அது எப்படி, கல் தோன்றி, மண் தோன்றா முன்னரே, தமிழன் தோன்றமுடியும்?
இந்த வரிகள் எங்கிருந்து வந்தது.இதன் முழு அர்த்தம்தான் என்ன?இந்த இரு வரிகளையும் கேட்டுவிட்டு பரிகாசம் செய்தவர்கள் அநேகர்.புரியாமல் புலம்பியவர்கள் பலர்.இந்த பாடல் ஐயனாரிதனார் என்ற புலவர் பாடிய புறப்பொருள் வெண்பா மாலை – கரந்தைப் படலம் 35 | குடிநிலை என்ற நுாலில் உள்ளது.பாடல் வரிகள் இப்படியுள்ளது.பழந் தமிழ் பாடலை பார்போம்….
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
-புறப்பொருள் வெண்பா மாலை – கரந்தைப் படலம் 35 | குடிநிலை
கல் என்ற சொல்லுக்கு மலை என்ற பொருளும் உண்டு. மண் என்ற சொல்லுக்கு வயல் என்ற பொருளும் உண்டு. இதற்கு திருக்குறளிலும் மற்ற சங்கத் தமிழ் பாடல்களிலும் ஆதாரங்களைக் காணலாம்.
இனி இந்த பாடலின் பொருளை நேரிடையாகப் பார்போம்.
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்? = பொய்கள் அகன்று என்றும் புகழ் பரவுவது உலகில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
வையகம் போர்த்த, = பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுங்கு நிலை அகன்று
வயங்கு ஒலி நீர் – கையகல = மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே = அவ்வாறு நீரின் ஒழுங்கு நிலை விலகி … வளங்கள் தோன்றி, வயல் வெளி நாகரிகம் தோன்றிய காலத்துக்கு முன்பே….
வாளோடு முன் தோன்றி மூத்த குடி! = ஆயுதங்களோடு காடு மலைகளில் சுற்றித் திரிந்து வாழ்க்கை நடத்தியவன் இந்த தமிழன்.
இதுதான் இந்த பாடலின் நேரிடையான பொருள்.
இனி இந்த பாடலின் கருத்தை உரை நடையாகப் பார்போம்.
பொய்கள் அகன்று அதனால் புகழ் பரவுவது என்பது உலகில் ஆச்சரியமான ஒரு செய்தியே அல்ல. மலைகளிலிருந்து கற்கள் கீழே விழுந்து அவை சுக்கு நூறாக உடைந்து கூழாங்கற்களாகி மேலும் சிறு கற்களாக மாறி அதில் மழை நீர் கலந்து மிருதுவாகி மண்ணாக மாறுகிறது. அதன் பிறகுதான் அந்த இடம் விவசாய நிலமாக மாறுகிறது. இவ்வாறு மலைகளின் கற்கள் இடம் பெயர்ந்து விவசாய நிலமாக மாறி அங்கு பயிர்களை மனிதன் விளைவிக்கும் முன்பே தமிழன் இந்த உலகில் இருந்துள்ளான். காடுகளில் இலை தழைகளையும் மிருகங்களையும் அடித்து சாப்பிட்டு வந்த அந்த கற்காலத்திய தொன்மையான மனிதனின் நாகரிகமே தமிழனின் நாகரிகம் என்கிறது இந்த பாடல். அதாவது உலகில் முதன் முதலில் தோன்றிய பல நாகரிகங்களில் மிக தொன்மையானது தமிழனின் நாகரிகம். மிக பழமையானது தமிழ் மொழி என்ற செய்தியை இந்த பாடல் நமக்கு சொல்கிறது.
இதனையே தமது தேவைக்காக நமது அரசியல் தலைவர்கள் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி’ என்று சொல்லி வந்தனர். நாமும் இது வரை அதுதான் உண்மையான பொருள் என்று நம்பி வந்தோம். ஆனால் தற்போது இந்த பாடலின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக் கொண்டோம்.
இது சம்பந்தமாக எனது தேடலில் தமிழ் ஆர்வலரும் தமிழ் வரலாறு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நுால்களை எழுதி வெளியிட்டவருபவருமான இரா.மன்னர் மன்னன் (Writer, Author, historian, Numismatist, Stage speaker)என்பவர் வெளியிட்ட வீடியோ இணைப்பு ஒன்றை இணைத்திருக்கின்றேன்.
எழுத்தாளர் பற்றி:
தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட இரா.மன்னர் மன்னன் கடந்த 2009ல் விகடனால் ‘மிகச்சிறந்த மாணவப் பத்திரிகையாளர்’ எனத் தேர்வு செய்யப்பட்டவர். 2010ல் விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் 12 இடங்களுக்குள் வந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக் கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஊடகம், விளம்பரம் மற்றும் திரைப்படம் ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.