வானம் சிவந்த நாட்கள்
இருள் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. கம்பளை நகரிலிருந்து தலவாக் கொல்லை நகருக்கு இரவு கோச்சியில் வந்திறங்கி ஸ்டேசனில் வைத்தே முகத்தை அலம்பிக் கொண்டான். ஒரே இரவில் புசல்லாவையிலிருந்து நடந்து வந்து கம்பளையில் கோச்சேரி, இடையில் வருகிற தொப்பித் தோட்ட ஸ்டேசனையும், கொட்டகலை ஸ்டேசனையும் கடந்து தலவாக் கொல்லை ஸ்டேசனுக்கு வருவது பல வழிகளில் தொழிலாளருக்கு உதவியாக இருந்தது.
வந்த கையோடு காரியங்களை முடித்துக் கொண்டனர் அடுத்த நாள் காலையிலேயே புசல்லாவை தோட்டத்துக்குப் போய்விடலாம். இடையில் ஓர் இரவு தானே. பக்கத்து டீக்கடையொன்றில் தோசை சாப்பிட்டு பிளேன் டீ ஒரு கப் குடித்தான். கடையில் தொங்கிய அன்றைய பேப்பரை வாங்கி நோட்டம் விட்டான். அவனது கவனம் முதலாம் பக்கத்தில் வெளியாகி இருந்த செய்தியில் சென்றது.
மேலோட்டமாக செய்தியை பார்வையிட்டவன் தன்னை யாரும் கவனிக்கிறார்களா வென்று சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினான்.
அப்படியாரும் அவனைக் கவனிப்பதாக இல்லை. அவர் அவருக்கு எத்தனைக் கவலைகளோ?
பத்திரிகையில் பார்வையைச் செலுத்தி செய்தியை உன்னிப்பாக உள்வாங்கத் தொடங்கினான்.
அப்படி ஒன்றும் தனக்கு தெரியாத விஷயங்களாக எதுவும் பத்திரிகையில் இல்லை தன்னுடைய தோழன் வீராசாமி போலீஸ் பாதுகாப்பிலிருக்கிறான் என்பதைத் தவிர கவனத்தை ஈர்க்கும்படியாக வேறொன்றுமில்லை.
வீராசாமி போலீசில் என்ன சொல்லி இருப்பான்? இரவு பதினொன்ரரை மணியளவில் தன்னை விட்டுப் பிரியும்போது தனக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியிருப்பானா என்று சற்றுதடுமாறினாலும், வீராசாமி அப்படி செய்யக் கூடியவனில்லை. அவன் நாணயஸ்தன், நம்பிக்கைக்குரிய தோழன். ஒரு வருட காலமாக தங்களுடைய நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த போப் துரையைப் பற்றிய சித்திரம் ஒவ்வொன்றாக வரத் தொடங்கியது. அதில் முல்லோயா கோவிந்தனைப் பற்றிய சித்திரம் முக்கியமானது.
கோவிந்தன் சுடப்பட்டு இறந்தபோது பக்கத்துத் தோட்டத்துக்கு அவனும் வீராசாமியும் தான் போய் பார்த்து வந்தனர். தம் சக தொழிலாளியின் சுக துக்கங்களைப் பற்றி அவர்களுக்கு கரிசனை இருந்தது. நம்மை முல்லோயா தொழிலாளர்களைப் போலத்தானே போப் துரை நடத்துகிறார். இதை இனியும் இப்படியே வளர விடுவதா? முல்லோயாவில் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கிளை யொன்றை ஆனைமலைத் தோட்டத்தில் ஆரம்பித்துவைத்தனர்.
அந்த நடவடிக்கைக்கு அவர்களிருவருமே முன்னின்று காரியம் ஆற்றினர். தோட்டத்தில் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதைப் பற்றி தோட்டத்துரைக்கு உத்தியோக பூர்வமான அறிவிப்பு சங்கத் தலைமையகத்திலிருந்து வந்தது தான் தாமதம், போப் பேய் பிடித்தவர் போலானார்.
இந்த ஆனைமலை தோட்டத்துக்கு நான்தான் மன்னன், எனக்குத் தெரியாமல் இங்கு தோட்டத்தில் பூவும் பிஞ்சும் கூட தோன்ற முடியாது. தோன்றினாலும் தொடர்ந்து ஜீவிக்க முடியாது என்ற எண்ணத்தில் மண் தூவப்படுகிறது என்று எண்ணி கர்ஜித்தது அவர் உள் மனம். ஹெட்கிளார்க். ஹெட்டீமேக்கர், ஹெட் கங்காணி, எஸ்டேட் டிஸ்பென்சர் என்று எல்லோரும் ஆபிசுக்கு அழைக்கப்பட்டு நிலைமையைக் கூறி விளங்கப்படுத்தினார்.
லேபர் யூனியனுக்கெதிராக தான் எடுக்க இருக்கும் நடவடிக்கைகளில் அவர்களின் பூரண ஒத்துழைப்பும் இருக்க வேண்டும், என்று போப்துரை கூறியதைக் கேட்டுக் கொண்டனர். நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஆனைமலைத் தோட்டத்தின் தேயிலைத் தொழிற்சாலை அந்த வட்டாரத்திலேயே பெயர்போன டீ பேக்டரி. தங்களுடைய ஸ்டோருக்குநல்ல பெயர் கிடைப்பதில் துரையைப் போலவே தொழிலாளர்களும், மகிழ்ந்திருந்தனர்.
தொழிற்சாலையின் முக்கிய வெற்றிக்கு அங்கு உற்பத்தியாகும், தேயிலைத்தூள் தான் காரணம், தேயிலைத் தூளின் தரமும் ருசியும் நிர்ணயிக்கப்படுவது அங்கிருக்கும் சல்லடைக் காம்பராவில்தான். ஸ்டோரில் வேலைசெய்வதற்கு தொழிலாளர்களைப் பார்த்து, தேர்ந்து எடுப்பார்கள்.
தொழிற்சாலையில் நிரந்தரமாக வேலை செய்பவர்களை பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம், மலையில் கவ்வாத்து வேலை செய்பவர்கள், ஸ்டோரில் வேலை செய்பவர்கள் முதல்தர தொழிலாளர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சம்பளத்தை விட மேலதிகமாக எக்ஸ்ட்ராரேட் கொடுப்பதை நிர்வாகம் அங்கீகாரம் செய்திருக்கிறது. ஆனைமலை தோட்டத்தொழிற்சாலையின் சல்லடைக்காம்பராவில் கங்காணியாக பொறுப்புடன் வேலைப்பார்த்த வீராசாமி ரோதைக் காம்பராவுக்கு மாற்றப்பட்டான். மாற்றலுக்கான காரணத்தைக் கேட்டபோது அவன் தொழிற்சாலை வேலை நிறுத்தப்பட்டது.
மீண்டும் அவனுக்கு வேலை பெற்றுக்கொள்ள ஒரு மாதம் பிடித்தது.
அந்த ஒரு மாத காலமாக ஆபிசுக்கும், தொழிற்சாலைக்கும் நடையாக நடந்தது வேலாயுதம் தான். தானும் வீராசாமியுமாக முன்னின்று தொடங்கிய சங்கம் அழிந்து விடக் கூடாது, தங்களுடைய வீரப்பேச்சுக்கள் சந்தி சிரிக்கும் அளவுக்கு வரக்கூடாதென்பதற்காக வேலாயுதம் அதிக கவனம் காட்டினான்.
வீராசாமி தலைவர் பதவியும் வேலாயுதம் காரியதரிசி பதவியும் மெய்யன் தனாதிகாரி பதவியும் எடுத்திருந்தனர். முதல் அடி வீராசாமிக்கு விழுந்தது. போப்துரையின் காய் நகர்த்தும் தந்திரத்தில் அதிக படிக்கப்படாத வேலாயுதம் சங்கத்தின் ஆரம்பமே வீராசாமியின் வேலை நீக்கத்துக்குக் காரணமாயமைந்து விட்டதை யெண்ணி வேதனைப் பட்டான்.எப்படியும் நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தியாகவேண்டுயென்பதில் உறுதியாய் இருந்தான். பெரியதுரையை ஆபிசில் கண்டு கதைத்தான். பெரிய டீமேக்கரை ஸ்டோரில் கண்டு கதைத்தான். பெரிய கங்காணியை மலையில் வைத்து கதைத்தான், அவரது வீட்டிலும் சென்று கதைத்து ஒருவாறாக வீராசாமிக்கு வேலைப் பெற்றுக் கொடுத்தான்.
வீராசாமிக்கு மீண்டும் தொழிற்சாலை வேலை கிடைத்தது. வேலை கிடைத்த அன்று சாயந்திரம் தானும் வீராசாமியும் சந்தோஷமிகுதியால் கள்ளு அருந்தி மகிழ்ந்தது வேலாயுதத்துக்கு நினைவுக்கு வந்தது. அன்று தான் தங்களுக்குள் ஓர் முடிவை செய்திருந்தனர்.
அதன்பிறகுதான் சங்கடங்கள் தொடர ஆரம்பித்தன. போப் துரையின் கவனம் வேலாயுதத்தின்மீது விழ ஆரம்பித்தது.
வீராசாமியை செயல்படத்தூண்டிய கனல் வேலாயுதன் தான் என்பதை இனம் கண்டு கொண்ட துரை, வெளியில் காட்டிக் கொள்ளாது செயல்பட ஆரம்பித்தார்.
தொழிற்சாலையில் இயந்திரங்களின் ஓலம் எந்த நேரத்திலும் கேட்கும். அதையும் மீறிய சப்தத்தில் வேலாயுதம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் என்ற குற்றம்சாட்டி ஹெட் டீ மேக்கர் செய்த பிராதின் மீது அவனது தொழிற்சாலை வேலைக்கு முடிவு கட்டப்பட்டது.
வீராசாமியின் வேலை நிற்பாட்டபட்ட போது, துரை, கங்காணி, கிளாக்கர் என்று அலைந்ததைப் போல இம்முறை அலைவதற்கு வேலாயுதம் மறுத்து விட்டான். சூடு கண்ட பூனையாக அவன் மாறியிருந்தான், தன்னுடைய பொட்டனி வியாபாரத்தை நடத்த ஆரம்பித்துவிட்டான். தொழிலாளர்களின் ஆதரவுடன், பக்கத்து தோட்ட மக்களும் ஆதரவு காட்டினார்கள். அவனது ஜீவியம் ஒருவாறு ஓடத் தொடங்கியது. தங்களின் கைங்கரியம் பூரண வெற்றி அடையவில்லை என்பதில் கவலைப்பட்ட ம மேக்கர் காத்துக்கிடந்தார்.
முல்லோயாவில் நடந்ததை யாரும் மறக்கவில்லை. கூச்சல். குழப்பம், கோஷம் போன்றவற்றிற்கு எதிராக அவர்களிடம் எதிர்நடவடிக்கைஎதுவுமில்லை…. நூறு மீட்டருக்கு அப்பாலிருந்து தொழிலாளர்கள் என்ன கத்தினாலும், கூச்சலிட்டாலும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது.
கல் எறிதல், வன்முறைப்பேச்சுக்கள் எல்லாம் தாண்டி உடலுக்கும் உடைமைக்கும் சேதம் உண்டாகலாம் என்று சந்தேகம் எழுந்தால் மட்டுமே கண்களைத்திறப்பார்கள்.. அங்கும் இங்கும் ஓடுவார்கள்… தடி எடுப்பார்கள் அடிப்பதற்குத் தயங்குவார்கள்.
கதிர்காமம் போய் கந்தனை வழிபட்டு வந்தால் தனக்கு வந்த சிரமம் குறையலாம் என்று அவன் மனம் பேசியது. ஏதோ ஒரு வழியில் அவன் ஆறுதலைத் தேடினான்.
அவனும், அவனது வயது வந்த தாயாரும், தோழன் வீராசாமியும் தன் உறவினர்கள் சிலரும் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்று மொத்தமாக பத்துபேர்கள் கதிர்காமம் போய் வரத்தீர்மானிக்கப்பட்டது.
புசல்லாவையிலிருந்து நுவரெலியா வழியாக அப்புத்தனைப் பாதையில் கதிர்காமத்துக்குப் போவதற்கு வேன் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டார்கள்.
அதிகாலை நேரத்தில் அரோஹரா என்ற சத்தத்துடன் அவர்கள் புனித பயணம் புறப்பட்டது.
தொடர்ந்து வரும் தொல்லை தீர்வதற்கு கதிர்காமக்கந்தன் உதவுவார் என்ற நம்பிக்கை அவனிடத்தில் வேர் விட்டிருந்தது. கண்டிச்சீமைக்கு வந்த தமிழ் மக்கள் கதிர்காம கடவுளிடம் நம்பிக்கை வைத்து தமது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டதை வரலாறு கூறி நிற்கிறது.
