கம்பளை நீதிமன்றில் போப்துரை கொலைவழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கொழும்பிலிருந்து வெளியான Times of Ceylon (May 10, 1941) பத்திரிகை The Murder of Mr. Pope என்று தலைப்பிட்டு ஆசிரியத்தலையங்கம் ஒன்றை எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தின் ஆரம்பம் பின்வருமாறு அமைந்திருக்கிறது:
‘அசாதாரணமான காட்டுமிராண்டிச் சூழ்நிலைமைகளில் நடைபெற்றிருக்கும் திரு. சி.ஏ.ஜி.போப்மீதான கோழைத்தனமான படுகொலையானது, மலைநாட்டில் சிலகாலமாக எழுச்சிபெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் கிளர்ச்சியில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிருப்திகொண்டிருக்கும் சக்திகள் இந்தப் படுகொலையுடன் சம்பந்தம் கொண்டிருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இம்மாதிரிப் படுகொலைமூலம் அவர்கள் தெளிவாக என்ன லாபம் அடையப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது கஷ்டமாக இருக்கிறது’
அத்தலையங்கத்தில் ஒரு பகுதி இப்படிப் போகிறது:
‘ வேலை நிறுத்தங்கள் நடக்கின்றன. ஆனால், இந்தக் கொலை நிகழ்ச்சி என்பது இன்றையகாலத்தின் அடையாளம் என்று கருதப்படுமானால், எதிர்த்தாக்குதல் என்பது இப்போது பாதகப் படுகொலை என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. திரு.போப் அவர்களின் படுகொலை பலவழிகளில் ஒரு சவாலாக இருக்கிறது. இலங்கையின் இந்தியத் தலைமைக்கு ஒரு சவாலாகவும் அமைகிறது. தோட்டங்களில் வாழும் தங்களின் எளிய சகோதரர்களின் பேரில் இந்தியத் தலைவர்கள் என்னதான் அனுதாபம் கொண்டிருந்தாலும், கொலைபாதகச் செயல்களில், அதிலும் இம்மாதிரி கொடூரமான, கோழைத்தனமான படுகொலைகளை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.’
1941 மே 14ஆம் திகதியிடப்பட்ட இன்னுமொரு ஆசிரியர் தலையங்கம் பின்வருமாறு எழுதியது:
‘தோட்டத்தொழிலாளர்களை உய்விப்பதற்கென்று கூறிக்கொண்டு வந்திருக்கும் தொழிற்சங்கங்கள் தங்கள் பொறுப்பினை பூரணமாக விளங்காதவர்களாகவே உள்ளன என்பதற்கு அண்மைக்காலத்தில் நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன. தோட்டங்களில் தொழிற்சங்க நிர்வாகிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரவுடிக்கூட்டத்திலிருந்தே வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சாதாரண மரியாதையான தொழிலாளர்கள், இவர்களோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. தோட்டத்தில் நிலவும் இந்த நிலைமைகளின் நேரடி விளைவே போப்துரையின் மரணமாகும். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகரை மிகச் சரியான, சட்டபூர்வமானமுறையில் வேலைநீக்கம் செய்ததிலிருந்தே அவரது தோட்டத்தில் இந்தப் பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது. அங்கு சட்டமும் ஒழுங்கும் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்திருக்குமானால், போப்துரை இன்று உயிரோடு இருந்திருப்பார்.’
தொழிற்சங்கவாதிகள் ரவுடிக்கூட்டத்தினர் என்று கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், தோட்டத்துரைமார்கள்தான் உண்மையில் அதிகாரத்திமிர் படைத்தவர்களாய், அப்பாவித் தொழிலாளர்கள்மீது ரவுடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிவதில்லை.
வீராசாமி, வேலாயுதம் மீது வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, இந்த ஆங்கிலப் பத்திரிகைத் தலையங்கத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ‘கொலை’, ‘கொலைபாதகச் செயல்’, காட்டுமிராண்டிச் சூழ்நிலைமையில் நடத்தப்பட்ட கோழைத்தனமான படுகொலை’ ஆகிய பதங்கள்மீது குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தனர்.
வீராசாமி, வேலாயுதம் ஆகியோர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் என்.நடராஜா அவர்கள், ‘கட்டுரைகளில் செய்யப்பட்டிருக்கும் விமர்சனங்கள், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கெதிரான பாதகமான ஒரு சூழலை உருவாக்கி, நெறிமுறைப்பட்ட நீதிமன்ற விசாரணையைப் பங்கப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை’ என்று தெரிவித்தார்.
மேலும், ‘சம்பந்தப்பட்ட விமர்சனங்கள் வழக்கின் விடயப்பொருள்பற்றிய நேரடிக் குறிகாட்டிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது; Behar Vs. Murali Manohar வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மேற்படி கூற்றை அப்படியே அச்சொட்டாக ஏற்றுக்கொண்டிருக்கிறது’ என்று நீதிமன்றில் வாதிட்டார்.
‘குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இருவரும் ஒரு தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்கள் என்றும் தொழிற்சங்கத்தின் முக்கிய அங்கத்தவரை வேலைநீக்கம் செய்ததாலேயே கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது போன்ற பத்திரிகைக்கூற்றுகள் எங்களுக்கு எதிரான கருத்தினை உருவாக்குபவை. இம்மாதிரிக் கூற்றுகள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளே என்று திட்டவட்டமாகத் தெரிவிக்காவிட்டாலும், அவர்களைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கவைத்துவிடும்’ என்றும் மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.
Times of Ceylon பத்திரிகை சார்பில் பிரதிவாதிக்காக ஆஜரான வழக்கறிஞர் என்.நடராஜா அவர்களின் வாதம் பின்வருமாறு அமைந்தது:
‘சம்பந்தப்பட்ட கட்டுரையில் இருந்த விமர்சனம், குற்றம் சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும், குற்றஞ்சாட்டப்பட்டவரை அந்தக் குற்றச்செயலோடு தொடர்புபடுத்துவதாகவும் இருந்தால் மட்டுமே, அது அவமதிப்புச் செயலாகக்கொள்ளப்படும். இந்த வழக்கைப்பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட அந்தப் பிரசுரம், நேரடியாகவோ, தவிர்க்கமுடியாத ஊகத்தின் மூலமோ தனிப்பட அவரைச் சிக்கவைத்து, அவருக்குப் பாதகமாக அமைந்ததென்று கூறமுடியாது. பெயரளவிலான (technical) நீதிமன்ற அவமதிப்பை நீதிமன்றம் கவனத்தில் எடுக்கக்கூடாது. மெய்யான (real) நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில்மட்டும்தான், நீதிமன்றம் இது தொடர்பில் அதற்குரித்தான தத்துவத்தைப் பிரயோகிக்கமுடியும்.
இருதரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதவான் சொயர்ஸ் தனது தீர்ப்பில், ‘சம்பந்தப்பட்ட மனுதாரர் நேர்மையானமுறையில் வழக்கு விசாரணை செய்யப்படுவதைப் பாதகமாகப் பாதிக்க வேண்டும் என்ற உட்கருத்துடன்தான் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இந்தப் பிரதிவாதி தமது கட்டுரையை எழுதினார் அல்லது பிரசுரித்தார் என்றோ, அல்லது நீதியின் இயல்பான போக்கைத் திசைதிருப்பவேண்டுமென்ற உட்கருத்துடன்தான் அதனை எழுதினார்/பிரசுரித்தார் என்றோ நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. சம்பந்தப்பட்ட பிரசுரம், நீதி தன்வழிச் செல்வதைப் பாதகமாகப் பாதித்தது அல்லது நீதி தன்வழிச் செல்வதற்குத் தடங்கலாய் அந்தக் கட்டுரை/பிரசுரம் இருந்தது என்று நிரூபித்தாலே போதுமானது’ என்று தெரிவித்தார்.
இக்கட்டுரைகளை எழுதியபோது பிரதிவாதிகளுக்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கமோ நீதி செல்லும் வழியில் குறுக்கீடு செய்ய வேண்டும் என்ற நோக்கமோ இருந்திருக்கவில்லை என்றே தனக்குத் தெரிகிறது என்றும் பிரதிவாதிகள் மன்னிப்பும் தெரிவித்ததை ஒட்டி, இம்மாதிரிப் பத்திரிகைக்கருத்துகள் எதிர்காலத்தில் தெரிவிக்கப்படமாட்டாது என்று நம்புவதாகக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
12
இலங்கையை உலுக்கிய கொலைச் சம்பவம்.
சாட்சியங்கள் 55 பேர்.
நூற்றுக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி.
ஒரு தேயிலைத்தோட்டத்தின் முழுச் சமூக அடுக்குமே வழக்கில் விரிகிறது.
தொழிலாளிகளிலிருந்து முற்றாக வேறான தோட்ட உத்தியோகஸ்தர்கள்.
தொழிலாளர்களைக் கைநீட்டி அடிக்கவும் தாக்கவும் முடியுமாகிற இயல்பு வாழ்க்கை.
தொழிலாளர்கள் காரில் தோட்டத்திற்குள் வந்தால் பாதைக்கு சேதாரம் ஏற்பட்டுவிடும் என்ற துரையின் கரிசனை.
நினைத்த மாத்திரத்தில் ஒருமாதச் சம்பளத்தைக் கையில் கொடுத்து, தோட்டத்தைவிட்டே ஒரு தொழிலாளியை வெளியேற்றிவிட முடிகிற துரைத்தனத்தின் அகம்பாவம்.
வெளியேறாது போனால், வாரண்டு பிறப்பித்து சிறைக்குள் தள்ளமுடிகிற சட்ட ஏற்பாடு.
தொழிற்சங்கத்தின் வரவை அபாய அறிவிப்பாக உணரும் தோட்ட முகாமை.
‘லேபர்ர்ஸ் கூட்டத்தை’ ஆபத்தானதாக எடைபோடும் ‘சேர்’ பட்ட வழக்குரைஞர்கள்.
தொழிற்சங்கவாதிகளை ரவுடிக்கூட்டமாக நினைக்கும் ஆங்கிலப்பத்திராதிபர்கள்.
நினைத்தால் ஒரு தொழிலாளியைக் கைகளைக்கட்டி சிறைவைக்கத் துணிகிற வெறும் கண்டாக்கு.
தொழிற்சங்கம் தோட்டத்துரைக்கு கடிதம் எழுதி, வேலைநீக்கம் செய்தவரை மீண்டும் எடுக்கவேண்டும் என்று கேட்டால், அதனை ‘துரைக்கு எப்படி டிக்டேட் பண்ணுகிறார்கள்?’ என்று ஆத்திரம்கொள்ளும் சட்டம் படித்தவர்கள்.
மலைவேலையையும் லயத்தையும் தவிர வேறெதனையுமே தெரியாத தொழிலாளர்கள்.
வெளியில் போனால் தொழிற்சங்க ஆபிஸிற்குத்தான் போவார்கள் என்று அந்த அலுவலகங்களை நோட்டமிடத் தொடங்கும் பொலிஸ் வட்டம்.
இலங்கையின் புகழ்மிக்க வழக்கறிஞர்கள் இருதரப்பிலுமே ஆஜராகினார்கள்.
வலுவான சட்ட வாதங்கள்.
19 நாட்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை.
ஜூரிமார்கள் ஒன்றரை மணித்தியால ஆலோசனைக்குப் பின் ஏகமனதாகத் தீர்ப்பு வழங்கினார்கள்.
‘குற்றப்பத்திரிகையின்படி, முதலாவது கைதியான ரா.வீராசாமியைக் கொலைக்குற்றம் இழைத்தவராகக் காண்கிறீர்களா?’—நீதிமன்ற எழுதுவினைஞர்
‘ஆம்’–ஜூரிமார்கள்
‘குற்றப்பத்திரிகையின்படி, இரண்டாவது கைதியான வேலாயுதத்தை கொலைக்குற்றம் இழைத்தவராகக் காண்கிறீர்களா?’
‘ஆம்’
நீதவான்: முதலாம், இரண்டாம் கைதிகள் தொடர்பாக ஜூரிமார்கள் வழங்கியுள்ள தீர்ப்போடு நான் பூரணமாக உடன்படுகிறேன். இது ஜூரிமார்களின் ஏகமனதான தீர்ப்பு. நீங்கள் குற்றவாளியெனக் கண்டவர்கள் இழைத்த குற்றத்திற்கு சட்டம் விதிக்கும் தண்டனை மரணதண்டனையாகும். அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது எனது கடமையாகும்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட வீராசாமி, வேலாயுதம் ஆகிய இருவரும் குற்றவியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்தனர். நீதவான் மொஸ்லி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் விண்ணப்பதாரிகளுக்காக வழக்கறிஞர்கள் பி.ஜி.எஸ். டேவிட், எச்.டபிள்யு. ஜயவர்த்தன ஆகியோர் ஆஜராகினர்.
இந்த மேன்முறையீட்டு விசாரணையில் வேலாயுதம், கண்டக்டர் சந்தியாகுவிற்கு அளித்த வாக்குமூலம் செல்லுபடியாகுமா? என்பதே மையப்பொருளாய் அமைந்தது. விசாரணை முடிவில் இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.
மேன்முறையீடும் தோல்வியுற்ற நிலையில், 1942ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ரா.வீராசாமி வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். மறுநாள் 28ஆம் திகதி வேலாயுதம் அதே சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். இறக்கும்போது இருவரும் 22 வயதினராயிருந்தனர்.
இறப்பதற்குமுன் வேலாயுதம் எழுதிய கடிதத்தில், ‘நம்முடைய சங்கம் கடவுள் செயலால் முன்னேற்றம் அடைய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். தனது படத்தை இந்தியாவில் தன்னுடன் கூடப்பிறந்த அண்ணாருக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அவரின் இறுதிக் கடிதத்தை வாசிக்கக் கண்கள் கலங்குகின்றன.
பாட்டாளிவர்க்க விடுதலைக்காக தூக்குக்கயிறை முத்தமிட்ட இந்த இரண்டு தியாகிகளை ‘மலையகத்தின் இரண்டு பகத்சிங்குகள்’ என்று மகுடம் சூட்டி அஞ்சலிசெய்கிறார் பெ.முத்துலிங்கம் அவர்கள்.
தூக்குத்தண்டனையை நிறைவேற்றி முடித்திருந்தாலும், இந்த வழக்கில் எழுப்பப்பட்ட சட்டபூர்வமான கேள்விகள் இன்றும் விடைதேடி நிற்கின்றன. போப்துரை கொலைவழக்குபற்றிய விரிவான ஆவணத்தைத் தந்திருக்கும் ஓ.எல்.டி.கிரெஸ்டர் (ஜூனியர்) அவர்கள் தனது நூலில் எழுப்பும் கேள்விகள் இவை.
1)’ஏனைய சிறைக்கைதிகளைக் குற்றவாளியாகவோ உடந்தையாளராகவோ குறிப்பாலுணரவைக்கின்ற பல குற்றவொப்புதல்கள் இருக்கின்ற தறுவாய்களில், நீதிநலனை முன்னிறுத்தி வெவ்வேறு தனித்தனியான விளக்கங்கள் இடம்பெறல் வேண்டும் என்ற, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக்கருத்து இந்த வழக்கைப் பொறுத்தவரையில் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது; ஏனென்றால், இந்த வழக்கில் வேலாயுதம், வேறு சிறைக்கைதிகளையும் இந்த வழக்கோடு தொடர்புபடுத்திக் கூறியிருந்தும், வழக்குகளை வெவ்வேறாகக் கையாள்வதில் பிரச்சினை எதுவுமே இருப்பதாக அவர்களுக்குத் தோன்றாமையால், சம்பவ இடத்தில் தாம் நின்றதாகச் சம்பந்தப்பட்ட சிறைக்கைதிகள் தத்தமது ஒப்புதல்கள்மூலம் கூறியிருந்தும்கூட, ஏனைய சிறைக்கைதிகளை நிரபராதிகள் என்று தீர்ப்பளித்துவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு மேலிடத்துக்குப் பாரப்படுத்தப்பட்டது முறையா?
2) தமது சொந்தச் சாட்சியக் காரணங்களின் அடிப்படையில் ஒரு வழக்கை மேலிடத்துக்குப் பாரப்படுத்துவதற்கு நீதவானுக்கு இருக்கின்ற தற்றுணிபு (discretion) இந்த வழக்கில் நியாயப்படி பிரயோகிக்கப்பட்டதா? ஏனென்றால் செய்யப்பட்ட குற்றவொப்புதல்கள், வற்புறுத்தலேதுமில்லாமல் செய்யப்பட்டனவா? அல்லவா? என்பது அவருடைய சாட்சியத்திலேயே தங்கியிருந்தது.
3) குற்ற ஒப்புதல்கள் எந்த நீதவான் முன்னிலையில் செய்யப்பட்டனவோ அதே நீதவான் சிறைக்கைதிகளைப் பாரப்படுத்தும் நீதவானாகச் செயற்பட்டது எப்படி?
4) குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்களுக்கு எதிரான நீதவான் விசாரணை எந்தக்கட்டத்தில் ஆரம்பிக்கப்படுவதாகக்கொள்ளப்பட வேண்டும்?
5) நீதவான் விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்புதல் கூற்றுக்களைக் கொடுக்கலாமா?
6) குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன என்பதைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குக் கூறத் தவறுதல், அவருக்கெதிரான விசாரணை இன்னமும் தொடங்கப்படவில்லை என்று கூறுவதற்கு இடம் தருமா? அதாவது, வழக்குக்கான சாட்சியங்கள் பலநாட்களாய்ப் பதிவுசெய்யப்பட்டிருந்தும், தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் என்ன என்பதைக் குற்றஞ்சாட்டப்பட்டவர் உணர்ந்திருந்தும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கெதிரான குற்றச்சாட்டு என்ன என்பது அவருக்கு முறைப்படி சொல்லப்படாமை அவருக்கு எதிரான விசாரணை இன்னமும் தொடங்கப்படவில்லை என்ற முடிவுக்கு இட்டுச்செல்லுமா?
7) குற்றஞ்சாட்டப்பட்டோர் பலராக இருக்கின்றவிடத்து, விசாரணைகளும் பலவாக இருக்குமா?
8) குற்றஞ்சாட்டப்பட ஒவ்வொருவருக்கும் எதிரான விசாரணையை எப்போது தொடங்குவது என்பது தொடர்பில் நீதவானுக்கு தற்றுணிபு உண்டா?
9) கைதுசெய்வதற்கான உரிமை தனிப்பட்ட பிரஜைக்கும் உண்டு என்ற சட்டத்தத்துவத்தைப் பிரயோகித்த கண்டக்டர் சந்தியாகோ, சான்றுக்கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களைப் பொறுத்தவரையில் ‘அதிகாரத்தில் உள்ள ஆள்’ என்ற வரைவிலக்கணத்திற்கு உட்பட்டவரா?
“இவையெல்லாம், அறிவுசார்ந்த நீதிபதி அவர்கள் தீர்மானித்துத் தீர்க்கவேண்டிய முக்கியமான கேள்விகள் சில” என்று வழக்கறிஞர் ஓ.எல்.டி.கிரெட்சர் (ஜூனியர்), The Pope Murder Case – The Trial of Ramasamy Weerasamy and Iyan Perumal Velaithen எனும் தனது நூலில் முன்வைத்திருக்கும் வாதங்கள் இன்றும் தீர்ப்பை நோக்கிக் காத்திருக்கின்றன.
தொடரும்.