நமது வீட்டில் நடந்த ஒரு விழாவினை பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதனைப் பார்த்து மகிழ்வதற்கு நமக்கு உதவுவது புகைப்படங்களே. நமது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் உள்பட பல மறக்க முடியாத காலக்கட்டங்களை திரும்பிப் பார்க்க உதவுகிறது. நமது பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நமது மூளை அந்த இளமைக் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இளமையில் நாம் இப்படி இருந்தோம். இன்றைக்கு எப்படி முகம், உடல் மாறிவிட்டது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க புகைப்படங்கள் உதவுகின்றன. நமது தாத்தா, முன்னோர்களின் புகைப்படங்கள் இருந்தால் அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
புகைப்படம் என்பது ஒரு கலை. அதற்கு மிகப்பெரிய வலிமை உள்ளது. உலக வரலாற்றை மாற்றும் சக்தி புகைப்படத்திற்கு உண்டு. புகைப்படம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு ஒன்றி இணைந்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக்கூட்டம், தலைவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது. ஒரு தலைமுறையின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் ஒரு வழிகாட்டியாக புகைப்படம் விளங்குகிறது.
தூரிகையைக் கொண்டு ஒரு படத்தை வரைவதற்குப் பதிலாக மிகத் துல்லியமாக ஒரே நிமிடத்திற்குள் புகைப்படம் எடுத்து, பல நகல்களையும் எடுத்து விடலாம். உள்ளது உள்ளபடியே கேமராவினால் புகைப்படம் எடுக்க முடியும். ஒரு புகைப்படம் என்பது நான்கு பக்கங்களுக்குள் அடங்கி விடுகிறது. ஆனால் அது பல கதைகளையும், பல தகவல்களையும் கொடுக்கக் கூடியதாக அமைகிறது.
இருநூறு பக்கங்கள் எழுத வேண்டிய ஒரு விசயத்தைக்கூட ஒரு புகைப்படம் விளக்கிவிடும். மங்கள்யான் விண்கலம் எடுத்தனுப்பும் புகைப்படத்தைக் கொண்டே செவ்வாய் கிரகத்தை ஆராய முடிகிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடினவா? நீர் உள்ளதா போன்ற அரிய உண்மைகளை கண்டறிவதற்கு புகைப்படங்களே உதவுகின்றன. புகைப்படங்கள் தனி நபர்களுக்கு சந்தேகத்தைக் கொடுக்கிறது. அதே சமயத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. புகைப்படத்திற்கு அடிப்படையாக இருப்பது ஒளிப்படக்கருவி எனப்படும் கேமராவே (Camera) ஆகும்.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்கிற தவறான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் அந்த மூட நம்பிக்கை தற்போது போய்விட்டது. கேமரா வைத்திருப்பது என்பது ஒரு அந்தஸ்து, வசதியைக் காட்டுவதாக இருக்கிறது.
ஆனால் சாதாரண கமரா வைத்திருந்தாலும் சரி உயர்தர கேமராவை வைத்திருந்தாலும் சரி அதனை சரியாக இயக்குவது என்பது பலருக்கு தெரியவில்லை .இவ்வளவு விலை கொடுத்து கேமராவை வாங்கி விட்டு அது சரியாக படம் எடுக்கவில்லையே என்று புலம்புவார்கள் பலர். அவர்களுக்காக இந்தியாவின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர் உங்களுக்காக கேமரா தொழில்நுட்பம் சம்பந்தமான விளக்கம் தருகின்றார் அதைப் பார்த்து பயன்பெறுங்கள்