சங்கிலியன் வரலாறு
சங்கிலியன் மொழிக்கும், சமயத்திற்கும் மட்டுமல்ல நட்புக்கும், வைத்தியத்துறைக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்த வீரகாவியம் படைத்த மன்னன். அந்நியரான போர்த்துக் கேயரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இறுதிவரை அவர்களுக்கெதிராகப் போராடி வீர மரணமடைந்தவன் சங்கிலியன் என்பது வரலாற்றுப் பதிவாகும். கற்பனையோ, கட்டுக்கதையோ அல்ல சங்கிலியன் வரலாறு. யார் இந்தக் சங்கிலியன்? ஏன் இன்று சங்கிலியன் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது?
யார் இந்த சங்கிலியன்? இலங்கையில் 1505 ஆம் ஆண்டு கால்பதித்து ஆக்கிரமிக்க முற்பட்ட அந்நிய நாட்டவரான போர்த்துக்கேயரை வீரத்துடன் எதிர்கொண்ட மாவீரன், யாழ்ப்பாணத் தமிழ் அரசின் தலை சிறந்த மன்னன் சங்கிலியன் ஆவான்.
போர்த்துக்கேயர் இந்நாட்டில் காலடி வைத்த போது கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று அரசுகள் இருந்தனவென்பதை வரலாறு தெளிவாகக் காட்டுகின்றது. கோட்டை இராச்சியம் தானாகவே ஒப்பந்தத்தின் மூலம் போர்த்துக்கேயர் வசமானது. அந்நியருக்குத் தாரைவார்க்கப்பட்டது. கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றப் போர்த்துக்கேயர் பலமுறை முயன்றும் அவர்கள் காலத்தில் அம்முயற்சி கைகூடவில்லை.
கோட்டை இராச்சியம் போர்த்துக்கேயரிடம் சரணடைந்து ஒரு நூற்றாண்டு காலம் வரை சங்கிலி மன்னனை வெற்றி கொள்ளும்வரை யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக் கேயருக்கு அடிமைப்படாத தனித்துவம் மிக்க அரசாக விளங்கியது என்பது வரலாற்றப் பதிவாகும்.
சங்கிலியனுக்கு முன்பும் புகழ்பூத்த தமிழ் அரசர்கள் பலர் யாழ்ப்பாணத்தை ஆண்டுள்ளனர். செகராசசேகரன், பரராசசேகரன் போன்றவர்கள் அவர்கள்.
அதேபோல் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போர்க் கொடி தூக்கிய கோட்டை இராச்சியத்தின் இறுதி அரசனான தர்மபாலனின் தந்தையான விதிய பண்டார சங்கிலி மன்னனிடம் அடைக்கலம் பெற்றமையும் வரலாற்றுப் பதிவாகவுள்ளது. வீரத்தின் சின்னமாகவும், தன்மானத் தலைவனாகவும், நாட்டுப் பற்றாளனாகவும் சங்கிலியன் வரலாற்றில் இடம்பெற்றுள்ளான். ஆனால் பாடப்புத்தகங்களில் வளரும் சமுதாயம் கற்றறியக் கூடியதாக அவனது வரலாறு இடம் பெறாதது துரதிஷ்டமேயாகும்.
நல்லூரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த சங்கிலியன் வாழ்ந்த மாளிகை இன்று இடிபாடுகளுடன் வாயிற்றூணை மட்டுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது. காவற்கோபுரமும், யமுனா ஏரியும் கவனிப்பாரற்றுள்ளது.
அரசமாளிகையைச் சூழ நல்லூர் கந்தசுவாமி கோயில், சட்டநாதர் சிவன் கோயில், வெயிலுகந்த பிள்ளையார் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பன நான்கு திசைகளிலுமிருந்தன. இன்றும் அவை சிறப்புடன் விளங்குகின்றன.
யாழ்ப்பாண அரசின் கட்டுப்பாட்டிலே நிர்வகிக்கப்பட்டு வந்த வைத்தியசாலையாக விளங்கியது நாயன்மார்க்கட்டு வைத்தியசாலை. ஆங்கிலேயர் காலத்தில் தான் நோயாளிகள் தங்கி வைத்தியம் பெற்றுக் கொள்ளும் வைத்தியசாலைகள் நிறுவப்பட்டன என்பது பொதுவான கருத்து. யாழ்ப்பாண அரசர் காலத்திலே அரச வைத்தியசாலையாக விளங்கிய நாயன்மார்க்கட்டு வைத்தியசாலை நோயாளர்கள் தங்கி வைத்தியம் பெறும் வைத்திய வைத்தியசாலையாக விளங்கியுள்ளது. இந்து சமய குருமாருக்கென்றும், போர் வீரர்களுக்கென்றும் தனியான வைத்திய விடுதிகள் இருந்துள்ளன. பொது மக்களும் தங்கி வைத்தியம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
அது மட்டுமல்ல சத்திர சிகிச்சைகளும் இடம்பெற்றுள்ளன. அவ்வைத்தியசாலையில் கிருமிநாசினியாக வெங்காயம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலை சங்கிலியன் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக இயங்கியுள்ளது.
சிலையாக வீற்றிருக்கும் சங்கிலியன் மொழிக்கும், சமயத்திற்கும், ஆற்றிய பெரும்பணிகளுடன் வைத்தியத்துறைக்கும், ஏனைய அரசுகளுடனான நட்புக்கும், நம்பி வந்தவர்களை வாழ வைப்பதற்கும் ஆற்றிய பணிகள் போன்றே கல்விப் பணியையும் விவசாயப் பணியையும் போற்றியுள்ளான். குளங்கள் பராமரிப்பு இதில் சிறப்பிடம் பெறுகின்றது.
அதேபோல் நல்லூரை அண்டிய நாயன்மார்க்கட்டில் சரஸ்வதி மஹால் என்ற அரசால் ஆதரிக்கப்பட்ட நூல்நிலையம் சிறப்புடன் இருந்துள்ளது. யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் சரஸ்வதி மஹால் என்று சிறப்புடன் சிறப்புடன் விளங்கிய நூல் நிலையத்தையும் சிதைத்து விட்டனர் என்பது வரலாற்றுப் பதிவாகவுள்ளது. வரலாற்றில் அசைக்க முடியாத மறுக்க முடியாத மன்னன் சங்கிலியன் தொடர்பாக விதண்டாவாதம் செய்வதை விடுத்து அம்மாமன்னனின் பெயர் நிலைக்க ஆவன செய்ய வேண்டியது நமது கடமை.
இக் கட்டுரையை எழுதியவர் த. மனோகரன் (துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.)
யாழ்ப்பாண இராச்சியத்தின் தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் நினைவு தினமான இன்று (11.06.23) வரலாற்று பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களின் சிறப்பு உரை இங்கே