இயற்கை – நிலம் – இசை : தொடர் 09 – T.சௌந்தர்

கிரேக்கர்களும் இந்தியர்களும்

பண்டமாற்று பொருட்களும் அதனுடன் கலந்தினித்த யாழ் இசைக்கருவியும்:

பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றை கொடுத்தும், பெற்றும் சென்றுள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் ஆராய்ந்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே நாகரீகத்தால் வளர்ந்த ஒன்றல்ல.

நிலம் – இசை குறித்து இந்திய இசைமரபுக்கும் , கிரேக்க இசைமரபுக்கும் நிறைய தொடர்புகள் இருப்பதை அவர்களின் வியாரத் தொடர்புகளும், அதன் உபவிளைவாக ஏற்பட்ட கலாச்சார பரிமாற்றமும் மெய்ப்பிக்கின்றன.

கிரேக்கர்களும், இந்தியர்களுக்கும் இடையேயான தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விட்டது. கிரேக்கர்கள் தங்களை Ianoes என்று அழைத்தனர். தமிழர்கள் யவ்வனர் என்றனர். கிரேக்கர்களைக் குறிக்கும் இந்தச் சொல் ரோமர் மற்றும் பிற நாட்டவரையும் அழைக்கப் பயன்படுத்தினர் என்பதையும் காண்கிறோம்.

“கி.மு 3ம், 2ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவின் அரசியல் வரலாற்றில் பல முக்கிய நிகழ்சசிகள் நடைபெற்றன. முதல் பெரிய அரசுகள் உருவாகி வலுப்பெற்று மேலாண்மைக்காகப் போராடிய காலப்பகுதி இது .

இக்காலத்தில் வளர்ச்சி பெற்ற மகத நாடு [ இன்றைய பீகார் ] கிரேக்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டதாக கிரேக்க குறிப்புகளிலிருந்து என்று அறியமுடிகிறது. அலெக்சாந்தர் படையெடுப்பு தொன்மைக்கால வரலாற்றின் மிக துலக்கமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இந்தப் படையெடுப்பு தொன்மைக் கால இந்தியாவின் பண்பாடு, வர்த்தக உறவுகள் கணிசமாக விரிவடையவவும் வலுப்படவும் உதவியது. இந்தியாவும் கிரேக்க உலகின் மீது மேலும் செல்வாக்கு செலுத்தலாயிற்று “. [ இந்தியாவின் வரலாறு ]

கி.மு.200 இல் அலெக்சாந்தருடன் வந்த கிரேக்க [ யவனர்கள் ] படைகள் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரத்தில் [ இன்றைய ஆப்கானிஸ்தான் ] நிரந்தரமாக வாழ்ந்ததாக அசோகன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்த கிரேக்க மக்களின் பொருட்டாகவே அசோகன் கிரேக்க மொழியிலும், “ கம்போஜர்கள் “ என்றழைக்கப்பட்ட ஈரானியர்களுக்காக “அரமேயம்” என்ற மொழியில் ஈரானிய சொற்கள் கலந்த கல்வெட்டுக்களை பொறித்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அலெக்ஸ்சாண்டர் , சிந்துநதியை அண்டிய உள்ள பகுதிகளை வென்ற போது, மயூர அரசர்களுடன் தொடர்பு ஏற்பட்டதுடன், அங்கே கிரேக்க பிரதிநியாக மெகதனீஸ் [ Megasthenes ], டெமாசெஸ் [ Deimachus ] போன்றோர் சில காலம் பாடலிபுத்திராவில் வாழ்ந்ததாகவும் வரலாற்றுக்கு குறிப்புகள் கூறுகின்றன.இந்தியாவுக்கு அப்பால் வேறு நாடுகள் இல்லை என்ற நம்பிக்கை கிரேக்கர்களிடம் அன்று இருந்ததால் இந்தியாவுடனான போரை அலெக்சாண்டார் நிறுத்திக்கொண்டான்

இந்த தொடர்புகளால் கலாச்சார பரிவர்த்தனைகள் நிகழ்ந்த குறிப்புகளையும் நாம் அறிகிறோம். கிரேக்க எழுத்தரான மெகதனீஸ் எழுதிய இந்தியா பற்றிய செய்திகள் இண்டிகா [ Indika ] என்ற புகழ் பெற்ற நூலாக பின்னாளில் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரானியர்கள் சிந்துப்பகுதியை ” இந்து ” என்று அழைத்ததை கிரேக்கர்கள் “இண்டிகா” என தமது நூலில் குறித்தார்கள்.

வட இந்தியாவுக்கு அலெக்சாண்டர் வருவதற்கு முன் பண்டைக்காலத்தில் நீண்ட நெடுங்காலமாக வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய தென்னிந்திய, குறிப்பாக தமிழ் நாட்டுடன் தொடர்புகள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் பல கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் கி.மு.900 ஆண்டுகள் என கூறுகின்றன.

பழங்காலத்து துறைமுகமான கொற்கை நகரத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்த பொருட்களின் காலம் கி.மு.900 ஆண்டைச் சேர்ந்தவை எனக் கணிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் ரோம, கிரேக்க நாட்டு பொருட்கள்,நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல , ஐரோப்பாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த துறைமுகங்களில் எல்லாம் மிகச் சிறந்த – கிரேக்கர்களுக்குப் பழக்கப்பட்ட – துறைமுகம் தாமிரபரணியின் கழிமுகப் பகுதியிலுள்ள கொற்கை (கொல்கை) துறைமுகமாகும்.

உலகத்தின் பழைய எழுத்து வடிவக் குறிப்புகளிலுள்ள மிகப் பழைமையான தமிழ்ச் சொல் மயிலின் பெயராகும். இது ஹீப்ரு அரசு பாடபுத்தகங்களிலும் வரலாறுகளிலும் (சுமார் கி.மு. 1000 இல்) ஒபிரிலிருந்து பெனிஷியர்கள் தங்கள் பெரிய வியாபாரக் கப்பற் கூட்டத்தின் ஒரு பகுதியாகிய சாலமோனுடைய கப்பல்களில் கொண்டுவரப்பட்டது என்றுள்ளது. வியாபாரப் பொருள்களின் பட்டியலிலும் காணப்படுகிறது.

ஹீப்ரு மொழியிலுள்ள தூக் என்ற சொல், தமிழ்த் தோகை என்ற சொல்லிலிருந்து வந்தது. கிரேக்க மொழியிலுள்ள மிகப் பழைமையான தமிழ்ச் சொல் கருவப்பட்டையின் பெயராகும். இது சுமார் கி.மு.400இல் பெர்ஷியர்களிடமிருந்து எடிசியாஸ் என்பவனால் அறியப்பட்டது. இது கார்பியன் என்பதன் பகுதியான கார்பி தமிழ் மற்றும் மலையாளத்தில் கறிப்பு, பருப்பு, அல்லது கருவ என்ற கருவப் பட்டையின் பொதுப் பெயரோடு இணைந்திருக்கிறது என்பதில் ஐய மில்லை. என எழுதுகிறார் காட்வெல் [திருநெல்வேலி சரித்திரம்: கால்டுவெல் ]

.

It is said that the language of the Mountaineers of Raja Mahal abound in terms identified with Tamil and Telugu. What is the more singular, the name by which the ivory, apes, and the peacocks conveyed by Solomon’s ships of Tarshish were known, are the same with those still used in Tamil; seeming to imply that the traders visited Ceylon or India and obtained with these novelties there Tamil names, Danta, Kapi, and Togai, as found in the Hebrew Bible. [ Preface to Winslow’s Dictionary ]

” ராஜாமஹால் மேலைத்தேவாசிகள் பாஷையில், தமிழ் தெலுங்கு மொழிகள் ஏராளமாய் இருக்கின்றனவென்று சொல்லப்படுகிறது. சாலமோனுடைய தர்சீஸின் கப்பல்கள் கொண்டு போன தந்தம், குரங்கு, மயில் முதலானவைகளின் பெயர்களைக் கவனிக்கையில், அவைகள் தற்காலத்திலும் தமிழ் பாஷையில் வழங்கிவருகின்ற பெயர்களென்றும் அந்நிய தேசத்திலிருந்து வியாபாரிகள் இலங்கை , இந்தியா முதலிய இடங்களுக்கு வந்திருக்கிறார்களென்றும், அப்பொருள்களோடு எபிரேய பைபிளில் காணப்படும் தந்தம், கபி, தோகை என்னும் அவைகளின் தமிழ் பெயர்களையும் கேட்டறிந்து கொண்டு போனார்களென்றும் தெரியவருகிறது. “

மேற்கண்ட குறிப்பை தனது நூலில் தந்துவிட்டு ஆபிரகாம் பண்டிதர் பின்வருமாறு எழுதுகின்றார்.

மேற்காட்டியபடி இந்தியாவில் வியாபாரம் செய்த காலம் கிறிஸ்துவுக்கு சற்றேறக்குறைய 1000வருஷங்களுக்கு முற்பட்டது. சுமார் 3000வருஷங்களுக்கு முன் தென்னிந்தியாவிற்கு வியாபாரம் மூலமாய் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியாவுக்கு மாத்திரம் உரியதான வியாபரச் சரக்குகளின் பெயர்களைத் தமிழிலேயே சொல்லி வந்திருக்க வேண்டும். [ Karnamrita Sagaram – Volume 2. Page 163 ]

கிரேக்கர்களும் ,இந்தியர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருந்ததை தமிழக வரலாற்று குறிப்புகளிலிருந்தும் அறிகிறோம். குறிப்பாக சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழ் நூல்கள் அதற்கான குறிப்புகளைத் தருகின்றன.

“வன் சொல் யவனர் வளநாடாண்டு ” – சிலப்பதிகாரம் – நாடுகற்கதை [ 141]

“வன் சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்

தென்குமரி யாண்ட செருவிற் கயர்ப்புலியான் –

சிலப்பதிகாரம் – வாழ்த்துக்காதை – ஊசல்வரி [ 25 – 26 ]

யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்

பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்

ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து

அங்கிளை தொழுகுமதி யோங்குவாண் மாற –

[மதுரைக்கணக்காயர் மகனார் நக்கீரன் பாண்டியனை பாடிய பாடல் ]

கிரேக்கத்திலிருந்து கொடி முந்திரி சாறில் ஆக்கப்பட்ட நறுமணம் மிக்க மது கொண்டுவரப்பட்டதாகப் பாடல் கூறுகிறது. அதுமட்டுமல்ல யவனர்கள் அழகிய மரக்கலங்களில் முசிறி துறைமுகத்தில் பொன்னைக் கொண்டு வந்து பண்டமாற்றாக மிளகு மற்றும் பொருட்களை கொண்டு சென்றனர் என்பதை பின்வரும் அகநானூறு பாடல் கூறுகிறது.

கள்ளியம் பெரியாற்று வெண்ணுரை கலங்க

யவனர் தந்த வினைமாணன் கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி ..” அகநானூறு 149

A Comparative Grammar of the Dravidian or South – Indian Family of languages என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய Robert Caldwell , தனது இன்னொரு நூலான ” திருநெல்வேலி சரித்திரம் ” என்ற நூலில் பண்டைக்காலத்து தமிழகம் மற்றும் கிரேக்கம் பற்றிய பல அரிய செய்திகளைக் குறிப்பிடுகின்றார். அதில் முக்கியமாக தமிழ்நாடு பற்றிய வெளிநாட்டவர் பார்வை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய சில செய்திகளும் நம் கவனத்திற்குள்ளாகின்றன. காட்வெல் எழுதிய திருநெல்வேலி சரித்திலிருந்து முக்கிய பகுதிகளைக் கீழே தருகிறேன்.

மொதெளரா [ மதுரை ]

//..மெகஸ்தனிஸின் இந்திய மக்களைப் பற்றிய புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை ஒட்டி பிளினி, பாண்டிய என்ற ஓர் இனத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இவர் கூறும் பாண்டியர்கள் எங்கிருந்தார்கள் என்று குறிப்பிடாவிட்டாலும் அவர்கள் மேற்கண்டபாண்டியர்களே என்பதில் ஐயமில்லை. இந்திய மக்களில் பாண்டியர்கள் மட்டுமே பெண்டிரால் ஆளப்பட்டு வந்தனர் என்று அவர் கூறுகிறார். இதுவரை அது உண்மையன்று என்பது தெரிகிறது. அது மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்குப் பொருந்துமானால் மலையாளக் கடற்கரையிலுள்ள விந்தையான சமூக வழக்கங்களுக்கும் பொருந்தும். ஏனெனில். அங்கு ஒவ்வொரு மரபினரின் சொத்தும் பெண் வழியின் ஆட்சியிலே இருந்து வருகிறது. மெகஸ்தனிஸ் காலத்தில் இல்லாவிட்டாலும் பிளினி காலத்திலேனும் மதுரைப் பாண்டியர்கள் இப்பகுதியிலே குடியேற்ற நாடுகளைப் பெற்றிருந்தார்கள். மத்தியதரை வாணிபசாலையான மதுரா [ Mediterranean emporium of Mudora ] – நெடுந்துரத்தில் மேற்குக் கடற்கரையின் ஒரு பகுதி அவர் காலத்தில் – அதாவது கி.பி. 77ல் பாண்டியன் (Pandion) என்ற அரசனது ஆட்சிக்குட்பட்டிருந்த்து என்று பிளினி விளக்கமாகக் கூறுகிறார். எனினும், இந்தப் பெயரும் அப்பகுதியின் அருகிலுள்ள மற்ற

பெயர்களும் தமக்குப் புதியனவாய் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.// – [Page 24]

பாண்டியர்களின் அரசனாகிய பாண்டியன் (Pandiyan); தமிழில் பாண்டியன் என்று வழங்கப்பட்ட அரசனே என்று நான் எண்ணுகிறேன். அரசியல் தூதரின் பழைய விவரங்கள் கி.பி.20ல் ஸ்டிராபோ (Strabo) என்பவரால் தரப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வரசியல் தூதரைப்பற்றி எழுதும் கிரேக்கர் தவிர யார் அந்த இந்தியன் என்னும் விவரத்தைத் தெரிவிக்கவில்லை. பாண்டிய அரசனிடமிருந்து அரசியல் தூதர் வந்தனர் – அல்லது மற்றவர்கள் கூறுவதுபோல (இவர்கள் கருத்து ஸ்டிராபோவுக்கு உடன்பாடல்ல என்பது வெளிப்படை) போரசிடம் வந்தனர் என்று ஸ்டிராபோ கூறுகிறார். ‘மற்றவர்கள் என்று ஸ்டிராபோவால் குறிப்பிடப்பட்டவருள் ஒருவர் நிகோலஸ் டமாஸெனஸ் (Nicolaus Damascenus) தூதர்களை நேரிலே தாமே பார்த்ததைக் கூறியுள்ளார்.

Georgius Syncellus என்பவரால் எழுதப்பட்ட புத்தகங்களில் அவர் ‘நூற்றெண்பத்தைந்தாவது ஒலிம்பிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார். [ Page 25 ]

“இந்தியர்களின் அரசனாகிய பாண்டியன் அகஸ்தஸிடம் அவனுக்கு நண்பனும் கூட்டாளியும் ஆவதற்கு விரும்பி அரச தூதரை அனுப்பினான் “ என்னும் இந்தச் செய்தியானது பாண்டியர்களுடைய சமுதாய அரசியல் முன்னேற்றத்தையும் அது அடைந்திருந்த உன்னத நிலையையும் காட்டுகிறது. சிறப்பாக இது கொற்கையிலும் முத்துக்குளித்தல் சம்பந்தமாக மலையாளக் கடற்கரையில் நடைபெற்ற அயல்நாட்டு வாணிகத் தொடர்பையும் விளக்க வல்ல சான்றாயுள்ளது. அலெக்சாண்டரின் வழி வந்தோருக்கும் வடஇந்திய அரசர்களுக்குமிடையே நிலைத்திருந்த அரசியல் உறவானது முடிந்தபின் ஐரோப்பியர்களுடைய கூட்டுறவின் பயன்களை உணர்ந்தவர்கள் இந்திய இளவரசர்களாகிய பாண்டியர்களே ஆவார்கள். [ Page 26 ]

கொற்கையைப் பற்றிக் கிரேக்கர்கள் கூறும் செய்திகள் நம் நாட்டு எழுத்தாளர்கள் வணிகர்கள் முதலியவர்களிடமிருந்து தெரிவதை விட மிகுதியாகக் கொற்கையைப் பற்றிய செய்திகள் கிரேக்கர்களிடமிருந்து கிடைக்கின்றன. சுமார் கி.பி.80ல் இந்தியாவிற்கு வந்த கிரேக்க அறிஞனும், எரித்திரேயன் அல்லது செங்கடலைச் சுற்றி மரக்கலத்தில் வந்தவனுமாகிய (இதனால் செங்கடலின் வாயிலிருந்து வங்காளக் குடாக்கடல் வரையுள்ள அரபிக்கடல் முழுவதும் தெரிய வந்தது) பெரிப்புளுஸ் மாரிஸ் எரித்தரேஸ் (Periplus Maris Eric Thrace) என்பவர் கொற்கையைப் பற்றி எழுதியுள்ளார்./// …

// கிரேக்கர்கள் கண்ட பாண்டியர்கள்: //…. பாண்டிய அரசர்கள் கிரேக்கர்களால் பாண்ட்யன் என்று வழங்கப்பட்டார்கள் என்பதை முன்பே கூறியுள்ளேன். அவர்கள் மக்களையும் பாண்ட்யன்கள் என்று வழங்கினார்கள். அரசனது பெயராலேயே மக்களும் வழங்கப்பட்டமையால் இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளது சரியானதே. அரசன் பாண்டியன் என்றும் மக்கள் பாண்டியர்கள் என்றும் வழங்கப்பட்டார்கள். மதுரையை “ மொதெளரா ” என்றும் அரசகம் வீரபாண்டியன் நகரம், பஸிலியன் பாண்ட்யன்ஸ் என்றும் தாலமி குறிப்பிட்டிருக்கிறார். பிளினி மதுரையை மொதுரா என்று குறிப்பிடுகிறார். வடமேற்கு இந்தியாவில் கண்ணன் பிறந்த இடமாகிய மதுராவினின்றும் பிரித்துக் காட்டுவதற்காக மதுரையைத் தென்மதுரை என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள். கிரேக்கர்கள் இதை மெதேரா என்றும், தாலமி கடவுளரின் மெதெளரா என்றும் நாகரிக ஆங்கிலத்தில் முத்ரா என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.// …

// அரிசியின் கிரேக்கச் சொல்லாகிய ‘ஒரிஸா’ முதன்முதல் அரிசி ஐரோப்பாவில் பழக்கத்திற்கு வந்தபோது ஏற்பட்டது. தவிடு நீங்கிய நெல்லுக்கு இங்கே அரிசி என்ற பெயரும் உள்ளது என்பதை ஐயப்படலாகாது. இக்காலம் போலவே முன்பும் அரிசி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஐரோப்பாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுவந்த துறைமுகங்களில் எல்லாம் மிகச் சிறந்த – கிரேக்கர்களுக்குப் பழக்கப்பட்ட – துறைமுகம் தாமிரபரணியின் கழிமுகப் பகுதியிலுள்ள கொற்கை (கொல்கை) துறைமுகமாகும்.

கிரேக்கர்களுக்கு முன் இந்தியாவின் வியாபாரம் பெனிஷியர்களிடமும் பெர்ஷியர்களிடமும் இருந்தது. உலகத்திலும் பழைய எழுத்து வடிவானக் குறிப்புகளிலுள்ள மிகப் பழைமையான தமிழ்ச் சொல் மயிலின் பெயராகும். இது ஹீப்ரு அரசு பாடபுத்தகங்களிலும் வரலாறுகளிலும் (சுமார் கி.மு. 1000 இல்) ஒபிரிலிருந்து பெனிஷியர்கள் தங்கள் பெரிய வியாபாரக் கப்பற் கூட்டத்தின் ஒரு பகுதியாகிய சாலமோனுடைய கப்பல்களில் கொண்டுவரப்பட்டது என்றுள்ளது. வியாபாரப் பொருள்களின் பட்டியலிலும் காணப்படுகிறது. ஹீப்ருவிலுள்ள தூக் என்ற சொல், தமிழ்த் தோகை என்ற சொல்லிலிருந்து வந்தது. கிரேக்க மொழியிலுள்ள மிகப் பழைமையான தமிழ்ச் சொல் கருவப்பட்டையின் பெயராகும். இது சுமார் கி.மு.400இல் பெர்ஷியர்களிடமிருந்து எடிசியாஸ் என்பவனால் அறியப்பட்டது. இது கார்பியன் என்பதன் பகுதியான கார்பி தமிழ் மலையாளத்தில் கறிப்பு, பருப்பு, அல்லது கருவ என்ற கருவப் பட்டையின் பொதுப் பெயரோடு இணைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை..// — [திருநெல்வேலி சரித்திரம்: கால்டுவெல் ] ** //

இதுமட்டுமல்ல ஆய்வாளர், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தந்து நூல் ஒன்றில் பின்வருமாறு எழுதுகிறார்.

// “ தமக்குச் சொந்தமான மரக்கலங்களைப் பயன்படுத்தி, தமிழ் நட்டு வணிகர்கள் கிழக்குக் கடற்கரையோரமாக ஆந்திரத்திற்கும் கலிங்கத்திற்கும் [ இன்றைய ஒரிசா ], கங்கைக்கரைக்கும், மற்றும் அருகிலுள்ள இலங்கைக்கும் சென்று வாணிபம் புரிந்து திரும்பினர்; மேற்கு கரையோரமாகவும் பல இடங்களுக்கும் சென்றனர்; பெரிய மரக்கலன்களின் மூலம் பெருங்கடல்மேல் பிற நாடுகளுக்கும் சென்று வந்தனர். அதேபோல் பிற நாட்டு வணிகர்களும் தமிழ் நாட்டுக்கு கப்பல்களின் மூலம் வந்து, தமது பொருள்களையும் பொன்னையும் கொடுத்து, இங்கு கிடைத்த பொருள்களை வாங்கிச் சென்றனர். இவ்வாறு தமிழ்நாட்டுக்கு வந்த பிற நாட்டு வணிகர்களில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் அரேபியர்களும் பிறரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ரோமானியர்களும் கிரேக்கர்களும் பொதுவாக யவனர் எனக் குறிப்பிடப்பட்டனர். இந்த யவனர்கள் தம் நாட்டுப் பொருட்களோடு பொன்னையும் அதிகமாக் கொண்டு வந்தனர். மேலும் கி.பி. 45 இல் ஹிப்பாலஸ் என்ற கப்பல் தலைவன் ஒருவன் இந்துமாக்கடலின் வழியாக வீசும் பருவக்காற்றுகளைக் கண்டு பிடித்து கூறினான்; இதனால் முசிறித் துறைமுகத்தை நாற்பது நாட்களில் வந்தடைந்து விடலாம் என்று யவ்வனர்கள் கண்டு கொண்டனர். இதனால் அந்தப் பருவ காலத்தில் அவர்களது கப்பல்கள் வருவதும் அதிகரித்தது. யவ்வனர் பொன்னைக் கொண்டு வந்ததை பற்றிய இலக்கியச் சான்றுகள் நமக்கு கிட்டுகின்றன.” // [ History of Tamil Language and Literature – S.Vaiyapuri Pillai – Page 17 ] ..// வையாபுரிப்பிள்ளை .

யவனர்கள் கப்பல்கள் பொன்னைக் கொண்டு கொடுத்துவிட்டு, மிளகைப் பதிலுக்கு எடுத்துச் சென்றன என்று பின்வரும் அகநானூறு பாடல் கூறுகிறது.

யவனர் தந்த வினைமான் நன்கலம்

பெண்ணோடு வந்து கறியோடு பெயரும்

வான்கெழு முசுறி – [ பாடல் – 149 ]

முசிறி துறைமுகத்தில் மிளகு மூட்டைகளைத் தோணிகளில் ஏற்றுக் கொண்டு சென்று, கடலில் நிற்கும் யவனக் கப்பல்களில் ஏற்றி விட்டு, அதற்குப் பதிலாக அந்தக் கப்பல் வணிகர்கள் கொடுக்கும் பொன்னைத் தாம் ஓட்டிச் சென்ற தோணிகளில் கரைக்கு கொண்டு வந்தனர் என்பதை புறநானூறு இவ்வாறு கூறும்:

மனைக்கு குவைஇய கறி மூடையால்

கலிச் சும்மைய கரை கலக் குறுந்து

காலம் தந்த பொற் பரிசம்

கழித்த தோணியாற் கரை சேரக்குந்து

[ பாடல் – 343 ] – பரணர் பாடியது

யவனர்கள் பொன்னை மட்டும் கொண்டு வரவில்லை. அவர்கள் அடிமைகளையும் அருமையான மதுவையும் கூடக் கொண்டு வந்தனர். அத்துடன் அவர்கள் தமது நாட்டில் செய்த பாவை விளக்குகளையும் கொண்டு வந்தனர். அவர்கள் கொண்டு வந்து விற்ற அடிமைகள் பாண்டியனின் பாசறையில் குறுகிய வட்டமான அடியுடையயையும், மேற்சட்டையையும் அணிந்து, கையில் சம்மட்டி ஏந்தி, பயங்கரமான தோற்றத்தோடும் கட்டுமஸ்தான உடம்போடும் காவல் இருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,

மந்திகை வலைஇய மறிந்துவீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்கு வெருவரும் தோற்றத்து

விழிப்புணர் யாக்கை வன்கண் யவனர் …. [ வரிகள் 51 – 61 ]

என்று கூறுகிறது. யவனர்கள் கொண்டு வந்த மது [வைன்] விலையுயர்ந்த மது. அதனை அரசர்களை போன்ற வசதி படைத்தவர்களே அருந்த முடியும். பாண்டியன் ஒருவனை வாழ்த்த வந்த ஒரு புலவர் அவனை நோக்கி, யவனர்கள் ஜாடிகளில் கொண்டு வந்த நறுமணம் மிக்க மதுவை, பொன்னாலான கிண்ணத்தில் ஊற்றி, இளம் பெண்கள் வாயில் ஊட்ட நீ மகிழ்ந்து வாழ்வாயாக என்று வாழ்த்துகிறார்:

யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்

பொன் செய் புனைக்கலந்தேந்தி, நாளும்

ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து

அங்கினிது ஒழுகுமதி…

[ புறநானூறு – 56 ]

யவனர்கள் வைன் [ Wine ] மதுவை மட்டும் விற்கக் கொண்டுவரவில்லை: அதனை ஊற்றிக் கொடுக்க அழகிய பெண்களையும் கொண்டு வந்தனர். ரோமானிய வணிகர்கள் இந்திய மன்னர்களின் அந்தப்புரத்துக்கு அழகிய மங்கையர்களையும் கொண்டு வந்தனர் என்று பெரிபுளூசின் ஆசிரியர் கூறுகிறார். [ மேற்கோள் : Colas- K.Nilakanta Sastri – page 100 ]

மேலும் , யவனர் கொண்டு வந்த ஓதிம [ அன்ன ] விளக்கைப் பற்றிப்பெரும்பாணாற்றுப் படையும் [ “யவனர் ஓதிம விளக்கு ” – வரி 316 – 317 ] பாவை விளக்கைப் பற்றி நெடுநல்வாடையும் [ ” யவ்வனர் இயற்றிய வினைமாண் பாவை ” வரி – 101 ] குறிப்பிடுகின்றன.

தமிழ் நாட்டோடு யவ்வனர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் பற்றிய உண்மைகளை அகழ் ஆராய்சிக்கள் பல நிரூபித்துள்ளன. அரிக்கமேடு என்ற இடத்தில் நடைபெற்ற ஆய்வுகள் மூலம் ரோம நாணயங்கள் ஏராளமாகக் கிடைத்தன என்பதுடன் அவை கி.மு25 ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதும் தெரியவந்தன.

இவ்விதம் கிழக்குக்கும்,மேற்குக்கும் பாலமாக இருந்த தமிழ் நாட்டு வணிகர்கள் வசித்த தெருக்கள் ” ஓங்கிய மாடங்களை “, உயர்ந்த வீடுகளைக் கொண்ட தாக இருந்தன எனவும் ,பொன்னைத் தரும் சரக்குகளோடு வந்திறங்கிய கப்பல்களை வரவேற்க இசை முழங்கிய குறிப்புகளையும் காண்கிறோம்.

இன்னிசை முரசம் முழங்கப்

பொன்மலிந்த விழுப் பண்டம்

நாடார நன்கிழி தரும்

ஆடியற் பெரு நாவாய்

மழை முற்றிய மலைபுரையத்

துறை முற்றிய துளங்கிருக்கைத்

தென்கடல் குண்டு அகழி

சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்

[ அடிகள் – 80 – 88 ]

வர்த்தகம் செய்ய உள்ளூரின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் நகரங்களில் கூடியதையும் அங்கே இன்னிசை முழக்கியதையும் இப்பாடல் தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்ல அவர்கள் கலந்தினிது பழகினர் என்பதை கீழ்வரும் பாடல் கூறுகிறது.

/…

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து

புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

முட்டச் சிறப்பிற் பட்டினம்./

மனிதர்கள் மகிழ்சியாக இருக்கும் வேளைகளில் இசையும் அங்கு இருப்பது என்பது இயல்பான ஒன்றாகும். பல்லின மக்களின் பாடல்களைக் கேட்ட மக்களின் இன்பத்துய்ப்பை இவை உணர்த்துகின்றன. பிறரது பண்ணமைப்புகளையும், வாத்தியங்களையும், அதன் பிரயோகங்களையும் அதன் மூலம் உளத்தூண்டலையும் பெறுவது மட்டுமல்ல பரிமாற்றங்களையும் பெற்றிருப்பர். அந்தவகையில் பழங்காலத்தில் உலகின் இசை ஆர்வமிக்க மிக்க பிற பாகங்களிலும் பொதுவான வழக்கத்திலிருந்த யாழ் என்ற கருவி பற்றிய குறிப்புகளைத் தமிழ் இலக்கியப்பரப்பிலே நாம் காண்கிறோம்.

சீறியாழ், பேரியாழ், வில்யாழ், கருங்கோட்டுயாழ் , கின்னரம் போன்ற தந்தி வகை இசைக்கருவிகளை சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

வியாபாரத்தொடர்புகள் மட்டுமல்ல அதனூடே கலைத்தொடர்புகளும் இணைந்தன என்பதும் இங்கே முக்கியம் பெறுகிறது. மிக ஆதிகாலத்திலேயே தமிழகத்திற்கும் கிரேக்கத்திற்கும் வியாபாரத் தொடர்புகள் போல இசையிலும் இருந்ததது. யாழ் ஆராய்ச்சி என்ற ஆய்வுநூலை எழுதிய விபுலானந்தர் ” மகரயாழ் ” பற்றி செய்தியை பின்வருமாறு விளக்குகிறார்.

தகர்க்க குழலான் தன்னொடு மயங்கி

மகரயாழின் வான்கோடு தமீஇ

வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்

எட்டி குமர னிருந்தோன் – மணிமேகலை – 55 – 58

மகர வீணையின் கிளைநரம்பு வடித்த

இளிபுணர்க் கூட்டத்த தியவவனக் கைவினை

மாணப் புணர்ந்ததோர் மகரவீனை – பெருங்கதை – 22 – 23

மேலே காட்டிய நூல்கள் எழுந்த காலத்திலேயே மகரவீனை எனப் பெயரில் கருவி ஒன்று இருந்ததாக அறிகிறோம். சங்க செய்யுள்களிலேயே அது குறிப்பிடப்பட்டிலிலது. பெருங்கதையிலே ,”யவனக் கைவினை மகரவீனை ” என வருதலின்.அக்கருவி யவனபுரத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதென எண்ணுதற்கிடமுண்டு. தமிழ் நாட்டுக்கும், யவனபுரம் என அழைக்கப்படும் கிரேக்க நாட்டிற்கும் ,பண்டைக் காலத்திலேயே நெருங்கிய தொடர்பிருந்ததது. என எழுதுகிறார் விபுலானந்தர். [ யாழ்நூல்]

“யாணர்க் க்கூட்டத் தியவனாக கைவினை

மாணப் புணர்ந்ததோர் மகர வீணை ” – பெருங்கதை – மகதகாண்டம் – யாழ்நலந் தெரிந்தது – [25 – 26]

கிரேக்கத்திலிருந்து மகரவீணை தமிழ்நாட்டுக்கு வந்ததாக பாடல் கூறுகிறது. மகரயாழ், மகரவீணை செல்வந்தர்,அரசர்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது

நரம்புக்கருவி குடும்பத்தைச் சேர்ந்த வாத்தியங்களில் Harp, Lyre, lute போன்ற வாத்தியக்கருவிகள் மிகப்பழங்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழில் யாழ் இசைக்கருவியை ஒத்த இக்கருவிகளில் சில மறைந்தும், வேறு உருவம் தாங்கியும் நிலை பெற்றுள்ளன. இவை இந்தியாவில் கின்னரம் என்றும் யாழ் என்றும் வழங்கப்பட்டது.

யாழ்நூலில் விபுலானந்தர் எழுதிய சில குறிப்புகள் :

தமிழ் நாட்டு வேந்தர் யவனர்களைத் தமது கோட்டை வாயில்களிலே காவலாளர்களாக வைத்திருந்த செய்தியும், ரோமாபுரி வேந்தனாகிய அகஸ்டஸ் மன்னனுக்குப் பாண்டியன் தூதனுப்பிய செய்தியும், பிறவும் ஆதாரமாகத் தீட்சிதர் அவர்கள், ” மத்திய தரைக்கடல் நாகரீகம் “ என்று இப்போது வழங்கப்படுவது தென்னிந்தியா நாகரீகம் அல்லது தமிழ் நாகரீகம் என்று துணிவாய்ச் சொல்லலாம் ” என முடிவு கூறுகிறார் விபுலானந்தர்! [ யாழ் நூல்

– விபுலானந்தர்]

யவன ரியற்றிய வினைமாண் பாவை

கையேந் தையகல் நிறைநெய் சொரிந்து

பரூஉத்திரி கொளீஇய குரூஇத்தலை நிமிரெரி

[ யாழ் நூல் – விபுலானந்தர்]

விபுலானந்தர் மட்டுமல்ல , சிந்துவெளி மொகஞ்சதாராவுக்கும் மேல்நாடுகளுக்கும் [ கிரேக்கம் – ரோம் [ இத்தாலி ], அரேபியா, எகிப்து மற்றும் வடமேற்கு இந்தியாவிற்கு அருகிலிருக்கும் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுடன் தொடர்புகள் இருந்ததையும் வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காலத்து தொடர்புகள் மறைந்த போதும் பின்னர் தென்னிந்தியாவுடன் [ தமிழ் நாட்டுடன் ] தொடர்புகள் பேணப்பட்டு வந்ததையும் காட்வெல் குறிப்பிடுகின்றார்.

சிந்து வெளியில் கிடைத்த முத்திரை சின்னங்களில் யாழ் இசைக்கருவின் சின்னங்களும் உள்ளன என பூரணசந்திர ஜீவா என்ற கல்வெட்டாய்வாளர் பின்வருமாறு விளக்குகிறார்.

//…..மேல் குறிப்பிட்ட சிந்துவெளி முத்திரையில் காணப்படும் விண்மீன் கூட்டம் யாழ்வடிவில் இருப்பதாகவும் அதை யாழ் என்றும் தமிழ்வானியல் மரபு எனவும் விளக்குவார்.

// இது கிமு 3000 அளவுக்கு முன்பிருந்து தொடரும் வானியல் வரலாற்றுச் செய்தி. தமிழில் யாழ் என்பது விண்மீனையும், யாழ் என்ற இசைக்கருவியையும் குறிப்பிடும் சொல்லாகும் . இம்முத்திரையில் யாழ் என்ற சொல் யாழ் படவுருவக் ( Pictographic sign ) குறியீட்டின் மூலமாகச் சொல் வடிவாக எழுதப்படுகிறது. யாழ் படம் தொன்மையான வில்யாழ் வடிவில் எழுதப்படுகிறது. யாழ் வகைகளில் தொன்மையானதும் பாணரும், கலைஞர்களும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியதும் வில்யாழே! வில்யாழில் இருந்தே மகரயாழ் போன்ற பிற்கால வடிவங்கள் தோன்றின. முத்திரைகளில் யாழைக் குறிப்பிட வில்யாழே படவுருவனாக எழுதப்படுகிறது. யாழ் படம் எழுதி யாழ் என்று படித்தனர். இதன் சொல் வடிவம் ( word sign ) படம் எழுத எளிதாக உள்ளது. சிந்து எழுத்து முத்திரைகளில் நான்கைந்து இடங்களில் வருகின்றன. சில இடங்களில் யாழ் — யாழ எனப்படுகிறது. அரப்பா முத்திரைகள் இரண்டில் யாழ ஆ காவண்ணா — ஆ + காவ்வல் + அண்ணா ( 4680 , 4692 ) என வரும்..// ..முகநூல் பதிவு [ 20.08 2021 ]

… //

Harp, Lyre, lute போன்ற வாத்தியக்கருவிகள் மொசப்பத்தேமியா நாட்டில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஓர் அரசியின் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டன. அவை 5000 ஆண்டுகள் பழமையானவை என்றும் எகிப்திய பிரமிட்டுகளுக்கு முன்னரேயே பயன்பாட்டிலிருந்ததெனவும் உறுதிப்படுத்தப்பட்டது. Harp, Lyre இவ்விரண்டு வாத்தியங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஒலிகளை எழுப்பவல்லன. King David காலத்தில் இந்த வாத்தியங்கள் பூஜையில் பயன்படுத்தப்பட்டதாகவும், இன்றுவரை எத்தியோப்பியாவில் இறைவழிபாட்டில் மட்டும் இந்த Harp வாத்தியம் பயன்பாட்டிலும் இருந்து வருகிறது.

மொசப்பத்தேமியாவின் பழைய நாகரீகமும்,அங்கு கண்டெடுக்கப்பட்ட யாழ்கள் பற்றிய செய்திகளைப் பேசும் போது அங்கு வாழ்ந்த ஓர் கறுப்பின மக்களே அதன் தொன்மை மூலமாக இருந்ததையும், அவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுடன் கலந்தவர்களாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

இதற்கு உதாரணமாக எத்தியோப்பிய மக்களே சுமேரிய நாகரீகத்தை உருவாக்கியவர்கள் எனவும், அவர்களுக்கும் திராவிட மக்களுக்கும் மிக நெருக்கம் உண்டென்றும், அவர்களே 4000 ஆண்டுகளுக்கு முன்னர் நகரங்களை உருவாக்கியவர்கள் என்றும், Eridu, Lagash, Nippur. kish,Ur போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் திராவிட மக்களுடையவை எனவும், பழங்கால சுமேரிய சிலைகள் திராவிட நாகரிகத்தின் சிலைகளை ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார் “ From Babylon To Timbuktu “ என்ற நூலை எழுதிய ஆய்வாளர் Rudolph R. Windsor .

எத்தியோப்பியாவில் Harp வாத்தியத்தின் பயன்பாடு இன்றுவரை தொடர்வதும், அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் யாழ் மிக முக்கியமான இசைக்கருவியாக இருப்பதையும் நாம் மிக எளிதாகவே காண முடியும்.

இந்த வாத்தியங்களுக்கான ஏராளமான சான்றுகளை எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளின் சிற்ப, ஓவியங்கள் தருகின்றன. தமிழ் சங்க இலக்கியங்களில் அதிகமான சான்றுகளை நாம் காணக்கூடியதாக இருப்பினும் ஓவிய, சிற்ப சான்றுகள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. கீழைத்தேய கலைகள் குறித்து வியக்கத்தக்க முறையில்

எழுதிய அறிஞர் ஆனந்தகுமாரசாமி Parts of Vina என்ற தனது கட்டுரையில் வீணை பற்றிய பல தவல்களைத் தருகின்றார்.

தற்போதுள்ள வீணையின் அமைப்பு பற்றிய ஓவியங்கள் ராஜபுத்திர மற்றும் மொகலாய ஓவியங்களில் காணப்படுகின்றன என்றும், அவை 16ம், 17ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக உள்ளன என்றும் இக்காலங்களுக்கு முந்தைய ஓவிய சான்றுகள் எல்லோரா சுவரோவியங்களில் காணப்படுகின்றன எனவும் கூறுகிறார்.

தமிழில் யாழ் பற்றிய செய்திகளைப் பேசும் போது வீணை என்ற இசைக்கருவியே யாழ் என பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆதாரங்களை சில ஆய்வாளர்கள் சுட்டுவர். அதை மறுத்து இவை இரண்டும் வெவ்வேறு இசைக்கருவிகள் எனவும், அவைகளுக்குரிய ஆதாரங்களையும் சில ஆய்வாளர்கள் முன் வைத்திருக்கின்றனர். சிலப்பதிகாரம் , தேவார பாடல்களில் இதற்கான குறிப்புகள் இருப்பதை இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் “ தமிழிசையும் இசைத்தமிழும் “ என்ற நூலில் ” நாரதன் வீணை நயந்தெரி பாடலும் ” என்ற சிலப்பதிகாரப் பாடலையும், ” இன்னிசை வீணையர் யாழின் ஒருபால் ” [ திருவாசகம் ] , “ பண்னொடி யாழ்வீணை பயின்றாய் போற்றி ” [ நாவுக்கரசர் ] இன்னும் பல பாடல்களையும் சான்றுகளாகக் காட்டுவார்.

பாணர்களும், பாடினிகளும் ஊர் ஊறாகச் சென்று யாழ் மீட்டிப் பாடியதை பழந்தமிழ் இலக்கியங்களிலும் , ” இத்திறத்துக் குறை நீங்கிய யாழை கையிற் தொழுது ” மாதவி வாங்கினாள் என்று சிலப்பதிகாரத்திலும் யாழுக்குரிய தெய்வம் மாதங்கி என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன.

“ நம் நாட்டைப் போலவே வேறு பல நாடுகளிலும் யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டது. பண்டைய நாளிலே சீரும் சிறப்பும் மீதிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீகக் கடற்கரையிலிருந்து அழிந்து போன சுமேரு நாட்டிலும், சோழர் குடியேறியமையினாலே சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சால்தெயா என வழங்கப்பட்ட தொல்பதியிலும், சேர குலத்தார் காலத்திற்சென்று வெற்றி பெற்றுத் தம்மாணை செலுத்திய கிரேதத [ Crete ] தீவிலும், அதற்கணிததாகிய யவனபுரத்திலும், உரோமர் வருவதற்கு முன் பழைய இத்தாலி தேசத்திலும், ஐபீரியா எனப்பட்ட பழைய ஸ்பெயின் தேசத்திலும், பிறவிடங்களிலும் தமிழ்க் குலத்தார் வாழ்ந்து நாகரீகம் பரப்பினார்களென மேற்றிசையறிஞர்கள் ஆராய்சசியார்கண்டு வெளியிட்டிருக்கின்றனர். இந்நாடுகளிலெல்லாம் யாழ்க்கருவியும் போற்றப்பட்டது. சிந்துநதி தீரத்திலே, முன்னாளிலே, ” இறந்தோர் மேடு” எனும் கருத்துடைய ” முகிஞ்சதரை ” எனும் பெயரெய்தியதுமாகிய பழைய நாட்டிலே, மிதுனராசியானது யாழ் என்னும் பெயரினால் வழங்கப்பட்டு, இணையாழாலுருவத்தினாலே குறியீடு செய்யப்பட்டதென அறிஞர் கூறுவர் “ . – [ யாழ்நூல் – விபுலானந்தர் ]

இந்தியாவில் யாழ் [ Harp ] குறித்து தமிழ் இலக்கியங்கள் பேசும் அளவுக்கு ஓவியத்திலோ, சிற்பத்திலோ அதிகளவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாக கிரேக்கத்தில் வகை தொகையில்லாத அளவிற்கு ஏராளனமான ஆதாரங்கள் சிற்பங்களிலும், ஓவியங்களிலும், மட்பாண்டங்களிலும் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல அக்கருவிகளை இன்றும் அவர்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியும் வருவது குறிப்பைடத்தக்கதாகும்.

எகிப்திலும் யாழ் மீட்டும் கலைஞர்களை குறித்த ஓவிய,சிற்ப சான்றுகள் கிடைக்கின்றன. ஒரு காலத்தில் சில கலைகள் ஓங்கி நிற்பதும், சில வேளைகளில் குறைந்து நிற்பதும் இயல்பு என்ற ரீதியில் இதனை பார்க்க முடியும். அதுமட்டுமல்ல பன்டைய காலத்திலிருந்து இன்று வரை உலகம், ஒருவருக் கொருவர் கொடுத்தும், பெற்றும் வளர்ந்துமே வந்திருக்கிறது. நல்ல அம்சங்களை பிறரிடமிருந்து எடுத்தாள்வது மிக இயல்பானதும் கூட !

அலெக்சாண்டர் வருகையுடன் கிரேக்க கலைகள் இந்தியக்கலைகளுடன் கலந்தன. அசோகரது ஆணைகள் பொறிக்கப்பட்ட அழகுமிக்க தூண்களின் பொதிகைகளிலும், சிற்ப வேலைகளிலும் மேற்கின் கலைகள் செல்வாக்கு தொடங்கியதை நாம் காண முடிகிறது. பிற்காலத்தில் இது காந்தாரக் கலை என வளர்ச்சியடைந்தது.

வட ஐரோப்பிய நாடுகளில் Harp வாத்தியத்தின் பரவல் கி.பி. முதலாம் நூற்றாண்டுகளுக்குப் பின்பாகவும், வேல்ஸ் நாட்டில் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலும், ஸ்கொட்லாந்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலும் பரவியது. தற்போது அறியப்படுகின்ற Harp என்பது 12 – 16ம் 0 நூற்றாண்டுகளில் வடிவம் பெற்றது. ஆயினும் இந்த வாத்தியத்திற்கான ஓர் ஒழுங்கான இசை Robert Hugh என்பவரால் 1613 இல் வேல்ஸ் நாட்டில் எழுதப்பட்டது. அந்த இசை வடிவம் 24 சம அளவுகளைக் கொண்ட இசை அமைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *