பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான காலகட்டமான மெனோபாஸ் பற்றியும் அதற்கான ஆயுர்வேதம் சொல்லும் தீர்வுகளையும், சிகிச்சை முறைகளைப் பற்றியும் சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.
‘மெனோபாஸ்’ என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் இயல்பான நிறுத்தமாகும். இது பொதுவாக 45 முதல் 55 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்கிறது. ஆயுர்வேதத்தில் மெனோபாஸ் காலம் ‘ரஜோநிவிருதி’ காலம் என்று அழைக்கப்படுகிறது. ‘ரஜோ’ என்றால் மாதவிடாய், ‘நிவிருதி’ என்றால் ஓய்வு அல்லது நிறுத்தம் என்று பொருள். தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருக்கும் தருணத்தில் மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிட்டது எனக் கூறலாம். இந்த காலகட்டத்தில் பெண்களின் கருவுறுதலுக்கான ஹார்மோன்களான ‘ஈஸ்ட்ரோஜென்’ மற்றும் ‘புரோஸ்ட்ரோஜெனின்’ அளவானது குறைவதோடு, முட்டை உற்பத்தியானது முற்றிலுமாக நின்றுவிடுகின்றன.
பூப்படையும் காலத்தில் தொடங்கும் மாதவிடாய் சுழற்சியானது 45 வயதிற்கு மேல் நிற்கும் காலம் ‘மெனோபாஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முந்தைய காலம் ‘பெரிமெனோபாஸ்’ என்று நாம் அழைக்கிறோம். பெரிமெனோபாஸ் என்பது மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதற்கு முன் வரும் காலம். இந்த நேரத்தில் பெண்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாதவிடாய் வரும்; அப்படியே வந்தாலும் அது இயற்கைக்கு மாறாக ரத்தப்போக்கு மிகவும் குறைவாகவோ அல்லது நாள் கணக்கில் மிகுந்தோ குறைந்தோ காணப்படும். இது பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் சில சமயங்களில்10 ஆண்டு வரை கூட ஆகலாம்.
பரம்பரை காரணிகள், இயல்பு, உடலமைப்பு, மனநிலை, மன அழுத்த நிலைகள், பணி நிலை, வசிக்கும் நாடு போன்றவற்றைப் பொறுத்து பெரிமெனோபாஸ் காலம் மாறுபடலாம். பெரிமெனோபாஸுக்கு, கண்டறியும் சோதனை எதுவும் இல்லை. இந்த காலத்தில் பாலின ஹார்மோன்களின் அளவுகள் ஏற்ற இறக்கம் கொண்டிருக்கும், மாதவிடாய் முற்றிலுமாக நின்றபிறகு இந்த ஹார்மோன்களின் அளவு படிப்படியாக குறைகிறது. மெனோபாசும் சரி பெரிமெனோபாசும் சரி – இவை வாழ்க்கையின் இயற்கையான நிலைகளாக பார்க்க வேண்டுமே தவிர இது ஒரு நோயல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். சில பெண்கள் இந்த கட்டத்தில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையை பக்குவமாக எதிர்கொண்டால் எளிதில் கடந்துவிடலாம்.
பெண்கள் அதிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. இந்த காலத்தில் தான் பெண்கள் உடலளவில் ஹார்மோன் மாற்றங்களை அதிகம் சந்திப்பார்கள். சினைப்பை, கர்ப்பப்பை குறைபாடுகள் போன்றவற்றை உண்டாக்கும் வாய்ப்புள்ள காலமும் இதுதான்.கருத்தடை மாத்திரைகளை அதிகப்படியாக உட்கொள்ளுதல் மற்றும் அடிவயிற்றில் கொழுப்பு அதிகரித்தல் போன்றவை, மாதவிடாய் நிறுத்தத்தை தாமதப்படுத்துகிறது. ஒரு பெண் தன் வாழ்வில் தாய்மை அடையாமலும் மாதவிடாய் நிறுத்தத்திற்கு செல்லலாம்.
மாதவிடாய் நிறுத்தத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள்
ஆயுர்வேதத்தின்படி, நம் வாழ்வின் வெவ்வேறு கட்டங்கள் வெவ்வேறு தோஷங்களின் ஆதிக்கத்தால் குறிக்கப்படுகின்றன. கபம் இயற்கையாகவே பிறப்பு முதல் பருவமடைதல் வரை ஆதிக்கம் செலுத்துகிறது, பித்தம் இயற்கையாகவே பருவமடைதல் முதல் 60 வயது வரை ஆதிக்கம் செலுத்துகிறது, 60 வயதிற்குப் பிறகு வாதம் பிரதானமாக உள்ளது. மாதவிடாய் நிறுத்தம் வாதம் மற்றும் பித்தம் அதிகரித்து கபம் குறைந்த நிலையை உணர்த்துகிறது.
பெரிமெனோபாஸ் காலத்திலும் பெண்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டு என்பதால் மாதவிடாய் தவறினால் அது பெரிமெனோபாஸ் அல்லது மெனோபாஸ் அறிகுறியாக மட்டும் பார்க்காமல் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றதா என்று யோசித்து அதற்கு ஏற்றது போல் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் நிற்கப் போகும் / நின்ற அறிகுறிகள்
மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்கள் பலவிதமான அறிகுறிகளைப் பதிவு செய்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் கடுமையான அறிகுறிகள் இல்லையென்றாலும் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஒரே நேரத்தில் காணப்படலாம்.
*மாதவிடாயில் ஒழுங்கற்ற தன்மை அல்லது அதிக ரத்தப்போக்கு.
*தலை, முதுகு, மூட்டு, மார்பக வலி மற்றும் உடல் முழுவதும் வலி.
*கால் வீக்கம் அல்லது உடல் முழுவதும் வீக்கம்.
*இயற்கைக்கு மாறான எடை அதிகரிப்பு.
*குமட்டல், அல்சர் மற்றும் குடல் பிரச்னைகள்.
*உலர்ந்த தோல், முடி மற்றும் நகங்கள் மற்றும் உடல் முழுவதும் அரிப்பு.
*தூக்கமின்மை, அதிக இதயத் துடிப்பு.
*உடல் சோர்வு, மனச்சோர்வு மற்றும் பதட்டம்.
*மனக்குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம்.
*சிதறிய எண்ணங்கள் மற்றும் மோசமான நினைவு.
*இரவில் வியர்வை மற்றும் திடீரென உடம்பு முழுவதும் சூடான காற்று பரவுவதுபோல் உணர்வு.
*இருமல் அல்லது தும்மும்போது சிறுநீர் கசிவு.
*சிறுநீர் பாதை நோய்த்தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு.
*பிறப்புறுப்பு உலர்வடைவதனால் தாம்பத்தியத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் அதனால் ஏற்படும் குறைந்த தாம்பத்திய ஆர்வம் (லிபிடோ).
*ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்.
ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் மேலே உள்ள ஒன்று அல்லது பல அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறார். அறிகுறிகளின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும். அரிதாக, மேலே உள்ள அனைத்து அறிகுறிகளும் ஒரே நபருக்கு காணப்படலாம்.
பெரிமெனோபாஸ்
இந்நிலை பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். அறிகுறிகள் லேசானவையாக இருந்தால் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் எண்ணெய் மசாஜ் போன்றவை போதுமானதாக இருக்கும், மருத்துவ சிகிச்சை தேவையில்லை. ஆனால் கடுமையான அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை தேவைப்படும்.மாதவிடாய் நிறுத்தம் என்பது இயற்கையான நிலையாக இருந்தாலும் அதற்கு வேறு சில வியாதிகளும், மருத்துவமுறைகளும் காரணங்களாக இருக்கலாம். அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகள் பொதுவாக மாதவிடாய் நிறுத்தத்தைத் தூண்டுகின்றன. மேலும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆரோக்கியமான கருப்பை செயல்பாட்டை கணிசமாக பாதிக்கும். எனவே, இந்த சிகிச்சைகள் மாதவிடாய் நிறுத்தத்தைத் தூண்டக்கூடும்.
அறுவைசிகிச்சையினால் மாதவிடாய் நின்ற பெண்கள் பெரிமெனோபாஸை அனுபவிப்பதில்லை. இருப்பினும், அந்த கட்டத்துடன் தொடர்புடைய அறிகுறிகளான வெப்ப உணர்வு (Hotfleshes) மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவற்றை அவர்கள் அனுபவிப்பார்கள்.சுமார் 1% பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் 40 வயதிற்கு முன்பே நடக்கிறது. இது கருப்பைகள் போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாதபோது ஏற்படுகிறது.
மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின் ஏற்படும் உடல் மாற்றங்கள்
மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின் ஏற்படும் உடல் மாற்றங்கள் சாதாரண அறிகுறிகளே என்றாலும் சில பெண்களுக்கு அது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பும் உண்டு.
இதய நோய்
மாதவிடாய் நின்ற பிறகு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆண்களைவிட மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு சட்டென்று குறைகிறது இந்த திடீர் சரிவு இதயத்துடிப்பை பாதித்து இதய நோய்களை உருவாக்குகிறது.
ஆஸ்டியோபோரோசிஸ்
புதிய எலும்பு உற்பத்திக்கு ஈஸ்ட்ரோஜன் முக்கியமானது, இது எலும்பு உற்பத்தி செய்யும் உயிரணுக்களான ஆஸ்டியோபிளாஸ்ட்களை ஆதரிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் இல்லாமல், ஆஸ்டியோபிளாஸ்ட்கள் போதுமான புதிய எலும்புகளை உருவாக்க முடியாது, இறுதியில், எலும்புகளை பலவீனமாக்கும். ஆஸ்டியோபோரோசிஸுடன் தொடர்புடைய மிகப்பெரிய சிக்கல் எலும்பு முறிவுகள் ஆகும், இது இடுப்பு, மணிக்கட்டு மற்றும் முதுகெலும்புகளில் பெரும்பாலும் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது. எலும்பு முறிவுகள் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
சிறுநீர் பிரச்சினைகள்
வயதான பெண்களில், குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு, சிறுநீர் அடங்காமை (அவ்வப்போது மற்றும் விருப்பமின்றி சிறுநீர் விடுவித்தல்) பொதுவானது. ஈஸ்ட்ரோஜனின் சரிவு யோனி திசுக்கள் மற்றும் சிறுநீர்க்குழாயின் புறணி (சிறுநீர்ப்பையை உடலின் வெளிப்புறத்துடன் இணைக்கும் ஒரு குழாய்) மெல்லியதாகி நெகிழ்ச்சியை இழக்கிறது. இதன் விளைவாக, பெண்கள் கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவை அனுபவிக்கலாம். சிரிப்பு அல்லது இருமல் போன்ற திடீர் இயக்கங்களின் போது இது பெரும்பாலும் நிகழ்கிறது.
எடை அதிகரிப்பு
பல பெண்கள் 40 மற்றும் 50 வயதை எட்டும்போது எடை அதிகரிப்பை அனுபவிக்கிறார்கள். இருப்பினும், இது வயதின் காரணமாக வரும் இயற்கையான மாற்றமாக இருக்கலாம். எடை அதிகரிப்பு-குறிப்பாக அடிவயிற்றைச் சுற்றி சதை போடுவது, இது மாதவிடாய் நின்ற ஆண்டுகளில் பெண்களுக்கு பொதுவானது. வயிற்று கொழுப்பின் அதிகரிப்பு குறிப்பாக ஆபத்தானது; இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தத்தால் ஏற்படும் சங்கடங்கள் பல இருந்தாலும், சில நன்மைகளும் நடக்கத்தான் செய்கின்றன.
மாதவிடாய் நிறுத்தத்தால் ஏற்படும் சில நன்மைகள்
மாதவிடாய் நிறுத்தத்தைப் பற்றி நாம் அறிந்தாலும் இந்த நிலையை அடையும் போது, அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது அவசியம். கடுமையான மாதவிடாய் காலங்களை அனுபவித்த பல பெண்களுக்கு, நிரந்தர மாதவிடாய் நிறுத்தம் ஒரு பெரிய நிவாரணம் தருகிறது. தாம்பத்தியத்தின் போது சில பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள், இதனால் பல உபாதைகளை சந்திக்கின்றனர். ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு அவற்றின் தேவை இருப்பதில்லை, அவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்ட பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு நிம்மதியாக உணர்கிறார்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை மாறுகிறது, எனினும் இதைப் பற்றி கவலைப்படாமல், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதிலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி குங்குமம் தோழி