‘துட்ட கைமுனு என்ற வீரம்சம்’ பொருந்திய சிங்கள மன்னன் தானும், எல்லாளனுடன் போர் புரிவதற்கு முன்னம் கதிர்காமக் கந்தனிடம் தான் தாள் பணிந்தான்!
கண்டி நகரத்திலிருந்து இலங்கையை ஆண்ட கடைசி மன்னன் விக்ரம ராஜசிங்கன் தனது ஆட்சியை நீடிக்க கதிர்காமக்கந்தனிடம் தான் வேண்டினான்.ஒவ்வொரு குடும்பமும் கடன் பட்டேனும் கதிர்காமம் செல்வதை ஆண்டுதோறும் ஒரு கடமையாக நிறைவேற்றினர். காட்டின் நடுவிலமைந்திருக்கும் கதிர்காமக் கந்தனின் நினைவு வந்தவுடனேயே குடும்பத்தினர் அனைவரும் விரதமிருந்து கந்தனின் அருள் வேண்டி வருந்துவதும், குடும்பத்தில் ஒருவருக்கொருவர் தமக்குள்ள உறவுமுறை மறந்து சாமி என்று தங்களுக்குள்ளாகவே அழைத்துக்கொள்வதும் அந்த மக்களிடையே ஒருசம்பிரதாயமாகவே ஆகிவிட்டிருக்கிறது.
தங்களுடைய மனப்பூர்வமான வேண்டுதலை முடித்துக் கொண்டு பக்தி பூர்வமாக அவனது குடும்பம் இரண்டு நாட்கழித்து தேட்டத்துக்குத் திரும்பியது. வழியெங்கும் அரோகரா சத்தமும், கதிர்காமக் கந்தனுக்கு அரோகரா என்ற ஓசையும் கேட்போர் மனதில் கிளர்ச்சி ஊட்டிக் கொண்டிருந்தன.
அவர்கள் கதிர்காமம் போய் வந்த வேன், இரண்டு நாள் பயணத்தின் பின்னர், இருநூற்று ஐம்பது மைல் பிரயாணத்தின் பிறகு, தோட்டத்துக்கு வந்த போது மாலைமணி நான்காகியிருந்தது. தேயிலைத் தொழிற்சாலையைத் தாண்டி வேலாயுதத்தின் லயக்காம்பரா அமைந்திருந்தது.
அந்த வழி, காவற்காரன் ஒருவனால் தடை செய்யப்பட்டது. தோட்டத்துரையின் அனுமதியின்றி அவ்வழியால் யாரும் வேனில் போக முடியாது என்று காவற்காரன் கூறினான்.
கேட்டிருந்த வேலாயுதத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நாங்கள் என்ன தோட்டத்தை கொள்ளையிடவா போகிறோம்.
‘ஆண்டவன் சந்நிதானத்தில் இருந்து வரும் அபலை ஒருவனின் மனம் என்ன பாடுபடும்.’
இருநூற்றைம்பது மைல் தூரத்தைக் கடந்து, களைப்புடன் வீடு வரும் அவர்களை உள்ளேச் செல்ல அனுமதிக்காத துரையின் கல் நெஞ்சம் அவனுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.’தனது வயது முதிர்ந்த தாயாரை தளர்ந்த நடையுடன் கீழிறக்கி நடக்க வைக்க வேண்டுமா?.’
யோசிக்க நேரமில்லை. லயத்துக்குச் சென்று விட்டு வருபவதாகக் கூறி காவல்காரனின் அனுமதியைப் பெறாமலேயே வேனை உள்ளே எடுத்துச் சென்றான்.
தனது தோட்டத்தில் தன்னுடைய கட்டளைகள் மீறப்படுகின்றன என்றுபோப் கூப்பாடு போட்டார்.
வேலாயுதத்துக்கும் போப் துரைக்கும் போராட்டம் தொடங்கியது. அது இன்று பூரண சந்திர ஒளியில் போப்துரையைக் கொலை செய்யுமளவுக்கு விரிவடைத்திருக்கிறது என்று வேலாயுதம் நடந்த சம்பவங்களை தனக்குள்ளாக நினைத்துப் பார்க்கத் தொடங்கினான்.
தொடரும்.