகம் திறக்கப்பட்டு நூலகத்திற்கான நூல்களை கொள்வனவு செய்ய நிதியுதவி,விளையாட்டுப் போட்டிக்கான நிதியுதவி போன்ற பாடசாலைத் தாயின் தேவை நிறைவேற்றப்பட்டது. பாடசாலை நூலகம் கல்வி அமைச்சர் “சுரனிமல் ராஜபக்ஸ” வினால் திறந்து வைக்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.
பூபாள இராகங்கள் 2002 நிகழ்வில் கலந்து கொண்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ந. அனந்தராஜ் அவர்களிடம் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,நலன்விரும்பிகளின் முயற்சியால் யாழ் கம்பர்மலை அரசினர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டு திரு அனந்தராஜ் அவர்கள் கல்வி அதிகாரிகளுடன் சென்று பெயர்பலகையும் திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் முதன்மை தகமை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டியும் சிறப்பாப நடத்தப்பட்டது. அத்துடன் பூபாள இராகங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் கிளிநொச்சி பாரளுமன்ற உறுப்பினர் திரு எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் வித்தியாலயத்திற்கு கணணிகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
வளர்ந்து வரும் இவ் வித்தியாலயம் ஊடாக தோற்றம் பெற்ற பொறியியலாளர்கள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் பட்டதாரிகள் என நீண்டு செல்லும் பட்டியலை உருவாக்கிவரும் இத் தமிழ் வித்தியாலயம் கூடிய கெதியில் மகாவித்தியாலயமாக இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுமுகப்பரீட்சையில் தோற்றும் வகையில் க.பொ.த உயர்தர வகுப்பு அமைக்கப்படவேண்டும். அதற்காக அதிபர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் முயற்சிக்க வேண்டும்.


இவ்வாறு பல்வகையிலும் முதன்மை பெற்று கோயிலும் சுனையும் வயல்களும் விவசாய நிலங்களும் சூழ்ந்த சூழலின் மத்தியில் அமைந்து கல்வி ஒளிபரப்பும் வித்தியாலயமாக விளங்கி வருகின்றது. இவ்வித்தியாலயத்தின் சங்கீத ஆசிரியர் அமரர் சங்கரசிவம் அவர்களால் ஆக்கம் பெற்ற பாடசாலைக் கீதத்தில்
“கம்பர்மலையில் தமிழ் வித்தியாலயம்
காசினி எங்கும் புகழ்ந்துட வாழி
கலை கல்வி ஓங்கி கவின் குணம் தாங்கி
மாதா மனோன்மணி அருள் காக்க
மருத நிலமது மாண்புடன் ஓங்கவே”
என வாழ்த்தி அவர் கண்ட கனவை பூபாள இராகங்கள் நிகழ்வு தமிழ் வித்தியாலயம் காசினி எங்கும் புகழ் பரப்பும் வித்தியாலயமாக விளங்க வைத்துள்ளது.
அந்த வகையில் இவ்வளர்ச்சிக்கெல்லாம் உந்து சக்தியாக எமது மண்ணின் மைந்தர்கள் வித்தியாலயமாய மாணவ மாணவிகள் குறிப்பாக திரு ம.சுதாகரன் அவருடன் இணைந்து செயலாற்றுகின்ற பழைய மாணவ மாணவிகள் நலன் விரும்பிகள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அண்மையில் ஆசிரியர்கள் துரைராசா இராசலட்சுமி தம்பதியினர் பழைய கிந்து போட் பாடசாலையின் மேற்குப்புறமாக மாணவர்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கிணறு ஒன்று வெட்டிக்கட்டி தண்ணீர் பருகும் வகையில் தொட்டியும் அமைத்துக் கொடுத்துள்ளனர். மாணவர்கள் அந்நீரை குடிநீராக பருகிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய மகத்தான பணிகளை மேற்கொள்ளும் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரது தன்னலமற்ற பணி மேன்மேலும் சிறப்பாக அமைய வேண்டும்.
வித்தியாலய சமூக மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் உயர்வுக்கும் உழைப்புக்கும் இலண்டனில் வாழ்கின்ற எம் மண்ணின் மைந்தர்கள் உயர்வுக்கும் உழைப்புக்கும் கொம்மந்தறை மனோன்மணி அம்பாளின் கிருபையும் காத்தாள் கடவுள் நெற்கொழு வைரவ சுவாமியின் கிருபையும் நல்லாசியும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
வாழ்க வளர்க மண்ணின் மைந்தர்கள் தொண்டு

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *