பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட மு. நித்தியானந்தன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர். இலங்கைப் பல்கலைக் கழகம்- கொழும்புவில் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், லேக் ஹவுஸ் ஸ்தாபனத்தில் ‘தினகரன்’ நாளிதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் சிறந்த பத்திரிகையாளருக்கான டீ.ஆர்.விஜயவர்தனா விருதினைப் பெற்றார். பிறகு, யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையில் துணை விரிவுரை யாளராகப் பணியாற்றினார். 1983 இனக் கலவரத்தின் பின் இந்தியா சென்ற இவர், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். பின்னர், லண்டன் Hayes பாடசாலையில் பொருளியல் ஆசிரியராகச் சேவையாற்றி, தொடர்ந்து, லண்டன் தீபம் தொலைக்காட்சியில் செய்திப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தார். தீபம் – இலக்கிய நேரம் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ், ஆங்கில நூல்கள் குறித்து இவர் ஆற்றிய விமர்சனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. சி.வி. வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா ஆகிய மலையக எழுத்தாளர்களின் நாவல், சிறுகதைகளை ‘வைகறை’ வெளியீட்டின் மூலம் வெளியிட்டிருக்கும் நித்தியானந்தன், துங்ஹிந்த சாரலில்’ என்ற தலைப்பில் ஒரு பதுளைக்காரனின் இலக்கியப் பதிவுகள்’ என்று எழுதிய இலக்கிய வரலாற்றுத் தொடர் இலங்கை ‘தினகரன் இதழில் வெளியான போது மிகுந்த பாராட்டைப் பெற்றது.இவர் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்திற்கான ஆய்வுகளுடன் கூடிய முன்னுரையை தொடராக பதிவிடுவதில் பெருமை கொள்கிறோம்.
குறுந்தொகையில் ஒரு பாடல்.
‘வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல்நாட செவ்வியை ஆகுமதி’
தலைவனை நோக்கி, தலைவியின் தோழி சொல்வதாக அமையும் பாடல் இது.
‘மூங்கில் வேலியைக் கொண்ட, வேரிலே பழுத்த பலாமரங்கள் நிரம்பிய மலைநாட்டவனே!’ என்று அத்தோழி தலைவனை விளிக்கிறாள்.
சாரல்நாட!
குறுந்தொகையில் தோய்ந்து, வசீகரமான புனைபெயரைத் தனக்குச் சூடி மகிழ்ந்தவர் நல்லையா என்னும் சாரல்நாடன் (1944- 2014).
மலையைக இலக்கியத்திற்கான வரலாற்றை உருவாக்குவதற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் அயராது உழைத்த பெருமகன் சாரல்நாடன்.
மலையக வாய்மொழிப் பாடலிலிருந்து மலையகத் தமிழர் தொடர்பான அரசாங்க அறிக்கைகள், ஆங்கிலேயர் எழுதிவைத்துவிட்டுச்சென்ற நூல்கள் என்று தேடித்தேடி வாசித்த மனிதன். மலையகப் பெரியார்களை நெஞ்சில் நிறுத்தி நேசித்தவன். எங்களுக்கு வாழ்வு சமைக்கப் போராடிய, எழுதிய, பேசிய அனைத்து உள்ளங்களையும் ஆரத்தழுவிக்கொண்டவன். மலையகம் குறித்துக் கர்வம் கொண்டவன். மலையக மைந்தரின் உழைப்பு, விழலுக்கு இரைத்த நீராய், அவர்களை வஞ்சித்தவர்களையே வாழவைத்ததை எண்ணி எண்ணி ஏங்கியவன்.
சாரல்நாடன் எழுதி வெளியிட்ட பதினொரு நூல்களும் மலையகத்தையே உயிராய் நேசித்த ஒரு எழுத்தாளனின் நெஞ்சக்கணப்பறையின் தகிப்பிலே கனன்றவை.
