ஜானம் இலக்கிய சஞ்சிகையில் வெளி வந்த சிறுகதை .
எழுதியவர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கடந்த இருமாதங்கள் ஆதித்தன் தனது அழகிய பெண்குழந்தையின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஒரு தகப்பனுக்கு அவனது மகள்தான் இந்த உலகில் மற்ற எந்தக் குழந்தையையும்விட அழகானவள். ஆதித்தனுக்கும் அவனின் ஒரே ஒரு குழந்தையான லலிதா ஒரு அழகிய குழந்தை. அகிலத்தையும் படைத்த, பார்த்துக் கொண்டிருக்கும் இயற்கையின் தெய்வீகத்தின் பிரதிபலிப்பான களங்கமற்ற புன்சிரிப்பை முகத்திலும் கண்களிலும் பொருத்திக்கொண்ட ஒரு அழகிய பெண்குழந்தைப் பிறப்பு அவள். அவளின் அழகிய கன்னங்களில் முகம் பதித்து முத்தமிடும்போது, முற்று முழுதான,
அப்பழுக்கற்ற பளிங்குச் சிலையை அவன் முகம் தடவிக்கொண்டதாக நினைப்பான்.
அவளின் கன்னங்கள் மிகவும் மென்மையானவை, பிரபஞ்சத்தைத் தடவும் மேகத்தைத்
தடவுவதுபோல் அந்தப் பிஞ்சுக் கன்னங்களைத் தடவும்போது அவன் நினைத்துக் கொள்வான். அந்தக் குழந்தைக்கு அவனுக்குப் பிடித்த பெயரான லலிதா என்ற பெயரை, வேற்று மதத்தைச் சேர்ந்த அவனின் மனைவி மேரியின் அனுமதியுடன் சூட்டினான். ‘கல்வியின் தெய்வம் சரஸ்வதியின் இன்னுமொரு பெயர்லலிதா” என்று சொல்லி தெய்வ நம்பிக்கையுள்ள அவனது பாட்டி மகிழ்ந்தாள். ஆதித்தன் தனது மகளுக்கு லலிதா என்று பெயர் வைக்கும்போது, எந்தவிதமான மத உணர்வுமற்றுத்தான் அவளுக்கு அந்தப் பெயரைச்சூட்டினான்.
ஆதித்தன், அவனது சமத்துவ உணர்வுள்ள தந்தை மாதிரி எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் முன்னெடுத்து வாழ்க்கையின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுத்துக்கொள்ளாமல் அன்பும் இரக்கமும் சமத்துவமும் ஒன்றிணைந்த மனிதத்துடனிணைத்து தனதுவாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டவன்.
அந்த அற்புதமான சிந்தனைகள்தான் அவனது முன்வீட்டில் வளர்ந்த மேரி என்ற கிறிஸ்தவப்பெண்ணில் ஈர்ப்பையுண்டாக்கியது. அவனும் மனைவியும் இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்ற பேதமின்றி எதிரும் புதிருமான வீடுகளில் இளமையிலிருந்து ஒன்றாய்ப்பழகியவர்கள். அவனின் தந்தை சாதி, மத,இன, மொழி பேதம் பார்க்காதவர். அந்த சமத்துவத்தை மதித்த மகத்தான உணர்வுள்ள ஆதித்தனின் குடும்பத்தின் ஆசிர்வாதத்துடன் மேரியை அவனின் வாழ்க்கைத் துணைவியாக
இணைத்தது.அவர்களின் அன்பான வாழ்க்கையின் சாட்சியாகப் பிறந்தவள் லலிதா. மேரிக்கும் தனது அழகிய மகளுக்கு வைத்த லலிதா என்ற அந்தப் பெயர் மிகவும் பிடித்துக்கொண்டது.’மை டார்லிங் லலி’ என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
லலிதா என்ற பெயருக்கேற்ப அவள் மிகவும் புத்திசாலியான பெண்குழந்தையாக
வளர்ந்து அவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள்.
அந்த மகிழ்வான வாழ்க்கையில் என்ன நடந்தது எப்போது நடந்தது என்று ஆதித்தன்
தெரிந்து கொள்ளமுதல் அவர்களின் வாழ்க்கையில் பூகம்பம் அடிக்கத் தொடங்கிவிட்டது.அவன் தனது வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்குப் பிரயாணம் செய்யவேண்டியவன். அதனால் வந்த வினைதான் தனது வாழ்க்கையைத் துண்டாடியதா என்று அவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை.’நாங்கள் ஒருநாளும் ஒருத்தரை ஒருத்தர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” மேரி ஒருநாள் வெடித்தாள்.
