கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில் காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார். அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் பூர்வீக வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் ஆதாரங்களாக இருப்பதினால் அவ்விடத்தில் தொல்லியல் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் தொல்லியல் சிறப்புக்கலை மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்தமாதம் வன்னியில் பறையனாளங்குளம் தேக்கம் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற கலைக்கேசரி ஊடகவியளாளர் திரு. ப. ஜோன்சன் அவர்கள் அவ்விடத்தில் நடைபெற்று வந்த பண்டையகால யானை வர்த்தகம் தொடர்பான வரலாற்று ஆதாரங்கள் பலவற்றைச் சேகரித்துள்ளார். அவற்றுள் வரலாற்றுப் பழமைவாய்ந்த இரண்டு கருங்கற்தூண்களில் காணப்பட்ட தெளிவில்லாத சித்திரங்களின் புகைப்படங்களை எமக்கு அனுப்பிவைத்தார். அவற்றில் வரலாற்றுத் தொன்மைமிக்க சில குறியீடுகளும், இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்களும் காணப்பட்டன. இவை வன்னியின் பூர்வீக வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் ஆதாரங்களாக இருப்பதினால் அவ்விடத்தில் தொல்லியல் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்கள் மற்றும் தொல்லியல் சிறப்புக்கலை மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றோம்.
வன்னியின் தொடக்ககால வரலாறு
இலங்கையின் மனிதவரலாற்றின் தொடக்ககால வரலாற்றை ஆய்வு செய்த கலாநிதி சிரான் தெரணியகலா அவர்கள் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதலாவது மனித குடியிருப்புக்கள் தோன்றிய இடங்களில் ஒன்றாக வன்னியிலுள்ள இரணைமடுக் குளப்பகுதியைக் குறிப்பிடுகின்றார். நாடோடிகளாக வாழ்ந்த இம்மக்கள் இற்றைக்கு 3000 ஆண்டளவில் இலங்கையில் நிலையான குடியிருப்புக்களை அமைத்து, நிரந்தரப் பொருளாதார உற்பத்தியில் ஈடுபட்ட போது அந்த நாகரிக மாற்றம் ஏறத்தாழ சமகாலத்தில் வன்னியிலும் நிகழ்ந்ததை இரணைமடு, மாமடு, மாந்தை, செட்டிக்குளம், பூநகரி முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. இம்மக்கள் இயற்கையான ஆறுகளுக்கு குறுக்கே அணைகட்டியும், அவற்றின் அருகே சிறிய குளங்களை, கால்வாய்களை அமைத்தும், அவற்றின் அருகே குடியிருப்புக்களை ஏற்படுத்தியதால் குளங்களை மையப்படுத்திய கிராமக்குடியிருப்புக்கள் தோன்றின. இதனால் இக்கிராமங்களின் பெயர்கள் குளங்களை முன்னொட்டு அல்லது பின்னொட்டுச் சொற்களாகக் கொண்டு தோன்றின. உதாரணமாக கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்துக்கு வடக்கே 30 மைல் (காதை) தொலைவில் உள்ள பெலிவாவி என்ற இடம் மகாவம்சத்தில் முக்கியத்துவப்படுத்திக் கூறப்படுகிறது. இவ்விடத்தைப் பாக்கர் என்ற அறிஞர் வன்னியிலுள்ள தற்போதைய வவுனிக்குளம் என அடையாளப்படுத்தி இந்தக்குளம் எல்லாள மன்னனின் சாதனைகளில் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் பண்டைய கால வரலாறு கூறும் பாளி இலக்கியங்களில் உண்மையான வரலாற்று அம்சங்களுடன், பல ஐதீகங்கள், நம்பமுடியாத கட்டுக்கதைகளும் உள்ளன. இவ்விலக்கியங்களில் வடஇலங்கையின் அதிலும் குறிப்பாக வன்னியின் தொடக்ககால வரலாறு புகைபடர்ந்த நிலையிலேயே உள்ளன. இதனால் இலங்கை வரலாறு பற்றிய பிற்கால ஆய்வுகளிலும் வன்னியின் வரலாறு மறைக்கப்பட்டதாகவே உள்ளன. ஆயினும் யாழ்ப்பாணத்திற்கு இல்லாத சிறப்பாக நம்பகரமான எழுத்தாவணமாக கல்வெட்டுக்கள் காணப்படுவதால் அவை வன்னியின் தொடக்ககால வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இக்கல்வெட்டுக்கள் வன்னியில் பெரும்பாலும் பண்டைய குளக் குடியிருப்புக்களை மையமாகக் கொண்டே காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டன. ஓரிரு கல்வெட்டுக்கள் இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. பேராசிரியர் பரணவிதான இங்கு கிடைத்த 40 கல்வெட்டுக்களை ஆய்வு செய்துள்ளார். அண்மையில் எமது ஆய்வின் போது மேலும் 10 கல்வெட்டுக்கள் கப்பாச்சி, கொங்குராயன்மலை முதலான இடங்களில் புதிகாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வன்னியில் உள்ள கல்வெட்டுக்களை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர் பரணவிதான அங்குள்ள நான்கு கல்வெட்டுக்கள் வன்னியில் நாகச் சிற்றரசர்களில் ஆட்சியிருந்ததைக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். இங்கு கிடைத்த மூன்று கல்வெட்டுக்கள் வேள் என்ற தலைவன் பற்றிக் கூறுகின்றன. இவ்வாதாரம் சங்க காலத் தமிழகத்தை ஒத்த வேள், வேளீர் ஆட்சி சமகாலத்தில் வன்னியிலும் இருந்ததை உறுதி செய்கின்றன. இங்கு கிடைத்த இரு கல்வெட்டுக்கள் தமிழ் வணிகர்கள் பற்றிக் கூறுகின்றன. அவர்களில் ஒருவன் குதிரை வர்த்தகத்துடன் தொடர்புடையவனாக இருந்துள்ளான். இலங்கையில் பரதவ சமூகத்திற்கு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. அதற்கு கல்வெட்டுக்களே சான்றாக உள்ளன. மலோனி என்ற அறிஞர் இலங்கையில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட 21 கல்வெட்டுக்கள் பரதவ சமூகம் பற்றிக் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் 21 கல்வெட்டுக்களில் 7 கல்வெட்டுக்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் எமது ஆய்வின் போது கிடைத்த கொங்குராயன் மலைக் கல்வெட்டிலும் பரதவ சமூகம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது பற்றிப் பேராசிரியர் பத்மநாதன் தனது அண்மைய ஆய்விலும் குறிப்பிட்டுள்ளார்.
சமகால ஆய்வாளர்கள் சிலர் ஒரு இடத்தில் பண்டைய பௌத்த மதச் சின்னங்கள் கிடைக்கும் போது அவற்றை அம்மதத்தின் பண்பாட்டுச் சின்னங்களாகப் பார்க்காது குறிப்பிட்ட ஒரு இனம் வாழ்ந்ததன் அடையாளமாகப் பார்க்கின்றனர். ஆனால் வன்னியில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் தமிழர்களும் பௌத்த மதத்தவர்களாக இருந்தனர் என்ற உண்மை தெரியவரும்.1215 இல் பொலநறுவையைக் கைப்பற்றிய கலிங்கமாகன் பௌத்த மதத்திற்கு மாறாக ஆட்சி புரிந்தான் எனச் சூளவம்சம் கூறுகின்றது. இது சிங்கள இராசதானியும், மக்களும் தெற்குநோக்கி இடம்பெயர ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிதில் வடஇலங்கையில் கலிங்கமாகன் அரசமைத்தபோது அவன் ஆட்சியில் பௌத்தமதம் வளர்வதற்கான சூழ்நிலைகள் வன்னியில் இருக்கவில்லை எனக் கருதலாம்.
தேக்கம் அணைக்கட்டும் சுற்றுலாவும்
சமகாலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. அவற்றுள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப்பெரிதும் கவரும் அம்சமாக இயற்கை மரபுரிமை அம்சங்கள் காணப்படுகின்றன. வன்னியின் இயற்கை அமைப்பு, கனிமங்கள், காட்டுவளங்கள், இயற்கையாக ஊற்றெடுத்துப்பாயும் அருவிகள், வரலாற்றுப்பழமை வாய்ந்த குளங்கள், கால்வாய்கள், கலிங்குகள், அணைக்கட்டுகள், தொங்குபாலங்கள் என்பன அதற்குள் அடங்குகின்றன. அத்தகைய சிறப்புக்குரிய ஒரு இடமாகவே பறையனாளங்குளம் பகுதியில் கட்டப்பட்ட அணைக்கட்டு காணப்படுகிறது. தேக்கம் என்பதற்குப் பல பொருள் இருப்பினும் இங்கு அப்பெயர் ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டையே குறிக்கிறது. ஆயினும் அணைக்கட்டைக் குறித்த அப்பெயர் தற்போது ஒரு கிராமத்திற்குரிய பெயராகவே பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இவ்வணைக்கட்டானது அநுராதபுரத்திற்கு தெற்கே உற்பத்தியாகி மன்னாரில் கடலுடன் கலக்கும் (இதன் இன்னொரு கிளையாறு மன்னாரில் அரிப்பு என்ற இடத்தில் கடலுடன் கலக்கிறது) 164 கி. மீ நீளமான அருவியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். இவ்வருவியாறு நீளத்தில் இலங்கையில் இரண்டாவது இடத்திலும், நீரோட்டத்தில் 12 இடத்தையும், மன்னாருக்கான நீர் விநியோகத்தில் 85 வீதமான பங்கையும் கொண்டுள்ளது. இவ்வருவியாறே வன்னியில் முகத்தான்குளம், மடுக்குளம், இராட்சதகுளம், பாலாவி மற்றும் கட்டுக்கரைக் குளம் போன்றவற்றிற்கு நீர் வழங்கும் பிரதான அருவியாகக்காணப்படுகிறது. இவ்வருவியாற்றுக்கு குறுக்கே பறையனாளன் குளத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டானது ஏறத்தாழ 200 மீற்றர் நீளமும், 7மீற்றர் அகலமும், 15 மீற்றர் உயரமும் கொண்டுள்ளது. அதுவே அருவியாற்றின் மறுகரையைக் கடந்து செல்ல உதவும் பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வணைக்கட்டிற்கு மேற்காக குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சற்சதுரவடிவிலான மூன்று கலிங்குகள் காணப்படுகின்றன.
19ஆம் நூற்றாண்டில் வன்னியில் உள்ள நீர்ப்பாசனக் குளங்கள், கால்வாய்கள், கலிங்குகள் என்பன பற்றி ஆய்வு நடாத்திய பாக்கர், லூயிஸ் போன்ற அறிஞர்கள் அங்குள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த குளங்களில் ஒன்றாக பறையனாளங்குளத்தையும், அதன் அணைக்கட்டையும் குறிப்பிடுகின்றனர். வன்னியில் அருவிகளையும், சிற்றாறுகளையும் மையப்படுத்தி பண்டைய காலத்தில் கட்டப்பட்ட குளங்களே ஐரோப்பியர் ஆட்சியில் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களாக வளர்ச்சியடைந்தன என்பது பொதுவான கருத்தாகும். அவற்றுள் ஒன்றே பறையனாளங்குள அணைக்கட்டாகும். இவ்வணைக்கட்டின் வளைவான பிரமாண்டமான தோற்றம், அதன் வடிவமைப்பு, சிறந்த தொழில்நுட்பம் என்பன இவற்றைப் புதிதாகப் பார்வையிடுவோருக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. இவ்வணைக்கட்டை அமைப்பதற்கு சுற்றாடலில் கிடைத்த பாரிய கற்களையும், பிற இடங்களில் கிடைத்த கற்தூண்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்கள் சிறிய மலைகள் போன்று தோற்றமளிப்பதால் அவற்றை இவ்விடத்திற்கு கொண்டு வருவதற்கு யானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதமுடிகிறது. அணைக்கட்டிற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நன்கு பொழிந்த கருங்கற்தூண்களை ஆராய்ந்தால் அவற்றில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில அணைக்கட்டின் மேல் நடைபாதைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் எழுத்துக்கள் தேய்வடைந்து காணப்படுகின்றன. ஆயினும் அவை பிராமி எழுத்துப் பொறித்த கல்வெட்டுக்கள் என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. இவற்றைத்தவிர சில கருங்கற்தூண்கள் 10-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. ஒரு தூண்களில் நந்தி உருவம் போன்ற தோற்றம் காணப்படுகிறது. இங்கே ஐரோப்பிய ஆட்சியில் கட்டப்பட்ட இவ்வணைக்கட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருங்கற் தூண்களைப் பயன்படுத்தியிருப்பது ஆய்வுக்குரிய விடயமாகும். இவற்றை நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் இந்து ஆலயங்களை இடித்தழித்து அதன் கற்களைக் கொண்டு கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்தது போல், வன்னியில் வரலாற்றுப் பழமைவாய்ந்த இந்து பௌத்த, ஆலயங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டும் தேக்கம் அணைக்கட்டை அமைத்தனர் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இம்முடிவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இவ்வணைக்கட்டின் சுற்றாடலில் வசித்த மக்களிடம் இவ்வணைக்கட்டு மாதோட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்களைக் கொண்டே கட்டப்பட்டதென்ற வரலாற்று நினைவுகள் தற்காலத்திலும் நினைவுபடுத்தப்பட்டு வருவதை இவ்விடத்தில் குறிப்பிடலாம்.
தற்போது பறையானாளங்குளமும், அதன் அணைக்கட்டும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் அருவியாற்றைக் கடந்து வேட்டையாடச் செல்வோருக்கு இங்கிருக்கும் அழகான தொங்கு பாலமும், தேக்கம் அணைக்கட்டுமே பிரதான நடைபாதையாக உள்ளன. அணைக்கட்டின் தென்புறத்தே நீரை வெளியேற்றப் பயன்படுத்திய மூன்று கலிங்குகள் சதுரவடிவில் செங்கல் மற்றும் கருங்கல் கொண்டு சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன. ஆயினும் இவை பயன்படுத்தப்பட்டு பல சகாப்தங்கள் கடந்துவிட்டன. இவ்வணைக்கட்டு நீர்வளம் கொண்ட அருவியாற்றை மறித்துக் கட்டப்பட்டதால் வருடத்தில் பெரும்பாலான காலங்களில் அணைக்கட்டுக்கு மேலாக (வான்பரப்பு) நீர்பாய்ந்து அணைக்கட்டிற்கு தென்புறமாக வீழ்கின்றது. அவ்வாறு நீர் விழும் காட்சி தென்னிலங்கையில் மலைகளில் இருந்து ஊற்றெடுத்துப்பாயும் நீர்வீழ்ச்சிகளை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வழகான நீர்வீழ்ச்சி ஒன்று வன்னியில் உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. ஆயினும் காட்டுவள இலாக மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்நீர்வீழ்ச்சியைக் கண்டுகளிக்க அவ்வப்போது குடும்பத்துடன் வந்து போவதை அவதானிக்கமுடிகிறது.
அணைக்கட்டுக்கு தெற்குப்புறமாக ஓடும் அருவியாறு தேக்கம் அணைக்கட்டிற்கு மேலும் சிறப்பைக் கொடுப்பதாக உள்ளது. இவ்வணைக்கட்டுடன் இணைந்த சிறிய பாறைகளுக்கு இடையே பிரிந்து செல்லும் நீரோட்டங்களும், அவற்றிற்கு இடையே தோன்றியிருக்கும் மணல்திட்டுக்களும், அவற்றின் மத்தியில் இருக்கும் அழகான உயர்ந்த மரங்களும், நீருற்றுக்கள் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடும் பாதையின் இருமருங்கிலும் நீண்டு செல்லும் உயர்ந்த மணல்மேடுகளும் பார்ப்போருக்கு அழகான இயற்கைக் காட்சிகளாக உள்ளன. இந்த அருவியாற்றின் இரு மருங்கிலும் உள்ள பாரிமரங்களுக்கு மத்தியில் உள்ள ஆழமான குழிகள் பண்டைய காலத்தில் யானைகள் சிறைப்பிடிக்கப்பட்ட இடங்களாகவும், மேட்டுப்பகுதியில் கட்டட அழிபாடுகள் உள்ள இடங்கள் வெளிநாட்டு யானை வர்த்தகம் நடந்த இடங்களாகவும் கூறும் வரலாற்று மரபு காணப்படுகிறது. இது பற்றி ஊடகவியலாளர் திரு. ப. பஸ்தியாம்பிள்ளை அண்மையில் விரிவான கட்டுரை ஒன்றை கலைக்கேசரியில் எழுதியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திருவாலங்காடு, பல்லவராயன்பேட்டை ஆகிய இடங்களில் கிடைத்த 12ஆம் நூற்றாண்டுக்குரிய இரண்டாம் இராசாதிராஜாசோழன் காலக் கல்வெட்டுக்கள் சோழப்படைவீரர்கள் வடஇலங்கைமீது படையெடுத்து அங்குள்ள மன்னார், மன்னார்பட்டினம், மாதோட்டம், புலச்சேரி, வலிகாகம் (இது மன்னாருக்கு தெற்கே 5 மைல் தொலைவில் உள்ள இடம்), ஊர்காவற்துறை ஆகிய இடங்களில் நின்ற யானைகளையும், படைவீரர்களையும் சிறைப்பிடித்து தமிழகம் கொண்டு சென்றதாகக் கூறுகின்றன. இங்கே ஊர்காவற்துறை தவிர்ந்த மற்றைய இடங்கள் தேக்கம் அணைக்கட்டுப் பிரதேசத்திற்கு அருகில் அமைந்த இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊடகவியலாளர் திரு.ஜோன்சன் அவர்கள் தேக்கம் அணைக்கட்டுப்பகுதி யாழ்ப்பாண இராசதானி மற்றும் ஐரோப்பியர் ஆட்சியில் வெளிநாட்டு யானை வர்த்தகம் நடந்த இடம் என அடையாளப்படுத்தியிருப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது.
பிரதேசசபையும் தேக்கம் அணைக்கட்டும்
தேக்கம் அணைக்கட்டுப் பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதாரங்கள் இவ்விடம் சுற்றுலாவுக்குரிய இடமாக மாற்றப்படவேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன. இன்று தென்னிலங்கையிலுள்ள பிரதேசசபைகள் தமது நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மரபுரிமைச் சின்னங்களை கண்டறிந்து, ஆராய்ந்து, ஆவணப்படுத்தி அவற்றைச் சுற்றுலா மையங்களாக மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றின் மூலம் நாட்டினதும், குறிப்பிட்ட பிரதேசத்தினதும் தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், பெருமளவு வருமானத்தையும் பிரதேச சபைகள் பெற்று வருகின்றன. ஒரு வரலாற்றுப் பெறுமதியுடைய மரபுரிமைக்கு கிடைக்கும் மதிப்பு என்பது அவற்றைப் பாதுகாக்கும் முறையிலும், அவற்றைப் பார்வையிடப் போடப்பட்டிருக்கும் நிர்வாகக் கட்டுப்பாடுகளிலும் தங்கியுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களிடையே தமது மரபுரிமைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. அப்பணிகளை தென்னிலங்கையிலுள்ள பல பிரதேசசபைகள் சிறப்பாகச் செய்து வருகின்றன.
வடஇலங்கையில் இப்பணிகளைச் செய்யக்கூடிய சூழ்நிலைகள் கடந்த பல ஆண்டுகளாக இருக்கவில்லை என்பதை மறுக்கமுடியாது. ஆயினும் பூநகரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராக, கிளிநொச்சி அரச அதிபராக இருந்து பல சமூகநலத்திட்டங்களை முன்னெடுத்த திரு. ரி. இராஜநாயகம் அவர்கள் உள்ளூராட்சி அமைச்சில் செயலாளராக இருந்த காலத்தில் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும். தேக்கம் அணைக்கட்டை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிந்தேன். அத்திட்டத்தில் பிரதான வீதியில் இருந்து தேக்கம் அணைக்கட்டுக்கு வீதியமைத்தல், அருகிலுள்ள வளமான நிலங்களை மக்களுக்குப் பகிர்ந்தளித்தல், சுற்றுலா விடுதியமைத்தல் என்பன உள்ளடங்கியிருந்தன. இதற்கு அப்போதைய கௌரவ ஆளுநர் திரு. சந்திரஸ்ரீயின் ஒப்புதலும் கிடைத்திருந்தது. ஆயினும் இறுதி நேரத்தில் சில காரணங்கள் காட்டி அந்தத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறான தடைகள் தற்போது இருப்பதாக தெரியவில்லை. தேக்கம் அணைக்கட்டுப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசசபை அரச நிர்வாகத்தினும், தொல்லியற் திணைக்களத்தினது உரிய அனுமதியுடன் இப்பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் பிரதேசசபை பெருமளவு வருமானத்தை சுற்றுலா மூலம் பெற்றுக் கொள்வதுடன், தமது பிரதேசத்தின் மரபுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
About the Author
பரமு புஷ்பரட்ணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.
இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.
இக் கட்டுரை https://ezhunaonline.comஎன்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.