தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பு வானொலி தான் செய்தி அறிந்து கொள்ளவும் பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்தது. தொலைக்காட்சி வந்த பிறகு அது தனது செல்வாக்கை இழந்தாலும் வானொலியின் பயன்பாடு அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. .தந்தி, டெலிபோன் ரேடியோ மூன்றும் நெருக்கமான கண்டுபிடிப்புகள் .தந்தி ,டெலிபோன் கண்டுபிடிப்புகளில் இருந்து புறப்பட்ட தகவல் பரிமாற்றத்தை வைத்தே வானொலி கண்டுபிடிப்பில் பலரும் ஈடுபட்டனர். இவர்களுள் மார்கோனி முதன்மையானவர். இவர் 1896 ஆம் ஆண்டு மோர்ஸ் குறியீட்டை(Morse code ) பயன்படுத்தி 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு வானொலி அலைகளை அனுப்பிக் காட்டினர்.
1909ஆம் ஆண்டு மார்க்கோனியின் ரேடியோ தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு கார்ல் பெ ர்டினாண்ட் பிரவுன் என்பவரோடு பகிர்ந்தளிக்கப்பட்டது. வானொலியைக் கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு எல்லோரும் மார்க்கோனி தான் என்று பதிலாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வானொலி கண்டுபிடிப்பில் பலரின் பங்கு இருந்ததையும் அதில் மார்க்கோனியின் முக்கிய பங்கு இருப்பதையும் யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இலங்கை வானொலி
1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.1921ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.
ஹாப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியை பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஐெர்மனிய நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒருகிலோ வாற்று(KW)வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப்போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேசநாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
1967 ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972மே22ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்காக ஆங்காங்கே தமிழ் வானொலிகள் நடாத்தப்பட்டு கொண்டிருக்கின்றது .சிறந்த ஒலி அமைப்புடன் உள்ள வானொலிகளை தெரிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன்.