சி.வி.வேலுப்பிள்ள, கோ.நடேசையர், இர.சிவலிங்கம் என்று எமக்கு முதுசமாய்க் கிடைத்த சிந்தனையாளர்களின் புகழ்பாடித்திரிந்த எழுத்தாளன். சித்தி லெப்பை, சாம் ஜோனிலிருந்து ஜோசப் ஜேஸ்கொடி வரை 57 மலையக ஆளுமைகளின் விபரங்களைப் பதிவதற்காகப் பேரேடு திறந்த சரித்திரக்காரன். காய்தல் உவத்தலின்றி இவர்களின் வரலாற்றைப் பதிந்தபாங்கு பாராட்டுவதற்குரியது. மலையைக மக்கள்பற்றிய இவரது நூல்கள், இவரின் சுயமான ஆய்வுத்தேடலில் எழுந்தவை. சிருஷ்டி எழுத்தாளராகவே அறிமுகமான சாரல்நாடன் சிறுகதை, குறுநாவல்கள் என்று விட்டும், தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருந்தவர். தொழில், வழக்கு, போராட்டம் என்று ஒரு பதினைந்து ஆண்டுகாலம் எழுத்துத்துறையில் மௌனமாயிருந்தவர், சி.வி.யின் நூலோடு சிலிர்த்துக்கொண்டு எழுந்தவர். இறுதிக்காலம்வரை எழுத்தை, ஆய்வை முழுமூச்சாகக்கொண்டு உழைத்தவர்.
1962ஆம் ஆண்டில் ‘கால ஓட்டம்’ என்ற சிறுகதையோடு ஆரம்பமான இவரின் இலக்கிய ஓட்டம் இறுதிவரை தொடர்ந்தது.
மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களான என்.எஸ்.எம்.ராமையா, தெளிவத்தை ஜோசப் ஆகியோருடன் இணைந்து, கூட்டாக மலையகக் குறுநாவல் படைத்ததில் சாரல்நாடனின் எழுத்தாளுமை மிளிர்ந்தது. சமரசம், நம்பியவருக்காக…, பிணந்தின்னும் சாத்திரங்கள் ஆகிய படைப்புகள் தேயிலை தயாரிக்கும் தொழில்நுணுக்கங்களில் சாரல்நாடனுக்கிருந்த தனித்துவமான நுண்ணறிவையும் அனுபவத்தையும் படம்போட்டுக் காட்டுகின்றன. இனவாதத்தின் நச்சுக்கரங்களுக்குள் மலையக மக்கள் படும் அவலம், சாரல்நாடனின் நெஞ்சில் எழுப்பும் ஆத்திரத்தை இப்படைப்புகள் எதிரொலிக்கின்றன.
ஆய்வுத்தேடலிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதிலும் தன் முழுநேரத்தைச் செலவிட்டாலும், படைப்பின் உணர்வுக்களங்கள் முனைப்புறும்போது வெகு இயல்பாக அவரால் சிருஷ்டி எழுத்திலும் பயணிக்க முடிந்தது.
ஆய்விலிருந்து தொற்றிய வேகத்தில், 1941இல் புசல்லாவை ஸ்டெலென்பேர்க் (Stellenberg) தோட்டத்துரை போப் என்பவரைத் தோட்டத்தொழிலாளர்கள் கொலைசெய்த உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு சாரல்நாடன் எழுதிய குறுநாவல்தான் ‘வானம் சிவந்த நாட்கள்‘. வீரகேசரி வாரமஞ்சரியில் திரு. வி.தேவராஜ் பொறுப்பாசிரியராகவிருந்தபோது இந்த நாவல் தொடராக அப்பத்திரிகையில் வெளிவந்தது. பதினாறு அத்தியாயங்களில் – எழுபது பக்கங்களில் – இந்நாவல் விரிகிறது.
‘சென்ற நூற்றாண்டின் இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் தேயிலைத்தோட்டம் ஒன்றில் இடம்பெற்ற உண்மைச் சம்பவப் பின்னணியில் நாவல் கொண்டுசெல்லப்படுகிறது. இதில்வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் உயிரோடு ஒருகாலத்தில் நடமாடியவர்கள்’ என்று கூறுகிறார் சாரல்நாடன்.
போப் துரை கொலைவழக்கில் ‘தூக்குமேடையை முத்தமிட்டு அன்று தொழிலாளர்வர்க்கத்திற்கு எழுதினார்களே! அந்த ஐ.வேலாயுதன், ரா.வீராசாமி ஆகியோரின் உருக்கமான கடிதத்தின் இலட்சியம்தான் எமக்குத் தரும் பாடங்கள்’ என்று கவிஞர் பி.ஆர்.பெரியசாமி, தனது ‘தோட்டத்தொழிலாளர் வீரப்போராட்டம்’ (1957) என்ற நூலில், இந்தப் போராட்டத்தை முதலில் பதிவு செய்கிறார். ‘1933 ஆம் ஆண்டில் திரு. நடேசய்யரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்திலிருந்து, இன்றுவரை உள்ள பல போராட்டங்களில் பங்கெடுத்து உழைத்த அனுபவத்தைக் கொண்டு இந்தச் சிறுநூலை வெளியிடத் துணிந்தேன்’ என்று அமரர் பி.ஆர்.பெரியசாமி கூறுவதிலிருந்து, போப் துரை கொலைவழக்கில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட நிகழ்வு அவர் நேரடியாகப் போராடிய தொழிற்சங்கப் போராட்டப்பாதையில் தரிசித்த நடப்புச் சம்பவமாகும். தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருந்தநிலையில், அவர்கள் இறுதியாக எழுதியிருந்த கடிதத்தையும் பி.ஆர்.பெரியசாமி தனது முன்னுரையில் எடுத்துக்காட்டுகிறார். தனது போராட்ட நூலையும் அந்தப் போராளிகளுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
‘சாரல்நாடன் பிறப்பதற்குச் சரியாக மூன்று ஆண்டுகளுக்குமுன்னர் ஜோர்ஜ் போப் கொலைவழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கதையிது’ என்று இந்த நூலின் ஒரு குறிப்பில் வருகிறது.
ரத்தமும்சதையுமாக நடந்த ஒரு சரித்திரபூர்வமான உண்மை நிகழ்வு இங்கு நாவலாகியிருக்கிறது. வரலாற்று உண்மையை ஆதாரமாகக் கொண்டு புனைகதைகளைச் சிருஷ்டிப்பது தொடர்பாக மேற்கில் எழுந்துள்ள கோட்பாட்டுரீதியிலான விவாதங்களை இங்கு நோக்குவது பொருந்தும்.
வோல்டர் ஸ்கொட் என்ற ஆங்கில வரலாற்று நாவலாசிரியரின் Waverly நாவல் 1814இல் வெளியானபோதே, லியோபோல்ட் வான் ரெங்க் என்ற ஜேர்மனிய வரலாற்றாசிரியர் அந்த வரலாற்று நாவலைப் பெரிதும் கண்டனம் செய்தார். நூறாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சர்ச்சை இது. வரலாறு எழுதப்படுகையில் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை கையாளப்படவேண்டுமென்றும், கற்பனையைப் பிரயோகிப்பதும், புதிதாகப் புனைதலும் புனைகதைப் பிராந்தியத்திற்குரியவை என்றும் அவர்கள் கருதினர்.
வரலாற்று நாவல்களின் பிரபல்யமும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாவலின் எழுச்சியும் வரலாறு எழுதுகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. வரலாற்றாசிரியர்கள் வரலாறு என்ற தமது விசேட துறையை வலுப்படுத்துவதற்கு வரலாறு, விஞ்ஞானம் சார்ந்த ஒன்றாக அமைதல் வேண்டும் என்றனர். விஞ்ஞானபூர்வமாக அமையவேண்டுமெனில், வரலாற்று ஆய்வு என்பது எந்த கலாபூர்வமான சிருஷ்டியுடனும் அல்லது கற்பனை சார்ந்த இலக்கியத்துடனான உறவை முற்றாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வரலாறும் புனைவும் சேரமுடியாத இரு துருவங்கள் என்றும், இவற்றை இணைத்து ஆக்கப்படும் வரலாற்று நாவல் என்பது ஒரு மோசடி என்றார் இத்தாலியக் கவிஞர் அலெசான்ரோ மன்சோனி. நூறாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த வாதங்கள் இவை.
மார்க்சிய அறிஞர் ஜோர்ஜ் லுக்காக்ஸ் தனது The Historical Novel (1937) என்ற பிரபல்யம்மிக்க நூலில், வரலாற்று நாவல்களின் சமூகக்கூறுகளையும், முக்கிய கதாமாந்தரின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் அதன் வலிமையையும் வலியுறுத்தினார். வரலாற்றின் பெரும் இயக்கங்களின் சமூக அம்சங்களைவிட சின்னச்சின்ன, சாதாரண நிகழ்வுகளின் விபரிப்புகளே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். வரலாற்று நிகழ்வினை அல்ல; அந்த நிகழ்வுகளில் பங்குகொண்டோரின் மத்தியில் எழுந்த ‘கவித்துவ விழிப்புணர்வை’ (poetical awakening) வெளிக்கொணர்தலே அவசியம் என்றார் அவர்.
வரலாற்று மெய்மையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டனரோ, அதேபோன்று எவ்வாறு சமூக, மானிட நோக்குகள் அவர்களை அவ்வாறு சிந்திக்கவும், உணரவும் செயற்படவும் தூண்டியதோ அவற்றை உள்ளவாறே வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வலுவான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மெய்மையான நடப்பியலில் நடப்புலகுபற்றிக் கூறப்படும் உண்மைக்கும் புனைவில் நடப்பியல் சித்திரிக்கப்படுவதற்கும் இடையில் உருவாகும் முரண்பாடுகள் விவாதத்திற்குள்ளாயின.
இவற்றிற்கிடையேயான எல்லை எது? எல்லை என்று கோடுபோட்டு வரையறுத்தல் சாலாது. அது ஒரு எல்லைக்கோட்டை அல்ல, விரிந்த எல்லைப் பிராந்தியத்தையே முன்வைக்கிறது. வியப்பூட்டும் அளவு விஸ்தாரமான விஸ்தீரணத்தையும், வெவ்வேறு வண்ணங்களையும், சீரற்ற துண்டங்களையும் கொண்ட நிலவியல் அமைப்பைக் கொண்டதாகத் திகழ்கிறது. வரலாற்றாசிரியர்களை இந்த வட்டத்திலிருந்த தூக்கி எறிய வேண்டும் என்றார்கள் சில ஆசிரியர்கள்.
வரலாற்று நாவலில் விபரிக்கப்படும் உண்மை நிலைமைகள், வரலாற்றுத் தகவல்களுக்கும் புனைகதையின் கூறுகளுக்கும் இடையே காணப்படவேண்டிய சமநிலை, தகவல்களின் கறாரான உண்மைத்தன்மை என்பன இக்கோட்பாட்டு விவாதத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கெத்திரின் லாஸ்கி ‘சாவித்துவாரத்திற்கூடான சரித்திரப் பார்வை’ (Keyhole History) என்ற கருத்தினை முன்வைக்கிறார். அசாதாரண சூழலில் சாமானியர்களின் பார்வையில் நிகழ்வுகள் எவ்வாறு நடந்தேறுகின்றன? என்பது இங்கு அவதானத்திற்குரியதாகிறது. பெரும் யுத்தங்கள் என்பது இங்கு முக்கியமல்ல; மளிகைக்கடைக்கான லிஸ்ட் போடுதல், வயிற்றுவலி, சிடுசிடுப்பு, மரணத்திற்குப் பயப்படுதல், நரகத்தைப்போல விசர் வாழ்வு போன்றன இங்கு பேசப்படுகின்றன என்கிறார் கெத்திரின்.
வரலாற்றுப் புனைவில் உண்மையின் (truth) இடம் எது? வரலாற்றிலும் சரி, புனைவிலும் சரி நடப்புநிலைமை எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதே முக்கியமாகும். வரலாற்றில் சாட்சியம் என்பது முக்கியமாயினும், அதுவுமே ‘மனதின் ஒரு உருவாக்கமே’. எவ்வாறு ஒரு நிகழ்விற்கு ஒருவர் பொருள்கொள்கிறார் என்பதே அதுவாகும். ஒரு வரலாற்று நிகழ்வுக்கு வரலாற்றாசிரியர் பன்முகப்பட்ட விளக்கங்களை அளித்தல் சாத்தியம். ஒருபாற் கோடாத வரலாறு என்று ஒன்றில்லை. நாவலாசிரியர்களும் வரலாற்றாசிரியர்களும் நடந்துமுடிந்த நிகழ்ச்சிகளின் சங்கிலித்தொடர்புகளை அல்ல, என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கங்களிலேயே வேறுபடுகின்றனர். ஒரு நிகழ்ச்சியின் அமைவு, சரித்திரமாந்தர், சூழல், இவற்றிற்கிடையேயான தொடர்புகள் என்ற பல்வேறு அம்சங்கள் இங்கு பேசுபொருளாகின்றன. வரலாற்றுத்தகவல்களை கலாபூர்வமாகப் புனையும் சிருஷ்டிகரம் இங்கு முக்கியப்படுத்தப்படுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் மரியான் மூர் என்ற அமெரிக்கக் கவிஞை கூறியதுபோல ‘கற்பனையான பூஞ்சோலையில் உண்மையான தவளைகளை’ (Imaginary Garden with Real Toads) இட்டு நிரப்பும் வேலை இது.
வரலாறு என்பது வென்றவர்களதும் தோற்றுப்போனவர்களதும் அநுபவங்களாலும் ஈடுபாடுகளாலும்தான் உருவாகிறது. வெற்றிபெற்றவர்களின் வரலாறே எழுதிவைக்கப்பட்டிருக்கும் சூழலில், தீர்ப்பு வழங்க நாங்கள் யார்? வெற்றிபெற்றவர்கள்தான் சரித்திரத்தில் நினைவுகூரப்படுகிறார்கள். சரித்திரத்தின் முட்டுச்சந்துகள், தோல்வியில் முடிந்துபோன நியாயங்கள், தோற்றுப்போனவர்கள் எல்லாம் சரித்திரத்தில் காணாமல்போய்விடுகிறார்கள். ஆனால், பலியானவர்கள்தான் உண்மையில் வென்றிருக்க வேண்டியவர்கள். கடந்துபோன காலங்கள் மரணித்துப்போவதில்லை. அவை மந்தித்துப்போனவை அல்ல; அவை உங்களின் பார்வையைக் குறுக்கிப்போடுவன அல்ல. அவை மூழ்கடிக்கப்பட்ட உண்மைகளைச் சொல்லவல்ல அடையாளங்களை, குறியீடுகளை, சாட்சியங்களைக் கொண்டுள்ளன. அவை சிருஷ்டிபூர்வமான வளங்களைக் கொண்டிருக்கின்றன.
வரலாற்றையும் புனைவையும் துருவமயப்படுத்தி நோக்கும் பார்வைகள் இன்று வலுவிழந்துகொண்டிருக்கின்றன.
மலையகத் தமிழர்களின் வரலாறோ ‘கூலி’களின் வரலாறாகவே பேசப்பட்டு வந்திருக்கிறது. கூலி என்பவன்/என்பவள் ஊர், பேர் அற்ற, தனித்துவ அடையாளம் ஏதுமில்லாத, வர்த்தகப்பண்டமாக இனக்குறைப்புச் (reduction) செய்யப்பட்டிருக்கிறான்/ள். கூலிகள் ஒரேமாதிரி இருப்பார்கள்; ஒரேமாதிரிச் செயற்படுவார்கள். ஒரு கூலியை இன்னொரு கூலிக்காக மாற்றிக்கொள்ளலாம். அவனுக்குத் தனிப்பட்ட யோசனைகள், உளவியல் பிரச்சினைகள், சிக்கல்கள் எதுவும் இருப்பதில்லை. எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தமுடியாதவனாக அவன் ஏகாதிபத்திய அநுபவத்தில் இனங்காணப்பட்டிருக்கிறான். முரண்பாடுகள் நிறைந்த, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் எதிர்பார்க்கைகளும் கொண்ட, தனிமனித ஆசைகள், கோபதாபங்கள் கொண்ட மனிதஜீவிகளாக அவர்கள் என்றுமே காலனித்துவவாதிகளால் கருதப்பட்டதில்லை. வெள்ளைக் காலனியக் கருத்தியலிலேயே ‘கூலிகள்’ எனப்படுபவர்கள் வார்க்கப்படுகிறார்கள். மு.சிவலிங்கத்தின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ நாவலில் இந்த மக்கள் வேலாயுதம், சீரங்கன், பழனி, காத்தான், கணபதி, ராமாயி, சன்னாசி என்று பெயர்கொள்கிறார்கள்.
மேலாண்மையும் அடக்குமுறையும் கட்டுப்பாடும் காலனியச் சிந்தனையின் தாரகமந்திரங்களாகும். தேயிலைத்தோட்டங்களில், ரப்பர்க்காடுகளில் அவர்களின் வாழ்விடங்கள் லயக்காம்பிராக்களுக்குள் வரையறுக்கப்படுகின்றன. வேலைத்தலங்களில் அவர்கள் கீழ்ப்படிவுடன் நடப்பவர்களாக, சொன்ன வேலையைச் செய்பவர்களாக, தங்கள் கட்டளைகளை ஏனென்று கேட்காமல் தலைகுனிந்து ஏற்பவர்களாகத் தோட்ட நிர்வாகம் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. லயத்திலும் வேலைத்தலத்திலும், மலைவேலையிலும், ஸ்டோர் வேலையிலும் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஒரு வரலாற்றாசிரியர், அவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், அவர்களுக்குச் சாப்பாடு போடப்படுகிறது (They do not eat, but they are fed) என்றும் குறிக்கிறார். வெளியாட்கள் தோட்டத்திற்குள் வர அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களின் குரல் ஒலிக்கவிடாமல் அமுக்கப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் இந்த மக்கள்பற்றிய புனைவுகள் மலைகளோடு மோதும் பணியில் இறங்குகின்றன.
புசல்லாவை ஸ்டெலென்பேர்க் தோட்டத்தில் போப் துரை கொலைசெய்யப்பட்ட காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள், அவர்களின் தொழிற்சங்கப் பிரச்சினைகள், வேலைத்தலங்களில் நிர்வாகத்தின் ஆணவப்போக்கு என்பனவற்றை அறிந்துகொள்வதற்கு நமக்கு ஆவணங்கள் கிடைக்கின்றன. இந்த text களை நாங்கள் மீள்வாசிப்பு செய்யவேண்டி இருக்கிறது.
போப் கொலை தொடர்பாக நமக்கு மூன்று முக்கிய சட்ட ஆவணங்கள் கிடைக்கின்றன.
1) Famous Criminal Cases of Sri Lanka (1977) by A.C.Alles
2) Studies of Some Famous Cases of Ceylon (1963) by Walter Thalgodapitiya
3) The Pope Murder Case: Trial of Ramasamy Weerasamy and Iyan Perumal Velaithen (1942) by O.L.de Krester, Jr
போப் துரை கொலைச் சம்பவம், இந்நிகழ்வில் பங்குகொண்ட தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கங்கள், தோட்ட நிர்வாகம், தோட்டத்தொழிலாளர்பற்றி அதிகாரமையத்தில் இருந்தவர்கள் கொண்டிருந்த மதிப்பீடுகள் – கருத்துப்படிமங்கள், மனித உரிமைகள்பற்றி நீதித்துறையில் நிலவிய கண்ணோட்டங்கள், சர்ச்சைக்குரிய சட்ட விளக்கங்கள் என்பனபற்றி விவாதிப்பதற்கு நமக்குக் களங்கள் உள்ளன.
முதலில் போப் துரை கொலைச் சம்பவத்தைப் பார்க்கலாம்.
கண்டி – நுவரெலியா சாலையில் புசல்லாவையைத் தாண்டியதும் காணப்படும் தோட்டந்தான் ஸ்டெலென்பேர்க் தோட்டம். இந்தத் தேயிலைத்தோட்டம் 475 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்துள்ளது. இரண்டு பிரிவுகளைக்கொண்ட இத்தோட்டத்தில் மேமலைக்கணக்கில் 250 தொழிலாளர்களும் கீழ்க்கணக்கில் 150 தொழிலாளர்களும் வேலைபார்க்கின்றனர். இந்தத் தோட்டத்தை மூன்று ஆண்டுகளாகப் போப் துரை நிர்வகித்துவருகிறார். தோட்ட ஸ்டோரும் தோட்டத்துக்குள் அடங்கும்.
போப் துரை மிகவும் கண்டிப்பான பேர்வழி. இராணுவக் கட்டுப்பாட்டோடு தோட்டத்தை நடத்திவந்தவர் அவர். மதுபாவனை, சூதாட்டம் எதுவும் அவருடைய தோட்டத்தில் தலைகாட்டமுடியாது. நாற்பதுகளை எட்டிவிட்ட வயது. வாட்டசாட்டமான தோற்றம். தோட்டத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். அவசர கோலத்தில் முடிவு எடுப்பது அவரின் இயல்பு. எதிர்ப்பு, அதிருப்தி எங்காவது முளைவிட்டால் அதை அவரால் ஒருபோதும் தாங்கிக்கொள்ளமுடியாது.
‘சில தோட்டத்துரைமார்கள் காலமாற்றங்களுக்கேற்ப வளைந்து கொடுக்காதவர்களாக உள்ளனர்; தாங்கள்தான் மற்ற சாதியினரை ஆளப்பிறந்தவர்கள் என்று பழக்கப்பட்டுப்போன மனோபாவத்தை அவர்களால் எளிதில் இறக்கிவைக்க முடிவதில்லை. தங்களது ‘கூலிகளின்’ திமிரான கோணங்கிக் கூத்தை அவர்கள் அருவருப்போடும் எரிச்சலோடும் பார்க்கத் தலைப்படுகிறார்கள்’ என்று போப் துரை கொலைவழக்கினை ஆய்வுசெய்த நீதி விசாரணை ஆணையாளர் வோல்டர் தல்கொடபிட்டிய, போப் துரையைப் பற்றிக் கூறுகிறார். இரும்புக்கரம் கொண்டு தொழிலாளர் படையினை அடக்கிநடத்தும் போக்கிலிருந்து அவர்களால் மீளமுடிவதில்லை.
அதேசமயம் 1930-1940 காலப்பகுதியில் தோட்டத்துரைமாரின் அகங்காரப் போக்கிற்கு இரையாகும் தோட்டத்தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமுகமாக அரசு, தொழிற் திணைக்களத்தினூடாகச் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டது. தோட்டத்தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. தோட்டத்தைவிட்டுக் கேட்டகேள்வியின்றி வெளியேற்றுதல், வேலையிலிருந்து நியாயமின்றி நீக்கம்செய்தல் என்பனவற்றில் முன்போலன்றி, தொழிற்சங்கங்கள் தலையிட்டன. தோட்டத்தொழிலாளர்கள் தமக்கான தொழிற்சங்கங்களை அமைத்துக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில்தான் புசல்லாவ ஸ்டெலென்பேர்க் (கந்தலா) தோட்டத்தில் போப் துரை 1941ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இரவு கொலை செய்யப்படுகிறார்..
1940 ஜனவரியில் நடைபெற்ற முல்லோயாப் போராட்டத்தில் உயிர்நீத்த கோவிந்தனின் தியாகம் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் நெஞ்சில் கனலை எழுப்பியிருந்தது. அதற்கு அடுத்து ஏப்ரல் மாதத்தில் ரம்பொடத் தோட்டத்தில் 700க்கும் அதிகமான தொழிலாளர்கள் குண்டாந்தடியுடனும் கம்புகளுடனும் தோட்டத்துரையைத் தாக்குவதற்கு, அவரின் பங்களாமுன் திரண்டனர். அதே மாதம் வல்லை ஓயாத் தோட்டத்தில் தோட்டக்கண்டக்டர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்து, மே மாதத்தில் நெஸ்பித் தோட்டத்தில் இரு தொழிலாளர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு, தாக்குதலுக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேமாதம் நீட்வுட் தோட்டத்தில் தொழிலாளர்கள் பொலிஸார்மீது தாக்குதல் நடத்தினர். அதேமாதம் வேவலன்னத் தோட்டத்தில் ஏற்பட்ட போராட்டத்தில் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேமாதம் மொல ரதெல்லத் தோட்டத்தில் பெரிய கங்காணி தாக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அதே மே மாதம் வெவசத் தோட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது, தோட்டத்துரைக்கும் அவரது மனைவிக்கும் பாதுகாப்புத் தரமுடியாது என்று பொலிஸார் தெரிவித்ததின்பேரில் அவர்கள் இருவரும் தோட்டத்தைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதேமாதம் சென்ட். அன்றூஸ் தோட்டத்தில் தோட்டத்துரையைத் தொழிலாளர் தாக்கியதில் அவரது ஒரு கை முறிந்தது.
இந்தப் போராட்டங்களின் பின்னணியில் லங்கா சமசமாஜ இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. இந்நிலையில் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவில் இயங்கிய அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் கிளை ஒன்று கண்டி, திருகோணமலை வீதியில் 54ஆம் இலக்கக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியது. தொழிற்சங்கப் போராட்டத்தில் நல்ல அனுபவம் கொண்ட பி.எம்.வேலுச்சாமி, அதன் செயலாளராகப் பணியாற்றினார். ஸ்டெலென்பேர்க் தோட்டத்தைச் சேர்ந்த 300 தொழிலாளர்கள் இச்சங்கத்தில் அங்கத்தவராகச் சேர்ந்திருந்தனர். வேறு சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் இத்தோட்டத்தில் இருந்தனராயினும் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் சங்கத்திலேயே பெரும்பாலான அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். மாதம் ஒன்றிற்கு சந்தாப்பணமாக 5 சதம் அல்லது ஆண்டிற்கு 50 சதம் வசூலிக்கப்பட்டது. ஸ்டெலென்பேர்க் தோட்டத்தலைவராக மெய்யப்பன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அவரே அத்தோட்டக்கிளையின் செயலாளராகவும் இருந்தார்.
ஸ்டெலென்பேர்க் தோட்டத்துரை கொலைச் சம்பவம் 1941 மே மாதம் இடம்பெற்றதாயினும், தோட்டத்துரைக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் 1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புகையத்தொடங்கிவிட்டது. 1940 ஜூலை மாதம் 20ஆம் திகதி மெய்யப்பன், தனது மனைவியுடனும் வேலாயுதம் என்ற சகதொழிலாளியுடனும், இன்னும் ஒருவருடனும் கதிர்காம யாத்திரைக்கு நடைப்பயணம் சென்றிருந்தார். யாத்திரை முடிந்து தோட்டம் திரும்பி, காரில் லயத்திற்குப் போக முயன்றபோது, பிரச்சினை எழுந்தது. ஸ்டெலென்பேர்க் தோட்டத்து ஸ்டோரைத் தாண்டி, துரை பங்களாவையும் கடந்துதான், மெய்யப்பன் குடியிருந்த லயம் இருந்தது. எந்தக் காரும் ஸ்டோருக்கு அப்பால் தனது அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது என்று போப் துரை, டீமேக்கர் லுடோவைக்கிற்கு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார். கதிர்காமத்திலிருந்து கார் ஸ்டோரை வந்தடைந்ததும், ஸ்டோருக்கு அப்பால் கார் செல்ல அனுமதிக்க முடியாது என்று டீமேக்கர் கூறியதை மெய்யப்பன் பொருட்படுத்தவில்லை. ஸ்டோரிலிருந்து கார் லயத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. டீமேக்கர் லுடோவைக் தனது உத்தரவை மீறி, கார் லயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று போப் துரைக்கு அறிவிக்கிறார். துரை பங்களாவிற்கருகில் கார் சென்றதும் போப் துரை காரை நிறுத்துமாறும், அனைவரும் காரிலிருந்து இறங்கி லயத்திற்கு நடந்துசெல்லலாம் என்றும், மீறமுடியாத உத்தரவைப் பிறப்பித்தார்.
மெய்யப்பன் தனது மனைவியுடனும் நண்பர்களுடனும் நடந்தே லயத்திற்குச் சென்றார். மெய்யப்பனுக்கு இந்நிகழ்வு உண்மையில் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கும். இது, முதல் நிகழ்ச்சி. மெய்யப்பன் மிக முக்கிய தொழிற்சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் என்றவகையிலும், ஸ்டெலென்பேர்க் தோட்டத்தொழிலாளர்களின் தலைவன் என்றவகையிலும், தான் முக்கியத்துவம்வாய்ந்த மனிதன் என்ற கருத்தைக் கொண்டிருக்கலாம்.குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் சுரண்டப்படும் நிலையில், கேள்வி கேட்பாரின்றி துரைத்தனம் தோட்டத்தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தவும், தோட்டத்தைவிட்டு வெளியேற்றவும் முடிகின்ற காட்டுத்தர்பார் அதிகாரத்தைக் கேள்வி எழுப்பும் ஒரு தொழிற்சங்கத்தின் தலைவன் என்றவகையில், தனது இடத்தைப்பற்றி மெய்யப்பன் பெருமிதம் கொள்வதிலும், ஏனைய தொழிலாளர்களுக்குத் துணிச்சலான ஒரு முன்னுதாரணமாகத் தன்னைக் கருதியதிலும் பெருந்தவறு எதுவுமில்லை. ஆனால், அதிகாரவர்க்கமும், நீதித்துறையும், கற்ற உயர்குழாமும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்தப் புதிய மாற்றத்தை எவ்வாறு பார்த்தன என்பது முக்கியமானது.
தொடரும்..