இயற்கை – நிலம் – இசை : – T.சௌந்தர்
ஓர் அறிமுகம்.
எல்லாக்கலைகளுக்கும் உந்துசக்தியாக இருக்கும் இயற்கை, நிலம் கலைகளில் எங்ஙனம் வெளிப்பட்டிருக்கிறது என்பதையும், முக்கியமாக அவற்றுடன் இசைக்கலைக்கும் இயற்கை – நிலம் போன்றவற்றிற்கும் உள்ள வினோதமான பிணைப்பு எந்தவகையில் உலகெங்கும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும், நான் அறிந்த வரையில் ஓரளவு விளக்க முனையும் தொடர் கட்டுரை இதுவாகும்.
பலதரப்பட்ட இசைவகைகளைக் கேட்ட அனுபவமும், அவை பற்றி அங்கங்கே என் கண்களுக்கு எட்டிய, படித்த , கேட்ட எண்ணற்ற தகவல்களையும் வரிசையாக கோர்த்து எழுத முனைந்ததன் விளைவே இக்கட்டுரைகள்.
இயற்கை, நிலம் , இசை என்று இத்தொடரின் தலைப்பு இருப்பினும் முன்பகுதிகளில் பொதுவாக எல்லாக் கலைகளைப் பற்றியும் மேலோட்டமாகச் சொல்லி, பிரதானமாக இசையை முதன்மைப்படுத்தியே எழுதியுள்ளேன்.
இந்த பின்னணியில் இயற்கைக்கும், நிலத்திற்கும் [ திணை ] இசைக்கும் உள்ள பரந்துபட்ட தொடர்பை பாட்டு வடிவமான தமிழ் இலக்கியமரபில் இசை தொடங்கி, பழங்கால கிரேக்கர், அரேபியர்களுடனான இசைத்தொடர்புகள், மத்திய ஆசியா இசை, நாடோடிகள் இசை அதில் தமிழ் இசையின் செல்வாக்கு, மத்திய கால ஐரோப்பிய மரபில் உதித்த தேசிய எழுச்சி, அதில் உருவான மேலைத்தேய செவ்வியல் இசையான சிம்பொனி [ Symphony ] இசையில் இயற்கை பற்றிய இசை வெளிப்பாடு, பின்வந்த ஐரோப்பிய, அமெரிக்க சினிமா, மற்றும் இந்திய, தமிழ் சினிமாக்கள் எவ்விதம் இயற்கையை இசையில் பிரதிபலித்துள்ளன என்பதை விளக்க முனையும் கட்டுரைகளாக எழுதியுள்ளேன்.
T.சௌந்தர்