‘என்ன சொல்கிறாய்?” ஆதித்தன் திகைத்தான். அவன் மறுமொழி தேடிமுடியமுதல்
அவள் அவனிடமிருந்து வெகுதூரம் விலகிப்போய்விட்டாள்.இப்போது, கடந்த இருவருடங்களாகஆதித்தனின் மனைவி அவனிடமிருந்து பிரிந்து
போய்விட்டாள். இன்னொருத்தனை விரும்புவதாக ஆதித்தனுக்குச் சொன்னாள். அவனைஅண்மையிற் திருமணம் செய்து கொண்டாள்.!
‘என் வாழ்க்கையில் உன்னைவிட யாருண்டு?” என்று பல தடவைகளில் விம்மி
யழுதவள், அன்பு மனைவியாய் அவன் மார்பில் துவண்டவள், அவனுக்கு ஒரு அழகிய
மகளைப் பெற்றுக்கொடுத்து மகிழ்ந்தவள் இன்று யாரோ ஒருத்தன் மனைவி.
இன்று அந்தக் குழந்தையையும் அவன் அடிக்கடி பார்க்கமுடியாதவிதத்தில் தூரத்
திற்கு ஓடிவிட்டாள். எவ்வளவுதூரம் இறுக்கமான உறவுடன் அவனின் வாழ்வுடன்
இணைந்தவள் இன்று அவர்களுக்கு ஒரு பாலமாகவிருக்கும் அவனின் அன்பு மகள்
லலிதாவையும் அவன் அடிக்கடி பார்க்காத விதத்தில் பல தடைகளையுண்டாக்குகிறாள்.
மேரி ஒருகாலத்தில் அவள் ஒரு தாயற்ற குழந்தையாய் வளர்ந்த துன்பத்தை மறந்து
விட்டாளா? அல்லது, அவனிடமிருந்து அவனின் அன்பு மகள் லலிதாவை அகற்றுவதால்
அவனின் ஞாபகத்தையே அந்தக் குழந்தையின் மனத்திலிருந்து துடைக்க முயல்கிறாளா?
முன்வீட்டில் அவள் பிறந்த நாளிலிருந்த மேரியை ஆதித்தனுக்குத் தெரியும். அவனுக்கு
மூன்று வயதாகவிருக்கும்போது முன்வீட்டில் மேரி பிறந்தாள். பெண்குழந்தையில்லாமல்
இரு ஆண்குழந்தைகளுடன் வாழ்ந்த ஆதித்தன் குடும்பம் மேரியை மகிழச்சியுடன்
கொஞ்சி வளர்த்தார்கள். ஆதித்தன் அந்தக் குழந்தையை அள்ளி அணைத்து வளர்ந ;தான்.அவள் அவர்கள் வீட்டில் ஒரே ஒரு பெண். இரு வீட்டாரினதும் இளவரசியாக வளர்ந்தாள்.இருவீட்டாரின் பண்டிகை நாட்களிலும் அந்தக் குழந்தை ஒரு தெய்வமாகக் கருதப்பட்டு பாசத்துடனும் நேசத்துடனும் வளர்க்கப்பட்டாள்.ஆதித்தன் அவளின் மழலைமொழிக்கு மெருகூட்டிப் பாப்பா பாட்டுச் சொல்லிக்கொடுத்தான். கைகொடுத்து அவள் மெல்லடி எடுத்து வைக்க உதவினான்.அவன் பாடசாலை செல்லத் தொடங்கியதும் அவளுக்கும் அம்மா அப்பா எழுதிக் காட்டி மகிழ்ந்தான். கள்ளம் கடபமறியாத மேரியின் வாழ்க்கையில் அவளின் ஐந்தாவது வயதில் பேரிடி விழுந்தது. தெருவைக் கடக்கும்போது விரைந்து வந்த வாகனத்தால் மேரியின் தாயின் வாழ்வு சட்டென்று முடிந்து விட்டது.
அதன்பின் அவளின் தகப்பன் நடைப் பிணமானார். வேலைக்குப் போவதும் வருவது
மான வாழ்க்கைக்கப்பால் எதிலும் பிடியற்று வாழ்ந்தார். அவரின் தாயார் மிகவும் ஆழ்ந்தபக்தியுள்ன கிறிஸ்தவமாது, அத்துடன் வயதின் முதிர்ச்சியால் மேரியைச் சரியாகப் பார்த்துக்கொள்வது அவளால் முழுக்க முழுக்க முடியாமலிருந்தது. மேரியின் வாழ்க்கை ஆதித்தனின் தாயின் அன்பில் இணைந்தது.ஓரளவு வசதியான குடும்பத்தினரானஆதித்தனின் பெற்றோர் மேரியைத் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே நடத்தினார்கள்,வளர்த்தார்கள். அவளின் மேற்படிப்பும் ஆதித்தனின் குடும்பத்தின் தயவுடன் தொடர்ந்தது. அக்கால கட்டத்தில் ஆதித்தன் தனது படிப்புக் காரணமாகச் சித்தப்பாவுடன் நகரிற் தங்கிப் படித்துக்கொண்டிருந்தான்.
காலம் மாறியது. பட்டணத்திலிருந்து ஒவ்வொருதரம் வீட்டுக்கு வரும்போதும் முன்வீட்டுப் பெண்ணழகு அவனைத் திகைக்கப் பண்ணியது. அவன் கைகொடுத்து
காலடி எடுத்து வைத்த அந்தப் பெண் உலகத்து ஆண்களை அத்தனைபேரையும்
நிலைகுலைசெய்யும் அழகுடன் மிளிர்ந்தாள். இளமை அவளை தங்கச் சிலையாக்கிச்
செதுக்கிக் கொண்டிருந்தது. மேரி தன்னுடைய அளப்பரிய அழகுதான் அவளின் வாழ்க்கையுடன் இணைந்த ஒரு சக்தி அவள் புரியத் தொடங்கினாள். ஆனால்
அவளை அடிக்கடி காணச் சந்தர்ப்பம் கிடைக்காதபடியால், அவளின் மன ஓட்டங்
களை ஆதித்தன் அறிந்து கொள்ள அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. படிப்பு முடிந்
ததும் அவனுக்கு அவன் எதிர்பாராதவிதமான ஒரு நல்ல வேலை கிடைத்தது.
பிரமாண்டமான ஒரு பெரிய பார்மசிக் கொம்பனியின் வியாபாரத் துறையின் முக்கிய
வேலை. அந்த வேலைஅடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியவேலை.
மேரியின் பாட்டியார் இறந்து விட்டாள்.அவளின் தமையன் எப்போதோ திருமணம்
செய்து கொண்டு வெளியூர் போய்விட்டான்.சட்டென்று ஒருநாள் அவனின் தாயார்,
‘மேரியை நீ கல்யாணம் செய்து கொள்வாயா?”என்று கேட்டபோது அவன் திகைத்து
விட்டான். அவளில் அவனுக்கு எவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது என்பதை அவனின்
குடும்பத்தில் அத்தனைபேருக்கும் தெரியும்.ஆனால் இருவரும் இரு வேறு சமயங்களைச்
சார்ந்தவர்கள். அவனின் குடும்பம் பெரிய சமயவாதிகள் இல்லையென்றாலும் ஒன்றா
கப் பழகிய மேரியை அவன் விரும்புவதை அவர்கள் எப்படி எடுப்பார்கள் என்று அவனுக்
குப் புரியாததால் தனது உள்ளக்கிடக்கையை அவன் தனக்குள் புதைத்து வைத்திருந்தான்.
தாயின் கேள்விக்கு உடனடியாக மறுமொழி சொல்ல அவனால் முடியவில்லை.மேரியை அவன் விரும்புகிறான் என்பதைமேரி புரிந்து கொண்டாளா என்று அவனுக்
குப் புரியாது. ‘ஐ லவ் யு” என்று அவன்அவளுக்குச் சொன்னது கிடையாது. மன
உணர்வை வெளிப்படுத்தக் காதற் கடிதம் எழுதவில்லை. அவளுக்குத் தன்னைப்
புரியுமா என்று அடிக்கடி கேள்வி கேட்டான்.அம்மா ‘மேரியைத் திருமணம் செய்வாயா?” என்று கேட்டபின் பல தடவைகள் மேரியைத் தனியாகச் சந்திக்க நினைத்தும்
அது நடக்கவில்லை.கடைசியாக, ‘மேரிக்கு விருப்பமாயிருந்தால் எனக்கும் சம்மதமே” என்று சொல்லி விட்டான்.மதபேதமான விடயம்பற்றி எந்தவிதமான பேச்சும் அங்கிருக்கவில்லை.
‘கரும்பு தின்னக் கூலியா தேவை.?”அம்மா சிரித்தபடி சொன்னாள்.அவனது மேரிக்கு ஒரு கரும்பா?’அவளின் அப்பாதான் உன்னிடம் கேட்கச்சொன்னார்” அம்மா சிறு விளக்கம் தந்தாள்.மேரி பெரிய பணக்காரியில்லை மேரியின்அழகுக்கு அவளைத் திருமணம் செய்ய எத்தனையோ பேர் வரிசையில் நிற்பார்களே?”அவன் விளையாட்டாக முணுமுணுத்தான்.அவனைக் கூர்ந்து பார்த்தபடி ‘இருக்கவேண்டிய இடத்தில் அழகு இருந்தாற்தான்அதற்கு மதிப்பு” என்று மெல்லமாகப் பதில்சொன்னாள் அம்மா..
அவனால் அம்மாவின் விளக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்து கொண்டபோது மேரி அவனைப் பிரிந்துவிட்டாள்.
அவர்களுக்குத் திருமணம் நடந்தது.திருமணக்கோலத்தில் தேவதையாகப் பலரின் கண்களைக் கவர்ந்தாள் மேரி.வாழ்க்கை தொடர்ந்தது. அவன் வழக்கம் போல் அடிக்கடி தனது வேலை நிமித்தமாக வெளியிற் சென்றான். பறவாயில்லாத வசதியான வாழ்க்கை. மேரி தன்னுடன் இணைந்த வாழ்க்கையில் நிறைவுடன் வாழ்கிறாள் என்று
நினைத்து வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு, மேரியின் அழகை இரட்டிப்
பாக்கிக் கொண்டு லலிதா பிறந்தாள்.மேரி மகளை அள்ளிக் கொஞ்சிக்
கொண்டிருந்தாள்.நீண்ட காலமாக நடைப்பிணமாகவிருந்த மேரியின் தகப்பன் மகளுக்கு ஒரு பேத்தியார் பிறந்த திருப்தியோ என்னவோ லலிதா பிறந்து சில மாதங்களில் இறந்து விட்டார். மேரிக்கு இருந்த உறவுகள் யாரும் அவளருகில்
இல்லை. தமையன் எப்போதோ இருந்து ஒருதரம் வந்து போவான்.காலமாற்றம் வருவதுபோல, மேரியின் நடத்தையிலும் மாற்றங்கள்.நீங்கள் அடிக்கடி வெளியில் போவதால் தங்களுக்குப் பிடிக்காத யாரையும் நீங்கள் பார்த்து விடுவீர்களோ என்ற பயத்திற்தான் உங்களை எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்” மேரி ஒருநாள் முன்பின் சம்பந்தமில்லாத கணவன் மனைவி தர்க்கம்
நடந்து கொண்டிருந்தபோது வெடித்தாள்.என்ன சொல்கிறாள்? கோபத்தில் எதையோ சொல்லவேண்டும் என்று சொல்கிறாளா, அல்லது உண்மையாகவே என்னை
விரும்பாமலா திருமணம் செய்து கொண்டாள்?
அவனால் எதையும் புரிந்து கொள்ளமுடியவில்லை. நீங்கள் தான் எனதுவாழ்வின்
அத்தனையுமே” என்று கல்யாணம் செய்துகொண்ட காலத்தில் அழுதவளுக்கு இப்போது
என்ன நடந்தது?அப்போது, லலிதாக் குட்டிக்கு மூன்று வயது. லலிதா நேர்ஸரிக்குப் போகத்தொடங்கியிருந்தாள். மேரி வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டாள். லலிதாவைப் பார்க்கும் பெரும்பாலான பொறுப்பு அம்மாவிடமிருந்தது.
மேரி சினேகிதிகளுடன் அடிக்கடி வெளியில் போகத் தொடங்கியிருந்தாள். அவள்
போக்கில் மாறுபாடுகள். அடிக்கடி கணவருடன் தகராறு. ஆதித்தன் வேலை விடயமாக
வெளியூர் சென்றிருந்த சமயங்களில் தமயனைப் பார்க்க வெளியூர் செல்லத்
தொடங்கினாள். அந்தப் பிரயாணங்களில் யாரைச் சந்தித்தாள்? என்ன நடந்தது என்று
அவனுக்குத் தெரியாது.
அவனிடம் தேவையற்ற முறையில் சண்டைகளைத் தொடர்ந்தாள். கடைசியாகத்
தமயனிடம் போவதாகச் சொல்லிவிட்டுக் குழந்தையுடன் மறைந்து விட்டாள். அது
நடந்து இரண்டு வருடங்களாகிவிட்டன.தனது உயிருக்கு உயிரான மகளைக்
காணாமற் துடித்துவிட்டான் ஆதித்தன்.அவனின் தாய் அவளின் அருமைப் பேத்தி
யைப் பார்க்க முடியாத சோகத்தில் நடைப்பிணமானாள். மேரி, தாயற்ற பிள்ளை
யாய் வளர்ந்த காலத்தில் அவளை ஒரு இளவரசியாய் ஆசையுடனும் பாசத்துடனும்
பார்த்துக்கொண்ட ஆதித்தன் குடும்பத்தையா இப்படி உதறித் தள்ளினாள், காரணம் என்ன?ஆதித்தன் தனது படிப்புக்கு அப்பாற்பட்டவிடயமான மேரியின் மனவோட்டத்தை
விளங்கிக் கொள்ளாமல் திண்டாடினான்.
காலக்கிரமத்தில் மேரி, ஆதித்தனை விவாகரத்துச் செய்வதாகக் கடிதம் எழுதினாள்.
அப்போது அவன் குழந்தைக்கு நான்கு வயது. அப்போது அவனுடைய அழகிய
மகளுக்கு, யார் எதையும் சொன்னாலும் அதைத் திருப்பி சொல்லும் வயது. அவளைப் பார்க்க முடியாத தந்தையின் நிலையறியாத பிஞ்சு மனம் அவனைப் பற்றி
என்ன நினைக்கும்? தெய்வீகத் தன்மையுள்ள அவனுடைய லலிதாவுக்கு ஆதித்தனைப் பற்றி மேரி என்னவெல்லாம் சொல்லியிருப்பாள், அவன் தவித்தான். வாழ்க்கை முழுதும் அவனுக்குத் தெரிந்ததாக அவன் நினைத்த மேரியின் நடத்தைகள் அவனைத் திணறப் பண்ணின.மேரியின் இன்னொரு முகத்தையோ அவளின் மனவோட்டத்தையோ அவனால் கற்பனை செய்ய முடியாதிருந்தது. தனது அழகில் அவளுக்கு ஒரு மமதை,அந்த மண்டைக்கனத்தில் யாரிடமோ மாட்டி விடுவாள் என்ற பயத்தில் அவளின் அப்பா அவளை மிகவும் விரும்பும் உன்னைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டார்”ஆதித்தனின் தாய் அழுகையூடே சொல்லி துடித்தாள்.ஆதித்தன் நடந்தவற்றை அனலைஸ் பண்ண விரும்பவில்லை. அவனின் குழந்தையின் எதிர்காலம் மேரியின் சுயநலத்தால் பாழாகுவதை அவனாற் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
வழக்கறிஞர்கள் மூலம் தனது குழந்தையைப் பார்க்கும் தனது உரிமையைக் காட்டி
வழக்குத் தொடர்ந்தான். அவன் அடிக்கடி வெளியூர் செல்வதையும் மேரியையோ அல்லது லலிதாவின் வாழ்க்கையையோபற்றி ஆதித்தனுக்குப் பெரிய அக்கறை கிடை
யாது, குழந்தைக்காக முழுநேரத்தைச் செலவழித்துப் பாதுகாக்கும் தன்மையற்றவர்
என்று பல குற்றச் சாட்டுக்களை முன்வைத்து மேரி வாதாடினாள். அவனிடமிருந்து அவனின் அன்புக் குழந்தையை அப்படியே ஒட்டுமொத்தமாகப் பிரித்தெடுப்பது அவளின் நோக்கம் என்று அவனுக்கு அப்பட்டமாகப் புரிந்தது.
இதற்கெல்லாம் காரணமென்ன? அவன் தனக்குத் தானே பல தடவைகள் இந்தக்
கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.அவள் வெளியூரில் ஒருத்தனில் காதலாக
விருப்பதாகச் செய்திகள் கசிந்தன! அவன் இருதயத்தை யாரோ சம்மட்டியால்
அடிதார்கள்.அவள் அவளின் சமயத்தையோ ஆதித்தனின் சமயத்தையோ சாராத இன்னு மொரு சமயத்தவனைக் காதலிப்பதாக அவனுக்குச் செய்தி கிடைத்தது. இந்தக் குழறுபடியால் அவனின் குழந்தையின் வளர்ச்சியில் வரப்போகும் பாரதூரமான விளைவுகள் அவனை வருத்தின. மேரி வீட்டில் யேசுவையும், ஆதித்தனின் வீட்டில் பிள்ளையார், சிவன்படங்களைப் பார்த்து வளர்ந்த அந்தக் குழந்தையின் மனநிலையில் எவ்வளவு குழப்பங்கள் வரும்?
அவனால் மேரி எடுத்த முடிவின் விளைவுகளைக் கற்பனை செய்யமுடியாமலிருந்தது. மேரி சிறுவயதில் தாயை இழந்துதுன்பப்பட்டவள். அதை அவள் மறக்க உதவியவர்கள் ஆதித்தனின் குடும்பம். இன்று தனது அழகை இன்னொருத்தன் விரும்பித்தடுமாறுகிறான் என்பதற்காக அவனின் இளம் குழந்தையின் மனதில் பல குழப்பங்களை ஏன் விதைக்கிறாள்? யாரோ அந்நியரின் வீட்டில்அந்தக் குழந்தையின் மனவளர்ச்சி சின்னாபின்னப்படுவதை மேரி உணரமாட்டாளா?அதைப் பற்றி அவன் அவளிடம் காரணம் கேட்டோ சண்டை போட்டு மாரடிக்கவோ அவன்
தனது நேரத்தை வீணாக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டான். வழக்
கறிஞர்கள் உதவியுடன் ஒரு சில தடவைகள் லலிதாவைப் போய்ப்பார்த்தான்.
குழந்தை லலிதா தகப்பனை ஆசையுடன் கட்டிப்பிடித்து மழலை கொட்டுவதைக் கண்டு அவன் அழுவான். ஆசை மனைவிக்கும் அன்புக் குழந்தைக்கும்தானே அவன்
எவ்வளவோ கஸ்டப்பட்டுழைத்தான். அவன் அழுகையை அடக்க முடியாமல், குழந்தையை அணைத்து முத்தமிடுவான். அந்தப் பாசக் கண்ணீரே அந்தக் குழந்தையை அவன் பார்க்ககூடாது என்ற நிலையையுண்டாக்கும் என அவன் கற்பனை
செய்யவில்லை.சில நாட்களின்பின், அவளின் வழக்கறிஞரிடமிருந்து கடிதம் வந்தது. ‘ஆதித்தன் குழந்தை லலிதாவிடம் அழுததால், தகப்பனின் சலனமான மனநிலை கண்ட குழந்தை லலிதாமிகவும் மனச்சலனமடைந்து நித்திரையின்றிப் பல இரவுகள் அழுததாகச் சொல்லப் பட்டிருந்தது. ஆதித்தனைக் காண்பதால் குழந்தையின் மனநலத்திற்குப் பங்கம் வருமென்பதால் அவன் இனி லலிதாவைப் பார்க்க முடியாது
என்று எழுதப் பட்டிருந்தது
அந்தக் கடிதத்தைப் படித்து ஆதித்தன் அப்படியே திகைத்து விட்டான். அடிக்கடி
தன் குழந்தையைக் காணாத ஒரு தகப்பன் மனம் விட்டழுவது ஒரு மன நோய் என்று
வழக்காடுவதை அவனால் நம்ப முடியவில்லை.ஒரு தாய் அழுதால் பாசம், தகப்பன்
அழுதால் மனநோயா? அதன்பின் அவனால் அவனின் ஆசைமகளுடன் ஸ்கைப்பில் மட்டும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப் பட்டது.
அவனது ஆசை மகளை அணைக்க முடியாது.அவளின் பட்டுக் கன்னத்தில் முத்தமிடமுடியாது. இரவில் அவள் தூங்கும்போது குழந்தைகள் கதைகள் சொல்லமுடியாது.அவளையழைத்துக் கொண்டு பார்க்குக்குக்
கொண்டு செல்ல முடியாது. ஐஸ்கிறிம் வாங்கிக் கொடுக்கமுடியாது. மிருகக் காட்சிச்
சாலைக்குக் கூட்டிக்கொண்டுபோய் மிருகங்களைக் கண்டு அவள் முகத்தில் வரும்
பல்லாயிரம் பாவனைகளைக் கண்டு ரசிக்க முடியாது.
ஸ்கைப்பில் லலிதாவுடன் பேசுவதும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து
கொண்டு வருகிறது. குழந்தை சுகமில்லை, என்றெல்லாம் மேரி சாட்டுக்கள் பல
சொல்வாள்.இரண்டு வருடம் அவனது அருமை மகள் லலிதாவை நேரடியாகப் பார்க்கமுடியாது அவன் பட்ட கொடிய துயர் அவன் மட்டுமே அறிவான். அந்தக் காலகட்டத்தில் மேரிக்கும் ஆதித்தனுக்கும் விவாகரத்து நடந்து விட்டது.
மேரி இப்போது இன்னுமொரு சமயத்தவனின் மனைவி. குழந்தை லலிதாவையும் சமயம் மாற்றுவாள் என்பது நிச்சயம். அதை அவனால் தடுப்பது எப்படி என்பது அவனுக்குத் தெரியாது.
இரண்டு வருடங்களாக நேரில் பார்க்காத அவனது செல்லக் குட்டியைப் பார்க்கப்
போகிறான்.பட்டினி கிடந்தவன் பாயாசத்துடன் விருந்துண்ணச் செல்கிறான். அவனது அருமை மகள். அவனின் குருதியின் வாரிசு. அவனின் அன்பின் அவதாரம். அவனின் எதிர்காலத்தின் தொடர்ச்சி.ஆதித்தன் லலிதாவைப் பார்க்க மேரியின் வீட்டுக்குப் போக விரும்பவில்லை. லலிதாவை ஒரு சாப்பாட்டுக்கடையில் சந்திப்பதாக சொல்லியிருந்தான். அவனின் ஆசைமகள் அவனது மாஜி மனைவி மேரியுடன் வந்திருக்கவில்லை. யாரோ ஒரு அன்னியப் பெண் லலிதாவின் கையைப் பிடித்தபடி நின்றிருந்தாள்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக லலிதாவை ஸ்கைப்பிலும் பார்த்துப் பேச
முடியவில்லை. ஆதித்தன் லலிதாவுடன் பேசமுயன்றபோதெல்லாம் மேரி ஒவ்வொரு
சாட்டுச் சொல்லி குழந்தையை மறைத்துவிட்டாள். ஆதித்தன் தனது மகளுக்குச் சில
போஸ்ட்கார்ட்டுகள் அனுப்பினான் குழந்தை லலிதாவால் எதுவும் எழுதமுடியாது என்று
அவனுக்குத் தெரியும். ஆனால் போஸ்ட் கார்ட்டில் உள்ள படத்தையாவது பார்த்துத்
தன் தகப்பனை நினைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அனுப்பினான்.
ஸ்டேசனிலிருந்து சொற்பதூரத்தில் சாப்பாட்டுக்கடையிருந்தது. அந்தக் கடைவாசலில் தகப்பனுக்காகக் காத்திருக்கும் அந்தப் பிஞ்சுவின் வாழ்க்கையை நினைத்து அவனுக்கு அழுகை வந்தது. அவன் தனது உணர்ச்சியைக் காட்டினால் அவன் இன்னுமொருதரம் அவனது ஆசை மகளைப் பார்க்கமுடியாது போகலாம்.மகளைக் கண்டதும் தனது கைகைளை அகல விரித்தான். அவன் எதிர்பார்த்ததுபோல் லலிதா, அவன் மகள் அவனை நோக்கி ஆர்வத்துடன் ‘அப்பா” என்று கூவிக் கொண்டு அவனிடம் ஓடிவரவில்லை. அவன் அருகில் சென்றதும் அவள் கண்கள் ஒருவித
பரபரப்புடன் ஆதித்தனைத் துளைத்தெடுத்தது.அவளை அவன் இருவருடங்கள் நேரிற்
பார்க்கவில்லை. ஸ்கைப்பில் பார்த்ததைவிட வித்தியாசமாகவிருந்தாள். வளர்ந்து மெலிந்திருந்தாள். பளிங்குக் கன்னங்கள் ஒளியிழந்து காணப்பட்டது. அவளிடம் ஒரு அப்பாவிக் குழந்தைத்தனமிருக்கவில்லை. தகப்பனைக் கண்டு பயப்பிடுவதாக அவன் உணர்ந்தான்.என்னடா ராசாத்தி அப்பா வந்திருக்கேன் அம்மா” அவன் குரல் தழுதழுத்தது.
அவன் மிகவும் கஸ்டப்பட்டு தனது சோகஉணர்வை அடக்கிக் கொண்டான். அவன்
குனிந்து மகளின் கன்னத்தில் முத்தமிட்டான்.கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் தர்மசங்கடத்துடன் நெளிந்தாள்.
அவனுக்கப் புரியவில்லை.குழந்தையின் தடுமாற்றத்தையும் பயவுணர்வுடனான முகபாவத்தையும் அவனால் தாங்கமுடியாதிருந்தது.’என்னம்மா, என் செல்லக ; கண்ணு” அவன்தனது குழந்தையை வாரித் தூக்கினான்.குழந்தை திமிறியது. அவன் திடுக்கிட்டான்.’அப்பா உன்னில ரொம்ப அன்பும்மா”அவன் குரல் கரகரத்தது.
‘அங்கிள்… அங்கிள்” லலிதா, தகப்பனை அங்கிள் என்றழைத்தபடி ஆதித்தனைப்
பார்த்து விம்மினாள்.குழந்தையின் கண்களில் அடக்கமுடியாத அளவுக்கு நீர் பெருகியது.
‘அம்மா, என் செல்லம் லலிதா நான் அப்பா” அவன் குழந்தையின் நிலைகண்டு
தவித்தபடி மகளை இறுக அணைத்தான்.அவன் மகள் அவனிடமிருந்து திணறினாள்.ஏன் செல்லம் பயப்படுகிறாய். நான் லலிதாச் செல்லத்தின் அப்பா” அவன் தனது
விம்மலையடக்கிக் கொண்டு கெஞ்சினான்.’ம்ம்” குழந்தை தனது வாயைத்திறந்து
ஏதோ சொல்ல நினைத்தது.’என்னம்மா” அவன் குழந்தையை இறுக அணைத்தான்.
குழந்தை திமிறியபடி சொன்னாள்,
அம்மா உங்களைத் தொடக்கூடாது, அங்கிள் எண்டுதான் சொல்லணும் என்று சொன்னாள்”அவன் சிலையாக நின்றான்.அம்மா என்ன பாம்புக் கோயிலுக்குக்
கூட்டிக் கொண்டு போனாங்க. பாம்புக்கு முன்னால, எனக்குப் புதிசா அப்பா வந்ததால
நான் உங்கள அங்கிள் என்டுதான் கூப்பிடணும் என்று சொன்னாங்க. அப்படி சொல்லாட்டா பாம்பு என் கண்களைக் கொத்திப்புடும் என்று
அம்மா சொன்னாங்க..” குழந்தை கேவிக்கேவியழுதது.
மேரி கத்தோலிக்கப் பெண். ஆதித்தனின் தாயுடன் ஒன்றிரண்டு தடவைகள் கோயி
லுக்குப் போயிருக்கிறாள். இப்போது வேற்று மதத்தானைக் கட்டியிருக்கிறாள்.
குழந்தையைப் பாம்புக் கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுபோய் பாம்பைக் காட்டி
அந்த இளம் பிஞ்சுவைப் பயமுறுத்திக்குழந்தையின் சொந்தத் தகப்பனையே?
அவன் விம்மலுடன் தனது ஆருயிர் மகளைக்
கட்டிக் கொண்டான்.அங்கிள் அப்பா” – அவனின் புது அடையாளமது. கள்ளங்கபடமற்ற பிஞ்சு மனத்தைவிசமாக்கப் பாம்பைக்காட்டிப் பயமுறுத்தும் தாய்மை எவ்வளவு கேவலமானது? அப்பாவிக் குழந்தையின் மனத்தைக் குழப்பி அவளின் மனநிலையைச் சிதைக்கும் மேரியைக் கோர்ட்டில் நிறுத்தி அவளின் கொடிய திட்டத்தை அம்பலம்படுத்தித் தன்மகளைத் தன்னுடன் சேர்த்துக் கொள்வது எப்படி என்று அந்த நிமிடம் ஆதித்தனுக்கு அப்பட்டமாக விளங்கியது…