மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 20 – T .சௌந்தர்.

ஓசைநயங்களும் இனிய சங்கதிகளும்

“நீரின்றி அமையாது உலகு” என்று நீரின் மேன்மையை வள்ளுவர் சொல்கிறார். அது போல இனிய ஒலியின்றி நல்ல பாடல்கள் அமையாது என்பதற்கு அமைய பாடல்கள் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள். இசைக்கு மட்டுமல்ல மொழிக்கும் அடிப்படையே ஒலிதான்!

மொழியுடன் தொடர்புடைய ஒலி பற்றிய செய்திகளை  தொல்காப்பியம் ” உடம்படுமெய் ஒலிகள் ” என எழுத்ததிகாரம் பகுதியில் விபரிக்கின்றது. நூற்பா 33 இல்  “அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும்” என்ற பாடல்கள் மொழிக்கும் இசைக்குமுள்ள தொடர்பை காட்டுகிறது.

அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு

முளவென மொழிப விசையொடு சிவணிய

நரம்பின் மறைய வென்மனார் புலவர். (33)

“நரம்பின் மறை”  என்பது இசை நூல் ஆகும். இசைமட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சமே ஒலியின் ஒத்திசைவிலும் நிகழ்கிறது 

தமிழ் இசை மரபில் ராகம், தாளம், சங்கதி, கமகம், பிருக்கா போன்றவை இசையின் அடிப்படையானதாக இருக்கின்றன. இவையின்றி இசையில்லை என்று சொல்லிவிடலாம். இவை எல்லாம் உலகப்பொதுவானவை என்றாலும் இவற்றுக்கெல்லாம் தனி இலக்கணங்களை வகுத்தவர்கள் தமிழர் என்பது மிகையான கூற்றல்ல. தமது இசையை அழகுபடுத்தும் நோக்கத்துடனேயே நம் முன்னோர்கள் .  இவற்றையெல்லாம் பயன்படுத்தினார்கள்.

இந்த அமைப்பு முறைகளை கர்நாடக , ஹிந்துஸ்தானி இசை கச்சேரிகளில் இன்றும்  நாம் கேட்கமுடியும். நமது இசையின் முதுகெலும்பு இவை தான் என்பதும்,  இதுவே இந்திய இசையை உலகின் வேறு இசைகளிலிருந்து வேறுபடுத்தியும் காட்டுகின்றன என்பதும் நமது கவனத்திற்குரியதாகும்.

தமிழ் ஒலி அமைப்பு முறைகளுக்கு இலக்கணம் வகுத்த முன்னோர்கள் ஒலியின் அழகுகள் குறித்தும் ஏராளமான செய்திகளை நமக்குத் தந்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் ஒலி பற்றிய மிக நுணுக்கமான அறிவினை எண்ணி வியக்கவும் செய்கிறோம். பழந்தமிழ் நூல்கள் சந்தம் / வண்ணம், அளபெடை, சங்கதி, கமகம் போன்றவை பற்றியும் பேசுகின்றன.

சந்தம் / வண்ணம்

பாடல்களில் உள்ள ஓசைநயம் சந்தம் எனப்படுகிறது. பாடல் வரிகளில் பொதிந்திருக்கும் தாளத்தின் கூறுகளையும் அது வெளிப்படுத்தும். ஒலியின் அழகைத்  தமிழில் வண்ணம் என்றும் ராகம் என்றும் அழைக்கின்றனர். இசைக்கலையில் உயர்ந்த குறிப்பாற்றலை வெளிப்படுத்த இது உதவுகிறது.  

அளபெடை:

அன்றாட வாழ்வில் நம்மை அறியாமலேயே ஒரு நபரையோ , பொருளையோ அழைக்கும் போதோ அல்லது பாடும் போதோ சில ஒலி அளவுகளை நீட்டியும் குறைத்தும் பயன்படுத்துகிறோம். அதில் நீண்ட ஒலிகளை எழுப்புவதை அளபெடை என்று அழைக்கின்றோம். ஒரு சொல்லின் ஒலி அளவை சற்று நீட்டி அழைப்பதை பொருளைக் கூவி விற்பவர்களிடமும் . ஒப்பாரி பாடும் போது சில சொற்களை  நீட்டிப் பாடுவதை சாதாரண பெண்களிடமும்  சர்வசாதாரணமாகக் காண்கிறோம்.

இந்த ஒலிப்பு முறைகளை  தமிழ் இலக்கணத்தில் இயற்கை அளபெடை , சொல்லிசை அளபெடை , இன்னிசை அளபெடை , செய்யுளிசை அளபடை  என நான்காக வகுத்துள்ளனர். நெடில் எழுத்துக்களே அளபெடுக்கும் என்பர். ஆ- ஈ – ஊ – ஏ – ஊ – ஓ போன்ற நெடில் எழுத்துக்களிலேயே அளபடை அமைந்திருக்கும்.

செவிக்கு இனிய ஓசைதரும் வகையிலேயே இருப்பது இன்னிசை அளபடை ஆகும். கர்னாடக இசையில் ஒரு ராகத்தை விரிவாக அசைத்து ,அசைத்து , நீட்டிப் பாடும் போது அவை  ஆஅ –  ஈஇ –  ஊஉ –  ஏஎ –  ஐஇ – ஓஒ – ஒள – உ என்ற எழுத்துக்களின் ஒலிநயத்தையும் , ஓசைநயத்தையும் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

பெரும்பாலும் கர்நாடக இசைக்கச்சேரிகளில் இசைக்கலைஞர்கள் ராகம் பாடும் போது அசைத்து வரும் ஒலிகளைக்   கவனித்தால்  ஆஅ –  ஈஇ –  ஊஉ –  ஏஎ –  ஐஇ – ஓஒ – ஒள – உ என்கிற இந்த எழுத்துக்களின் ஒலிநயங்களையே நாம் கேட்க முடியும்! இந்த எழுத்துக்களை அசைத்தால் மட்டுமே காதுக்கு இனிமை உண்டாகும்.மேலை நாடுகளில் கூட குரல் பயிற்சி செய்பவர்களும் இந்த  ஒலிகளையே பயன்படுத்துகின்றனர்.

இசையில் பயன்படும் அளபெடை போலவே, கமகங்களும், சங்கதிகளும், பிருக்காக்களும் மிக,மிக  முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

சங்கதி :

ஒரு பாடலில் வரும் வரிகளை திரும்பத் திரும்ப விதம் விதமாக பாடிக் காண்பிப்பது சங்கதி எனப்படும். ஒரு பாடலின் அழகையும், இனிமையையும் , பாவத்தையும் அழகுபட காண்பிக்கவும் சங்கதி பயன்படுகிறது.

பிருக்கா:

பாடகர் தங்களது பாடல்களில்  வரும் சொற்களை அல்லது ஒரு சொல்லில் அசையக்கூடிய  இடங்களில்  குரலில் விதம்,விதமான , விறு விறுப்பான, திடீர், திடீர் என மாறுபாடுகளையும் பாடி  அவற்றில் நுணுக்கமான வேறுபாடுகளையும் காண்பிக்கும் ஒரு முறையாகும். பாடும் வரிகளில் இருக்கும் சொற்களை அசைத்து,அசைத்து அல்லது மீண்டும் , மீண்டும் பாடிக் காட்டுதல்.

எஸ்.ஜி.கிட்டப்பா

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாடல் முறையைச் சொல்லலாம். அவரைப்பின்பற்றி டி.ஆர்.மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பிருக்கா வைத்து பாடி புகழ் பெற்றனர்.

கமகம்:

கமகம் என்பதை பழந்தமிழர்கள் உள்ளோசைகள் என்று அழைத்தனர். இது இசை ஒலிகளுக்கு அழகூட்டும் அல்லது உயிரூட்டும் ஒரு முறையாகும். ஒரு பாடலைப் பாடுபவரோ அல்லது வாத்தியக்கருவி வாசிப்பவர்களோ சில இனிமையான இடங்களை அழகுபடுத்திக் காட்டவும் , இனிமைகூட்டவும்  ஒலி அசைவுகளில் சில நுணுக்கங்களைக் காண்பித்தலாகும். கமகங்களில் பலவகையுண்டு என சிலப்பதிகாரம் சொல்கிறது. அவை..

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்

சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்

ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த

பட்ட வகைதன் செவியின் ஓர்த்த

[ கானல் வரி-12-6  ]  

கர்நாடக இசையில்  15 வகையான கமகங்கள் உண்டு. அதில் முக்கியமானவை நான்கு.இலகுவாக அடையாளம் காணக்   கூடியவையாகும்.

01  ஜாரு [ Jaaru ]   கொஞ்சம் வளைவுள்ள கமகம். அதை Sliding Gamaga இன அழைப்பர். ஒரு சொல்லையோ , வரியையோ நேராகப் பாடாமல் கொஞ்சம் வளைத்து பாடுதல். ஆறு வளைந்து வளைந்து ஓடுவதை போன்றதாகும்.

02  கம்பிதம்  [ Gambitham ] – அலை [ Wave ] வடிவத்தில் பாடுவது. நேராகப் பாடாமல் சுரங்களுக்கிடையே அசைவுகளைக் காட்டுதல். கொஞ்சம் வளைவுள்ள கமகம்.

03  ஜண்ட  [ Janta ]- Janta Swaras –   சுரங்களை இரண்டு, இரண்டாகப் படுதல். உ + ம் : சச – ரிரி – கக- மம ..

04  ஸ்புரிதம் [ Spuritham ] – Vibration Gamagas- ஜண்ட சுரங்களை துரிதமாகப் பாடும் முறை இதுவாகும்.

இவை செவ்வியலிசைகளில் மட்டுமல்ல சினிமா இசையிலும் அதன் அளவிற்கேற்ப இருந்து வருவதை நாம் காண்கிறோம். குறிப்பாக மெல்லிசைமன்னர்களின் இசையில் மிக இயல்பாக இழைந்தோடிக்கிடக்கின்றன.

மேலே கூறப்பட்ட சந்தம் / வண்ணம், அளபடை, சங்கதி , கமகம்  போன்றவற்றை தமது பாடல்களில் மிக இயல்பாக , வார்த்தையில் சொல்ல முடியாத அழகுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

//” எனக்கு பிருக்கா எல்லாம் வராது, நல்ல கார்வை கொடுத்துப் பாடுவேன். // என்று டி.எம்.சௌந்தரராஜன் முன்பு ஒருமுறை கூறியிருந்தார். கிட்டப்பா , தியாகராஜ பாகவதர் , டி.ஆர்.மகாலிங்கம் , சீர்காழி கோவிந்தராஜன் பிருக்கா வைத்து பாடி வந்தனர்.  கால மாற்றத்தால் சினிமாவில் பிருக்கா மறைந்து விட்டது என்று சொல்லலாம்.

எந்த ஒரு படைப்பும் அதை படைக்கும் கலைஞனின் தனித்தன்மையாலும் சிறப்பு பெறுகிறது . அந்தவகையில் தமிழ் சினிமா இசையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி அல்லது நடை இருந்து வந்திருக்கிறது. 1950களில் புகழபெற்றிருந்த ஜி.ராமநாதனின் வாத்திய பிரயோகங்களும் குறிப்பாக அவர் பயன்படுத்திய  தாள நடையும் மற்றவர்களிடமிருந்து அவரைத் தனியே எடுத்துக் காட்டின.

மெல்லிசைமன்னர்களும் தங்கள் தனித்துவத்தை  இசையில் துல்லியமாகக் காண்பித்தனர்.அந்தவகையில் இசையின் கூறுகளாக இருந்த பல அம்சங்களையெல்லாம் விரிவாகப் பயன்படுத்தியதால் மெல்லிசைமன்னர்கள்   முக்கியத்துவம் பெறுகின்றனர்.

மேலே கூறப்பட்டவற்றில் ஒன்றான வண்ணம் என்பது இசையின் முக்கிய அம்சமாகவும் தமிழ் மொழியின் இலக்கணப்பகுதியின் முக்கிய அம்சசமாகவும் தொல்காப்பியம் பிரதானப்படுத்தியுள்ளது. வண்ணங்கள் பற்றிய மிக விரிவாகப் பேசும் தொல்காப்பியம் இருபது வண்ணங்களை பற்றிய முக்கிய குறிப்புகளையும் தருகிறது.

கவிஞர்கள் எழுதும் பாடல்களில் இடம்பெறும் சொற்களின் ஒலிக்கும் ,ஓசைநயத்திற்கும் , அவற்றிலுள்ள சந்தநடைக்கும் மிக நெருக்கிய தொடர்பு இருக்கும் . இதனையே மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் ” கவி அல்லது பாடல் வரிகளிலேயே இசை இருக்கிறது .அதைத் தொடர்ந்தாலே மெட்டுக்கள் பிறந்து விடும் ” என்பார் ! ஆனால இது போன்ற கருத்துக்களை அவர் போன்ற மேதைகளாலேயே சொல்ல முடியும். இவற்றையெல்லாம் உள்வாங்கி , எங்கெல்லாம் என்னென்ன முறைகளை கையாள வேண்டுமோ, அங்கெல்லாம் சிறப்பாகக் கையாண்டு தமது பாடல்களில் பொதிந்து வைத்தனர். எழுத்துக்களின் ஓசையையும் , அவற்றில் எழும் ஓசைப்பெருக்குகளையெல்லாம் தமது பாடல்களை வளம் செய்யுமாறு , அந்தந்த உணர்வுகளுக்கேற்ப முதன்மையுறத தந்தனர். 

அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம் 

அளபெடை:

சாதாரண பேச்சுவழக்கில் நம்மை அறியாமலேயே நாம் தேவையான அளவுக்கு சொற்களை நீட்டியும் , குறுக்கியும் பாவிப்பது போல இசையிலும் இருக்கிறது.அது சினிமாப்பாடல்களிலும் சிறப்பாக இருக்கிறது. சொற்களின் பயன்பாட்டிலும் , உச்சரிப்பிலும் அதிக கவனம் செலுத்திய பழைய இசையமைப்பாளர்கள் அவற்றைத் தகுந்த இடங்களிலெல்லாம் பயன்படுத்தியும் இருக்கின்றனர். இசையமைப்பாளர்கள் தமது இசையில் அதனை மிக லாவகமாகப் பயன்படுத்தி வெற்றியும்  கண்டுள்ளனர். மெல்லிசைமன்னர்களின் இசையில் அது மிகவும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அளபெடை என்பது இசையில் வரும் போது  அளவில் சற்று நீள ஓசையாக வரும். ஒன்றை விழித்து அழைப்பதற்கு அல்லது ஒரு கருத்தை ஓங்கி சொல்வதற்கு , அல்லது சொற்களுடன் ஓசைகளை நீட்டி பாடல்களுக்கு சுவை கூட்டுவதற்கு அளபெடை பயன்படுகிறது. மெல்லிசை மன்னர்களை பொறுத்தவரையில் இசையின் ஜீவனுக்கு உயிர் கொடுக்க இந்த முறைகளையும் ஹம்மிங்காக , ஓசைவளைவுகளாக என பல பரிமாணங்களில் வகை வகையாகத் தந்துள்ளனர். அதுமட்டுமல்ல அவற்றில் அற்புதமான உணர்வுகளையும், இசையின் புத்துணர்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

சொற்களில் இயல்பாக இருக்கும் அளபெடைகளை தமது இசையில் கனகச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள் மெல்லிசைமன்னர்கள். அளபெடைக்கு உதாரணமாக அமைந்த பல பாடல்கள் உண்டு. அவற்றுள் சில :

01 நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்  – எங்க வீட்டுப் பிள்ளை 1963-பாடியவர்: டி.எம்.எஸ் + ஈஸ்வரி  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் ஆரம்பமே அமர்க்களமான அளபெடையுடன் ” நான்  மாந்,,,,,,,,தோப்பில்  ” என்று அதாவது தோப்பு அவ்வளவு தூரம் என்பது  போல நீட்டலுடன் தொடங்குகிறது. அது போலவே ” அதைக் கொடுத்தா …..லும் வாங்கவில்லை ” என்றும் வரும். எங்கெல்லாம் நீட்டமான எழுத்துக்கள் வருகிறதோ அதற்கேற்ப தேவையான போது  நீண்ட ஓசையைக் காட்டுவார்கள்.

அதுமாத்திரமல்ல இனிய சங்கதிகளும் , இனிய ஓசைநயங்களும் இந்தப்பாடலில் உண்டு.

 ” நான் தண்ணீர் பந்தலில் நின்றுருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள் ……கோய் ”  

என்ற வரிகளை இரண்டாவது முறை பாடும் போது ” கோய்” என்ற ஓசையை சேர்த்து சுவையூட்டுகின்றார்கள்.. அதே போல ” அவன் தாலி கட்டும் முன்னாலே தொட்டாலே போதும் என்றே துடிதுடித்தான் ” என்ற வரிகளில் “ஓகோ ஓ ஓ ஓ ஓ ஓ “என்று இதமான ஓசைநயத்தையும் , பாடலின் நிறைவுப்பகுதிக்கு முன்னாக ” ஓ கோயின்னா…ஓ கோயின்னா…ஓ கோயின்னா…  ஓ கோயின்னா…ஓ கோயின்னா…ஓ கோயின்னா… ஓகோகோ ..ஓகோகோ …ஓகோகோ  கொய்யா ”  என்று அருமையான Sliding வளைந்த ஓசையைக்  கொடுத்து முடிக்கிறார்கள். இந்தப்பாடலில் சந்தூர் வாத்தியம் மற்றும் தாள வாத்தியங்கள் மிகவும் சிறப்புடன் ஒத்திசைவுக்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  எத்தனை அற்புதம் !

02 நான் ஆணையிட்டால்   – எங்க வீட்டுப் பிள்ளை 1963  -பாடியவர்: டி  எம் .எஸ்  – இசை :விஸ்வ  நாதன் ராமமூர்த்தி

ஆரம்பமே ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ” என்று ஓங்கிய குரலில் அளபெடையுடன் அழகாக ஆரம்பிக்கும் இப்பாடலில் , இடையில் ” ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன் , ஒரு கடவுளுண்டு அவன் கொள்கையுண்டு அதை எப்போதும் காத்திருப்பேன் ” என்ற வரிகளில் அருமையான வளைந்து போகும் சங்கதியையும்    கேட்கலாம்.

03 அதோ அந்த பறவை போல   – ஆயிரத்தில் ஒருவன்  1965  -பாடியவர்: டி  எம் .எஸ் – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

அறைகூவலாக ஒலிக்கும் இந்தப்பாடல் ” அதோ ” என்று நீட்டல் ஓசையுடன் ஆரம்பிக்கிறது.

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

காலம் நாம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

காதல் பாசம் தாய்மை நம்மை  மறப்பதில்லையே !

என்ற வரிகளில்   விலகவில்லையே – சுடுவதில்லையே – நடப்பதில்லையே – மறப்பதில்லையே  என்று நீண்ட ஓசைகளால்   பாடலை அழகுபடுத்துவதுடன் . பாடல் முடிவில் விடுதலை என்ற சொல்லும் அழகுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

04 அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு   – வெண்ணிற ஆடை 1964  -பாடியவர்: பி.சுசீலா   – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

அளபெடையுடன் தொடங்கும் இந்தப்பாடல் வளைந்து ,வளைந்து செல்லும் இனிய கமகங்களையும் கொண்ட பாடல். பாடலின் இடையில் அம்மம்மா என்ற சொல்லை ஓங்கி ஒலிக்க வைப்பதுடன் , அதை மென்மையாகவும் முடிக்கும் அழகைக்காண்பதுடன்

ஏதோ இன்பம் ஏதோ தந்து என்னை தொட்டு செல்லும் வெள்ளமே … மே.. மே.. மே.. மே

தானே வந்து தானே தந்து தள்ளித் தள்ளி செல்லும் உள்ளமே…. மே

அந்நாளில் எந்நாளும் இல்லை இந்த எண்ணம்

அச்சாரம் தந்தாயே அங்கம் மின்னும் வண்ணம்   –     என அலையாக சென்று ” அம்மம்ம்மாஆ ஆ ஆ ஆ ஆ ஆ ” என்று நீட்டி பாடலை முடிக்கும் அழகைக் காண்கிறோம்.!

05 அந்த மாப்பிள்ளை காதலிச்சான்   – பணம் படைத்தவன்  1963  -பாடியவர்: டி  எம் .எஸ் + சுசீலா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

“மா…ப்பிள்ளை “ என்று இழுத்து பாடும் ஆரம்பத்துடன் தொடங்கும் இந்தப்பாடலில் இயல்பான சங்கதிகளும் இசைந்து செல்கிறது.

வெட்கத்திலே நான் இருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்  –  என்று அனுபல்லவியிலும் ,

சரணத்தில்

என்னருகே பெண்ணிருந்தா

பெண்ணருகே நானிருந்தேன்  – என்ற அழகான சங்கதிகள் கொண்ட பாடல் .

01 பாட்டுக்கு பாட்டெடுத்து   – படகோட்டி  1964  -பாடியவர்: டி  எம் .எஸ் + சுசீலா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

தூது விடும் இந்தப்பாடலில் மென் ஓசைகள் பயன்படுத்தப்படுகிறது.எனினும் தேவையான இடங்களிலெல்லாம் நீண்ட ஓசைகளால் , அளபெடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாடலின் நடுவே வரும் தொகையறாவில் அது பேரின்பமாய் ஒலிக்கிறது.

இளவாழ….ந் தண்டாக……….. எலுமிச்…சம்.. கொடியாக……

இருந்தவளை கைபிடிச்சு இரவெல்லாம் கண்முழிச்சு

இல்……லாத  ஆசையில் என்மன…சை ஆடவிட்டான்

ஆ…டவிட்டு மச்சா னே ஓடம் விட்டு போனானே 

ஓடம் விட்டு போனானே..ஓ  ..ஓ  ..ஓ ..ஓ  –    

என  நீண்ட ஓசையில் இனிய சங்கதியையும் வைத்து அழகு சேர்க்கைறார்கள் மெல்லிசைமன்னர்கள்.

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய் தலைமுடித்து

பின்னலால் சடை போட்டு என்மனதை எடை போட்டு

மீன்பிடிக்க வந்தவளை நான் பிடிக்க போனேனே

மாய் எழுதும் கண்ணாலே பொய் எழுதி போனாலே 

என்ற வரிகளில் எத்தனை நீண்ட ஓசை அழகுகள்! அந்த   வரிகளின் இசையும் நாயகனின் துயரமும்  நம் நெஞ்சை அடைப்பதுடன் இதமாக வருடியும் கொடுக்கிறது. 

சரணத்தில் ..

நெஞ்சுமட்டும் …..அங்கிருக்க   

நான் மட்டும்….. இங்கிருக்க ஓ ..ஓ ..ஓ

 நான் மட்டும் இங்கிருக்க 

இந்த வரிகள் தான் பாடலின் உச்சம் என்று சொல்லலாம். அந்த வரிகளின் இணையில் எத்தனை கனிவு …உருக்கம் !!

பாவ மன்னிப்பு (1961) Tamil திரைப்படம்

06 எல்லோரும் கொண்டாடுவோம்   – பாவமன்னிப்பு   1961  -பாடியவர்: டி  எம் .எஸ் + ஹனீபா   – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்தப்பாடலில் கொண்டாடுவோம் …ஒன்றாய் கூடுவோம் என்ற ஒலிகளின் ரீங்காரத்தை எப்படி வர்ணிப்பது?

ஆடையின்றி பிறந்தோமே ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையில் அள்ளிக் சென்றோர் யாருமுண்டோ ..ஓ ..ஓ ஓ ..ஓ

இந்தபாடலின் உச்சம் இந்த ஓ ..ஓ .. என்ற கமகத்தில் தான் இருக்கிறது. எவ்வளவு உருக்கம் ,நெகிழ்ச்சி , உள்ளத்தை நெகிழ்த்தும் அதிர்வு !

அளபடை வருகின்ற இன்னும் சில பாடல்கள்:

07 ஆறோடும் மண்ணில் எங்கும் – பழனி 1964 -பாடியவர்: டி.எம்.எஸ் + சீர்காழி + ஸ்ரீனிவாஸ் – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண் முன்னே கிராமீயத்தை கொண்டுவரும் இனிய குழலுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் ஆர்ப்பாட்டமில்லாமல் , மிக இயல்பான ஓசைநயத்துடன் அளபெடையைக் கையாண்டுள்ளனர்.

ஆறோடும் ..தேரோடும் ..நீரோடும் போன்ற சொற்பதங்கள் மற்றும் ” பஞ்சமும் பசியியுமின்றி பாராளும் பசுமையுண்டு ” நீட்டலாகவும் , ” தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ ” என்று கனிந்த குழைவும் , ” அறுவடைக்காலம் உந்தன் திருமண நாளம்மா ” என்ற வரிகளின் இசையின் இன்ப அதிர்வும் என அத்தனை இனிமையையும் ஒன்று சேர்த்து தரும் பாடல் !

08 வாராதிருப்பானோ – பச்சை விளக்கு 1963 -பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் வரிகளின் நீண்ட ஓசைநயத்தையும் , அருமையான செனாய் வாத்திய வாசிப்பில் நெகிழ்ச்சியான கமகங்களையும் அற்புதமாகத் தரும் பாடல்.

09 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ – சந்திரோதயம் 1967 -பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா- இசை :விஸ்வநாதன்

10  அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு   – ராமன் எத்தனை ராமனடி 1970 -பாடியவர்: டி  எம் .எஸ்   – இசை :விஸ்வநாதன்.

இந்தப்பாடல் மகிழ்சியாகவும் , துயரமாகவும் இரண்டு பாடல்கள் வெளிவந்தன. மகிழ்சியாக ஒலிக்கும் பாடலில்  “அம்மா………………டி ” என்று நீண்ட விழிப்புடன்  கூவும் ஓசை அழகுடன்  ஆரம்பமாகிறது பாடல். குதூகலம் தரும் தாளநடையின் பின்னணி இனிமை சேர்க்க பிற ஓசைநயங்களும் இணைந்திருக்கும் இனிமையான பாடல் !

கவலையாக ஒலிக்கும் இதே பாடல் தான் பிரபலமானது. அந்தப்பாடலிலும் “அம்மா……..டி ” என்ற அளபடை நிறைவேறாத காதலின் வேதனையையும் , விரக்தியையும் வெளிப்படும்.பணக்கார பெண்ணை மனத்தால் நேசித்த ஏழையின் மறக்கவியலாத வேதனை இந்தப்பாடல். இப்படி பல பாடல்களைக் கூறும் முடியும். பொதுவாகவே மேலே சொன்ன அத்தனை நுட்பங்களையும் பாடல்களின் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அதற்கு அழகிய அலங்கார வேலைப்பாடுகளை புனைவதைப் போல மெல்லிசைமன்னர் தந்திருக்கிறார்!

ஜாரு [ Jaaru ]   சற்று வளைவு கொண்ட [ Sliding ] கமகங்கள்:

01  பாலிருக்கும் பழமிருக்கும்  – பாவமன்னிப்பு 1961  – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன்  ராமமூர்த்தி

பஞ்சணையில் காற்று வரும்

தூக்கம் வராது …தூக்கம் வராது …

என்ற இடத்தில் எத்தனை அழகான சுருண்டோடும் சங்கதிகள்! அந்த வரிகளைத் தொடர்ந்து வரும் சந்தூர் வாத்தியமும் உருண்டோடும்!

** கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் ம்,,,ம்ம் ..ம்

**  காதலுக்கு ஜாதில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே …ஏ …ஏ ..ஏ ,,ஏ  – இந்த இடத்திலும் மிக நுண்ணிய சங்கதிகள் பேசும் .   

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே .. என்று முடிக்கும் அழகோ அழகு !

02  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ   – சந்திரோதயம்  1966  – டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன்.

எந்நாளும் பிரியாத உறவல்லவோ …

இளஞ் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வா….மே  உந்தன்  நிறமா…னதோ ..

என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

இளஞ் சூரியன் உந்தன் வடிவானது

செவ்வான………மே  உந்தன்  நிறமா…..னதோ .. //  இந்த இடங்களில் அற்புதமான வளைவில் கமகம் வளைந்து அழகுகாட்டும்.  இந்த இடத்தில் சுசீலாவின் குரல் தேனாக இனிக்கும்.

03  ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை   – பணத்தோட்டம் 1963  – டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன்.ராமமூர்த்தி

இந்தப்பாடலில் அனாயாசமாக வழிந்தோடும் சங்ககளைக் கேட்கலாம். திரும்பிய இடங்களிலெல்லாம் சங்கதிகள் தான் !

திருநாள் தேடி தோழியர்  கூடி  சென்றார் திரும்பவில்லை…

தினையும் பனையாய் வளர்ந்தே இருவிழிகள் அரும்பவில்லை – இந்த வரிகளில் எத்தனை அழகான வளைவுகள் ; அதிர்வுகள் – அது போல

“எனையே அவன்பால் கொடுத்தேன் இறைவன் திருடவில்லை” – என்ற வரிகளில் ” கொடுத்தேன் இறைவன் திருடவில்லை ” என்ற வரிகள் அருமை என்று சொல்லலாம்!

03  கண்ணிலே அன்பிருந்தால் – ஆனந்தி 1964  – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன்  ராமமூர்த்தி     

எத்தனை அருமையான வளைவுகள்  இந்தப்பாடலில் ! எத்தனை இனிமை !

கண்ணிலே அன்பிருந்தா…..ல்      கல்லிலே  தெய்வம் வரும்…..ம் …ம்  …ம் …ம்   

நெஞ்சிலே ஆசை வந்தா….ல்         நீரிலும் தேனூறும்…ம் …ம்…ம் …ம்   

04  என்னை எடுத்து தன்னை கொடுத்து  – படகோட்டி  1964  – பி.சுசீலா – இசை: விஸ்வநாதன்  ராமமூர்த்தி

இந்தப்பாடலில் 

போனவன் போனாண்டி – வந்தாலும் வருவாண்டி –  என்ற இடங்கள் பல இடங்களிலும் விதம்விதமாக பாடப்படுகிறது. 

05  பொன் எழில் பூத்தது புதுவானில்    – கலங்கரை விளக்கம்  1965  – டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன்.

    ” சிவகாமி …சிவகாமி  ” என்ற சொற்களைத் தொடர்ந்து  ஓ ..ஓ  என்று இரண்டு முறை வரும்  நீண்ட  சுசீலாவின்  ஹம்மிங்கிலும்  Sliding கமகம் அழகாக வரும்.

 .. இந்த இடத்தில் சுசீலாவின் குரல் தேனாக இனிக்கும்.

அலை,அலையாக வருகின்ற கமகங்களைக் கொண்ட பாடல்கள் :

01 இந்த மன்றத்தில் ஓடிவரும்    – போலீஸ்காரன் மகள்  1963 -பாடியவர்: பி.பி.எஸ். + எஸ்.ஜானகி    – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

அலையலையாக ஓடும் இனிய வாத்திய இசையுடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடலில் வழிந்தோடும் இனிய, நுண்ணிய  சங்கதிகளையும் கேட்கலாம்.விறுவிறுப்பும் இனிய வளைவுகளும் வாத்திய இசையிலும் காண முடியும்.

இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ ஓ ..ஓ ..ஓ..ஓ  – என்று  விறுவிறுப்பான அலையாகவும்

இந்த மன்றத்தில்  ஓ ஓ ஓ டி வரும் —- என்ற வரிகளில்  நுணுகிய அசைவையும் , பின்

வண்ண மலர்களில் அரும்பாவாள்

உன் மனதுக்கு கரும்பாவாள் – இன்று

அலைகடல் துரும்பானாள்   – என்று

ஒரு மொழி கூறாயோ…ஓ  ஓ  ஓ  –  என்ற இடத்தில் அருமை வளைவு விழும்!

அவள் வேதனை கூறாயோ ஓ ..ஓ. ஓ. என்று ஜானகி பாட ,…….  

தொடர்ந்து  பி.பி.எஸ்

 தன் கண்ணனைத் தேடுகிறாள் மன காதலைக் கூறுகிறாள் – இந்த

அண்ணனை மறந்து விட்டாள் எனும் அதனையும் கூறாயோ

என்று அற்புதமாக நிறைவு செய்யும்பாடல். ” தன் கண்ணனைத் தேடுகிறாள் ” என்று பி.பி.எஸ் பாடும் இடம் அருமை.

04   நான் பேச நினைப்பதெல்லாம்   – பாலும் பழமும்   1963 – பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா   – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றுமில்லை பொருளென்றுமில்லை

சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை விலையேதுமில்லை

இந்த வரிகள் இரண்டுமுறை பாடப்படுகிறது. இரண்டாவது முறை வரும் போது என்ன ஒரு அற்புதமான வளைந்து போகும் சங்கதி !! அதைத் தொடர்ந்து

ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே …உயிர் சேர்ந்த பின்னே

உலகங்கள் நம்மையன்றி வேறேதுமில்லை வேறேதுமில்லை

04   பொன்னை விரும்பும் பூமியிலே  – ஆலயமணி   1963 – பாடியவர்: டி.எம்.எஸ்  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

உணர்வுக்கு ஏற்ப எத்தனை தினுசாக சங்கதிகளை அலை போல மென்மையாகவும் மிக  நுட்பமாகவும்  இசையமைக்கப்பட்ட பாடல். சொற்களின் ஓசைக்கும், பொருளுக்கும் ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் நகரும் பாடல்.

பாடலின் சரணத்தில்

ஆலமரத்தின் விழுதினைப் போலெ அணைத்து நிற்கும்  உறவு தந்தாயே

வாழைக்கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போல வாழ வைத்தாயே 

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என் உயிரே…

 இந்தவரிகளில்  நுட்பமான சங்கதிகளைக் கேட்கலாம்.

05 அனுபவம் புதுமை   – காதலிக்க நேரமில்லை 1964  – பி .பி .எஸ் + சுசீலா   – இசை: விஸ்வநாதன்ராமமூர்த்தி

இந்தப்பாடலில் மிக அருமையான வளைவுகளையும் , ரகசியம் பேசும் இனிய ஆசைகளையும் கேட்க முடியும்.

அங்கங்கே நீட்டமான ஓசையாக

“ஒன்று நானே தந்தேன் அது போதாது என்றாள் …போதாது”  என்றாள் – என்று நீட்டமாக ஸ்ரீனிவாஸ் அசைக்கும்

இடத்திலும்

” இது மாறாதென்றான் இனி நீயே என்றான்

கண்ணில் பார்வை தந்தான் துணை நானே என்றான் “,,,நாளை என்றான் என்ற இடத்திலும்  மிக அருமை வளைவு விழும்!

வாத்தியங்களில் , குறிப்பாக எக்கோடியன் இசையிலும் இதனைக் கேட்கலாம்.

Watch Panjavarnakili | Prime Video

06  தமிழுக்கும் அமுதென்று பேர்  – பஞ்சவர்ணக்கிளி 1964 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

வளைந்து ,வளைந்து செல்லும் இந்தப்பாடலில் மேல் சொன்ன அனைத்து இசை அம்சங்களையும் நாம் கேட்கமுடியும்.

பாடலின் இடையிடையே வரும் சொற்களின் ஓசைநயத்திற்கு ஏற்பவும் இசைந்து செல்லும் அற்புதமான இசையமைப்பு இந்தப்பாடல். பாடல்வரிகளின் முடிவில் வரும்  சொற்களைக் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

உயிருக்கு நேர் ,பேர் ,நீர் , ஊர் ,வான், வேர் , பால் , வேல் , தேன் ,தோள்,வாள், தாய் , தீ போன்ற சொற்களின் ஓசைநயம் அற்புதமாக இசையமைக்கப்பட்டுள்ளது.

07 காத்திருந்த கண்களே – மோட்டார் சுந்தரப்பிள்ளை 1965- பி.பி.எஸ் + சுசீலா – Isai; விஸ்வநாதன்

காத்திருந்த கண்களே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே….இந்த இடத்தில் மிக அருமையான அலை போன்ற சங்கதி வரும்.

மைவிழி வாசல் திறந்ததிலே -ஒரு

மன்னவன் நுழைந்ததென்ன

அவன் வருகையினால் – இந்த

இதழ்களின் மேலே புன்னகை

விழைந்ததென்ன /….

மைவிழி வாசல் திறந்ததிலே -ஒரு

மன்னவன் நுழைந்ததென்ன …………………..இந்த வரிகளை இரண்டாவது முறை பாடும் போது அருமையான வளைவைக் காணமுடியும். 

ஜண்ட  [ Janta ]- Janta Swaras –   சுரங்களை இரண்டு, இரண்டாகப் பாடுதல்.[ உ + ம் : சச – ரிரி – கக- மம ..]

கர்னாடக இசையில் பயிலப்படும் ஜண்ட வரிசை அமைப்பு என்பது ஒரு சுரத்தை இரண்டு தடவை பாடும் முறையாகும்.அதுமட்டுமல்ல ஒரே சுரத்தை இருமுறைபாடினாலும் இரண்டாவது முறை பாடும் போது அதே சுரத்தை கொஞ்சம் அழுத்தம் கொடுத்தும் பாடுவர். ஜண்ட வரிசை என்பது ச ச   ரி ரி   க க   ம ம  என , இந்த அமைப்பு முறையில் வரும். முறையையும் விஸ்வநாதன்  பாடல் வரிகளாக்கி  சிறப்பாகக் கையாண்டார். அந்த வகையில் அமைந்த சில சினிமாப்பாடல்கள்.

01 உனக்கு மட்டும்  உனக்கு மட்டும்     – மணப்பந்தல்  1963 -பாடியவர்: பி.சுசீலா    – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் பல்லவி முடித்து வரும் இடையிசை அசைந்து ,அசைந்து வர

வந்து நின்றார்  வந்து நின்றார்  வாசலின் மேலே

கண்டு கொண்டேன்  கண்டு கொண்டேன் கண்களினாலே ..ஓகோ ,,ஓகோ ,, ஓகோகோ கோ ….

என்று இனிய ஹம்மிங்கைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை ” வந்து நின்றார் ” வரிகளை  மீண்டும் பாடி

பூ முடித்தேன் பூ முடித்தேன்  கூந்தலின் மேலே

போட்டு வைத்தேன் போட்டு வைத்தேன் ஆசையினாலே..ஏ ..ஏ..ஏ…

என்று இனிமையால் பாடலை உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறார் சுசீலா !

02 நாளாம் நாளாம் திருநாளாம்  – காதலிக்க நேரமில்லை 1964 -பாடியவர்: பி.பி .எஸ் + பி.சுசீலா    – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 நான் யார்  நான் யார்    – குடியிருந்த கோயில்  1967 -பாடியவர்: டி.எம்.எஸ்    – இசை :விஸ்வநாதன்

04 சொன்னது நீதானா சொல்   – நெஞ்சில் ஓர் ஆலயம்  1963 – பாடியவர்: பி.சுசீலா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

04 என்ன என்ன வார்த்தைகளோ   – வெண்ணிற ஆடை  1964 – பாடியவர்: பி.சுசீலா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

05ஓராயிரம் நாடகம் ஆடினாள் – சுமதி என் சுந்தரி 1969 – பாடியவர்: பி.சுசீலா  – இசை :விஸ்வநாதன்

மெல்ல  மெல்ல  கிள்ளி  கிள்ளி 

கை  எடுத்து  அள்ளி  அள்ளி 

காலெடுத்து  துள்ளி  துள்ளி

பாடல்களின் இடையேயும் இது போன்ற வரிகளில் கேட்க முடியும்.

04  ஸ்புரிதம்  [ Spuritham  ] – Vibration Gamagas- [அதிர்வுகளைக் கொண்ட கமகம்]

பலவிதமான இசையின் நுட்பங்களை எல்லாம் இனிதாகப் பயன்படுத்திய விஸ்வநாதன் குரல்களின் அதிர்வுகளையும் இயல்பான போக்கில் பயன்படுத்தி ஆச்சர்யப்படுத்தினார்

அதிர்வுகளைக் கொண்ட பாடல்.

01 எல்லோரும் கொண்டாடுவோம்    – பாவமன்னிப்பு  1961 -பாடியவர்: டி.எம்.எஸ்    – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

02 ஓராயிரம் நாடகம் ஆடினால்   – சுமதி  என் சுந்தரி  1971 -பாடியவர்: பி.சுசீலா   – இசை :விஸ்வநாதன்

03  சொல்லவோ  சுகமான கதை   – சிவந்தமண் 1970 – சுசீலா – இசை: விஸ்வநாதன் 

04  தேடினேன் வந்தது   – ஊட்டி வரை உறவு  1969 – சுசீலா – இசை: விஸ்வநாதன் 

05  நீராடும் கண்கள் இங்கே    – வெண்ணிற ஆடை  1969 – சுசீலா – இசை: விஸ்வநாதன் 

06  பட்டத்துராணி    – சிவந்தமண்  1970- ஈஸ்வரி  – இசை: விஸ்வநாதன் 

07 கடவுள் ஒருநாள் உலகைக் காக்க    – சாந்தி நிலையம்   1971 -பாடியவர்: பி.சுசீலா   – இசை :விஸ்வநாதன்

08  சொல்லவோ  சுகமான கதை   – சிவந்தமண் 1970 – சுசீலா – இசை: விஸ்வநாதன் 

05 சங்கதிகள் :

சங்கதி என்பது பாடல் அமைக்கப்பட்ட ராகத்தின் இனிமையை அல்லது அதில் இடபெற்றிருக்கக்கூடிய பாடல்வரிகளின்  சுவையான பகுதிகளை அல்லது அதன் பொருள் விளங்க அல்லது முக்கியத்துவத்தை திரும்ப திரும்பப் பாடி விளக்குவது.

ஹிந்துஸ்தானி  இசையில் சங்கதிகள் நிறைந்திருக்கும். அதன் வீச்சுக்களை நாம் ஹிந்தித் திரையிசைப்பாடல்களிலும் தாராளமாகக் கேட்க முடியும்.பொதுவாக மெல்லிசைமன்னர்கள் ஹிந்துஸ்தானி இசையான  ஹசல் இசை முறையின் மிகப்பெரிய ரசிகர்கள் என்பதால் அவர்களது பாடல்களில் இயல்பாகவே அவை வெளிப்பட்டுள்ளன.

1960களின் ஆரம்பம் முதல் இறுதிவரை மெல்லிசைமன்னரின் இசையை கவனித்தவர்கள் அவரது இசையில் மிக இயல்பாக இனிய சங்கதிகளை கேட்க முடியும். உதாரணமாகச் சில பாடல்கள் :

01கட்டோடு  குழல்  ஆட    – பெரிய இடத்துப் பெண்   1961 – டி.எம்.எஸ் + சுசீலா + ஈஸ்வரி  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பேசுபவது கிளியா  – பணத்தோட்டம்  1961 – டி.எம்.எஸ் + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 ஒருநாளிலே உருவானதே – சிவந்தமண் 1970 -பாடியவர்: டி .எம் .எஸ் + சுசீலா   – இசை :விஸ்வநாதன்

04நினைத்தால் சிரிப்பு வரும் – பாமா விஜயம் 1968 -பாடியவர்: பி.சுசீலா – இசை :விஸ்வநாதன்

05 கண்ணிரண்டும் மின்ன – ஆண்டவன் கட்டளை   1963 -பாடியவர்: பி.பி.எஸ் + ஈஸ்வரி  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

௦6 காத்திருந்த கண்களே – மோட்டார் சுந்தரம்பிள்ளை  1966 -பாடியவர்: பி.சுசீலா + பி.பி.எஸ் + – இசை :விஸ்வநாதன்

07 கண்ணனை நினைக்காத நாளில்லையே  – சீர்வரிசை   1974 – எஸ்.பி.பி + சுசீலா – இசை: விஸ்வநாதன்

08  வெள்ளி  கிண்ணம்தான்  – உயர்ந்த மனிதன்  1968 – டி.எம். எஸ் + சுசீலா – இசை: விஸ்வநாதன்

09 சமுத்ரா ராஜ குமாரி – எங்கள் வாத்தியார்  1979 -பாடியவர்: எஸ்.பி.பி  + வாணி  – இசை :விஸ்வநாதன்

10 பாரதி கண்ணம்மா – நினைத்தாலே இனிக்கும்   1979 -பாடியவர்: எஸ்.பி.பி  + வாணி  – இசை :விஸ்வநாதன்

06  பேச்சோசைகளுடன் இணைந்த பாடல்கள்:

பேச்சோசை போல அமைந்த பாடல்களிலும் பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்திய பாடல்களில் தடையின்றி நழுவிச் செல்லும், அதிர்வுமிக்க இனிய கமகங்களையும், சங்கதிகளையும் தந்து பாடல்களின் ஜீவனை செதுக்கிய பாடல்கள்.

01  கொடி அசைந்ததும் காற்று வந்ததா  – பார்த்தால் பசி தீரும் 1962 -பாடியவர்: டி.எம்.எஸ் +பி.சுசீலா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலின் ஆரம்பத்திலேயே ஒரு எழுத்துத்தரும் ஒலியில் மறைந்திருக்கும் உணர்வின் ஆழ வெளிப்பாடுகளை மிக இயல்பாக வெளிப்படுத்தப்படுத்திக் காட்டுகின்றார்கள்.

கொடி அசைந்ததும் ..ம்

காற்று வந்ததா ….ம்  ஹ்ம்

காற்று வந்ததும்…ஓகோ  

கொடி அசைந்ததா   

நிலவு வந்ததும்..ம் 

மலர் மலர்ந்ததா..ம்  ஹ்ம்

மலர் மலர்ந்தும் …..ம் 

நிலவு வந்ததா

இந்த வரிகள் முடிந்ததும் வரும் வயலின் இசை அலை ,அலையாக வர அதைத்தொடரும் குழல் சுழன்று அழகு காட்டும்.

03 சொன்னது நீதானா சொல் – நெஞ்சில் ஓர் ஆலயம்  1963 -பாடியவர்: பி.சுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

04 என்ன நினைத்து என்னை- நெஞ்சில் ஓர் ஆலயம்  1963 -பாடியவர்: பி.சுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

05ஆனி முத்து வாங்கி வந்தேன் – பாமா விஜயம் 1966 -பாடியவர்: பி.சுசீலா + சூலமங்கலம்+ ஈஸ்வரி  – இசை :விஸ்வநாதன்

06 சிரிப்பில் உண்டாகும் – எங்கிருந்தோ வந்தாள்  1971 -பாடியவர்: டி  எம் .எஸ் + சுசீலா   – இசை :விஸ்வநாதன்

07 ஒருநாளிலே உருவானதே – சிவந்தமண்  1970 -பாடியவர்: டி  எம் .எஸ் + சுசீலா   – இசை :விஸ்வநாதன்

08 அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே – கன்னிப்பெண்  1969-பாடியவர்: ஈஸ்வரி  + சுசீலா   – இசை :விஸ்வநாதன்

09 அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு – ராமன் எத்தனை ராமனடி 1970 -பாடியவர்: டி  எம் .எஸ்   – இசை :விஸ்வநாதன்

10 காற்று வாங்கப்போனேன்- கலங்கரை விளக்கம் 1965 -பாடியவர்: டி.எம்.எஸ் – இசை :விஸ்வநாதன்.

தங்களது பாடல்களில் எத்தனையோ விதமான ஓசைநயங்களையும் ,சத்தங்களையும் பயன்படுத்திய மெல்லிசைமன்னர் காதோடு ரகசியம் பேசுவது போன்ற மிக மென்மையான ஆசைகளையும் பயன்படுத்தி பாடல்களைத் தரத் தவறவில்லை.

மென்மையான , ரகசியம் பேசுவது  போலமைந்த  பாடல்கள்.

01  இதுவரை நீங்கள் பார்த்த பார்வை   – பணக்காரக்குடும்பம் 1963- டி.எம்.எஸ் + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி  

02  அனுபவம் புதுமை    – காதலிக்க நேரமில்லை  1964 – பி.பி.எஸ் + சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி  

03  ரகசியம் ரகசியம் பரம ரகசியம்  – பெரிய இடத்துப்பெண்  1963 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி  

04  லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்     – அன்பே வா  1967- சுசீலா   – இசை: விஸ்வநாதன் 

05  உன்னை ஒன்று கேட்பேன் – புதிய பறவை  1963 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  அத்தை மகனே போய்வரவா  – பாதகாணிக்கை 1962 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  பாலிருக்கும் பழமிருக்கும்  – பாவமன்னிப்பு  1961 – சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  தூக்கமும் கண்களை  – ஆலயமணி  1963 – எஸ்.ஜானந்தகி  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  கண்ணன் வருவான் கதை சொல்லுவான்   – பஞ்சவர்ணக்கிளி  1965  -சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

10 பச்சைக்கிளி ஒன்று  – ராமு1966- பி.பி.எஸ்  – இசை: விஸ்வநாதன்

11  இரவினிலே என்ன நினைப்பு  – என் கடமை  1965  -சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

இனிய கமகங்கள், சங்கதிகள் , பேச்சோசைகள் என இசைக்கு அழகு சேர்க்கும் இவை போன்ற பலவற்றையும் ஒருமைப்படுத்தி பல்வேறு பாடல்களில் முயன்றதுடன் ,இசை உயிர்பெற எங்கெங்கு அவை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் மனக்கிளர்ச்சியும், மனதை மயக்கும் வகையிலமைந்த பாடல்களையும் தந்திருக்கிறார்  மெல்லிசைமன்னர்  !

1960  களில் தொடங்கி   1980கள் வரை தொடர்ந்து அவர் இசையமைத்த பாடல்களில் மட்டுமல்ல திரைப்படத்தின் முக்கிய அம்சமான பின்னணி இசையிலும் கவனம் செலுத்தினார்

[ தொடரும் ]  

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *