ஸ்கண்டிநேவிய – ரஷ்ய – யப்பான் நிலம்சார் இசைகள்:
ஸ்கண்டிநேவிய – ரஷ்ய – யப்பான் நிலம்சார் இசைகள்:
மத்திய காலத்தைத் தொடர்ந்து பிரஞ்சு புரட்சி உண்டாக்கிய அதிர்வலைகள், பிற ஐரோப்பிய நாடுகளிலும் தேசிய இன எழுச்சிகளுடன் இசையையும் ஓர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கிய நிகழ்வுகளுடனும் இணைந்து வளரவும் உதவின.
.
வட ஐரோப்பிய தேசிய எழுச்சிகளின் பயனாக நிலம் சார் இசைவடிவங்களை உருவாக்கிய வேறு சில நாடுகளை தொடர்ந்து நோக்கலாம்.
நாடு 4 :
ஸ்கண்டிநேவியன் நாடுகள்:
நிலம் சார்ந்த இசைப்படைப்புக்களை ஸ்கண்டிநேவிய நாடுகளில் பங்களிப்பு செய்த சில கலைஞர்களை பற்றி இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும். அவர்களில் எட்வெர்ட் கிரே [Edvard Grieg ] கார்ல் நெல்சன் [ Carl Nielsen ] ஜீன் செபீலியாஸ் [ Jean Sibelius ] போன்றோர் முக்கியமானவர்கள.
ஸ்கேண்டிநேவியன் நாடுகள் என அழைக்கப்படும் நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளில், டென்மார்க் தவிர்ந்த நாடுகள் மலைவளம் நிரம்பிய நாடுகளாகும். மலைகள் நிறைந்த இப்பகுதி காண்பவர்களை மிகவும் கவர்பவையாக இருந்ததால், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஒரு சுற்றுலாப் பகுதியாகவும் இப்பகுதிகளைக் கருதினர். இந்த மலைப்பிரதேசங்கள் இயல்பாகவே கலைஞர்களை கவர்ந்ததில் வியப்பில்லை!
18 ம் நூற்றாண்டில் அல்லது பிரஞ்சு புரட்சியைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தேசியம் பற்றிய விழிப்புணர்வு கலைகளிலும் குறிப்பாக இசையிலும் வெளிப்பட்ட நிலையில் அவை ஸ்கேண்டிநேவிய நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. தேசிய எழுச்சிக்களுடன் இசையும் இணைந்து கொள்வதும் உலகெங்கும் நடந்துள்ளன.
டென்மார்க், நோர்வே, சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளிலும் இசைமீதான விழிப்புணர்வு அவரவர் நாடுகளின் நிலம் சார்ந்து வெளிப்பட்டன. பெரும்பாலும் நாட்டார் இசையின் விசைவலு அதிகமிருந்த இந்நாடுகளில் செவ்வியலிசையின் தாக்கமும் மெதுவாகப் பரவியது.
செவ்வியல் இசை, நாட்டுப்புற இசை இரண்டும் வெவ்வேறாகப் பார்க்கப்பட்ட நிலையில் தேர்ச்சிநிலையில் செவ்வியலிசை வேறாகவும் , நாட்டார் இசை வாய்மொழியாகவும் இருந்த நிலையில் இரண்டு இசையையும் உள்வாங்கும் காலம் இவையாகவும், அவை தங்கள் தேசிய அடையாளங்களின் கூறுகளாக இருப்பதையும் உணர்ந்தனர்.
இன்றைய காலத்தை போலல்லாமல், இந்நாடுகளின் அன்றைய எல்லைகள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. ஒருவர் மீதான அடக்குமுறைகளால் தேச எல்லைகள் நெகிழ்வு தன்மை கொண்டதாகவும், ஒன்றை ஒன்று தழுவியதாகவும், அவை கலை, கலாச்சார அம்சங்களில் ஒத்தும், மாறுபட்டும் இருந்தன.
பின்லாந்தின் சில பகுதிகள் ஜார் மன்னனின் ரஸ்யாவிலும், நோர்வே டென்மார்க்கின் காலனி நாடாகவும் இருந்தன. பின்னர் தங்களுக்கான தனித்துவங்களின் தேடல்களால் நாட்டார் இசையின் கூறுகளை அடையாளம் காணமுனைத்தாலும் ஒன்றுக்குஒன்றான தாக்கங்கள் இருந்தே வந்துள்ளன. இந்நாடுகளின் எல்லைப்புறங்களில் இருந்த பகுதிகளில் ஒரேவிதமான இசை இருந்ததும், பின் அவை வெவேறு நாடுகளான பின்னர் தங்கள், தங்கள் அடையாளங்களை கண்டெடுக்க முனைந்த போதிலும் வாய்மொழிக்கதைகள், புராணக்கதைகளில் ஒரேதன்மை இருப்பதை நாம் காண முடியும்.
இக்காலங்களில் அருகருகே இருந்த நாடுகளின் பொதுவான புராணக்கதைகள் தெரிந்திருந்தாலும், ஒருகாலத்தில் தாம் ஒரே இனக்குழு மக்கள் கூட்டம் என கற்பனை செய்தவர்கள் , பின்னர் வெவ்வேறு நாடுகளாகப் பிரிந்த பின் , தங்களை வேறுபடுத்திக்காட்ட இசையைப் பயன்படுத்தினர் என்பார் Benedict Anderson. குறிப்பாக பின்லாந்து நாட்டின் நிலை இதற்கு சிறந்த உதாரணமாக இருந்தது!
ஒருவர் மொழியை அடுத்தவர் பேசிக்கொண்டிருந்த நிலையில் அதை வகை பிரித்து பார்க்க முனைந்து தோற்றுப்போனதும் உண்டு. குறிப்பாக நாட்டார் பாடல்கள் பொதுவானவையாக இருந்தாலும் இலகுவில் வகைபிரிக்க முடியாத நிலையும் இருந்தது. நாட்டார் பாடல்களைத் தொகுத்த Adolf Iwar Arwidsson என்ற ஆய்வாளர் பிவருமாறு கூறினார். “ Swedes we are no longer, Russians we shall never be, therefore let us be Finns!”
இந்த நிலையில் நோர்டிக் நாடுகளில் தங்களுக்கான இசையை உருவாக்குவதில் பின்லாந்து, நோர்வே போன்ற நாடுகள் முன்னணிக்கு வந்தன. ஆனால் சுவீடன் நாட்டைப் பொறுத்தவரையில் அந்த நிலை காணப்படவில்லை. நோர்வேயில் Edvard Grieg , பின்லாந்தில் Jean Sibelius போன்றவர்கள் முன்னணிக்கு வந்தனர்.
Carl Neilsen [ 1891 – 1931]
டென்மார்க் நாட்டின் தேசிய இயக்கத்துடன் வளர்ந்த இசைக்கலைஞர் கார்ல் நெல்சன், டென்மார்க் நாட்டுப்புற இசையால் உந்துதல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனிய இசையின் ஆளுகைக்குட்பட்ட கூறுகளிலிருந்து விடுபட்டு தனியே தமக்கென ஓர் இசைப்பாணியை வளர்த்தெடுக்க முனைந்தமை, கடுமையான பணியாக இருந்தாலும் அதில் ஓரளவு வெற்றி கண்டவர் கார்ல் நெல்சன். இவரே டேனிஷ் இசையின் தேசிய நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர்களை அணுகுவதில் அதிகார மையம் மற்றும் செய்தி ஊடகங்களும் தங்கள் ஒவ்வாமையாலும் , புறக்கணிப்பாலும் பல சமயங்களில் அவர்களின் படைப்புகளை தற்காலிகமாக இருட்டடிப்பு செய்தாலும் காலம் தாண்டி அவர்களின் படைப்புகள் பற்றிய வியப்பும், ஆளுமை பற்றி பேசப்படுவதை நாம் அறிவோம்.
Franz Berwald பற்றி டென்மார்க்கின் தேசிய இசையமைப்பாளர் என்று அறியப்பட்ட கார்ல் நெல்சன் பின்வருமாறு எழுதினார்.
“ Neither the media, money nor power can damage or benefit good Art. It will always find some simple, decent artists who forge ahead and produce and stand up for their works. In Sweden, you have the finest example of this: Berwald “
Franz Berwald [ 1796 – 1868 ]
ஐரோப்பாவில் தேசிய இயக்கத்தால் உந்தப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அது சார்ந்து இசையிலும் எழுச்சி பெற்றதை போல சுவீடன் நாட்டில் நிகழவில்லை என்று கூறக்கூடிய அளவுக்கு அங்கே குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்கள் புகழடையவில்லை என்றே எண்ண தோன்றுகிறது. ஆனாலும் ஒரு சில கலைஞர்கள் தென்படத்தான் செய்கின்றார்கள் என்ற போதிலும் அவர்களின் பெயர் வெளிப்படையாக தென்படவில்லை.
ஆனாலும் சுவீடனில் பிறந்த Franz Berwald என்ற இசைக்கலைஞர் குறிப்பிடக்கூடியவர்கவே உள்ளார். இவர் சுவீடனில் அங்கீகரிக்கப்படாத போதிலும், சிம்பனி இசையின் பிறப்பிடங்கள் என வர்ணிக்கப்பட்ட ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளின் இசை விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளார். 1842 இல் இவர் இசையமைத்த ” Reminiscence of the 46 landscapes history of Norwegian Mountains ” என்ற சிம்பனி ஒன்றை ஆஸ்திரியாவில் அரங்கேற்றினார். ” truly Delighted ” என ஆஸ்திரிய இசைவிமர்சகர்கள் பாராட்டினார்.
EDWARD GREIG [ 1843 – 1907 ]
இயற்கை மற்றும் நிலம் சார்ந்த புரிதலுடனும் , தீவிரத்துடனும் தனது இசையில் வெளிப்படுத்தியவர்களில் நோர்வேயைச் சார்ந்த இசைக்கலைஞர்
Edvard Grieg மிக முக்கியமானவர்.
மலைகள் நிறைந்த நோர்வே நாட்டின் இயற்கை அழகும் , தெளிந்த காற்றும், அன்று நிலவிய சுதந்திரத்திற்கான வேட்கையும், இயல்பான உணர்வுத்தூண்டுதலுக்கு அவரை உந்தித் தள்ளியதுடன் அவரது இசையின் அடிநாதமாகவும் அமையப்பெற்றது. நோர்வே, டென்மார்க்கிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் சுயமுன்னேற்றம் பற்றிய விடுதலை எண்ணங்கள் நோர்வேயின் இயற்கை எழிலும், நாட்டுப்புறவியலுடனும் அவை சார்ந்த அம்சங்களில் ஒன்றான இசையிலும் தவிர்க்க முடியாமல் பிரதிபலித்தது.
Fjelde Ventyret [ The Mountainstale ] , Kumlokk [ Cow- herding Song ] , Hardingfele [ Hardanger Fiddle ] போன்ற அக்கால பண்பாடு சார்ந்த இசைகளை எல்லாம் மிகத் திறமையாக தனதாக்கிக் கொண்டார்.
அன்று மையமாக இருந்த ஜேர்மனிய இசையிலிருந்து தொலை தூரம் விலகிச் செல்லவும் அழகுமிக்க இயற்கையிலிருந்தும் மட்டும் தனது எண்ணக்கருக்களைத் தேடாமல், சுதந்திரம், ஆன்மீக இருப்பு குறித்த தேடல்களுடன் தனது இசைக் கருத்துக்கு பொருத்தமாகப் பயன்படுத்தினார்.
PeerGynt Suite No1.
ஹென்ரிக் இபிஸானின் நாடகத்திற்கான இசைவடிவம். இது நான்கு பகுதிகளைக் கொண்ட இசையாகும்.
1.Morning Mood
2.The death of Aase
3. Anitra’s Dance
4. In the Hall of Mountain King.
எட்வெர்ட் கிரேக்கின் இசைப்பாணி என்பது ஆரம்பத்தில் ஜேர்மன் ரொமான்டிக் மரபை ஓத்திருந்ததெனினும் , பின் கொஞ்சம், கொஞ்சமாக நோர்வேயின் தேசிய உணர்வலைகள் நோர்வேயின் தனித்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் இசையில் வெளிப்படுவதை தனது பிரதான நோக்காகக் கொண்டு அமைந்தது. Franz List போன்ற சமகால இசையமைப்பாளர்கள் மூலம் அதற்கான உளத்தூண்டுதலைப் பெற்றதும் உள்நாட்டிலும் சக கலைஞர்களால் அதற்கான ஆதரவுகளையும் பெற்றார்.
உலக அளவில் புகழ்பெற்ற நோர்வேயிய நாடகக்கலைஞரான ஹென்ரிக் இப்சன் போன்ற கலைஞர்களின் நாடகங்களுக்கு இசை வழங்கும் வாய்ப்பை பெற்றதும் அவர் [ Greig ] நோர்வே தாண்டிய புகழ் பெறக் காரணமாகியது.
அதுமட்டுமல்ல கிரேக்கின் இசை பிரெஞ்சு இம்ப்ரெஸ்ஸினிஸ்ட் கலைஞர்களிடம் தாக்கத்தை விளைவித்தது. பிரெஞ்சு இசைக்கலைஞர்களான Maurice Ravel , Debussy போன்றவர்கள் கிரேக்கின் இசையால் கவரப்பட்டனர். Maurice Ravel பின்வருமாறு எழுதினார்.
“ I am fairly certain that Edward Greig’s influence was much more significant in non- Nordic countries than here in the North. The generation of French Composers, which I am part of , was strongly attracted by Grieg’s music. Next to Debussy there’s no other composer, whom I feel more related to than Greig,” – Mourice Ravel.
Christian Sinding [ 1856 – 1941 ]
நோர்வே இசைக்கலைஞரான Christian Sinding , இயற்கையைத் தனது இசையின் மூலாதாரமாகக் கொண்ட நோர்வே இசையமைப்பாளரான GREIG என்பவரைத் தனது முன்மாதிரியாகக் கொண்டவர்.
Rustle of Spring –
வசந்தத்தின் சலசலப்பு:
சலசலப்பு என்ற சொல்லுக்கேற்ப, ரொமான்டிச பாணியில் பியானோ இசை மட்டும் பயன்படுத்தத்தப்பட்ட இசை வடிவம். மனக்கண்ணில் வசந்தத்தில் சூரியனின் மென் ஒளியில் இலைகள் அசைந்தாடுவதையும், அம்மாதிரியான சூழ்நிலையையும் கொண்டுவரும் இசை வடிவம்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்கட்ஸியில் சேர்ந்த இவர், போரின் பின்னான காலத்தில் மங்கி மறைந்தார். ஆனாலும் இந்த இசை அவரது பெயரை நிலை நாட்டி நிற்கிறது.
Hamish MacCunn [1886 – 1916 ]
இவர் ஓர் ஸ்கொட்லான்ட் இசையமைப்பாளர். இவரின் இசையில் வெளியான The Land of the Mountain and the Flood என்ற படைப்பு மிகவும் இனிய இசையாகும். Sir Walter Scott என்பவரது நாவலுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் படைப்பாகும். கேட்பவர்களை ஸ்காட்லான்ட் நாட்டின் அழகிய மலைகளுக்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வைத் தருவதாக அமைந்த படைப்பு என்று பாராட்டப்பட்ட படைப்பாகும்.
நாடு 5 :
பிரெஞ்சு கலைஞர்கள்:
நிலக்காட்சிகள் என்றது உடனே நினைவுக்கு வருவது போல் செசான், வான் கோ வரைந்த, பிரான்ஸ் நாட்டின் வனப்பு மிக்க நிலக்காட்ச்சிகளும், ஆற்றங்கரைகளும், சூரியகாந்தி பூக்களும், திராட்சஷத் தோட்டங்களுமே! அதைப்போலவே Camille Saint Saen, Chopin, Maurice Ravel, George Bizet , Hector Berlioz போன்ற இசையமைப்பாளர்களும் தாராளமாக நிலம் பற்றிய ஆழமான பதிப்புக்களை தங்கள் இசையில் வடித்துத் தந்திருக்கிறார்கள்.
நாடு 6 :
செக்கோஸ்லாவாக்கியா:
Czech Republic
Antonin Dvorak – [ 1841 – 1904 ]
வெர்செக் என்ற பெயர் கொண்ட இவர் செக் நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர்!
Silent Woods for cello and orchestra – Antonin Dvorak.
சிக்கலானவை எனக்கருதப்படும் நாட்டுப்புற இசையின் தாளங்களையும் இந்த இசைவடிவத்தின் மூலம் பயன்படுத்துவது சாத்தியம் என்பதை காட்டி, இதன் மூலம் எதிர் ,எதிரான இசையம்சங்களை எடுத்துக் கொண்டே இசையின் முக்கிய கருப்பொருளை அமைக்கலாம் என்பதை அண்டோனின் வோர்செக் நிரூபித்துக் காட்டினார் என்பது ஆய்வாளர்களின் கூற்றாகும்.
வயலோ வாத்தியக் கலைஞரான இவர் தனது சொந்த ஊரின் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்தும், ஓபராக்களிலிருந்தும், சிம்போனிகளிலிருந்தும், நடன இசைகளிலுருந்தும் தனது இசைப்படைப்புகளுக்கான தனது மூலங்களை பெற்றார்.
இசையின் தலைப்பு குறிப்பிடுவது போல, இசை என்பது அந்திமாலை நேரத்தில் மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் அழகில் மயங்கி, காதல் உணர்வு பெறுவது போல நீண்ட நேர செல்லோ வாத்திய இசையில் வெளிப்படுகிறது.
செல்லோவுடன் இணைத்து வாத்தியக்குழுக்களுக்கான புதிய வகை அமைப்பையும், காற்று வாத்தியங்களின் மூலம் மேலும் இனிமையையும் சேர்த்து அழகுபடுத்துகிறார் !
செக் நாட்டுப்புற இசையின் உருவமைதியும், ஆத்மாவும் சிறிய சுர அமைப்புகளின் சரியான நிலை நிறுத்தங்களும், இடையில் செல்லோவின் தனி வாசிப்பும் பலவிதமான காட்சிகளை வெளிப்படுத்தி ஒவ்வொன்றும் கிராமிய வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன என்பர்.
இவரின் எட்டாவது சிம்பொனி, Bird Symphony ” பறவையின் சிம்பொனி ” என்றும் அழைக்கப்படுகிறது.
Bedrich Smetana [ 1824 – 1884 ]
Smetana – Ma Vlast – My Fatherland –
பெட்ரிட்ஜ் செமெடான என்பவர் செக் நாட்டின் மிக முக்கிய இசையமைப்பாளர். செக் நாட்டில் தோன்றி, ஜெர்மனி நோக்கி ஓடும் Vltava நதியின் [ ஜெர்மன் மொழியில் Moldau நதி ] ஓட்டம் பற்றிய ஓர் அருமையான சிம்பொனி இசை இது.
இந்தப்படைப்பு அவரது தாய் நாட்டின் மீதான நேசத்தின் அல்லது பக்தியின் வெளிப்பாடாய் அமைத்தார் என்பர். ஆறு அசைவுகளைக் கொண்ட இதன் இரண்டாவது அசைவு Má vlast [My Fatherland ] தாய்நாடு பற்றியதாகும்.
நாடு : 6
ரஸ்யா :
Peter Tcaikovsky [ 1840 – 1893 ]
சர்வதேச ரீதியில் அதிக புகழ் பெற்ற ரஷ்ய இசையமைப்பாளர். ரொமான்டிக் கால கட்டத்தைச் சேர்ந்தவர். ஓபரா இசையிலும், சிம்பொனி இசையிலும் தனது அசாத்தியங்களைக் காண்பித்தவர். அவரது Swan Lake என்ற பலே நடனத்திற்கு அவர் இசையமைத்த இசை பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது.
Peter Tcaikovsky – The Tempest
சேக்ஸ்பியரின் கதையை அடிப்படையாகக் கொண்ட இசைவடிவம். Prospero என்ற மந்திரவாதி கட்டவிழ்த்து விட்ட புயலுடன் தொடங்குகிறது. அரிதான இந்தப்படைப்பு டைக்கோவ்ஸ்யின் சிம்பனிக் கவிதை என்று சொல்லும் படியாக அமைந்துள்ளது என்பர். காற்றின் கொந்தளிப்பைக் காட்டும் அருமையான இசை!
Peter Tchaikovsky மற்றும் வேறு ரஷ்ய இசையமைப்பாளர்கள் இயற்கை குறித்து எழுதிய சில இசைப்படைப்புகள்.
Peter Tchaikovsky : Nature and Love, Cantata.
Peter Tchaikovsky : Swan Lake [ Swan Theme ]
இவருடன் Peter Prokofiev, Rimsky Korsakov, Igor Stravinsky போன்ற இசையமைப்பாளர்கள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் இயற்கை குறித்த சில படைப்புகளுக்கு சில உதாரணங்களாகச் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
Prokofiev – Peter And the Wolf
Rimsky Korsakov – Flight of the Bumblebee
Stravinksy – Rite of Spring
Christian Sinding – The Rustle of Spring
நாடு 7 :
ஸ்பெயின்:
பாப்லா கசல்ஸ் [ 1876 – 1973 ]
Pablo Casals :
ஸ்பெயின் நாட்டு இசைக்கலைஞர். மிக இளம் வயதிலேயே செல்லோ வாசிப்பதிலும், இயற்கை ரசிப்பிலும் மனம் லயித்தவர். தனது இசைக்கான ஆர்வம் இயற்கையிலிருந்து ஆரம்பித்தது எனக் கருதியவர்.
Pablo Casals – Song of the Birds
இந்த இசைப்படைப்பு ஸ்பெயின் நாட்டின் கட்டலன் [ Catalan ] நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்டது. மதம் சார்ந்த கரோல் பாடலாகவும், தாலாட்டாகவும் இந்த இசை பயன்படுகிறது. அதையும் தாண்டி கடலோனியாவின் ஆன்மாவாகவும் இன்று கருதப்படுகிறது.
1939 ம் வருடம் ஸ்பெயினில் மக்களை அடக்கி பாசிச ஆட்சியை நிறுவிய பிராங்கோ வுக்கு எதிராகவும் இந்தப்பாடலை பாப்லா கசல்ஸ் பயன்படுத்தினார். தனது எதிர்ப்பை தெரிவிக்குமுகமாக ராணுவ சர்வாதிகாரி உயிருடன் இருக்கும்வரை தனது தாய் நாட்டுக்கு செல்வதில்லை என்ற திடமான முடிவோடு பிரான்சில் குடியேறினார். தாய்நாடு மீதான தனது உன்னதமான பற்றை உணர்ச்சிமிகுந்த இந்த இசை மூலம் அவர் வெளிப்படுத்தினார். நாற்பது ஆண்டுகள் இசைப்பதை நிறுத்திருந்த அவர் தனது அந்திமக்காலத்தில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா சபையில் வாசித்த போது மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பின்வருமாறு கூறி தனது இசையைத் தொடங்கினார்.
“ I have not played the cello in public for many years, but I feel that the time has come to play again. I am going to play a melody from Catalan folklore: El cant dels ocells – The Song of the Birds. Birds sing when they are in the sky, they sing: “Peace, Peace, Peace”, and it is a melody that Bach, Beethoven and all the greats would have admired and loved. What is more, it is born in the soul of my people, Catalonia. “
இந்த உணர்ச்சிப்பெருக்கான உரையில் ஓர் கலைஞனின் உள்ளத்தில் அவனது நாடு அதன் இயற்கை எங்ஙனம் ஆழமிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
Aron Copland [ 1900 – 1990 ] – Appalachian Spring
இவர் ஓர் அமெரிக்க இசையமைப்பாளர்.
Aron Copland – Appalachian Spring
வசந்தகாலம் பற்றிய விவரணையில் அமைந்த இசைநாடத்திற்கான இசை வடிவமாகக் கருதப்படும் இந்த இசை 1944 ல் எழுதப்பட்டது. இளம் தம்பதிகளின் வாழ்க்கை ஆரம்பம் குறித்த கதையாக உருவாகி அமெரிக்க நிலம் கைப்பற்றுதல் என்பதன் உவமையாக அமைக்கப்பட்ட கதை என்பர்.
Shaker Song என்கிற மத அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த இசையின் மூல வடிவம் 1747 களில் பிரித்தானியாவில் தோன்றி அமெரிக்கா வந்தடைந்தது.பல அசைவுகளைக் கொண்ட இந்த இசைப்படைப்பின் இறுதிப்பாகங்கள் இரண்டும் நாட்டார் இசையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
கடந்த காலத்தில் மட்டுமல்ல, இன்று வாழ்ந்துவரும் சில கலைஞர்களும் இயற்கை பற்றிய தங்கள் மனப்பதிவுகளை இசையில் வெளிப்படுத்தி வருகின்றார்கள். அவர்களில் சிலரையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
Harrison Birtwistle [b.1934 ]
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் வாகன் வில்லியம்ஸ் என்ற இசையமைப்பாளரை முன்மாதிரியாகக் கொண்டவர். Lancashire என்ற இடத்தின் நாட்டுப்புற பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்ற ரீதியில் நிலம் குறித்த தாக்கத்தை இவரது இசையில் காண முடிகிறது.
Imaginary Landscape ,என்ற ஓர் இசைவடிவத்தில் வழமைக்கு மாறான இசைவடிவம் ஒன்றின் மூலம் கற்பனையான நிலப்பரப்பை அடிப்படையாக வைத்து தனது இசையை அமைத்து தருகிறார். அதில் வியப்பும், திடீர் திருப்பங்களுமாக, கேட்பவர்களிடம் சிறு அதிர்ச்சியையும் தரும் வகையில் அமைந்த இசை வடிவம்!
Tragoedia என்ற இசைப்படைப்பில் கற்பனையான இசைகளை வடித்துக் காட்டுகிறார்.
Earth Dances இந்த இசையில் வயலின்களின் உரசல்களில் காற்று வீசும் தன்மைகளை வெளிப்படுத்துகிறார்.
சில இசைப்படைப்புகளில் எந்த ஒரு மகிழ்ச்சியான மன நிலையை தராமல் , குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய புதைகுழியிலிருந்து ஆரம்பிப்பதாக இசை தொடங்குவது போலவும், புதுமையாகவும் இசையை தந்திருக்கின்றார். இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்.
பீட்டரிஸ் வாக்ஸ் [ Peteris Vasks ] b .1946
சோவியத் யூனியனின் முன்னைநாள் கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான லாத்வியா என்ற சிறிய நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர். தனது இசையை இயற்கைக்கும், உயிரினங்களுக்கும், மனிதர்களுக்குமான அத்தியந்த தொடர்புகளை வெளிப்படுத்தும் முயற்சிகளாக இசை அமைத்து வருபவர். மிக நுணுக்கமிக்க தலைப்புகளிலும் அவை அமைந்துள்ளன.
1.Peteris Vasks: Landscape with Birds
2.Peteris Vasks: Distant Light
3. Peteris Vasks: Misterioso. Sonata for Flute and Alto Flute: (Night)
4. Peteris Vasks: The Fruits Of Silence
5. Peteris Vasks: Music for a Summer Evening
6. Peteris Vasks: White Scenery [Winter]
OLA GJEILO : [பிறப்பு !978 – ]
நோர்வேயைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் இசைக்கலைஞர். தனது படைப்புக்கள் பலவற்றில் இயற்க்கையைப் பிரதிபலிப்பவர். பின்வரும் தனித் தலைப்புகளில் தனது இசைத் தொகுப்புக்களை சிம்பொனி இசைவடிவங்களில் வெளியிட்ட முக்கியமான கலைஞர்.
1.Dawn 2. Before Dawn 3. Night 4. The Spheres 5. Song of the Universe.
இவர் வெளியிட்டுள்ள சில இசைப்படைப்புகள்:
1.OLA GJEILO – Winter Song [ 2017 ]
2.OLA GJEILO – Northern Lights [ 2012 ]
3.OLA GJEILO – Night [ 2020]
4.OLA GJEILO – Stone Rose [ 2007 ]
5.OLA GJEILO – The River [ 2016 ]
Peder B. Helland [ b. 1995 ]
இவரும் நோர்வேயைச் சேர்ந்த இளம் இசைக்கலைஞர். இவரது படைப்புகளிலும் இயற்கை குறித்த மனவெளிப்பாடுகளைக் காணலாம்.
இன்றைய நவீன வாத்தியக்கருவிகளைக் கொண்டு இசையமைக்கப்படும் இவரது இசையில் மன அமைதிக்கு [ Relaxation ] பயன்படுவதாகவும் , நோர்வேயின் நிலஅமைப்புடனும் தொடர்புபடுத்தப்பட்ட தலைப்புகளிலும் வெளிவந்துள்ளது.
இவர் வெளியிட்டுள்ள சில இசைப்படைப்புகள்:
1.Peder B. Helland – Dance of Life [ Full Album ]
2.Peder B. Helland – Sunny Mornings [ Full Album ]
Yuhki Kuramoto [ 1951 – ]
நிலப்பரப்பை தனது இசைக்கான உந்துதலாகக் கொண்டு இசை வழங்கிய முக்கியமான ஜப்பானிய இசைக்கலைஞர். அடிப்படையில் இவர் ஒரு பிராயனோ இசைக்கலைஞராகவும், இசையமைப்பாளராகவும்] விளங்குகிறார். யப்பானிய நாட்டார் இசையிலும், மேலைத்தேய செவ்வியலிசையிலும் தேர்ச்சியுமிக்கவரான இவர் மேலைத்தேய சிம்பொனி மரபிலே வந்த Rachmaninov, Chopin, Ravel போன்ற இசைக்கலைஞர்களின் பாதிப்புக்குள்ளானவர்.
Reminiscence
Piano Fantasy
Lake Misty Blue
போன்ற இவரது படைப்புகள் புகழ் பெற்றவை.
Piano Fantasy ll [ Memories of Landscape ll ] இந்த இசைத்தொகுப்பில் கீழ் கண்ட தலைப்புகளில் இயற்கை குறித்த இசையை வழங்கியுள்ளார்.
1.Travel Yearning ll. 2. Romance on the shore. 3. Calmin [ medicine ] Lake. 4. Dreaming Little Boat. 5.Waterfall Sonnet. 6.The Far Citaddel. 7. Forest In Calgary. 8. Sheep And Grassland. 9. Nostalgic Affection. 10. A Time for Star.
Tori Takemistu [ 1931 – 1993 ]
இவரும் ஓர் புகழ்பெற்ற ஜப்பானிய இசையமைப்பாளர். இயற்கை, நிலம், காலநிலைகள் பற்றிய இசை வடிவங்களைத்தந்தவர்.
Landscape 1 for the string quartet [ இது ஒரு பரீட்சாத்த முயற்சி ]
Rain Tree
In An Autumn for Garde Gagaku Orchestra
இயற்கை, காலநிலை தொடர்புடையதாய் அமைந்த சில இசைப்படைப்புகளை மேலே தொகுத்துத் தரப்பட்டாலும், அதற்கப்பாலும் இயற்கையின் கூறுகளாக அமைந்த நீர், ஆறு, சூரியன், சூரியோதயம், அதிகாலை போன்றவற்றின் அழகிய சித்திரங்களை இசையில் பொதிந்த, வேறுபட்ட காலங்களில் வெளிவந்த படைப்புகள் பற்றிய ஓர் பட்டியலை இங்கே தருகிறேன்.
இயற்கையை பிரதிபலிக்கும் இசைச்சித்தரிப்புகள் :
Nature:
01.Chopin – “ Raindrop “ Prelude In D6
02.Rimsky Korsakov – Flight of the BumbleBee
03. franz Von Suppe [ 1819 – 1895 ] – Morning, Noon and Night in Vienna Overture –
சூரியன் மற்றும் விடியல் பற்றிய இசை வடிவங்கள்:
Sun – Dawn
01. Bruckner – Symphony No4
02. Carl Neilse – Helios Overture Op17.
04. Haydn – String Quartets op20 – Sun.
05. Sally Beamish – The Imagined Sound of the Sun on Stone.
06. Richard Strauss – Also Sprach Zarathustra – Morning Mood.
07. Richard Strauss – Alpine Symphony op64.
08. Edward Grieg – Peer Gynt op23 Morning Mood.
09. Max Richter – On the Nature of DayLight.
ஐரோப்பிய நாடுகளின் நிலத்தோற்றங்கள், இயற்கைக்காட்சிகள், குவிந்திருக்கும் வண்ணங்கள், விண்ணைமுட்டும் வெண்புகை படிந்த நீலமலைகள், பச்சைப்பசும்புல்வெளிகள் என அவற்றின் பேரழகுகளையும், அமைதியையும்,வெகுமக்களின் மீது அவை உண்டாக்கும் இயற்கைமீதான நேசத்தையும், தாக்கங்களையும் கலைஞர்களாகத் தங்கள் மனதில் உண்டாக்கும் மனவெழுச்சிகளையெல்லாம் இசையமைதிகளாக, நாட்டார் இசையாக, முன்னோக்குமிக்க செவ்வியலிசையாக வடித்து தந்தார்கள்.
இவ்விதமாக ஒவ்வொரு நாட்டு இசைக்கலைஞர்களும் தங்கள், தங்கள் நிலம்சார்ந்து தமது மன உணர்வுகளை இசையில் வெளிப்படுத்தியதுடன், இயற்கை அம்சங்களான சூரியன், கடல், ஆகாயம், ஆறுகள் என பல்வகை இயற்கைசார் இசைவடிவங்களைத் தந்தாலும் நீர் பற்றிய அவர்களது வெளிப்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கருதப்படுகின்றன.
[ தொடரும் ]